படம் | LAKRUWAN WANNIARACHCHI/ AFP Photo, GLOBAL POST
கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அது அனுபவித்து வரும் ஏகபோகத்திற்கு இப்பொழுது சோதனைக் காலம் தொடங்கிவிட்டது போலத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளிலும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் படிப்படியாக அதிகரித்து வந்த அதிருப்தியும் சலிப்பும் தற்பொழுது சமூகத்தின் ஏனைய மட்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளன.
அண்மைய ஆண்டுகளில் இணையப் பரப்பில் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் கூட்டமைப்புக்கு எதிரான கேள்விகளும் விமர்சனங்களும் அதிகரித்து வந்தன. இப்பொழுது அந்த அதிருப்தியானது மெய்நிகர் யதார்த்த பரப்பையும் தாண்டி ஒரு பௌதீக யதார்த்தமாக பரவிவருகிறது. யாழ்ப்பாணத்தின் பத்திரிகைகள் சிலவற்றின் ஆசிரியர் தலையங்கங்களும் அதைப் பிரதிபலிக்கின்றன.
இவ்வாறாக கடந்த ஆறு ஆண்டுகளில் கூட்டமைப்பின் மீதான கேள்விகளும் விமர்சனங்களும் அதிகரிக்கக் காரணங்கள் எவை?
முதலாவது காரணம் – கூட்டமைப்பானது எதிர்ப்பு அரசியல் தடத்தில் இருந்து விலகத் தொடங்கியிருப்பது. இதைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம். வட மாகாண சபை உருவாக்கப்படும் வரையிலும் கூட்டமைப்பு ஒப்பீட்டளவில் துலக்கமன ஒரு எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வந்தது. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ அரசு இருந்தவரையிலும் அந்த எதிர்ப்பு அரசியலுக்கு ஓர் அழுத்தமும் இருந்தது. ஆனால், மாகாண சபை உருவாக்கப்பட்ட பின் மாகாண சபையை அபிவிருத்திக்கான ஒரு பரிசோதனைக் களமாக மாற்ற கூட்டமைப்பு முயற்சித்தது. அதற்காக கொழும்பை நோக்கி மிகத் துலக்கமாக நல்லெண்ணச் சமிக்ஞைகளையும் காட்டியது. வட மாகாண சபை உருவாக்கப்பட்டபோது அதை இலங்கைத் தீவில் மற்றொரு அதிகார மையம் போலக் கட்டி எழுப்பவும் – அந்த மாகாண சபையை தத்தெடுக்கவும் சில சக்திமிக்க வெளிநாடுகள் முயற்சிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான ஓர் அழுத்தப் பிரயோக உத்தியாக வட மாகாண சபைக்கு அளவுக்கு அதிகமான ஒரு முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும் மேற்கு நாடுகளும் இந்தியாவும் வழங்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெளிநாடுகள் வட மாகாண சபையை அதிகமதிகம் நெருங்க நெருங்க ராஜபக்ஷ அரசு அந்த மாகாண சபை இயங்குவதற்கு எதிராக புதிது புதிதாக முட்டுக் கட்டைகளை உருவாக்கியது. இதனால், கூட்டமைப்பின் நல்லிணக்க சமிக்ஞைகள் எதிர்பார்த்த பலன் களைத் தரவில்லை.
இதன் விளைவாக வட மாகாண முதலமைச்சர் படிப்படியாக எதிர்ப்பு அரசியலை நோக்கி நகரத் தொடங்கினார். இப்பொழுது அவர் ஏறக்குறைய தீவிர தமிழ்த் தேசியவாதிகளில் பெரும்பகுதியினரால் ஆர்வத்தோடு கவனிக்கப்படும் ஒருவராக மாறிவிட்டார். அதாவது, வட மாகாண சபையை இந்தியாவோ அல்லது மேற்கத்தேய நாடுகளோ தத்தெடுத்தனரோ இல்லையோ முதலமைச்சரை தீவிர தேசியவாதிகளில் ஒரு பகுதியினர் தத்தெடுத்துவிட்டார்கள் என்பது மட்டும் தெரிகிறது. ஏறக்குறைய கால்நூற்றாண்டுகளுக்கு முன்பு வடக்குக் கிழக்கு இணைந்த மாகாண சபைக்கு முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள் சபையை இயக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ஈழப்பிரகடனம் செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார். இப்பொழுது விக்னேஸ்வரனும் இனப்படுகொலைப் பிரகடனத்தைச் செய்துவிட்டு எதிர்ப்பு அரசியலுக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டார். இது முதலாவது கட்டம்.
