படம் | TAMILNET

தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றம் வேண்டும் என்று கூறிக் கொண்டு ஒரு குழு கிளர்ந்தெழுந்துள்ளது. தமிழர் அரசியலில் திருப்பங்கள், திருத்தங்கள் அவசியம் என்பது உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் “எம்மைத் திடப்படுத்துங்கள்” என்று மக்களை வலிந்து கோருவதைக் காட்டிலும் தம்மைத் திருத்துவதில் அதிக நேரத்தினை செலவழிக்க வேண்டும் என்பதே பொதுவான பெரும்பான்மைத் தமிழர் நிலைப்பாடும்.

ஆனால், இந்தக் குறித்த குழு – குறிப்பாகக் கூறின் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியும், அக்கட்சியின் புலம்பெயர் விழுதுகளும் உள்நாட்டு அப்புக்காத்துகளும் – வேண்டி நிற்கும் மாற்றம் என்ன? இவர்கள் உண்மையிலேயே புதிதாக எதையும் கூறி நிற்கின்றார்களா? இவர்கள் இந்த மாற்றத்தைக் கொண்டுவர என்ன திட்டத்தை கைவசம் வைத்துள்ளார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக, இக்குழு வேண்டி நிற்கும் மாற்றம் எம்மை எங்கு கொண்டு செல்லும்? என்ற கேள்விகள் எம்மிடையே இன்று எழாமல் இல்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பின்புலம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிழையான வழிகளில் இட்டுச் செல்லும் சக்திகளை ஓரங்கட்டப் போவதாகக் கூறிக்கொண்டு 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் குதித்த கட்சியே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. இதன் உறுப்பினர்கள் கூட்டமைப்பின் சார்பில் 2004 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாமன்றம் சென்றவர்கள். 2004 பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் முதல் மூன்று அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றம் சென்றவர்களான செல்வராஜா கஜேந்திரன் (112,077), பத்மினி சிதம்பரநாதன் (68,240), கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (60,770) என்போரே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆரம்பகர்த்தாக்கள். இவர்களால் 2010 தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் வெறுமனே 6,362 மொத்தமாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இதுவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்கிய அங்கீகாரம்.

இதன் பின்னர் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என்பவற்றை கொள்கை அடிப்படையில் புறக்கணிப்பதாகக் கூறிக்கொண்டு பூச்சாண்டி காட்டிக் கொண்டு ஒதுங்கி விட்டது இந்தக் கட்சி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விரு தேர்தல்களிலும் 2010 பொதுத் தேர்தலிலும் பெற்ற வெற்றியைப் பார்க்க மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

கள ஆதரவு நிலை இவ்வாறிருக்க தம்மை தமிழ்த் தேசியத் தொண்டர்வர்களாக அடையாளாம் காட்டிக் கொள்பவர்கள் – களத்திலும் சரி, புலத்திலும் சரி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறந்தள்ளி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு திரட்டித் திரிவது அவர்கள் தமிழ் மக்களின் ஆணைக்கு அளிக்கும் மரியாதையையும், அவர்களது அரசியல் உள்நோக்கங்களையுமே கோடிட்டு நிற்கின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சுய-முரண் நிலை அரசியல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ்த் தேசியத்தின் துரோகிகள் என்கிறார். அவர்களது முழுத் தேர்தல் பிரச்சாரமும் கூட்டமைப்பைத் துரோகியாக்கும், அதன் தலைமை மீது அந்த முத்திரையை எப்படியாவது குத்திவிட வேண்டும் என்ற முனைப்பிலேயே அமைந்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்று கூகிளில் தேடினாலே அவர் யாரையாவது துரோகி என்று சாடும் செய்திப்பதிவுகள் தான் முந்திக் கொண்டு நிற்கின்றது. தேர்தலுக்காக அவரது கட்சியால் தயாரிக்கப்பட்டிருக்கும் கணொளிக் காட்சிகளில் கூட அவர் அதைத்தான் செய்கின்றார்.

கூட்டமைப்பை, அதன் தலைமையினை துரோகிகள் என்று இணங்காட்ட பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன: (1) சிங்கக் கொடியினை ஏற்றுக்கொள்ளல்; (2) இலங்கையின் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டமை; (3) 13ஆம் திருத்தத்தினை  இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளல்; (4) ஆயுதப் போராட்டத்தினை இழிவுபடுத்தல்.

