படம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES

ஒரு வேட்பாளர் சொன்னார். ஒரு விளையாட்டுக் கழகத்திடம் பரப்புரைக்குப் போனபோது கழக நிர்வாகிகள் சொன்னார்களாம், “எங்களுக்கு பந்தும் துடுப்பும் தாருங்கள் எமது கழக உறுப்பினர்கள் அனைவரும் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று”.

வேறு ஒரு கட்சியைச் சேர்ந்த பிரச்சாரகர் சொன்னார், ஒரு நலன்புரி நிலையத்திற்குச் சென்று பரப்புரை செய்தபோது அங்கிருந்தவர்கள் சொன்னார்களாம், “கடந்த தேர்தலின் போது ஓர் அரச தரப்பு பிரமுகர் எங்களுக்குக் கோயில் கட்டித் தந்தார். நாங்கள் அவருக்குத்தான் வாக்களித்தோம். இம்முறை நீங்கள் எங்களுக்கு ஒரு சனசமூக நிலையம் கட்டித் தருவீர்களா?” என்று.

இதுபோல பல உதாரணங்களைக் கூற முடியும். ஊர் மட்டத்தில் இருக்கும் சிவில் அமைப்புக்களை சந்திக்கச் செல்லும் கட்சிப் பிரதானிகளும் பிரச்சாரகர்களும் இதை ஒத்த பல உதாரணங்களையும் கூறினார்கள். சனங்களில் ஒரு பகுதியினர் நிவாரண அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் வாலாயப்பட்டு வருகிறார்கள். தமிழ்க் கட்சிகளில் அநேகமானவை உள்ளூர் சிவில் அமைப்புக்களுக்கு அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது ஓர் உதவியைச் செய்து அதைப் படம் பிடித்து ஊடகங்களில் பிரசுரித்து வந்தன. இது விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதிப் பங்களிப்பு முக்கியமானது. ஆனால், இந்தப் பொறிமுறைக்கூடாக ஒருவித நிவாரண அரசியல் வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டதா? என்ற கேள்வி எழுகிறது.

சாதாரண சனங்களை பயனாளிகளாகவும் அரசியல்வாதிகளை கொடையாளிகளாகவும் பேணும் இப்பொறிமுறையின் விளைவே மேற்சொன்ன இரு உதாரணங்களுமாகும். இவ்வாறு சாதாரண சனங்களைப் பயனாளிகளாகவும் நிவாரணங்களுக்காகக் காத்திருப்பவர்களாகவும், சலுகைகளுக்காக அரசியல்வாதிகளோடு டீல்களைச் செய்பவர்களாகவும் பேணும் ஒரு போக்கானது இறுதியில் மக்களை அரசியல் நீக்கம் செய்வதில் கொண்டு போய்விடா? இம்முறை தமிழ் மக்கள் தேர்தல் பரப்புரைகளில் ஆர்வமற்றிருக்கும் ஓர் பின்னணியில் இக்கேள்வி அதிக அழுத்தத்தைப் பெறுகிறது. மேற்கண்ட உதாரணங்கள் தமிழ் கட்சிகளுக்கும் சாதாரண சனங்களுக்கும் இடையிலான சிறிய சந்திப்புக்கள் தொடர்பானவை. அடுத்ததாகப் ஒப்பீட்டளவில் ஒரு பெரிய சந்திப்பைப் பார்க்கலாம்.

கடந்தவாரம் கிளிநொச்சியில் கனகபுரம் மகாவித்தியாலயத்தில் இவ்வாறான ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது ‘மனித உரிமைகள் இல்லம்’ இச்சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. “தெரிவு எம்மிடமிருந்து – ஜனநாயகத்திற்கான முகவரியைத் தேடும் இளையோர்” என்ற தலைப்பின் கீழான இச்சந்திப்பில் எட்டு மாவட்டங்களில் இருந்தும் இளையோர் அழைத்துவரப்பட்டிருந்தார்கள். சுமாராக 2800 இற்கும் குறையாதவர்கள் இச்சந்திப்பில் பங்குபற்றியதாகக் கூறப்படுகிறது. இத்தொகையானது இம்முறைத் தேர்தல்களத்தில் எல்லா அரசியல்கட்சிகளும் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டங்களின் போது திரண்டிருந்த மொத்த சனத்தொகையைவிடவும் அதிகமானதாகும். இச்சந்திப்பில் பங்குபற்றிய இளையோர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