இரண்டாவது கட்டம் – ஆட்சி மாற்றத்தோடு தொடங்கியது. கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகியது. இது தவிர்க்கமுடியாதபடி இணக்க அரசியலை வேறொரு வடிவத்தில் முன்னெடுக்கவேண்டிய நிலைக்கு அந்தக் கட்சியைத் தள்ளியது. மஹிந்தவுடனான இணக்க அரசியல் தோல்வியில் முடிந்த கையோடேயே மைத்திரியுடனான இணக்க அரசியல் தொடங்கியது. இந்நிலையில், வரவிருக்கும் தேர்தலில் கூட்டமைப்பினால் முழுமையான, மூர்க்கமான ஒரு எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க முடியுமா?
நிச்சயமாக முடியாது. இதுதான் பிரச்சினை. தமிழ் தேர்தல் களம் எனப்படுவது ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக எதிர்ப்பு அரசியலுக்கே பழக்கப்பட்டு வந்துள்ளது. எதிர்ப்பு அரசியலின் அடிப்படையில் உருவாக்கப்படும் இனமான அலையானது முடிவில் வாக்களிப்பு அலையாக மாறும். அந்த வாக்குகள் பெரும்பாலும் இன அடையாள வாக்குகளே. அல்லது அரசுக்கு எதிரான வாக்குகளே. குறிப்பாக 2009இற்குப் பின் பெருமளவிற்கு பழிவாங்கல் வாக்குகளே.
ஆனால், இம்முறை கூட்டமைப்பால் அப்படி ஒரு எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கமுடியாது. வேண்டுமானால் மஹிந்தவுக்கு எதிராக ஓர் எதிர்ப்பு அரசியலையும் மைத்திரி மற்றும் ரணில் போன்றவர்கள் பொறுத்து எதிர்ப்பற்ற ஒரு நிலையையும் பேணவேண்டியிருக்கும். அதாவது, ஒரு முழுமையான இன உணர்வு அலையை தோற்றுவிப்பது கடினமாக இருக்கும். இத்தகையதோர் பின்னணியில் வட மாகாண சபை உருவாக்கப்பட்டதில் இருந்து மஹிந்தவை நோக்கியும் மைத்திரியை நோக்கியும் அதாவது தென்னிலங்கையை நோக்கி கூட்டமைப்பு காட்டிவரும் நல்லெண்ணச் சமிக்ஞைகளானவை அக்கட்சியானது எதிர்ப்பு அரசியல் தடத்தில் இருந்து விலகி வருகிறதா என்ற சந்தேகத்தை வாக்காளர்கள் மத்தியில் தோற்றுவித்துவிட்டது. இது கூட்டமைப்பின் மீதான விமர்சனங்கள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம்.
இரண்டாவது காரணம் – வட மாகாண சபை. வட மாகாண சபையைக் கூட்டமைப்பு ஆளும் கட்சியாக இருக்கிறது. ஆளும் கட்சிகளுக்கு எதிரான அதிருப்தி என்பது பொதுவானது. அதுவும் கூட்டமைப்பைப் பொறுத்தவரை அக்கட்சியானது வட மாகாண சபையில் இணக்க அரசியலுக்கும் எதிர்ப்பு அரசியலுக்கும் இடையே இரண்டாகக் கிழிபடுகிறது. முழமையான இணக்க அரசியலையும் முன்னெடுக்க முடியவில்லை. துலக்கமான எதிர்ப்பு அரசியலையும் முன்னெடுக்க முடியவில்லை. மஹிந்த இருந்தவரை மாகாண சபை இயங்க முடியாததுக்கு அவரைக் குற்றம் சாட்ட முடிந்தது. ஆனால், மைத்திரி வந்த பின்னரும் நிலைமைகள் பெரியளவில் மாறவில்லை என்று முதலமைச்சர் லண்டனில் வைத்துக் கூறியுள்ளார். இது வாக்காளர்களுக்கு ஒரு தெளிவற்ற சித்திரத்தையே வழங்குகிறது. குறிப்பாக அரை நூற்றாண்டுக்கும் மேலாக எதிர்ப்பு அரசியலுக்கே வாலாயப்பட்டுப் போன ஒரு வாக்களிப்பு பாரம்பரியத்தைப் பொறுத்தவரை இது ஒரு தெளிவற்ற சித்திரம்தான். ஒருபுறம் முதலமைச்சர், தீவிர தேசிய சக்திகளைக் கவரக் கூடியவராகக் காணப்படுகிறார். ஆனால் அவருடைய கட்சித் தலைமையோ தீவிர தேசிய சக்திகளால் கடுமையாக நிந்திக்கப்படுகிறது.
