படம் | AP Photo/Eranga Jayawardena, TODAY ONLINE

சம்பந்தன் ஐயா நிதானமானவர். தளம்பத் தெரியாதவர். தடுமாறி வார்த்தைகளை உதிர்க்கின்றவர் அல்ல. தனிப்பட்ட உரையாடல்களில் கூட சிந்தனையைச் சீராக்கிய பின்பே பேசத் தொடங்குகின்றவர். ஊகங்களின் அடிப்படையில் அடுத்த மனிதர்கள் குறித்து அவதூறு பேசும் பழக்கம் இல்லாதவர். ஆனால் – கடந்த ஜூலை 4ஆம் திகதி – வவுனியாவில், தன்னைச் சந்தித்த விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்து, அவர்கள் அரச புலனாய்வுத் துறையின் முகவர்கள் என்ற கருத்துப்பட அவர்களிடமே ஐயா பேசியது அதிர்ச்சியானது. அவர் ஏன் அப்படித் தளம்பினார்…? தானாகவே அவ்வாறு சொன்னாரா…? அல்லது அவ்வாறு பேசும்படியாக வேறு யாராலும் தூண்டப்பட்டாரா…?

அதுபோக – ஐயா இந்தக் கருத்தைச் சொன்ன போது கூடவே இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு கட்சிகளின் தலைவர்களில் ஒருவர் கூட அந்தக் கருத்தை மறுதலிக்க முன்வரவில்லையே…? மௌனமாக இருந்ததன் மூலம் அவர்கள் கூட அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டது எதற்காக…? அந்த இடத்தில் ஐயாவுக்கு மாறாகப் பேசுவது அவர்களுக்குச் சங்கடமாக இருந்திருக்கலாம். ஆனால், அதன் பின்னர் கூட ஐயாவின் கருத்தை நியாயப்படுத்துகிற முறையிலேயே ஏன் அவர்களும் கருத்துக்களைச் சொல்கிறார்கள்…? புலிப் போராளிகளினதும், அவர்தம் குடும்பத்தினரதும் காவலர்களாகத் தம்மைக் காட்டியபடி ஏற்கனவே வாக்குகளை வாங்கிய இவர்கள், இனியும் அதே முகங்களோடு வாக்குகள் கேட்டு எவ்வாறு வரப் போகின்றார்கள்…?

தமிழர்களிடம் வாக்குகளைச் சேகரிப்பதற்காக – புலிகளைப் போற்றுவதும், மாவீரர்களை மகிமைப்படுத்துவதும், பிரபாகரனைப் பிரதானப்படுத்துவதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஓர் அரசியல் தந்திரம்தானே…? அப்படியிருக்கையில், பொருத்தமான ஒரு புலிப் போராளியையே தேடிப்பிடித்து தேர்தலில் நிறுத்த விரும்பாமைக்கான காரணம் என்ன…? கடந்தகால அனுபவங்கள் கசப்பானவையாக இருந்திருக்கலாம். நம்பி இடமளிக்கப்பட்ட அனந்தி சசிதரன், தேர்தலில் வென்ற பின்னர், கட்சியின் சொல் வரம்புகளுக்குள் ஓடாமல் மீறிச் செயற்பட்டார் என்பதும் உண்மைதான். இருந்தாலும் கூட, கட்சிக் கொள்கைகளுக்கு அமைவாகச் செயற்படத்தக்கவரும், நம்பகத்தன்மை மிக்கவரும், ஜனநாயக அரசியலுக்கு ஏற்ற தகுதியுடையவருமான ஒரு புலிப் போராளியைக் கூடவா இத்தனை காலத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை…?

தம்மைச் சந்திக்க வந்த புலிகளின் போராளிகளைச் சம்பந்தன் ஐயா சந்தேகப்பட்ட அதே நாளில், அதே இடத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் – பிரபாகரனைத் தலைவனாகப் போற்றுகின்ற சிறீதரன் கூட விடுதலைப் புலிப் போராளிகளை மிகக் கீழ்த்தரத்திற்கு கேவலமாக இகழ்ந்து பேசியிருக்கிறார். அவ்விதமாக அவர் பேசியது ஒரு ஆச்சரியமான விடயமல்ல. ஆனால், அவர் அவ்வாறு பேசிய போது, அங்கிருந்த எந்த ஒரு கூட்டமைப்பு உறுப்பினரும் கூட ஏன் அதனைக் கண்டிக்க முன்வரவில்லை…? அங்கிருந்த ஒவ்வொரு தனித்தனி கூட்டமைப்பு உறுப்பினருமே கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் விடுதலைப் புலிகளின் போராளிகளினதும் அவர்களது உறவினர்கள் நண்பர்களினதும் வாக்குகளினால் தேர்ந்தெடுக்கப்பட்டே தத்தமது நிலைகளை அடைந்தார்கள் என்பது ஒரு வெட்கக்கேடான – ஆன்மாவை நொருக்கும் – உண்மை அல்லவா…? இவர்களே மீண்டும் வாக்குகள் கேட்டு அதே ஆட்களிடம் வரத்தானே போகின்றார்கள்…?

