படம் | TAMIL DIPLOMAT
நடக்கவிருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் ஆர்வமற்று இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியற் பிரதிநிதிகளிலேயே அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றும் பேசப்படுகின்றது. அதனால் – ஆகஸ்ட் 17ஆம் திகதி, பெருமளவில் அவர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று கருதப்படுகின்றது.
இது உண்மையானால், இந்த நம்பிக்கையீனம் ஏற்படுவதற்கு யார் பொறுப்பு…?
தமிழ் மக்களாகிய எம்மிடம் ஒரு வழக்கம் இருக்கின்றது. பகுத்தறிவோடு யோசிக்காமலும், உண்மைகளைத் தேடிச் சிந்திக்காமலும் – வெறும் உணர்ச்சிகரக் கதைகளுக்கு எடுபட்டுத் தேர்தல்களில் வாக்களித்த பின்பு – எமது பிரதிநிதிகளாக நாமே தெரிவு செய்து அனுப்பிய ஆட்களுக்கு எதிராக நாங்களே பேசித் திரிவதுதான் அந்த வழக்கம்.
ஒரு மனிதரை அல்லது ஒரு கட்சியை, அவர்களால் ஒப்பேற்ற முடியாத ஓர் அரசியற் பணிக்கு அமர்த்திவிட்டு, அந்தப் பணியை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது யாருடைய தவறு…? அவ்வாறு அவர்கள் அந்தப் பணியை நிறைவேற்ற முடியாது போனால், அது, அந்தப் பணியைத் தாம் செவ்வனே முடிப்பதாகப் பொய்யுரைத்து, அந்தப் பணியைப் பொறுப்பெடுத்த கட்சியினதோ அதன் உறுப்பினர்களதோ தவறு மட்டும் அல்லவே. அது, அவர்களைப் பற்றிய உண்மைத் தன்மைகளை அறியாமலேயே அவர்களை அந்தப் பணிக்கு அமர்த்திய மக்களின் தவறும் தானே…?
விளைவாக – எம்மால் அரசியற் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் வெறும் கதைகாரர்களாக இருப்பதால் ஏற்படுகின்ற சலிப்பு, அரசியல் மீதே வெறுப்பை ஏற்படுத்திவிடுகின்றது. இத்தகைய ஒரு நிலையை யார் மாற்ற வேண்டும்…? மக்களாகிய நாமே தான் மாற்ற வேண்டும். அந்தப் பொறுப்பும் மக்களிடம் தான் உண்டு.
நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய எமது பிரதிகளின் மீதான ஏமாற்றத்தினைப் போக்குவதற்கான வழி, ஒரேயடியாகத் தேர்தலில் வாக்களிக்காது தவிர்ப்பதல்ல. அதற்கு உகந்த வழி – கட்டாயமாகவே தேர்தலில் வாக்களிப்பதுதான். தேர்தலில் வாக்களிக்காது தவிர்ப்பதானது, அதே தகுதியற்ற ஆட்கள் – தாம் பெறுகின்ற குறைந்த எண்ணிக்கை வாக்குகளுடனேயே – மீண்டும் தெரிவாகி எமது பிரதிநிதிகளாக வருவதற்கே வாய்ப்பளிக்கும். எனவே, தகுதியற்றவர்கள் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கும் கூட தேர்தலில் வாக்களிப்பதே வழி.
அவ்வாறு வாக்களிக்கும் போது, இம்முறை – ஆட்களை மாற்ற வேண்டும். தேவையெனில், கட்சியையே மாற்றவும் துணிய வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, மக்களிடம் தனது நம்பகத்தன்மையை இழந்த அரசியல் அமைப்பு ஆகிவிட்டது. அதன் மிக மிகச் சில உறுப்பினர்களைத் தவிர,, ஏனைய எல்லோருமே – தமது சொந்த நலன்களுக்காக மட்டுமே அரசியலில் ஈடுபடுகின்றவர்களாகவே உள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளிருக்கும் முரண்பாடுகளுக்குக் காரணமே, இத்தகைய தனிப்பட்ட நலன்களே அல்லாமல், தமிழ் மக்களின் இறையாண்மை சார்ந்த நலன்கள் அல்ல என்பது வெளிப்படையான உண்மை. உள்முரண்பாடுகள் முற்றியிருக்கும் இத்தகைய ஓர் அமைப்பிடம் இருந்து எத்தகைய ஓர் உருப்படியான அரசியல் நல்விளைவை எதிர்பார்க்கமுடியும்…?