  1. நேர்மையான தலைவர்களைத் தெரிந்தெடுக்க வேண்டும். ஆனால், யார் நேர்மையானவர்கள் என்று எப்படி கண்டு பிடிப்பது?
  2. தமிழ் கட்சிகள் முன்னெடுக்கும் பரப்புரைகள் இளையோரைக் குழப்புகின்றன. அவர்கள் திட்டவட்டமான முடிவுகளை எடுக்க முடியாதிருக்கிறார்கள்.
  3. இவ்வாறு துலக்கமான முடிவுகளை எடுக்க முடியாத ஒரு சூழலில் யார் தங்கள் மத்தியில் நின்று அதிகம் வேலை செய்திருக்கிறார்களோ யாரைப் பற்றி தங்களுக்கு கூடுதலான பட்சம் தெரியுமோ அவர்களையே தெரிவு செய்யலாம்.

அதாவது மேற்கண்ட சந்திப்புக்கூடாகவும் ஒரு கேள்லி துலக்கமாக மேலெழுகிறது. தமிழ் வாக்காளர்கள் முன்னைய தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இம்முறை குழப்பிப் போயுள்ளார்களா? என்பதே.

மேற்கண்ட உதாரணங்களுக்கூடாக மட்டுமன்றி அண்மை நாட்களில் வட பகுதியில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களும், மத நிறுவனங்களும், சிவில் சமூகங்களும் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளிலும் ஒருவித துலக்கமான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஏதோ ஒரு கட்சியை மனதில் வைத்துக்கொண்டு மேற்படி அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கட்சிக்குத்தான் வாக்களியுங்கள் என்று வெளிப்படையாகக் கூறத் தயாரற்ற ஒரு நிலை. வட மாகாண முதலமைச்சரின் அறிக்கையும் கூட அத்தகையதுதான். அதாவது, ஒரு தெளிவான முடிவை எடுத்து அதை துணிச்சலாக முன்வைக்க முடியாத ஒரு நிலை.

இது தொடர்பில் கூட்டமைப்பு மற்றும் மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளையும் சேர்ந்த முக்கியஸ்தர்களோடு இக்கட்டுரை ஆசிரியர் உரையாடினார். இம்முறை பரப்புரைக் களத்தில் மக்கள் ஏன் அதிகம் ஆர்வமாய் பங்கேற்கவில்லை என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் மக்கள் கூடும் பொதுக் கூட்டங்களை ஏன் ஒழுங்கு படுத்த முடியவில்லை என்றும் கேட்கப்பட்டது. மக்கள் இம்முறை குழம்பிப் போயுள்ளார்களா அல்லது ஏற்கனவே முடிவெடுத்துவிட்டு அமைதியாக இருக்கிறார்களா என்றும் அவர்களிடம் கேட்கப்பட்டது.

மக்கள் குழப்பமடையவில்லை என்றும், அவர்கள் ஏற்கனவே எடுக்கப்பட்ட முன்முடிவோடு இருப்பதாகவும் சிலர் கருத்துத் தெரிவித்தார்கள். இதற்கு முந்திய தேர்தல்களின் போதும் பெருமளவிற்கு சிறு சந்திப்புக்களே நடாத்தப்பட்டதாகவும் பெருமெடுப்பிலான பொதுக் கூட்டங்கள் பெருமளவில் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தார்கள். குறிப்பாக வன்னிக் கிராமங்களில் குடியிருப்புக்கள் தெட்டம் தெட்டமாகச் சிதறிக் காணப்படுவதால் அங்கு பரப்புரைப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஒலி பெருக்கிகள் அவசியம் என்றும், ஆனால், இம்முறை ஒலிபெருக்கி பாவனைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால் பெரும் கூட்டங்களைத் திரட்ட முடியவில்லை என்றும் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

இதற்கு முந்தைய தேர்தல்களின் போது புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்பு அதிகம் இருந்த காரணத்தால் வன்னிப் பகுதியில் மக்கள் குறைந்தளவே சந்திப்புக்களில் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது. ஆயின், இம்முறை அவ்வாறான நெருக்கடிகள் ஒப்பீட்டளவில் குறைந்திருக்கும் ஓர் அரசியல் சூழலில் ஏன் சனங்களைத் திரட்ட முடியவில்லை? என்றும், குறிப்பாக மாகாண சபைத் தேர்தல் பரப்புரைகளின் போது திரண்டளவிற்குக் கூட மக்கள் ஏன் இம்முறை திரளவில்லை? என்றும் கேட்டபோது சனங்கள் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டார்கள் என்றும், பிரச்சாரக் கூட்டங்களுக்கு வந்துதான் அவர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலை இல்லை என்றும், அதனாலேயே அவர்கள் கூட்டங்களுக்கு வருவதில்லை என்றும் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னார்.