என்னைப் பொறுத்தளவில் கூட சம்பந்தன் கொடியேந்தலைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், சிங்கக் கொடியேந்துபவன் எவனும் தமிழ்த் துரோகி, புலிக்கொடி ஏந்தும் அனைவரும் தமிழ்த் தியாகி என்ற எளிய சூத்திரம் வரலாற்றைக் கொச்சைப்படுத்துவதும், ஆபத்தானதுமாகும். அரச நிகழ்வொன்றில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது அர்த்தமற்ற செயல் என்றால், சிங்கக் கொடி ஏந்துவதிலும் பெரிய பூதாகரமான அர்த்தம் இருப்பதாக எனக்குப் படவில்லை. வரலாறு முக்கியம், வரலாறு முக்கியம் என்று அடிக்கடி நினைவுபடுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது குடும்பக் கட்சியான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாறு பற்றி மட்டும் தன்னிடம் பேச வேண்டாம் என்கிறார். ஜி. ஜி. பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையில் 50களில் அங்கத்துவம் வகித்தவராகிற்றே! தந்தை செல்வாவின் அரசியல் போக்கை கடுமையாகச் சாடியவராகிற்றே!

இவ்வருட சுதந்திர தின நினைவு நாளில் சம்பந்தனும், சுமந்திரனும் கலந்து கொண்டமை ஊதிப் பெருப்பிக்கப்பட்ட அரசியல் விவகாரங்களில் ஒன்று. அன்று மூட்டப்பட்ட நெருப்பில் இன்றுவரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குளிர் காய்ந்துவருகின்றது. இந்த சம்பவமும், மேலே அலசப்பட்ட விடயம் போலவே ஒரு கறுப்பு-எதிர்-வெள்ளை என்ற பாகுபடுத்தலுக்குள் அடங்காத ஒன்று. இத்தனை நாளாக சுதந்திர தின விழாவிற்குச் சென்றிராத, தமிழ்த் தரப்பு செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து முன்னின்று உழைத்த, சம்பந்தனுக்குத் திடீரென ஏன் இவ்வருடம் செல்லத் தோன்றியது? செல்வது எம்மாதிரியான பின் விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதும் அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். விடை இந்த ஆண்டு நடந்த சுதந்திர தின விழாவின் தொனிப்பொருளுடன் அவருக்கிருந்த உடன்பாடாக இருந்திருக்கலாம் (தொனிப்பொருளின்/ எண்ணக்கருவின் குறை-நிறை, பூரணத்தன்மை, நடைமுறைப்படுத்தல் பற்றிய விவாதத்திற்கு இடமுண்டு)

அவ்விழாவில் வாசிக்கப்பட்ட சமாதானத்துக்கான  பிரகடனத்தில் பின்வரும் கருத்துக்கள் அடங்கியிருந்தன:

(1) சமாதானமும், பாதுகாப்பும், ஜனநாயகத்தினதும் குடியுரிமையினதும் பலன்கள் நாட்டின் அனைவருக்கும் உரித்துடமையாக வேண்டும் என்ற பிரேரணை.

(2) நாட்டில் சுதந்திரத்திற்குப் பின்னர், குறிப்பாக 30 வருட கால யுத்தத்தின் வினையாக இறந்த அனைத்து இன, மொழி, சமயங்களையும் சார்ந்தவர்களுக்குமான பொதுவான நினைவு கூரலும், மரியாதை செலுத்தலும்.

(3) அனைத்துக் குடிமக்களும் அனுபவிக்கும் வகையில் நல்லிணக்கம், நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றை நிலைநிறுத்தல், மேம்படுத்தல் என்ற உறுதி பூணல்.

(4) சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு மற்றும் இணக்கப்பாடு என்பவற்றுடன் கூடியதொரு பன்மைத்துவச் சமுதாயத்தை வளர்க்க வேண்டும் என்ற பிரதிக்ஞை.

(5) மீண்டுமொரு இரத்தம் சிந்தல் நாட்டிற்கு வேண்டாம் என்ற உறுதிப்பாடு.

மேற்கண்ட கருத்துக்களுடன் உடன்படுவது தமிழினத் துரோகம் என்றால், உடன்படுபவர்கள் தமிழ்த் தேசியத் துரோகிகள் என்றால், இந்தத் ‘துரோகி’ என்கிற பதம் குறித்த உரையாடலும், அதன் உள் அர்த்தங்கள் தொடர்பிலான தியானமும் தமிழ் அரசியலுக்கு இன்றியமையாதவை.