புலிகளின் பொம்மைக் கட்சி என்று தம் மீது படிந்திருக்கும் சாயத்தைக் கழுவிக் கரைத்து விட்டுத் தமது மிதவாத அரசியலைத் தொடர்ந்து செல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் விரும்பக்கூடும். அதே நேரத்தில் – புலிகளின் போராளிகளை உள்ளே கொண்டுவருவது தமது தனிப்பட்ட அரசியல் முன்னேற்றங்களுக்கு இடையூறாகிவிடும் என்றும் அவர்கள் கருதக்கூடும். இந்தக் காரணங்களுக்காக – உயிரோடு வாழும் புலிகளைத் தமது பயணத்தோடு இணைத்துக் கொள்வதை இன்றைய தலைவர்கள் வெறுக்கக்கூடும். அப்படிப் பார்த்தால் – பிரபாகரனின் பெருமைகளையும் செத்துப் போன புலிகளின் செழுமைகளையும் பற்றி வாக்கு வேட்டைக்காகப் பேசித்திரிவது எத்தகைய மனச்சாட்சிக்கு நியாயமானது…?

விடுதலைப் புலிகளின் போராளிகளைத் தம்மோடு இணைத்துக் கொள்ளுவதற்கு கஜேந்திரகுமார் தயங்கினால், அது ஓரளவுக்கு நியாயமானது. ஏனெனில், தமிழர் ஒரு தேசிய இனம் எனவும், பாரம்பரியத் தமிழர் வாழ்நிலம் தமிழர் தேசம் எனவும் பிரகடனம் செய்யும் கஜேந்திரகுமாரின் கோட்பாட்டினை விடுதலைப் புலிகளின் போராளிகள் பரப்பினால், சிங்கள இனவாத சக்திகள் அதனைப் பிரிவினைவாதமாகச் சித்திரித்துவிடவே வாய்ப்புண்டு. ஏற்கனவே அதிதீவிரமாக அர்த்தப்படுத்தப்படும் கஜேந்திரகுமாரின் அரசியலுக்கும் அது பங்கமாக அமைவதோடு, அவரது கொள்கையைப் பேசித் திரிவது தற்கால சூழலில் புலிப் போராளிகளுக்கும் ஆபத்தாக அமையக்கூடும். அவ்வாறான போதும் கூட, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலுமே விடுதலைப் புலிப் போராளிகளைத் தமது வேட்பாளர்களாகக் கஜேந்திரகுமர் துணிந்து நிறுத்தியுள்ளார் தானே…? அவர்களுள் பெண் போராளிகள் கூட அடங்குகின்றனர் தானே…?

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய ஒரு விடுதலைப் புலிப் போராளி வாய்ப்பு கோருகின்றார் எனின் – ஐயாவும் சுமந்திரனும் முன்வைக்கும் இணக்க-அரசியல் வழிமுறையைத் தானும் முன்னெடுக்க அவர் தயாராக இருக்கின்றார் என்பது தானே அர்த்தம்…? அவ்வாறு ஒரு புலிப் போராளி முன்வருவாரெனின், அவரைக் கொண்டே அதனைச் செய்விப்பதில் என்ன பிரச்சினை வந்துவிடப் போகின்றது…? உண்மையில் – புலிகளின் போராளி ஒருவரைக் கொண்டே தமது இணக்க-அரசியலை முன்னெடுப்பது தானே ஐயாவுக்கும் சுமந்திரனுக்கும் பலம்…? அவ்வாறு இருந்தபோதும் அதனைச் செய்வதற்கு வீட்டுச் சின்னத்தின் தலைமை ஏன் முன்வரவில்லை…?

விடுதலைப் புலிகளின் போராளிகளைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களாக நிறுத்தி, ஜனநாயக அரசியலில் பங்களிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்க இது பொருத்தமான தருணம் அல்ல என்றும் ஐயா அங்கு குறிப்பிட்டிருக்கிறார். தெற்கிலே மஹிந்த ராஜபக்‌ஷ எழுச்சி பெற்றுவரும் இந்த நேரத்திலே, புலிகளைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தேர்தல் களத்தில் இறக்குவது அவரது எழுச்சிக்கு உந்துவிசை ஆகிவிடும் என்றும் ஐயா வாதிட்டிருக்கிறார். ஆனால், அது வெறும் சாட்டு. விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கத்தக்கதான ஒரு வாதமாக அது எனக்குப் படவில்லை. உண்மையில், மஹிந்தவை முறியடிப்பதற்குச் சிறந்த வழி புலிகளை மறைத்துப் பதுக்கி வைப்பது அல்ல. மாறாக, வெள்ளை வேட்டிகளைக் கட்டி அவர்களை வீதியிலே இறக்குவதுதான். துல்லியமாகச் சொல்லுவதெனில் – ஐயாவும் சுமந்திரனும் செய்ய முனையும் ‘மென் சக்தி’ அரசியலுக்கு வலுச்சேர்க்கத்தக்க அதியுச்ச வழியே புலிகளின் போராளிகளைத் தேர்தல் அரசியலுக்குள் கொண்டு வருவதுதானே…? திரும்பி வாய்திறக்க முடியாத வாதத்தை சிங்கள இனவாதிகளுக்கு முன்பாக அப்போது தானே வைக்க முடியும்…?