மற்றொருவர் சொன்னார், “இம்முறை வாக்களிப்பு வீதம் ஏறக்குறைய 60 வீதம் அளவிலேயே இருக்கும்” என்று, அதாவது முன்னைய இரண்டு தேர்தல்களைப் போல இம்முறை வாக்களிப்பு வீதம் இருக்காது என்று. ஆனால், மக்கள் தீர்மானித்துவிட்டு அமைதியாக இருக்கிறார்கள் என்பதை மற்றொரு கட்சி முக்கியஸ்தர் நிராகரித்தார். அவர் சொன்னார், தொடர்ந்து உரையாடும் போது மக்களின் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படுவதாக. எனினும், இப்போதுள்ள கள நிலவரங்களின்படி வாக்களிப்பு விகிதம் மந்தமாக இருக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகம் என்றும் அவர் சொன்னார்.

தேர்தல் சட்ட விதிகளைக் கருதி மேற்படி அரசியல் பிரமுகர்களுடைய பெயர்கள் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளன. எனினும், அவர்களோடான உரையாடல்களைத் தொகுத்துப் பார்த்த போது பின்வரும் இரண்டு பிரதான முடிவுகளுக்கு வர முடிந்தது. ஒரு தொகுதியினர் கூறுகிறார்கள், மக்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள் என்று. இன்னொரு பகுதியினர் கூறுகிறார் மக்கள் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளோடு இருப்பதாக. இதில் எது சரி?

ஈழத்தமிழர்களுடைய அரசியல் ஆய்வுப்பரப்பில் இரண்டு வசனங்கள் திருப்பத்திருப்பக் கூறப்படுவதுண்டு. ஒன்று – மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது. மற்றது மக்கள் கொள்கைகளுக்கே வாக்களிக்கிறார்கள் என்பது அல்லது கொள்கைகளுக்கே வாக்களிக்க வேண்டும் என்பது.

மக்கள் மெய்யாகவே தெளிவாக இருக்கிறார்களா?

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்ற கூற்று தமிழ் திரைப்பட வசனங்களுக்கூடாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் ஒன்று என்று கருத இடமுண்டு. அதே சமயம் அரசியல்வாதிகள் தெளிவாக இல்லை என்றும், அவர்கள்தான் மக்களைக் குழப்புகிறார்கள் என்றும், அரசியல்வாதிகள் குழப்பாவிட்டால் மக்கள் தெளிவாகவே சிந்திப்பார்கள் என்ற அர்த்தத்திலும் இக்கூற்று பிரயோகிக்கப்படுவதுண்டு.

ஆனால், மக்கள் தெளிவாக உள்ளார்கள் என்று கூறப்படுவதன் மெய்யான பொருள் எதுவெனில் மக்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதேயாகும். ஆயின், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மிதவாதிகளும் ஆயுதமேந்திய இயக்கங்களும் மக்களை அரசியல்மயப்படுத்தியுள்ளன என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும்? ஆனால், ஈழத்தமிழ்ப்பரப்பில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்ற கூற்றானது உண்மையில் மக்கள் அரசியல்மயப்பட்டுள்ளார்கள் என்ற பொருளில் பிரயோகிக்கப்படவில்லை. துமிழ் மக்கள் எப்போதும் தமது இன அடையாளத்தை முன்னிறுத்தியே சிந்திக்கிறார்கள். தமது இன அடையாளத்தைச் சிதைக்க முற்படும் பேரினவாதிகளுக்கு எதிரான தற்காப்பு நிலைப்பட்ட கூட்டுப் பிரக்ஞையே தமிழ்த்தேசியம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, தமது இன அடையாளத்தை முன்னிறுத்தி தமிழ் மக்கள் எப்பொழுதும் கூட்டாகச் சிந்திக்கிறார்கள். அந்த அடிப்படையில் முடிவெடுத்தே வாக்களித்தும் வந்திருக்கிறார்கள். இதுதான் தமிழ் வாக்களிப்பு பாரம்பரியத்தின் பெரும்போக்காக இருந்து வந்துள்ளது. இது தவிர வேறு சில உபபோக்குகளும் உண்டு. இப்பெரும்போக்கைக் கருதியே மக்கள் தெளிவாக முடிவெடுக்கிறார்கள் என்று கூறப்படுவதுண்டு. அப்படிப் பார்த்தால் இம்முறை தமிழ் மக்கள் எப்படி முடிவெடுப்பார்கள்?