தமிழ்த் தேசிய முன்னணி 13ஆம் திருத்தச் சட்டம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதொரு தீர்வென்ற அடிப்படையில் இதைப் பூரணமாக நிராகரிக்கின்றது. கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்ததற்கு அக்கட்சி வழங்கிய காரணமும் இதுவே. அப்படியென்றால் அதே ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு உட்பட்டு நடக்கும் இந்தப் நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி போட்டியிடுவதன் காரணம் என்ன? போட்டியிடுவது இலங்கையின் அரசியலமைப்பினை ஏற்றுக்கொள்ளுகின்றனர் என்று பொருட்படுமா? வெறுமனே சர்வதேச சமூகத்தை நோக்கிச் ‘சத்தம்’ போடுவதற்கு புதிய  மேடையொன்றைத் தேடுகின்றார்கள் என்றால் (அரசுடன் எவ்வித இடைப்படுதலுக்கும் தாம் செல்லப்போவதில்லை என்று கூறும்போது வேறு எதைத்தான் கருதுவது?) இவர்களுக்குக் கிடைக்கும் நாடாளுமன்ற ஆசனங்கள் அனைத்தும்  விழலுக்கு இறைக்கின்ற நீரே! தமது அரசியலிற்கான தமிழரது ஜனநாயக ஆணையினைத் தேடி இந்தத் தேர்தலில் குதிக்கின்றார்கள் என்றால் 2010இல் கொடுக்கப்பட்ட ஜனநாயக ஆணைக்கு இவர்கள் செய்த மரியாதை என்ன? மக்களின் ஜனநாயக வெளிப்பாட்டை ஏற்க மறுத்து, மக்கள் ஆணையைப் பெற்ற கட்சித் தலைமைகளை துரோகி என்று தூற்றித் திரியும் இவர்களை என்னவென்பது.

இறுதியாக கூட்டமைப்பின் தலைமை  ஆயுதப்போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றது என்ற பொய்க் குற்றச்சாட்டையும் பரவலாக விதைத்து வருகின்றனர் கஜேந்திரகுமாரின் தோழர்கள். விடுதலைப் புலிகளின் கொள்கைகளோடு முரண்படுவது, ஏற்கொள்ள மறுப்பது ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகுமா? இதற்கு விடை ஆம் என்றால், அக்குற்றத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார். அவர் ‘ஒரு நாடு; இரு தேசம்’ என்று கூறும்போது விடுதலைப் புலிகளின் தனி நாட்டுக் கோரிக்கையைப் புறக்கணிக்கின்றார் அல்லவா? இரண்டாவது, உண்மையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசிவருகிறதா? இல்லை. ஆங்கில ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செவ்விகளைத் திரிபுபடுத்தி அச்செவ்வி வழங்கப்பட்ட பின்புலத்தைப் பற்றிக் குறிப்பிடாமல், ஆங்காங்கே வசதிக்கேற்றாற் போல் கால்ப்புள்ளி, முற்றுப்புள்ளியைச் சேர்த்து அதன் பால் நடாத்தி வரும் ஒரு பொய்ப் பிரச்சாரமே இது! இது குறித்து நான் ஏலவே விரிவாக எழுதியுள்ளேன்.

மூன்றாவது, புலிகள் இழைத்த தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, அதிலிருந்து மீள்வது காலத்தின் அவசியம் என்பதை இன்னுமா உணராதிருக்கின்றோம்?

என்னதான் புதுசு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டமைப்புக்கு எதிரே வைக்கும் விமர்சனங்களில் பொதிந்திருக்கும் சில சுய-முரண்பாட்டு நிலைகளை சுட்டிக் காட்டியிருந்தேன். விமர்சனங்களைத் தாண்டி இவர்கள் முன்வைக்கும் தீர்வு குறித்த யோசணைகளின்  சாத்தியத் தன்மையும் கேள்விக்குறியே! எதைச் செய்யலாம் என்ற கேள்விக்கு விடையாக பெரிதாக எதையும் அவர்கள் சொல்லவில்லை என்பதே உண்மை. எப்போதும் என்னெல்லாம் செய்யத்தகாது என்பதில் ஒரு டசன் விடயங்கள் வைத்திருக்கின்றனர்.