“இதோ பாருங்கள்! வன்முறை அரசியலில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்த விடுதலைப் புலிகளை நாங்கள் மென்முறைப் பாதைக்கு கொண்டுவந்து விட்டோம். ஜனநாயகத்தில் அவர்களை நம்பிக்கை கொள்ள வைத்துவிட்டோம். தேர்தல் அரசியலிலே நாட்டம் கொள்ள வைத்து அவர்களைப் பகிரங்கத்திற்கு கொண்டுவந்துவிட்டோம். அவர்கள் இப்போது எங்கும் பதுங்கியிருக்கவில்லை. கபட நோக்கங்கள் எதுவும் இப்போது அவர்களிடத்தில் இல்லை. பிரிவினைவாதத்தைக் கைவிட்டு சிங்கள மக்களுடன் இணைந்து வாழ அவர்கள் தயாராகிவிட்டார்கள். அதனால்தான் அவர்கள் நாடாளுமன்ற அரசியலுக்குள் நுழைந்துள்ளார்கள். அவர்களையிட்டு நீங்கள் அச்சம் கொள்ள எதுவும் இல்லை. ஒன்றுபட்ட இலங்கைக்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் இதனைச் செய்திருக்கின்றோம். ஜனநாயக நீரோட்டத்திற்குள் நாங்கள் கொண்டு வந்திருக்கும் புலிகள் மீண்டும் வன்முறைப் பாதைக்குச் செல்லாமல் நாம் எல்லோரும் அவர்களை இங்கு வரவேற்க வேண்டும். அவர்கள் இங்கேயே நிலைத்திருக்க அவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். இந்தப் பணியில் சிங்கள மக்களாகிய உங்கள் எல்லோரது ஒத்துழைப்பையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் வேண்டி நிற்கின்றோம்” – இப்படிச் சொல்லுவதையே சிங்களவர்கள் நம்புவார்கள். இப்படி வாதிடுவதன் மூலம் தானே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரிவினைவாதிகள் அல்லர் என்பதையும் கூட சிங்களவர்களிடத்தில் நிரூபித்திருக்க முடியும்…? சிங்கள மக்களின் மனங்களில் இருக்கும் அச்சங்களைப் போக்கவும் இதுதானே வழியாக இருந்திருக்கும்…? புலிகளைத் தொடர்ந்தும் மறைத்து வைத்தபடி வாக்குவேட்டைக்காக மட்டும் அவர்களது நாமங்களை உச்சரித்தால் தானே “புலிகள் பதுங்குகின்றார்கள்; பாயப் போகின்றார்கள்” என்ற மஹிந்தவின் வாதம் சிங்களச் சனத்திடம் விற்பனையாகும்…?

கடந்த வாரம், கொழும்பில், வெளிநாட்டுத் தூதரக அதிகாரி ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாகக் கதைத்தார். மேற்கூறிய எனது கருத்தை நான் முன்வைத்த போது அவர் சொன்னார் –