‘ஒற்றுமை’ என்ற ஒரே விடயத்திற்காக வாக்களிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் வேண்டுகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமைக்கு இலக்கணமான ஒரு கட்சியாக எக்காலத்திலாவது இருந்திருக்கின்றதா…? ஒற்றுமையின்மைக்கும் உள்முரண்பாடுகளுக்கும் பிரபல்யமான ஓர் அரசியல் அமைப்பாகத்தானே அது திகழ்ந்து வந்திருக்கின்றது. தேர்தல் காலம் வந்தவுடன் ‘ஐக்கியம்’ பற்றிய கோசங்களை முன்வைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர், ஒற்றுமைக்கு முன்னுதாரணமாகத் தாங்கள் திகழ்ந்து காட்டியதில்லையே.
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு தனிக் கட்சியாகப் பதிவு செய்து உரிய அங்கீகாரத்தைத் தேடுமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்களுக்கு என்ன நடந்தது…? சமூகப் பெருந்தகைகள் எல்லோருமே விடுத்த அந்த வேண்டுகோள்களைக் கூட்டமைப்பின் உயர்பீடம் திமிரோடு மறுதலித்து வந்தது. உதாசீனம் செய்தது. தனிப்பட்ட தமது கட்சி உறுப்பினர்களின் அரசியல் வாழ்வு பற்றிய காரணங்களுக்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதிவை அவர்கள் மறுத்தனரே அல்லாமல், தமிழ் மக்களின் சுபீட்சத்தை முன்னிறுத்தி அல்லவே. அது மட்டுமல்லாது, தற்போது நடைபெறும் தேர்தல் பிரச்சார காலத்தின் போது கூட, உட்கட்சிப் பிணக்குகள் நிறைந்த ஒரே தமிழ் கட்சியாகவும் தமிழ் கூட்டமைப்பே திகழ்கின்றது. நாளேடுகளிலேயே தினமும் இவை பற்றிய செய்திகள் பிரசுரமாகின்றன. இந்த நிலையில் – ஒற்றுமையை முன்னிறுத்தி தம் மீது எத்தகைய நம்பிக்கையை வைக்குமாறு அவர்கள் மக்களிடம் கேட்கின்றார்கள்…? ஒற்றுமைக்காக இப்போது மக்கள் வாக்களித்தாலும், எதிர்காலத்தில் கூட்டமைப்பினர் ஐக்கியமாகச் செயற்படுவார்கள் என்பதற்கு ஏதும் கடந்ததால உத்தரவாதங்கள் உண்டா…?
தற்போதைய இலங்கை அரசுடன் மூன்று சுற்று இரகசியப் பேச்சுக்களுக்குச் சுமந்திரன் போனது பற்றி, சம்பந்தன் ஐயாவைத் தவிர, கட்சியில் வேறு எவருக்குமே தெரியாது. சுமந்திரனின் தமிழரசுக் கட்சியின் தலைவர் சேனாதிராஜாவுக்கே அது சொல்லப்படவில்லை. “இந்தச் சந்திப்பு பற்றி ஏன் ஏனைய தலைவர்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை?” என்று கேட்கப்பட்ட போது, “நான் ஏன் அவர்களுக்குச் சொல்லிவிட்டுப் போக வேண்டும்?” என்று எதிர்க்கேள்வி கேட்கிறார் சுமந்திரன். விளைவு என்னவெனில் – தமக்குத் தெரியப்படுத்தப்படாத இத்தகைய சந்திப்புக்கள் தொடர்பில் பகிரங்கமாகவே ஐயங்களை வெளிப்படுத்திய பிரேமச்சந்திரன் போறவர்கள், அவற்றினால் ஏதும் பாதக விளைவுகள் ஏற்படுமிடத்து. அவற்றுக்குத் தாம் பொறுப்பல்ல எனவும் அப்போதே கூறியிருந்தனர். இந்த நிலையில் – தமது எதிர்கால அரசியல் நகர்வுகள் பற்றியாவது கட்சியின் ஏனைய தலைவர்களுக்கு விளக்கி, அவர்களது இணக்கத்தைப் பெற்ற பின்பே அவற்றை ஐயாவும் சுமந்திரனும் முன்னெடுப்பார்கள் என்பதற்கு ஏதும் உத்தரவாதங்கள் உண்டா…? அல்லது தமக்குத் தெரியப்படுத்தாமல் – தமது இணக்கத்தைப் பெறாமல் – ஐயாவும் சுமந்திரனும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்போகும் அரசியல் நகர்வுகளிற்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் கண்களை மூடியபடி இனியும் ஒத்துழைப்பார்களா…? அந்த நகர்வுகளால் ஏதும் பாதக விளைவுகள் ஏற்படுமிடத்து, அவற்றுக்கு அவர்கள் பொறுப்பு ஏற்பார்களா…? இல்லையெனின் – எத்தகைய ஓர் ஒற்றுமைக்காக வாக்களிக்கும்படி மக்களிடம் இவர்கள் வேண்டுகின்றார்கள்…? கடந்த காலத்தைப் போலவே – தேர்தலில் வென்ற பின்னர் ஆளுக்கொரு திசையில் நின்று தனித் தனிக் கதை சொல்ல மாட்டார்கள் என்று மக்கள் எப்படி நம்ப முடியும்…?