சாரமாகச் சொன்னால் அரசியல் தீர்வு தொடர்பில் இவர்களது அணுகுமுறை இரு விடயங்களை முன்மொழிகின்றது. (1) இதுவரை வடிவம் பெறாத ஈழத்திலும், புலத்திலும் வாழும் தமிழரையும், தமிழ் நாட்டுத் தமிழரையும் ஒன்றிணைத்து சர்வதேச அரசியலோட்டத்தை தமது அரசியல் கோரிக்கைகளுக்கு ஏற்றாற் போல் திசைதிருப்பி தீர்வை நடைமுறைப்படுத்தல்; (2) போர்க்குற்றம்/ இனவழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் அரசியல் தீர்வினை நோக்கி நகர்தல்.

முதலாவது பிரேரணையின் நடைமுறைச் சாத்தியம் பற்றிப் பேசினால் தோல்வி வாதம் என்கின்றனர். எங்கு, எப்போது சர்வதேச நிகழ்ச்சி நிரலில் இருந்து இலங்கை அரசு விலகி நடக்கிறதோ, அங்கு அப்போது சர்வதேசம் தமிழரது பிரச்சினையினைத் தூக்கிப் பிடித்து தமக்கு வேண்டியதைச் சாதித்துவிடும். இதுதான் கடந்த ஆறு ஆண்டு காலமும் நாம் கற்றுணர்ந்த பாடம். இந்த நாடு கடந்த தமிழர் வலையமைப்பினை ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொண்டால் கூட, சர்வதேச நிகழ்ச்சி நிரலினை தமிழர் தீர்மானிப்பதென்பது நடக்கப் போகும் விடயம் அல்ல – அது இன்றோ, என்றோ, எப்பொழுதோ! எங்களை நாடாளுமன்றம் அனுப்புங்கள், சர்வதேசத்தை எம் பக்கம் வளைத்துக் காட்டுகின்றோம், கட்டிப் போடுகின்றோம் என்று கூறும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர் 2004 – 2010 வரை நாடாளுமன்றத்தில் எதனை வளைத்தார்கள்? யாரைக் கட்டிப் போட்டார்கள்? இந்த நாடுகடந்த தமிழர் வலையமைப்பில் அங்கம் வகிக்கப்போகும் அதே தமிழ் நாட்டுத் தமிழர்களும், தமிழ் நாட்டு அரசும் தான் இன்று மீளக்குடியேறிய மீனவர் வளங்களை, அவர்களது வாழ்வாதாரங்களை சூறையாடிக்கொண்டிருக்கின்றன. 2013இல் தமிழ்நாடு முழுக்க சர்வதேச விசாரணை கோரி மாணவர் போராட்டம் நடந்து கொண்டிருந்த போதே அன்றைய இந்திய அரசு அந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனீவாப் பிரேரணையின் கனத்தை தனது தலையீட்டினால் குறைத்திருந்தது. நீதிக்கான போராட்டத்தில் சர்வதேசப் பொறிமுறைகளைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை; செய்தே ஆக வேண்டும்! ஆனால் அப்பொறிமுறைகளின் பலம், பலவீனம், சர்வதேச சக்திப் பரம்பல், அப்பொறிமுறை இயங்குவதற்கான கால அவகாசம் என்பவற்றை சரியாகப் புரிந்து கொண்டால் மாத்திரமே வீண் அதிருப்திகளை, ஏமாற்றங்களை பாதிக்கப்பட்ட தமிழர்கள் தவிர்க்க முடியும்.