“இறுதிப் போரின் பின்பு அரசின் பொறுப்பிற்கு வந்த புலிப் போராளிகள் ராஜபக்‌ஷ அரசினாலேயே வடிவமைக்கப்பட்ட புனர்வாழ்வு வேலைத்திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டவர்கள். அந்த புனர்வாழ்வு நடவடிக்கையை வடிவமைப்பதில் பங்காற்றியதுடன், அது செயற்படுத்தப்பட்ட முறைமையை நாம் நெருக்கமாகக் கண்காணித்தும் வந்தோம். வன்முறைப் பாதைகளில் பயணித்தோரை இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வைப்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்ட புனர்வாழ்வு வேலைத்திட்டங்களுள் சிறந்த ஒன்றாக ராஜபக்‌ஷ அரசின் வேலைத்திட்டத்தை நாம் கருதுகின்றோம். முழுமையான புனர்வாழ்வுக்குப் பின்பு, சமூகத்தோடு கலந்து இயல்பு வாழ்வை முன்னெடுக்கத் தகுதியானவர்கள் என தாம் கருதியவர்களை மட்டுமே அவரது அரசு விடுவித்துள்ளது. அவரது அரசினால் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டவர்கள் ஜனநாயக அரசியலில் கலப்பதை ஒரு பிரச்சினையாக அவர் பிரச்சாரம் செய்ய முடியாது. அவர்கள் மீண்டும் வன்முறைப் பாதைக்குத் திரும்புவதைத் தடுப்பதற்கான வழிகளுள் ஒன்றாக, ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் அவர்களுக்குரிய இடங்கள் அளிக்கப்படுவதையே நாமும் விரும்புகின்றோம். இதே கோணத்தில் நோக்குகையில், இந்தியா கூட இதனை ஒரு நல்ல விடயமாகக் கருத முடியும். இருக்கின்ற கட்சிகளுக்குள் இடங்கள் அளிக்கப்படவில்லையெனின், தமக்காகத் தனிக்கட்சி அமைப்பது அவர்களது உரிமை. இலங்கையின் சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் இயங்குவார்களெனின், அந்த உரிமை மதிக்கப்பட வேண்டும். தேர்தலின் போது இந்த முன்னாள் புலிகளை மக்களே நிராகரித்துவிட்டால் அது வேறு விடயம். ஆனால், ஒரு பொது நோக்கத்திற்காகத் தமது வாழ்வைச் செலவிட்டவர்கள் தற்போதைய சூழலில் தமக்கான அரசியல் அங்கீகாரத்தை ஒரு ஜனநாயக முறையினூடாக மக்களிடம் கோருவதை யாரும் பிழையாகப் பார்க்க முடியாது. அதனை நிராகரிப்பது உகந்ததல்ல. அவ்வாறு நிராகரிக்கப்படுமிடத்து, அவர்கள் ஜனநாயக முறைகளுக்கு வெளியில் சென்று தமக்கான அங்கீகாரத்தைத் தேடத் தலைப்படுவார்கள். அது எவருக்குமே நல்லதல்ல. அதே நேரத்தில் – அவர்களும் தமக்காகவே இதனைச் சுதந்திரமாச் செய்ய வேண்டும் என்பதும், வேறு தரப்புக்களது விருப்பங்களுக்காகச் செயற்படக்கூடாது என்பதும் முக்கியமானது.”

சிவஞானம் சிறீதரன் எனும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் – அதிதிகள் நிறைந்த அரங்குகள் முதல் ஐந்தாம் வகுப்பு பிள்ளைகளின் பள்ளிக்கூடம் வரை – “பிரபாகரனே எனது ஆத்மார்த்த தலைவன்” என்று பகிரங்கப் பிரகடனங்கள் செய்கின்றார். “விடுதலைப் புலிகள் கட்சியே எனது கட்சி” என்று தமிழரசுக் கட்சிக் கூட்டத்திலேயே பெருமைப்படுகின்றர். “தலைவர் பிரபாகரன் அடையாளம் காட்டியதாலேயே நான் தமிழரசுக் கட்சியில் சேர்ந்தேன்” என்று சத்தியம் செய்கின்றார். தமிழரசுக் கட்சியையே மீளக்கொணர்ந்தவர் பிரபாகரன்தான் என உரிமைகோரும் ஒருவரையே தொடர்ந்தும் தமது கட்சியில் வைத்திருக்க முடியுமெனில், புலிகளின் போராளிகளுக்கு அரசியலில் இடம்கொடுத்தால் ராஜபக்‌ஷ சண்டைக்கு இறங்குவார் என்பதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்…?

இன்னொரு கோணத்தில் – வீட்டுச் சின்னத்தில் விடுதலைப் புலிகளை அரசியலில் இறக்குவது அல்ல, மாறாக – பிரபாகரன் புகழ் பாடிப் புலிகளின் பெயரில் வீட்டுச் சின்ன அரசியலைச் செய்ய வைப்பதுதான் ஆபத்தானது. நட்பு-அரசியல் செய்ய முனையும் ஐயாவின் மீதும் சுமந்திரன் மீதும் தெற்கு வைத்திருக்கும் நம்பகத் தன்மையை இதுதான் பாதிக்கும். இதுவே தான் சிங்களச் சனத்திற்கு உசுப்பேத்த மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் பயன்படும். பிரபாகரனின் பெயரைச் சொல்லியபடி நட்பு-அரசியலுக்கு எதிராகப் பேசித்திரிவோரின் வாய்களை மூடிவிட்டு, பிரபாகரனின் புலிகளைக் கொண்டே இணக்க-அரசியல் பேச வைப்பது தானே ஐயாவினதும் சுமந்திரனதும் வெற்றியாக அமைந்திருக்க முடியும்…? அது தானே தெற்கிற்கும் அவர்கள் இருவர் மீதும் இருக்கும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும்…? ஆனால், அவ்வாறு செய்ய அவர்கள் ஏன் முன்வரவில்லை…?