ஐயாவும் சுமந்திரனும் தன்னிச்சையாகவே செயற்படுகின்றார்கள் என்பதுவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேறு எந்த ஒரு தலைவரதும் கருத்துக்கள் பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையுமே இல்லை என்பதுவும் ஒரு மாபெரும் இராணுவ ரகசியம் அல்ல. இத்தனைக்கும் – சித்தார்த்தன், பிரேமச்சந்திரன் போன்றவர்கள், சுமந்திரன் கையாள்வதை விடவும் நுணுக்கமான அரசியற் சூட்சுமம் மிகுந்த விடயங்களைக் கையாண்ட நீண்ட இராஜதந்திரப் பட்டறிவைக் கொண்டவர்கள் என்பது கூட ஒரு புதினம் அல்ல. நடக்கவிருக்கும் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது கூட – அது தன்னுடையதும் ஐயாவினதும் தனிப்பட்ட அரசியல் அணுகுமுறைக்கு அங்கீகாரம் பெறும் ஒரு பொதுசன வாக்கெடுப்பு என்றுதான் சுமந்திரன் குறிப்பிடுகின்றாரே அல்லாமல், ஒட்டுமொத்தமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வழிமுறை மீதான பொதுசன வாக்கெடுப்பு என்று அவர் குறிப்பிடவில்லையே…? இந்த நிலையில், எத்தகைய ஐக்கியத்திற்கான ஓர் ஆணையைத் தமிழ் கூட்டமைப்பினர் மக்களிடம் வேண்டுகின்றார்கள்.
சர்வதேசப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போது கூட – தமிழ் கூட்டமைப்பின் ஏனைய பங்காளித் தலைவர்களை ஐயா அழைத்துச் செல்வது அவர்களது கருத்துக்களையும் அங்கு பகிர வைப்பதற்கு அல்லவே. மாறாக – தானும் சுமந்திரனும் சொல்லும் கருத்துக்களுக்கு ஏனைய தலைவர்களின் ஒப்புதலும் இருக்கின்றது என்ற ஒரு தோற்றத்தைக் காட்டுவதற்காக மட்டும் தானே. ஆகக் கடைசியாக – அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியைச் சந்தித்த போது, பிரேமச்சந்திரன் கருத்துக் கூறுவதற்கு ஐயா இடமளிக்காமையும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் அவரை ஓர் ஓரத்தில் பொம்மையாக இருத்தி வைத்திருந்ததும் தமிழ் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கான சான்றுகளா…?