அதோடு, ஓர் ஆளும் கட்சியாக அவர்கள் வட மாகாண சபையில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை எவ்வளவு தூரம் வெற்றிகரமாகத் தீர்த்திருக்கிறர்கள்? முழுக்க முழுக்க எதிர்ப்பு அரசியலை நடத்தினால் இக்கேள்வி வராது. எல்லாப் பழியையும் கொழும்பின் மீது போட்டுவிட்டுத் தப்பிவிடலாம். ஆனால் இப்பொழுது தப்ப முடியாது. உதாரணமாக சுன்னாகம் நீர்ப்பிரச்சினை. நீரில் மாசு உண்டோ இல்லையோ அது பொதுசன அபிப்பிராயமாக மாறிவிட்டது. அதுவும் இது போன்ற பல பிரச்சினைகளும் கூட்டமைப்பின் மீதான அதிருப்தியையும் கோபத்தையும் அதிகப்படுத்தியுள்ளன. இது இரண்டாவது காரணம். குறிப்பாக வடக்கிற்கே உரியது.
மூன்றாவது காரணம் – ஆயுதப் போராட்டம் பற்றிய முற்கற்பிதங்களோடு மிதவாதிகளை அணுகுவது. ஆயுதப் போராட்ட களத்தில் எதுவும் வேகமானது. ஆயுதப் போராட்டத்தை ஒரு அளவுகோலாக வைத்துக் கொண்டு மிதவாதிகளை அளக்க முடியாது. அந்த வேகத்திற்கு ஒன்றும் நடக்கவில்லை என்று குற்றம் சாட்டவும் முடியாது. ஆனால், ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரான ஒரு சமூகச் சூழலில் கூட்டுக் காயங்களோடும் கூட்டு மனவடுக்களோடும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஓர் உளவியல் சூழலில் மிதவாதிகளைக் குறித்து முடிவெடுக்கும் எல்லாத் தருணங்களிலும் ஆயுதப் போராட்டம் ஒரு முற்கற்பிதமாக வந்து முன்னால் நிற்கும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இது காரணமாக சராசரி வாக்காளர்கள் 2009 இற்கு முந்திய நிலைமைகளையும் 2009இற்கு பிந்திய நிலைமைகளையும் ஒப்பீடு செய்வார்கள். இதுவும் கூட்டமைப்புக்கு பாதகமானதே.
இனி நான்காவது காரணம் – கடந்த ஆறு ஆண்டுகளில் கூட்டமைப்பு தன்னைப் படிப்பாயாக புலி நீக்கம் செய்துவிட்டதாக புலிகளின் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். புலி நீக்கம் மட்டுமல்ல. தேசிய நீக்கமும் நிகழ்ந்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆயுதப் போராட்டத்தில் வெளிக்காட்டப்பட்ட வீரத்தையும், தியாகத்தையும் கூட்டமைப்பின் தலைமை போதியளவிற்குக் கௌரவிக்கவில்லை என்றும் அவர்கள் கோபமடைந்துள்ளார்கள். இக்கோபத்தை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அதிகம் காணமுடிகிறது. தமிழகத்திலும் ஓரளவிற்குக் காணமுடிகிறது. இதுவும் கூட்டமைப்பின் மீதான அதிருப்திகள் அதிகரிக்க ஒரு காரணம்.
இனி ஐந்தாவது காரணம் – கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து தேர்தல்கள் நடந்துவிட்டன. இத்தேர்தல்களின் போது கூட்டமைப்பு வழங்கிய வாக்குறுதிகளில் அநேகமானவை நிறைவேற்றப்படவில்லை. கூட்டமைப்பு மட்டுமல்ல கடந்த சுமார் 60 ஆண்டுகால இன அடையாள அரசியலில் மிதவாதிகள் வழங்கிய பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சியானது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம் என்பது வாக்காளர்களுக்கு தெரிந்தே இருக்கிறது. அது அரசை எதிர்க்கிறது என்பதற்காகவே அவர்கள் தமது வாக்குகளை அளித்தார்கள். வாக்குறுதிகளுக்காக அல்ல. ஆனால், 2009இற்குப் பின்னரான அசாதாரணமான ஓர் உளவியல் சூழலின் பின்னணியில் கூட்டமைப்பு விடும் ஒவ்வொரு சிறு தவறும் உருப்பெருக்கிக் காட்டப்படுகின்றன. குறிப்பாக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மக்களாணையைப் பெற்று பின்னர் கொழும்பிலும் அனைத்துலக அரங்கிலும் அவர்கள் அந்த மக்களாணைக்கு விசுவாசமாக நடந்துகொள்ள வில்லை என்ற விமர்சனம் படித்த நடுத்தரவர்த்கத்தினர் மத்தியில் பரவலாக உருவாகிவிட்டது.