இங்கே தெளிவாகுவது என்னவெனில், தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். ஒன்றில் இவர்கள் ஒவ்வொருவருமே தனித்தனியாக ஏமாற்றுகின்றார்கள். அல்லது இவர்கள் எல்லோரும் சேர்ந்தே ஏமாற்றுகின்றார்கள். நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தன்னுடையதும் ஐயாவினதும் அரசியற் கொள்கை மீதும், உபாய வழிமுறை மீதும் நடத்தப்படவுள்ள பொதுசன வாக்கெடுப்பு என்கிறார் சுமந்திரன். அது நல்ல விடயம். அவரதும் ஐயாவினதும் அரசியல் செல்நெறி பொதுசன அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமும் கூட. ஆனால் – வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்ற அத்தனை வேட்பாளர்களும் இவர்கள் இருவரினதும் கொள்கையை மட்டுமே பேச வேண்டும்; புலிகளைப் ‘பயங்கரவாதிகள்’ என்றும் உரைக்க வேண்டும்; கொழும்போடு இணக்க-அரசியல் செய்யும் கொள்கையையே பரப்ப வேண்டும்; சிங்கள-எதிர்ப்பு அரசியலை எந்த வடிவத்திலுமே பேசக் கூடாது; “தமிழர் ஒரு தேசம்” என்ற கோட்பாடெல்லாம் கதைக்கக் கூடாது; நாம் எல்லோருமே “இலங்கையர்கள்” என்று பிரகடனம் செய்ய வேண்டும். இவ்வாறாக – எல்லோருமே ஒன்றைப் பேசி வாக்குச் சேகரித்தால் தானே அது கட்சியின் கொள்கைக்கும் அரசியல் உபாயத்திற்கும் கிடைத்த பொதுசன அங்கீகாரம் ஆகும்…?

அதற்கு மாறாக – புலிகளைப் ‘பயங்கரவாதிகள்’ என்று சுமந்திரன் ஆங்கிலத்தில் கொழும்பில் அர்த்தப்படுத்துகையில், பிரபாகரனைத் ‘தலைவன்’ என்று சிறீதரன் யாழ்ப்பாணத்திலும், “ரணில் ஏமாற்றுக்காரன்” என்று அரியநேந்திரன் மட்டக்களப்பிலும் தமிழில் உரைக்கையில், சிறீதரனதும் அரியநேந்திரனதும் உரைகளுக்காகச் சனங்கள் வீட்டுச் சின்னத்திற்கு அளிக்கும் வாக்குகளின் மூலமாகச் சுமந்திரனும் தெரிவாகி ஏழாவது ஆளாகத்தன்னும் நாடாளுமன்றம் செல்லுவாராயின், அது சுமந்திரனின் இணக்க அரசியல் உபாயத்துக்கு கிடைத்த பொதுசன அங்கீகாரம் என அர்த்தமல்லவே. சுமந்திரனின் கொள்ளைக்கு மாறான கருத்துக்கு மக்கள் கொடுத்த அங்கீகார வாக்குகளால் அவரும் தெரிவாகி – ஒரு கபட வழியில் சுமந்திரனும் நாடாளுமன்றம் செல்கின்றார் என்பதுதானே அர்த்தம். ஏனெனில் – இலங்கை தேர்தல் முறையில், வாக்காளர்கள் உண்மையில் கட்சிக்கு தானே தமது வாக்குகளை அளிக்கின்றார்கள்…?

சிங்கள-எதிர்ப்பு அரசியல் செய்து சேனாதிராசாவும் பிரேமச்சந்திரனும் வீட்டுச் சின்னத்திற்குச் சேகரிக்கும் வாக்குகள் மூலமாக சுமந்திரனும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகுவாரெனில் – அது அவரது ‘மென்சக்தி’ வழிமுறைக்கான தமிழ் பொதுசனத்தின் அங்கீகாரம் அல்லவே…? அது உண்மையில் ‘வன்சக்தி’ வழிமுறைக்கான அங்கீகாரம். இவ்வாறாக – சனங்களைக் குழப்பும் முரண்பட்ட அரசியற் பரப்புரைகள் மூலம் தெரிவாகிய பின்பு, சுமந்திரனும் ஐயாவும் தெற்கோடு ஓர் இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுப்பார்களாயின், அது அரசியல் நேர்மையும் அல்லவே…? ஒரு வகையில் தமக்கு வாக்களித்த மக்களுக்கே அவர்கள் செய்யும் துரோகம் தானே….?