கடந்த 25ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரகடனம் வெளியிடப்பட்டு, அதன் அத்தனை தலைவர்களும் மருதனார்மடம் மேடையில் ஏறி முழங்கினார்கள். சிங்களத் தலைமையோடு கலந்து பணியாற்றி – அவர்களது மனங்களை வென்றெடுத்து – அடுத்த ஆண்டிலேயே தமிழர் பிரச்சனைக்குத் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதி தந்தார்கள் ஐயாவும் சுமந்திரனும். சிங்களத் தலைவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இலங்கையின் அரசியலமைப்பே தமிழ் மக்களுக்குச் சாதகமாக அடுத்த ஆண்டில் மாற்றப்பட்டுவிடும் என அடித்துச் சொன்னார்கள் அவர்கள். அந்த இருவரையும் தவிர ஏனைய அத்தனை பேச்சாளர்களுமே, கடந்த பல்லாண்டு கால வரலாற்றை விலாவாரியாக விளக்கி – சிங்களத் தலைவர்கள் எமக்களித்த வாக்குறுதிகளை எப்போதுமே நிறைவேற்றுவதில்லை என்று குமுறினார்கள். சிங்களத் தலைவர்களை ஒருபோதுமே நம்ப முடியாது என்றே வாதிட்டார்கள். இதனை இன்னொரு கோணத்தில் பார்க்கையில் – தமிழர்களை எப்போதும் ஏமாற்றியே வருகின்ற அதே சிங்களத் தலைவர்களை நம்பும்படி கூறி, சுமந்திரனும் ஐயாவும் தமிழர்ளைப் பொய்யுரைத்து ஏமாற்றுகின்றார்கள் என்ற அர்த்தப்படவே ஏனையவர்கள் பேசினார்கள். அதாவது – வேறு வார்த்தைகளில் சொல்லுவதானால் – சுமந்திரனை நம்ப வேண்டாம் எனவும், அவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அவரது வீட்டுச் சின்னக்காரரே மறைபொருளில் உரைக்கின்றார்கள். இந்த நிலையில் ஐக்கியத்திற்காக வாக்களிக்கும்படி மக்களைப் பார்த்து அவர்கள் எல்லோரும் எத்தகைய துணிவோடு கேட்கின்றார்கள்…?
கஜேந்திரகுமாரின் கட்சி ஒரு கொள்கையை முன்வைத்திருக்கின்றது. “தமிழர் ஒரு தேசம்” என்ற அங்கீகாரமே தமிழ் தேசிய இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வு என்பது அந்த கொள்கை. “கொள்கை எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றது; ஆனால், இதனை எப்படியப்பா நீ அடையப்போகிறாய்?” என்று தமிழ் கூட்டமைப்பினர் கேட்டுவருகின்றார்கள். இதற்கு ஒரு படி மேலே போன சுமந்திரன் – திடீரென இப்போது, “கொள்கையெல்லாம் ஒன்றேதான், ஆனால் அணுகுமுறையில் தான் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் வேறுபாடு” என்கிறார். இப்போது தமது தேர்தல் பிரகடனத்தில் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்வை முன்மொழிந்திருப்பதுடன், அதனோடு சேர்த்து ஒரு கால எல்லையையும் அறிவித்துள்ளது. தமிழர்களின் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சி முறைமை ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ற வகையில் இலங்கையின் அரசியலமைப்பே மாற்றப்படும் என்றும், 2016ஆம் ஆண்டில் அவை அடையப்பட்டுவிடும் என்றும் ஐயா கூறுகின்றார். இப்போது கேள்வி என்வெனில், இதனை எவ்வாறு கூட்டமைப்பு அடையப் போகின்றது…? ஐயாவும் சுமந்திரனும் முன்வைக்கும் நட்பு-அரசியல் அணுகுமுறையிலா…? அல்லது சிறீதரன், அரியநேந்திரன் போன்றோர் பேசித்திரியும் எதிர்ப்பு-அரசியல் அணுகுமுறையிலா…? மக்களுக்கு முன்னால் நேரெதிர் அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்திவரும் சுமந்திரனும் சிறீதரனும் எவ்வாறு ஐக்கியத்திற்காக வாக்களிக்கும்படி அதே மக்களைக் கேட்க முடியும்…? யாழ்ப்பாண மக்கள் வாக்களிக்கப் போவது – சுமந்திரனின் வழிமுறைக்குப் பின்னால் ஒன்றுபடுவதற்கா? அல்லது சிறீதரனின் வழிமுறைக்குப் பின்னால் ஐக்கியமாவதற்கா…? இணக்க அரசியல் செய்து காரியங்களைச் சாத்தியமாக்குவதற்குச் சிங்கள மகாசனங்களின் மனங்களைச் சுமந்திரன் இன்னும் வென்று முடியவில்லை; எதிர்த்து நின்று வெட்டிப் புடுங்குவதற்குச் சிறீதரனுக்குப் பின்னால் எந்தப் படையும் கிடையாது. இந்த நிலையில் – இரண்டு துருவங்களாகப் பிரிந்து நின்றபடி, நடாளுமன்ற ஆசனங்களை வெல்லுவதற்காக மட்டும் மக்களிடம் ‘ஒற்றுமைக்காக’ வாக்களிக்கும்படி கோரும் ஒரு கட்சியிடமிருந்து உருப்படியான அரசியல் விளைவுகள் எதுவும் பிறப்பெடுக்குமா…?