மேற்சொன்ன முக்கிய காரணங்கள் மற்றும் ஏனைய உபகாரணங்களின் திரண்ட விளைவாக கூட்டமைப்பின் மீதான அதிருப்தி அதிகரித்து வருவது, குறிப்பாக யாழ்ப்பாணத் தேர்தல் களத்தில் துலக்கமாகத் தெரிகிறது. இது முழுக்க முழுக்க கூட்டமைப்பின் செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்ட ஓர் அபிப்பிராய திரட்சிதான். இவ் அபிப்பிராயத்தை உருவாக்கியத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு பெரும்பங்கு கிடையாது. அவர்கள் கூட்டமைப்புக்கு எதிராக திட்டமிட்டு செயற்பட்டு உருவாக்கிய ஓர் அபிப்பிராயம் அல்ல இது. ஆனால், இந்த அபிப்பிராய மாற்றம் மக்கள் முன்னணிக்கு அனுகூலமானது. இந்த அபிப்பிராய மாற்றத்தை வாக்குகளாகத் திரட்டுவது என்பது அந்தக் கட்சியின் பிரசார உத்திகளிலேயே தங்கியிருக்கிறது.
கடந்த ஐந்தாண்டுகளாக அக்கட்சியானது ஓர் இலட்சியவாதக் கட்சியாகவே சிறுத்துக் காணப்பட்டது. திருப்பகரமான தருணங்களில் அறிக்கைகளை விடுவது, பேட்டிகளை வழங்குவது என்பதற்குமப்பால் அக்கட்சியானது அடிமட்ட வலையமைப்பைப் போதியளவு பலப்படுத்தியிருக்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அதற்கு இருந்த கவர்ச்சி தாயகத்தில் இருந்திருக்கவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளில் தாயகத்தில் அக்கட்சி மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் பெரும்பாலானவற்றில் திரும்பத் திரும்ப ஒரே முகங்களே காட்சியளித்தன. ஏறக்குறைய ஓரேயளவு தொகையினரே அவற்றில் பங்குபற்றினார்கள். அவ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்குபற்றியவர்களின் தொகையை விடவும் அவை பற்றிய செய்திகளைச் சேகரிக்க வந்த ஊடகவியாளர்களின் தொகை அதிகமாக இருந்தது. சில சமயங்களில் அவற்றைக் கண்காணிக்கவரும் புலனாய்வாளர்களின் தொகை அதிகமாய் இருந்தது. இப்பொழுது கூட்டமைப்புக்கு எதிராகப் பரவிவரும் அதிருப்திக்கு மக்கள் முன்னணி உரிமைகோர முடியாது. ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக மிகக் குறைந்த தொகையினரோடு தம் அரசியல் இலக்குகளில் விட்டுக் கொடுப்பின்றி நின்று நிலைத்ததன் பலனை அக்கட்சி இனி அறுவடை செய்யக் கூடும்.
கூட்டமைப்புக்கு எதிராக உருவாகியிருக்கும் ஓர் அதிருப்தி அலையை அதன் தலைமை எவ்வாறு கையாளப்போகிறது? தனது பிரச்சாரப் பணிகளைத் தொடக்கி வைத்து திருமலையில் ஒரு சந்திப்பில் சம்பந்தர் ஆற்றிய ஒரு உரையை இங்கு சுட்டிக்காட்டலாம். “நாங்கள் பயணத்தை முடிக்கப் போகிறோம” என்று அவர் கூறுகிறார். ஆனால், மக்கள் முன்னணி இனித்தான் பயணத்தைத் தொடங்க முயற்சிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஓர் அரசியல் தலைவர் பயணத்தை முடிக்கப் போகிறோம் என்று கூறுவது பொருத்தமானதா? அது வரலாற்றின் இயங்கியல் விதிகளுக்கு ஏற்புடையதா? ஒரு கதைக்காக வரும் ஆண்டில் சம்பந்தர் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதோடு பயணம் முடிந்துவிடுமா? மூன்றாவது தரப்பின் அழுத்தம் இன்றி அதை அமுல்படுத்த முடியுமா? சிங்களக் கடும்போக்குவாதிகளிடம் இருந்தும் சிங்கள பௌத்த மயப்பட்டிருக்கும் அதிகார கட்டமைப்பிடம் இருந்தும் நீதி நிர்வாகக் கட்டமைப்பிடம் இருந்தும் யுத்த எந்திரத்திடம் இருந்தும் அதைப் பாதுகாப்பதற்காக மேலும் எவ்வளவு காலம் போராட வேண்டியிருக்கும்? எனவே, ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை பயணங்கள் முடியப் போவதில்லை. ஆனால், சம்மந்தர் பயணத்தை முடிக்கப் போவதாகக் கூறுகிறார். மக்கள் முன்னணியை விமர்சிப்பதற்காகவே அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.