‘ஆதவன்’ என்ற தமிழ் ஊடகத்திற்கு முகம்காட்டி வழங்கிய செவ்வியில், “கொழும்பில் அமையவுள்ள அரசு தமிழர்களை ஏமாற்றினால், அந்த ஆட்சியை நாம் கவிழ்ப்போம்” என்கிறார் அடைக்கலநாதன். அவ்வாறு கவிழ்த்த பின்பு, “சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இந்த நாட்டிலிருந்து பிரிந்து நாம் வேறாகச் செல்லுவோம்” என்கிறார். இதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடா…? அடுத்த ஆண்டில் தான் பெற்றுத் தருவதாக ஐயா வாக்குறுதி அளிக்கும் தீர்வு இது தானா…? ஐயாவும் சுமந்திரனும் தமது கட்சியின் இந்த நிலைப்பாட்டைத் தெற்கிலும் சொல்லுவார்களா…? கட்சியின் நிலைப்பாடு இது இல்லையெனின், தமிழ் மக்களை ஏமாற்றி கட்சிக்கு வாக்குளைச் சேகரிப்பதற்காகவே இவ்வாறு சொல்லப்படுகின்றதா…? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களே இவ்வாறாகப் பேசுவது மஹிந்தவின் மீளெழுச்சிக்கு வழிகோலாதா…? “ஆட்சியைக் கவிழ்த்து நாட்டைப் பிரிப்போம்” என்ற அடைக்கலநாதனின் வாக்குறுதியை நம்பி வாக்களிக்கும் மக்கள், நாளை “அப்படியெல்லாம் செய்ய முடியாது” என்று சுமந்திரன் சொல்லிவிட்டால் நீதி கேட்டு யாரிடம் போவார்கள்… இவ்வாறாக இப்போது எதிர்ப்பு-அரசியல் பேசி வாக்குச் சேகரித்து நாடாளுமன்றம் செல்கின்றவர்கள், நாளை, சுமந்திரனும் ஐயாவும் செய்யப்போகும் இணக்க-அரசியலுக்கு ஒத்தூதி அனுசரித்துப் போவார்களெனின் – அவர்கள் கூட, தமக்கு வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்கின்றார்கள் என்று தானே பொருள்…?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கைப் பலத்தை அதிகரிப்பதன் மூலமே தமிழர்கள் தமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க முடியும் என்று ஐயா கூறுகின்றார்…? கேள்வி என்னவெனில் – எதனைப் பேரம் பேச என்பதாகும். சேனாதிராஜா, சித்தார்த்தன், அடைக்கலநாதன், பிரேமச்சந்திரன் போன்றவர்கள் பேசும் தீவிர நிலைப்பாட்டு கொள்கையையா…? அல்லது ஐயாவும் சுமந்திரனும் முன்னெடுக்கும் மிதமான நிலைப்பாட்டுக் கொள்கைகளையா…? வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்கப் போகும் மக்கள், இந்த இரண்டு கொள்கைகளில் எந்தக் கொள்கையைக் கூட்டமைப்பின் கொள்கை என ஏற்று வாக்களிக்க முடியும்…?

கஜேந்திரகுமாரின் கட்சியில் எவருடன் பேசினாலும், அவர்கள் ஒரே கோட்பாட்டையே பேசுகின்றார்கள். தேவானந்தாவின் கட்சியில் எவருடன் பேசினாலும், அவர்கள் ஒரே கொள்கையையே முன்வைக்கின்றார்கள். சைக்கிள் சின்னத்திற்கும், வீணை சின்னத்திற்கும் வாக்களிக்கின்ற மக்களுக்கு, தாம் என்ன கொள்கைக்கு வாக்களிக்கின்றோம் என்பது தெளிவாகத் தெரியும். கொள்கை ஏற்புடையதெனில் வாக்களிக்கலாம்; ஏற்புடையது இல்லையெனின் விட்டுவிடலாம். அங்கு ஏமாற எதுவும் இல்லை. ஆனால், ஆளுக்கு ஆள் ஒவ்வொரு கதை சொல்லியும், முன்னுக்குப் பின் முரணான சமாளிப்புகளையும் செய்யும் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்கத் தீர்மானிக்கும் ஒரு தமிழ் குடியானவர், இவர்களில் எவரின் கொள்கையைக் கூட்டமைப்பின் கொள்கையாக ஏற்க முடியும்…?