தமிழ் கூட்டமைப்பு இப்போது முன்மொழிந்திருக்கும் சுயாட்சி முறையிலான தீர்வினை, அச்சமூட்டும் ஓர் அரசியற் கோரிக்கையாகக் கருத வேண்டாம் என்று சிங்கள மக்களிடம் வேண்டுகின்றார் பிரேமச்சந்திரன். அதையே தான் ஐயாவும் சுமந்திரனும் கூட கூறுகின்றார்கள். அது நல்ல விடயம். ஆனால், மருதனார்மடம் கூட்டத்தில் பேசிய கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் – “எமது கட்சி வலியுறுத்தும் சுய நிர்ணய உரிமை என்பது, இந்த நாட்டைவிட்டுப் பிரிந்து செல்வதற்கான உரிமையையும் உள்ளடக்கியது!” என்கிறார். அதே கூட்டத்தில் பேசிய அடைக்கலநாதன், “சுயாட்சித் தீர்வு தரவில்லை என்றால், நாம் பிரிந்தே செல்லுவோம்” என்கிறார். இத்தகைய கூற்றுக்கள் சிங்களவர்களுக்கு அச்சத்தை ஊட்டாதா…? அதே கூட்டத்தில் உரையாற்றிய சிறீதரன் – “நயவஞ்சகரான ரணில் விக்கிரமசிங்க தமிழ் கூட்டமைப்பை உடைப்பதற்காக நாற்புறத்திலும் காசு கொடுத்து ஆட்களை இறக்கியிருக்கிறார்” என்று சொல்லுகின்றார். அனேகமாக அனைத்து வேட்பாளர்களுமே தமது தெற்கு-எதிர்ப்பு கோசங்களை அங்கு மாறி மாறி எழுப்பினார்கள். ஆட்சியில் இல்லாத மஹிந்த தொடர்பில் பேசுவதற்கு இப்போது விடயங்கள் எதுவும் இல்லை என்பதால், ஆட்சியிலிருக்கும் ரணிலைச் சந்திக்கு இழுத்துத் தாக்குகின்றார்கள். இங்கே சிக்கல் என்னவெனில் – ஐயாவும் சுமந்திரனும் மக்களும் கூடி வீற்றிருந்த அரங்கிலேயே இவர்கள் எல்லோரும் இவ்வாறு பேசினார்கள். கொழும்பில் ஆட்சியில் இருப்பவர்களை – அவர்கள் யாராக இருந்தாலும் – எதிர்ப்பதே தமது அரசியல் என்ற நிலை கட்சிக்குள் இருக்கும் வரை, அத்தகைய நிலையை ஊக்குவித்துக்கொண்டு – ஐயாவும் சுமந்திரனும் எவ்வாறு இணக்க அணுகுமுறையில் தமிழருக்குத் தீர்வு எடுத்துத் தரப் போகின்றார்கள்…? ஒருவேளை ஐயா அடுத்த ஆண்டில் ஏதாவதொரு தீர்வை எடுக்க முற்பட்டாலும் கூட – தமது தனிப்பட்ட அரசியல் இருப்பிற்காகத் தமிழ்-இனவாதமும் சிங்கள-எதிர்ப்புவாதமும் பேசித்திரிய வேண்டிய தேவை இருக்கும் ஐயாவின் கட்சிக்காரர்களே அந்தத் தீர்வு முயற்சியைக் குழப்ப மாட்டார்கள் என்பதற்கு ஏதும் உத்தரவாதங்கள் உண்டா…? இந்த நிலையில் – ஒற்றுமைக்காக வாக்களிக்கும்படி கோரப்படுகின்ற மக்களுக்கு ஒற்றுமைக்கான உத்தரவாதம் எங்கிருந்து கிடைக்கும்…?