இரண்டு பெரிய தமிழ் தேசியக் கட்சிகளும் மோதும் ஒரு களத்தில் இம்முறை தமிழ் மக்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். தமது கடந்த ஆறாண்டுகால படிப்பினைகளின் அடிப்படையில் அவர்கள் முடிவெடுக்கவேண்டியுள்ளது. ஆனால், அவ்வாறு முடிவெடுக்கத் தேவையான அளவுக்கு இரண்டு கட்சிகளும் அவர்கள் மத்தியில் வேலை செய்திருக்கவில்லை. அதாவது, கீழிருந்து மேல் நோக்கி மக்களை நிறுவனமயப்படுத்தி அரசியல் விழிப்பூட்டும் வேலைகளை இரண்டு கட்சிகளுமே செய்திருக்கவில்லை. கீழிருந்து மேல் நோக்கிக் கட்டி எழுப்பப்பட்ட ஒரு பலமான வலைப்பின்னல் இருந்திருந்தால் பெரும் கூட்டங்களை திரட்டுவது ஒரு கடினமான காரியம் அல்ல. கனகபுரம் மகாவித்தியாலயத்தில் முன்சொன்ன சந்திப்பை ஒழுங்கு செய்த மனித உரிமைகள் இல்லமானது ஏதோ ஒரு வகையிலான கீழ்மட்ட வலையமைப்பைப் பயன்படுத்தியிருக்கிறது என்பதால்தான் அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இளையோரைத் திரட்ட முடிந்தது. இதேகாலப்பகுதியில் யாழ்ப்பாணம் நல்லூரில் கம்பன் விழா நடந்தது. அங்கேயும் மிகவும் ஆர்வமுடைய நடுத்தர வர்க்கத்தின் திரண்ட கூட்டத்தைக் காண முடிந்தது. அங்கேயும் பண்பாடு சார்ந்த ஒரு கூட்டு உளவியல் வலைப்பின்னலுக்கூடாகவே ஒரு கூட்டம் திரள்கிறது. இதைப் போலவே ஆவிக்குரிய சபைகளால் ஏற்பாடு செய்யப்படுகின்ற ஜெபக் கூட்டங்களின் போதும் பெரும் தொகையான விசுவாசிகள் திரளக்காணலாம். அங்கேயும் மதம் சார்ந்த ஒரு விசுவாச வலைப்பின்னல் உண்டு.

ஆயின், அப்படிப்பட்ட வலைப்பின்னல்கள் எதுவும் தமிழ்க்கட்சிகளிடம் கிடையாதா? மிதவாத அரசியல் எனப்படுவது வெறுமனே வாக்குவேட்டை அரசியலாகத்தான் பிரயோக நிலையில் உள்ளதா? ஒரு பேரிழப்புக்கும் பெருந்தோல்விக்கும் பின்னரான மிதவாத அரசியல் எனப்படுவது இப்படியாகச் சுருங்கிப் போனதற்கு தமிழ்க்கட்சிகள்தானே பொறுப்பு?

தேர்தல் காலத்தில் வாக்குவேட்டை அரசியலுக்காக விஸ்தரிக்கப்படும் உறவுகள் நலன் சார்ந்தவை. அவை உயிர் உள்ளவை அல்ல. பதிலாக செயற்பாட்டு ஒழுக்கங்களுக்கூடாக அடிமட்ட மக்களோடு வைத்துக்கொள்ளும் உயிர்த்தொடர்வுகளே பரிசுத்தமானவை. அவ்வாறான உயிர்த்தொடர்புகள் இருக்குமிடத்து பெண்களின் பிரதிநித்துவம் தொடர்பாகவும் சமூகத்தின் எல்லாப் பிரிவுகளையும் உள்ளடக்கும் பிரதிநிதித்துவம் தொடர்பாகவும் மிகச்சரியான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்திருக்கும்.