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா வீட்டுச் சின்னத்தின் வழியாக அரசியற் பணிக்கு வந்தவர். வந்த புதிதில் அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கும், நின்று பார்ந்த பின்னர் அவர் மாற்றியிருக்கும் நிலைப்பாட்டிற்கும் இடையில் அடிப்படை வேறுபாடு உள்ளது. இப்போது, வீட்டுச் சின்னத்தின் தலைமை முன்னெடுக்கும் இளகிய அரசியலுக்கு மாறான இறுகிய நிலைப்பாட்டையே அவர் கொண்டுள்ளார். அவர் வெளிப்படுத்துகின்ற தன்னிலைப்பாட்டு விளக்கங்கள் அத்தனையுமே – சைக்கிள் சின்னத்தின் கொள்கைகளை ஒத்திருக்கின்றனவே அல்லாமல், வீட்டுச் சின்னத்திற்குக் கிட்டவும் இல்லை. 1985ஆம் ஆண்டின் திம்பு தீர்மானத்திற்கு அமைவாக தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழர் தன்னாட்சி உரிமை என்பவற்றை அங்கீகரிக்கின்ற அரசியற் தீர்வே இலங்கைத் தமிழருக்குத் தேவை என்கிறார் அவர். மாகாண சபைக்குத் தான் முதலமைச்சராக வந்த பின்னர் கற்றுக்கொண்டது என்னவெனில், அந்த மாகாண சபை முறைமை – தமிழரது அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான தொடக்கப் புள்ளியோ, தொடரும் புள்ளிகளோ, முடிவுப் புள்ளியோ அல்ல என்கிறார் அவர். இந்த நிலைப்பாடுகள் தான் சைக்கிள் சின்னத்தின் நிலைப்பாடாகவும் நிலைத்து வருகின்றன. இப்போது கேள்வி என்னவெனில் – தான் சார்ந்திருக்கும் வீட்டுச் சின்னத்திற்காக மேடைகளில் ஏறி கருத்துக்கள் சொல்ல வேண்டிய நிலை விக்னேஸ்வரன் ஐயாவுக்கு வந்தால் – அவரது மேடைக்காக மக்கள் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்பார்களா அல்லது அவரது கருத்துக்களுக்காக மக்கள் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிப்பார்களா…? சிறீதரன் ஏற்கெனவே விக்னேஸ்வரன் ஐயாவோடு தானும் நிற்கும் படங்கள் போட்ட சுவரொட்டிகளை ஒட்டத் தொடங்கிவிட்டார். எனவே – முதலமைச்சரின் செல்வாக்கு மூலம் கிடைக்கின்ற வாக்குகளால் வென்று நாடாளுமன்றம் செல்லும் வீட்டுச் சின்னத்தினர், முதலமைச்சர் முன்வைக்கும் தீர்வுக்கு மாறாக சுமந்திரன் முன்னெடுக்கும் தீர்வுக்கான பொதுசன அங்கீகாரம் என அந்த வெற்றியை நாளை எப்படி அர்த்தப்படுத்த முடியும்…?

வடக்கின் தெருக்களில் பேசுகின்ற எந்த ஒரு தமிழரிடமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாகக் கூறுவதற்கு நல்ல விசயங்கள் எதுவுமே இல்லை. கதைக்கின்ற ஒவ்வொருவருமே தமிழ் கூட்டமைப்பு மீது குற்றங்களை அடுக்குவோராகவும், குறைகளைக் குவிப்போராகவுமே உள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூட, வேறு கட்சிகள் பற்றிய குறைகளை விடவும் அதிகமாகத் தமது சொந்தக் கட்சி ஆட்கள் பற்றிய அதிருப்திகளையே பேசுகின்றார்கள். இத்தகைய பின்னணியில் – தமிழ் மக்கள் தங்கள் சிந்தனைக்குள் தெளிவான ஒரு விடயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகளில் துளியளவேனும் திருப்தி இல்லையெனில், கடந்த காலத்தைப் போலவே இந்த தடவையும் வீட்டுச் சின்னத்திற்கே வாக்களிக்கலாமா…?

ஆனால், ஐயா இப்போது கடைசி வாய்ப்பு கேட்கிறார். 67 ஆண்டுகால தமிழர் பிரச்சனைக்கு ஒரே ஆண்டில் தீர்வினைத் தருவேன் என்கிறார். 20 ஆசனங்களைத் தனக்குத் தரும்படியும், இறுதித் தீர்வினைத் தான் தருவேன் என்றும் சொல்கின்றார். ஐயா இதனை எப்படிச் செய்து முடிப்பார் என்பது எனக்குப் புரியாத புதிர். ஆனால், அவர் அதனைச் செய்து முடிப்பாரெனின், தமிழர் வரலாற்றில் நிலைக்கப் போவது செல்வநாயகமோ, பிரபாகரனோ அல்லவே அல்ல – சம்பந்தன் ஐயா மட்டுமே. எனவே, ஒரே ஒரு கடைசி வாய்ப்பினைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குக் கொடுக்கலாம் என முடிவெடுத்து இந்த ஆண்டும் வீட்டுச் சின்னத்திற்கே மக்கள் வாக்களிக்கலாம். ஆனால், அவ்வாறு வாக்களித்த பின்பு, அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக எந்தக் குறையும் கூறிப் புரணி பாடக் கூடாது. அடுத்த ஆண்டில் தமிழர்களுக்கான தீர்வினை ஐயா வாங்கி தந்தாலும், தராவிட்டாலும், நாம் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. “ஏமாற்றிவிட்டார்களே!” என்று புலம்பக்கூடாது. எனவே, ஆகஸ்ட் 17 அன்று வீட்டுச் சின்னத்திற்கு எதிரே புள்ளடி இடுகின்ற எவரும் – அடுத்த ஆண்டு ஐயா எடுத்துத் தரப்போகின்ற இறுதித் தீர்வின் வரலாற்றுப் பங்காளிகள் ஆகின்ற அதேவேளையில், அப்படி ஐயா தீர்வு எதனையும் எடுத்துத் தரவில்லையெனில் – அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு கூட்டமைப்பினர் மீது குற்றம் காணும் தார்மீக உரிமையை இழந்தவர்களாகவும் ஆகிறார்கள்.