இன்னொரு பக்கத்தில் – ஆட்சி மாற்றத்தை ஓர் ஆறு கடக்கும் முயற்சி என்கிறார் சுமந்திரன். இப்போதுதான் படகில் ஏறியிருக்கின்றோமாம். இப்போதுதான் பயணம் தொடங்கியிருக்கிறோமாம். பயணம் முடியும் வரை படகை ஆட்டிக் கவிழ்த்துவிடக் கூடாதாம். இதற்கிடையே – ஆறு பெருக்கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் எமது பொறுப்பாம். எமது பேச்சிலும் செயலிலும் நிதானம் இல்லையெனின், தெற்கில் ராஜபக்ஷ பொங்கி எழுந்து நல்லாட்சிப் படகைக் கவிழ்ந்து விடுவாராம். படகு கவிழ்ந்தால் நட்டம் எங்களுக்குத் தானாம். கஜேந்திரகுமாரின் கட்சிக்காரர்கள் கண்டதையும் கதைத்துச் சனத்தைக் குழப்பிப் படகைக் கவிழ்க்கப் பார்க்கிறார்களாம். ஆனால் – படகைக் கவிழ்த்தே ஆக வேண்டும் என்ற முடிவோடு பேசித்திரியும் தனது சொந்தக் கட்சி ஆட்களுக்கு எதிராக சுமந்திரன் ஏன் எதுவும் பேசுவதில்லை…? துணிவில்லையா…? முடியவில்லையா…? அல்லது சிங்கள-எதிர்ப்புக் கோசங்கள் எழுப்பி மக்களை ஒருவித மாயைக்குள் வைத்திருந்து வீட்டுச் சின்னத்திற்கு அவர்கள் பெற்றுத்தரும் வாக்குகள் மூலமாகவே தானும் வெல்லவேண்டி ஏற்படலாம் என்ற தேவை இருப்பதாலா…?
அது போக – இப்போது திடீரென, தமிழ் மக்களிற்கு இருக்கும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு ‘சுயாட்சி’ தீர்வை அடைவது பற்றித் தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் பிரகடனம் குறிப்பிடுகின்றது. இது ஒரு நிதானமான நகர்வா…? இது பேரினவாத ஆற்றைப் பொங்கியெழ வைக்காதா…? இது நல்லாட்சிப் படகைக் கவிழ்த்துவிடாதா…? சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சி அமைப்போம் என தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் பிரகடனத்தில் அறிவிப்பது சிக்கலான விடயம் இல்லையெனின், அதே சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு பற்றிக் கஜேந்திரகுமாரும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேசுவது மட்டும் எப்படி ஒரு நிதானமற்ற பேச்சாக இருக்க முடியும்…? சாத்தியமாக்க முடியாது என்று தாங்கள் கருதுகின்ற ஒரு விடயத்தைச் சாத்தியமாக்க முடியும் என்ற போலியான நம்பிக்கையைத் தமிழ் மக்களுக்குக் கொடுத்து தமிழ் கூட்டமைப்பு ஆட்கள் வாக்கு வேட்டை செய்யலாம் எனில், சாத்தியமாக்க வேண்டும் என்று தாம் நம்புகின்ற அதே விடயத்தைச் சாத்தியமாக்க முடியும் என்று வேறு ஆட்கள் பேசினால், அது மக்களைக் குழப்பும் செயலா…? அது நிதானமற்ற பேச்சா…?
இன்றைய பொழுதில் – தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு – அடிக்கடி கொள்கையை மாற்றும் ஒரே ஒரு தமிழ் கட்சியாகவும், ஆளுக்கொரு கதைகள் உரைக்கும் கட்சியாகவும், அதிகமாகப் பொய்யுரைப்போரைக் கொண்ட கட்சியாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே திகழ்கின்றது.