தமிழர்கள் மத்தியில் உள்ள மிக மூத்த தலைவர் அவர். தனது பிரச்சார மேடைகளில் தனிப்பட்ட தாக்குதல்களை அநேகமாகச் செய்ததில்லை. ஆனால், தனது சொந்தத் தொகுதியில் மக்கள் முன்னணியை விமர்சிப்பதற்காக அவர் பழைய தோம்புகளை இழுத்துக் கதைத்திருக்கிறார். இவ்வாறு வழமைக்கு மாறாக உரையாற்றியிருப்பது எதைக் காட்டுகிறது? கூட்டமைப்பு இதுவரையிலும் அனுபவித்து வந்த ஏகபோகத்திற்கு சோதனை வந்துவிட்டதை அக்கட்சி உணர்ந்துவிட்டது என்பதைத்தானே?
எனவே, வரவிருக்கும் தேர்தலில் தமிழ் வாக்களிப்பு பாரம்பரியத்தின்படி யார் இனமான அலையை அதிகம் தூண்டுகிறார்களோ அவர்களுக்கே வெற்றிவாய்ப்புக்கள் அதிகமாய் இருக்கும். வாக்களிப்பு அலை ஒன்றைத் தூண்டுவதாக இருந்தால் முழு அளவு எதிர்ப்பு அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்கவேண்டியிருக்கும். இந்நிலையில், முழு அளவு எதிர்ப்பு அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போவது யார்?
அல்லது வாக்களிப்புப் பாரம்பரியத்தை மாற்ற வேண்டும். அதைக் கூட்டமைப்பே செய்ய வேண்டியிருக்கும். ஒரு தீர்வுக்கான மக்கள் ஆணையை கேட்க வேண்டியிருக்கும்.
யார் எதை முன்னெடுத்தாலும் இரண்டு கட்சிகள் மத்தியிலும் மேடைக் கவர்ச்சிமிக்க பேச்சாளர்கள் இல்லை என்பதே இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இன்னாருடைய குரலுக்குக் கட்டுப்பட்டு மக்கள் ஆடாமல் அசையாமல் இருந்து பேச்சைக் கேட்பார்கள் என்று கூறுமளவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் தங்க நாக்குகளோ வெள்ளி நாக்குகளோ கிடையாது. கடந்தவார கட்டுரையில் கூறப்பட்டதைப் போல தமிழ்த் தேசிய கோசங்களை யு.என்.பியும் முன்வைக்கலாம் என்ற ஒரு நிலைமையே யாழ்ப்பாணத்தில் காணப்படுகிறது. இந்நிலையில், வட மாகாண சபைத் தேர்தலின் போது உருவாக்கப்பட்டதைப் போல ஒரு வாக்களிப்பு அலையை எந்தக் கட்சி உருவாக்கப் போகிறது?
மக்கள் முன்னணியானது வாக்குகளைச் சிதறடிக்கிறது என்றும் அது எதிர்த்தரப்புக்கே சாதகமாய் முடியும் என்றும் ஒரு வழமையான குற்றச்சாட்டு உண்டு. இது எங்கிருந்து தோற்றம் பெறுகிறது? மக்கள் முன்னணியை ஒரு வெற்றியீட்டும் கட்சியாக பார்க்காதவர்கள் மத்தியில் இருந்தே இக்குற்றசாட்டு வருகிறது. வெற்றியீட்டும் கட்சிகள் வாக்குகளைத் திரட்டுகின்றன. தோற்கும் கட்சிகள் வாக்குகளைச் சிதறடிக்கின்றன. மக்கள் முன்னணி வாக்குகளைத் திரட்டுமா? அல்லது சிதறடிக்குமா?
தினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.