அவ்வாறான செயற்பாட்டு அடித்தளத்தின் மீது கட்டி எழுப்பப்படாத ஒரு மிதவாத அரசியலுக்குள்ளேயே தமிழ் மக்கள் இப்பொழுது சிக்குண்டிருக்கிறார்கள். ஆனால், அதேசமயம் ஒரு ஆயுதப் போராட்டத்தில் இருந்து கற்ற கொழுத்த அனுபவங்களைப் பெற்ற மக்களிவர்கள். இப்படிப்பட்ட மக்கள் மத்தியில் வழமையான வாக்கு வேட்டை அரசியலை எவ்வளவு காலம் முன்னெடுக்கலாம்?

இத்தகைய ஒரு பின்னணியில் மக்கள் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளோடு இருக்கிறார்கள். ஆனால், பரப்புரைக் கூட்டங்களுக்கு வர விரும்பவில்லை என்பதை எப்படி விளங்கிக் கொள்வது? தமது விருப்பத் தெரிவாகவுள்ள ஓர் அரசியல்வாதியின் உரையைக் கேட்க வராத மக்கள் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளின் படி வாக்களிப்பார்கள் என்பதை எப்படி விளங்கிக்கொள்வது?

மக்கள் வாக்களிப்பை இன அடையாளத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு சடங்காக கருதுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? இவ்வாறு வாக்களிப்பை சடங்காகக் கருதுவது என்பது மெய்யான பொருளில் ஒரு தமிழ் மென் சக்தியைக் கட்டி எழுப்ப உதவுமா?

தமிழ் மக்களிடம் இப்பொழுது வன் சக்தி இல்லை. ஒரு புதிய வன் சக்தியைக் கட்டி எழுப்பத் தேவையான அகச்சூழலும் இல்லை. பிராந்தியச் சூழலும் இல்லை. அனைத்துலச் சூழலும் இல்லை. இந்நிலையில், மெய்யான பொருளில் மென் சக்தியைக்கட்டி எழுப்பவதே இப்பொழுதுள்ள ஒரே வழியாகும். அனைத்துலக கவர்ச்சிமிக்க ஒரு தமிழ் மென் சக்தியைக் கட்டி எழுப்புவது எப்படி? இது தனியாக ஒரு கட்டுரையில் ஆராயப்பட வேண்டும். எனினும், இக்கட்டுரையை முடிப்பதற்கு அதைச் சுருக்கமாகவேனும் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஒரு தேசமாகச் சிந்திப்பதற்குரிய அடிப்படைகளைக் கட்டி எழுப்பும் போதே மெய்யான பொருளில் ஒரு தமிழ் மென் சக்தி மேலெழும். அதாவது, தமிழ் மக்கள் தமது தேசிய அடிக்கட்டுமானத்தைப் பலப்படுத்த வேண்டும்.   அவ்வாறு பலப்படுத்தப்பட வேண்டிய தேசிய அடித்தளக் கட்டமைப்புக்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு வேண்டிய தகவல் மூலாதாரங்களைத் திரட்ட வேண்டும். திரட்டப்பட்ட தகவல்களை வைத்து ஆராய்ச்சி மையங்களை உருவாக்க வேண்டும். ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் அரசியல்வாதிகளை வழி நடத்தத் தக்க சிந்தனைக் குழாம்களை உருவாக்க வேண்டும். அதாவது, இன்னும் சுருக்கமாகச் சொன்னால் தகவல் திரட்சி, அறிவாராய்ச்சி, சிந்தனைக் குழாம் போன்றவைகளே மெய்யான பொருளில் மென் சக்தியின் அடித்தளங்களாகும். இந்த அடித்தளத்தை ஈழத்தமிழர்கள் பலப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அனைத்துலகக் கவர்ச்சிமிக்க ஒரு மென் சக்தியைக் கட்டி எழுப்பலாம். அவ்வாறான ஒரு மென்சக்தியைக் கட்டி எழுப்பும் தகுதியுடையவர்கள் யார்? அல்லது குறைந்தபட்சம் அப்படி ஒரு மென் சக்தி மேலெழத் தேவையான அடித்தளத்தை தயார்படுத்தக் கூடியவர் யார்? என்று கண்டு பிடிப்பதில் தான் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.

நிலாந்தன்