‘ஒற்றையாட்சி’ முறையை அங்கீகரிக்கும் 13ஆம் திருத்தச் சட்டத்தையும், மாகாண சபை முறைமையையும் நிராகரிக்கும் கஜேந்திரகுமாரின் கட்சி ‘தேசம்’ என்ற கோட்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்துவதன் காரணமாகவும், அதே கோட்பாட்டையே பிரதிபலித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிடுவதன் காரணமாகவும், அதே கோட்பாடே தமிழ் மக்களின் ஆத்மார்த்த அரசியற் கோட்பாடாகவும் இருப்பதனாலும், எனவே – அதே கோட்பாட்டைக் கொண்டிருப்பதாகக் காட்டினாலே தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற முடியும் என்ற காரணத்தினாலும் – சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சித் தீர்வு என்ற ஒரு புதிய கோசத்தை வாக்கு வேட்டைக்காகத் திடீரென முன்வைத்திருக்கின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
தனது தேர்தல் பிரகடனத்தில் – இலங்கை அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தை நிராகரித்திருக்கின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு. அப்படியானால், அது ஏன் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டது…? ‘சுயாட்சி’ முறையைத் தனது கொள்கையாகத் தமிழ் கூட்டமைப்பு எப்போது எடுத்துக்கொண்டது…? 2011ஆம் ஆண்டில் ராஜபக்ஷ அரசுடன் 14 சுற்றுப் பேச்சுக்களைக் கூட்டமைப்பு நடத்தியிருந்தது. தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வாக ஒரு திட்டத்தையும் கூட்டமைப்பு அப்போது அவரிடம் முன்மொழிந்திருந்தது. அந்த முன்மொழிவைத் தமிழ் கூட்டமைப்பு இப்போது பகிரங்கப்படுத்துமா…? அந்த முன்மொழிவில் “தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை” வலியுறுத்தப்பட்டிருந்ததா…? அந்த முன்மொழிவில் ‘சுயாட்சி’ தீர்வு என்ற ஒரு சொல்லாவது இருந்ததா…? ‘சுயாட்சி’ முறைதான் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என கடந்த மாதம் வரை தெரிவித்திருக்காத தமிழ் கூட்டமைப்பு, இப்போது அவ்வாறு சடுதியாக அறிவித்திருப்பதன் காரணம் என்ன…? லண்டனில் பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் தீர்வு வேண்டும் என்று சொன்னதன் பின்னர்தான், தமிழ் கூட்டமைப்பு அவசரப்பட்டு ‘சுயாட்சி’ பற்றிப் பேசத் தொடங்கியிருக்கின்றதா…?
‘சுயாட்சி’ என்பதும், சுயாட்சி இல்லையென்றால் இந்த நாட்டிலிருந்து ‘பிரிவினை’ என்பதும், தமிழ் மக்களின் வாக்குகளை வேறு ஏதாவது கட்சி திரட்டிச் சென்றுவிடாமல் தாமே தக்கவைத்துக்கொள்வதற்கான வெறும் தேர்தல் உத்தி மட்டும் தானா…? இணக்க-அரசியல் வழிமுறையில் சுயாட்சியைத் தமிழ் கூட்டமைப்பு எவ்வாறு பெறப் போகின்றது…? அல்லது ‘மென் வலு’ பிரயோகத்தின் மூலம் ‘பிரிவினைய’ அது எவ்வாறு சாத்தியமாக்கப் போகின்றது…? சர்வஜன வாக்கெடுப்பா…? அதனைச் செய்ய இந்தியா விடுமா…? அல்லது இந்தியா விரும்பாத ஒன்றை இங்கு ஐயா செய்ய முனைவாரா…?
தமிழ் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் பிரகடனத்திற்குத் தெற்கிலே தோன்றியுள்ள எதிர்ப்பிற்குக் காரணம் – சிங்களவர்களின் மனங்களை வெல்ல முடியாதது மட்டுமல்ல. உண்மையில் தமது சொந்தக் கட்சி ஆட்களினதும் தமது மக்களினதும் மனங்களை வெல்லாது விட்டதன் விளைவே அதுவாகும். நேர்மையான ஒரு சொந்தக் கொள்கையை வரித்துக்கொண்டு, தற்துணிவோடு அந்தக் கொள்கையைத் தமது கட்சியினரிடமும் தமது மக்களிடமும் எடுத்துச் செல்லாமல் – தேர்தலில் ஆசனங்களை வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, அடுத்தவர்களின் கோட்பாடுகளுக்கு ஏற்ப தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டிருந்ததன் விளைவே தெற்கில் இன்று தோன்றியுள்ள எதிர்ப்பு ஆகும். கஜேந்திரகுமாரின் கொள்கையுடனேயே தாமும் இருப்பதாகச் சுமந்திரன் கூறியதை உண்மையெனப் பாசாங்கு செய்யவும், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டிலேயே தாமும் இருப்பதாகத் தோற்றம் காட்டவும் – அவர்களின் கருத்துக்களைத் தாமும் பேசினாலே வாக்குத் திரட்டலாம் என்ற காரணத்திற்காகவும் – சொந்த நிலைப்பாட்டில் திடமாக நில்லாமல் – தடுமாறி – அடுத்தவர்களின் கருத்துக்களைப் பிரதியெடுத்துத் தேர்தல் பிரகடனம் வெளியிட்டதன் விளைவே தெற்கில் இன்று தோன்றியுள்ள எதிர்ப்பாகும். படகைக் கவிழ்க்க வேண்டாம் என எவர்கள் கோருகின்றார்களோ, அவர்களே இப்போது படகைக் கவிழ்க்கும் அளவுக்கு நிதானமிழந்து நிற்கிறார்கள். இது ஒரு நேர்த்தியான தலைமையா…?