பொன்னம்பலம் தரப்பினர் தீர்வு தொடர்பில் முன்வைக்கும் இரண்டாம் வழிமுறையையும் இவர்கள் ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுத்த கோரிக்கையையும் சேர்த்துப்பார்த்தால் இந்த முன்மொழிவின் உள்-அர்த்தம் புரியும். அதாவது, ஒரு இனவெறி கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்ததுடன், இன்றும் அதே வெறித்தனப் போக்குடன் செயற்பட்டு வருகின்றது என்ற செய்தியை கொடுத்துக் கொண்டே இருந்தால் என்றாவது, யாராவது குறுக்கிட்டு ஏதாவது அரசியல் தீர்வைத் தருவார்கள் என்ற குருட்டுத்தனமான அரசியலே இவர்கள் சொல்லும் வழி! இந்தப் படத்தைத் தொடர்ந்து கொடுக்க இவர்கள் எந்த ‘அர்ப்பணிப்புக்கும்’ தயார். இத்திட்டம் பலிக்க தமிழர் இன்னும் எத்தனை நாள் உத்தரிக்க வேண்டும்? இதனால்தான் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற தமிழர்கள் பெருந்தொகையில் வாக்களிக்க வேண்டும் என்பதை நன்கே புரிந்து வைத்துக் கொண்டு இவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பகிஷ்கரிப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஊக்குவித்தனர். ஏனெனில், மஹிந்த தலைமையிலான அரசின் கீழ் மேற்குறிப்பிட்ட செய்தியை வெளிப்படுத்துவது, மைத்திரி தலைமையிலான அரசின் கீழ் வெளிப்படுத்துவதிலும் இலகு. எந்தப் பரிமாணத்தில் பார்த்தாலும் இந்த அரசியல் மக்கள் நலன்சார் அரசியலாகத் தெரியவில்லை

இவர்கள் எதிர்பார்க்கின்ற விதமான சர்வதேச விசாரணை நடக்குமா? நடந்தாலும் இவர்கள் எதிர்பார்க்கும் தீர்ப்புக் கிட்டுமா? கிட்டினாலும் அங்கிருந்து இவர்கள் எதிர்பார்க்கின்ற விதமான அரசியல் தீர்வை நோக்கி எவ்வாறு நகர்வது என்பது குறித்த தெளிவான திட்டம் இவர்களிடமுள்ளதா? உண்மையில் இவர்கள் எதிர்பார்க்கின்ற விதமான சர்வதேச விசாரணை ஒன்று நடக்குமா, இல்லையா என்ற கேள்விக்குக் கூட இவர்களிடம் பதில் இல்லை! இப்படியிருக்க இப்படியொரு யோசணையினை முன்வைக்கும் கட்சியை என்னவென்று சொல்வது? விந்தை யாதெனில், இவர்கள் தமிழரது விமோசனத்துக்கான பாதையாக தமிழரது தொடர்ந்த உத்தரிப்பையே முன்வைக்கின்றனர். இது ஒருவகை தற்கொலை அரசியலே.

தமிழர் அரசியல் செல்ல வேண்டிய பாதை

வாக்களித்த மக்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை, அதன் தலைவர்களைக் கேள்வி கேட்பது, விமர்சிப்பது நியாயமானதும் முற்றிலும் அவசியமானதுமாகும். கேள்விகளும், விமர்சனங்களும் தவறுகளைத் திருத்தும் விதமாக இருக்க வேண்டுமே அல்லாமல் இன்னும் மோசமானதொரு நிலைக்கு தமிழரைத் தள்ளும் விதமாக இருக்கக் கூடாது. உரிமைப் போராட்டத்தை தலைமை தாங்கும் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய அரசியற் கட்சிகளிலும் அவதானமாக நடக்க வேண்டியது அவசியம். வெளிப்படையாகவும் தன்னலமின்றியும், மக்களோடு மக்களாக நின்று எமது மக்களது மீள் எழுச்சிக்கென பாடுபட வேண்டிய கட்டாயத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நாடாளுன்றத் தேர்தலைச் சந்திக்கின்றது. இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தனது கடனைச் செவ்வனே செய்திருக்கின்றதா என்றால் மேலும் பல படி முன்னேற இடமுண்டு என்பதே தீர்ப்பாக இருக்கும். உணர்ச்சி அரசியலை ஊக்குவிப்பது, தேர்தல் காலங்களில் வெற்று வாக்குறுதிகளை வழங்கி அரசியல் புரிவது என்பவற்றை விடுத்து, நிதானமாக தமிழரது பிரச்சினைகளை அறிந்து தீர்த்து வைக்கும் ஆளுமையுள்ள தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற வேண்டும்.

கூட்டமைப்பினர் தமது தவறுகளில் இருந்து தம்மைத் திருத்தாவிட்டால் என்றோ ஒரு நாள் நிச்சயம் மாற்றுத் தலைமையின் அவசியம் உணரப்படும். ஆனால், அந்த மாற்றுத் தலைமை நிச்சயமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இல்லை. சுருக்கமாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் எம்மை எங்கு கொண்டு செல்லும் என்ற கேள்விக்கான பதில்: பெரிய குழிக்குள் என்பதேயாகும்.