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்குச் சேகரிப்பதற்காகச் சந்திக்குச் சந்தி இழுக்கப்படும் இன்னொரு விடயம், இந்த கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்டது என்பதாகும். “பெரும் தூரநோக்குச் சிந்தனையுடன் பிரபாகரன் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல வைத்தே ஆக வேண்டும்” என்று பிரபாகரனை நிராகரிக்கின்ற சம்பந்தன் ஐயாவுக்கு முன்பாகவே சீறுகின்றார் சிறீதரன்.
தமிழ் கூட்டமைப்பை உருவாக்கிய போது பிரபாகரனுக்கு இருந்த அந்த தூரநோக்குச் சிந்தனை என்ன…? அவரது கோட்பாட்டோடுதான் தமிழ் கூட்டமைப்பு இப்போதும் இயங்குகின்றதா…? தனது தோற்றத்திலும் இயல்பிலும், பிரபாகரன் உருவாக்கிய அதே வடிவத்தோடும் தன்மையோடும் தான் கூட்டமைப்பு இப்போதும் இருக்கின்றதா…? பிரபாகரன் உருவாக்கிய கூட்டமைப்பில் சிறீதரன் இருந்தாரா…? சுமந்திரன் இருந்தாரா…? பிரபாகரன் உருவாக்கிய கூட்டமைப்பில் இருந்த கஜேந்திரகுமார் இப்போது எங்கே…? பிரபாகரன் உருவாக்கிய தமிழ் கூட்டமைப்பு 13ஆம் திருத்தச் சட்டத்தை ஒரு தீர்வாக ஏற்றிருந்ததா…? பிரபாகரன் இருந்த காலத்தில் தமிழ் கூட்டமைப்பு ஏன் மாகாண சபைத் தேர்தலில் பங்கேற்கவில்ல? பிரபாகரன் உருவாக்கிய தமிழ் கூட்டமைப்பின் அரசியற் தீர்வு முன்மொழிவு ஒரு ‘சுயாட்சி’ கட்டமைப்பா…? அது எந்த வடிவத்திலான ‘சுயாட்சி’ முறை…? பிரபாகரனின் சிந்தனையில் இருந்த அதே வடிவத்திலான ‘சுயாட்சி’ பொறிமுறையை உருவாக்கத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது மக்களிடம் ஆணை கேட்கின்றதா…?
ஒரு விடயம் தெளிவாகத் தெரிக்கின்றது. ஐயாவுக்கு இருப்பது ஒரே நோக்கம்தான். தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக சிறீசேன – சம்பந்தன் உடன்படிக்கை ஒன்றை எழுதி வரலாற்றில் பதிவு செய்துவிட வேண்டும். அதற்கு – சுமந்திரனோடு சேர்த்து 20 நாடாளுமன்ற ஆசனங்களை வெல்ல வேண்டும். எதைச் சொல்லியாவது வாக்குச் சேர்த்து இவற்றைப் பெற்றுவிடவேண்டும். ஆனால், புதிதாகச் சொல்லுவதற்குத் தமிழ் கூட்டமைப்பிடம் இம்முறை எதுவும் இல்லை.
அதனால் – வாக்கு வேட்டைக்கான தனது கடைசி அஸ்திரத்தை ஐயா ஏவியிருக்கிறார். அது தான் – அடுத்த ஆண்டில் தமிழ் தேசிய இறையாண்மைப் பிரச்சினைக்குச் சுயாட்சி அடிப்படையிலான இறுதித் தீர்வு.
தினக்குரல் ஞாயிறு இதழுக்காக திருச்சிற்றம்பலம் பரந்தாமன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.