தீவைப் பிரித்து இரண்டாக்கி இன்னொரு நாட்டினை உருவாக்குவதே இப்போதும் எமது நோக்கம் எனின், சிங்களவர்களைப் பகைத்தே ஆக வேண்டும். வேறு வழி இல்லை. அது வேறு கதை. ஆனால், ஒரே நாடு என்ற கட்டமைப்பிற்குட்தான் தமிழர்கள் ஒரு தீர்வை எதிர்பார்க்கிறோம் எனில், அது இந்த நாட்டில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக வாழும் சிங்களவர்களின் சகிப்புத் தன்மை இன்றி சாத்தியப்படவே மாட்டாது என்பது என் கருத்து. அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை எனின், என்றோ ஒரு காலத்தில் நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் அரசியலமைப்புச் சட்டத்தை அவர்கள் பழைய நிலைமைக்கு மாற்றுவார்கள். எனவே, எமது தேசியப் பிரச்சினையைச் சிங்களவர்களுக்குப் புரிய வைத்து, அவர்களை அதனை ஏற்றுக்கொள்ள வைத்து, எமக்கே உரித்தானவை என நாம் கேட்கின்றவற்றைத் தாமாகவே முன்வந்து அவர்களைத் தர வைக்க வேண்டும். இதுவே ஐயாவினதும் சுமந்திரனதும் அணுகுமுறை. இந்த அணுகுமுறையோடு எனக்கு கொள்கையளவில் உடன்பாடு உண்டு. இதனைச் சந்தியில் இறங்கிச் சொல்லும் துணிவும் என்னிடம் உண்டு. ஆனால், இதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் எதிர்காலத் திட்டமும் எனின் – மேடைகளேறித் தற்துணிவோடு, “இதுதான் எமது திட்டம்” என்று வெளிப்படையாகச் சொல்லியே வீட்டுச் சின்னத்தினர் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும். இதய சுத்தமான, பற்றுறுதியான அரசியலாக எது இருக்கமுடியும் எனின் – தமிழ் தேசிய கூட்டமைப்பின் அத்தனை வேட்பாளர்களும் ஒரே கருத்தையே பேச வேண்டும்; அத்தனை உரையாளர்களும் ஒரே கொள்கையையே பரப்ப வேண்டும்; இணக்க-அரசியல் செய்வதே கட்சியின் அடுத்த ஆறு ஆண்டு காலத் திட்டம் எனின், அதனை ஒருமித்த குரலில் ஒரு சவாலாக எடுத்து மக்களுக்குத் தற்துணிவோடு விளக்க வேண்டும். மக்கள் தம்மை நிராகரித்தாலும் பரவாயில்லை என்ற தினாவெட்டோடு உண்மையைப் பேசித் தேர்தலில் இறங்க வேண்டும். அதை விடுத்துவிட்டு, யாழ்ப்பாணத்தில் சிறீதரனை வைத்துத் தமிழில் பிரபாகரன் புகழ் பாடியும், கிழக்கில் அரியநேந்திரனை வைத்து சிங்கள-எதிர்ப்பு கோசங்களை எழுப்பியும் வாக்கு கேட்டபடி, கொழும்பிலே வேற்று மொழியில் சுமந்திரன் பிரபாகரனைப் பயங்கரவாதி எனக் குறிப்பிட்டுத் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் புனிதர்களாகக் காட்டி நட்பு-அரசியல் செய்வது ஒரு சுத்துமாத்துத் தந்திரம்.

ஐயாவும் சுமந்திரனும் மட்டுமே இணக்க-அரசியல் பேசுகின்றார்கள். தமது இந்த நட்பு-அரசியல் வழிமுறையைத் தமிழ் கூட்டமைப்பின் ஏனைய ஆட்களை ஏற்றுக்கொள்ள வைக்கவே அவர்களால் முடியவில்லை. ஏனெனில் – வீராவேசக் கதைகள் பேசித் தாமே உணர்ச்சியூட்டிவிட்ட தமிழ் மக்களிடம், இந்த இணக்க-அரசியலைக் கொண்டு செல்லக் கூடிய தற்துணிவோ, விருப்பமோ தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்த ஒரு வேட்பாளருக்கும் கிடையாது. அதனால் – ஐயாவையும் சுமந்திரனையும் தவிர்ந்த ஏனைய தலைவர்கள் எதிர்ப்பு-அரசியலையே தொடர்ந்தும் பேசுகின்றார்கள். சிங்கள-எதிர்ப்பு-அரசியல் பேசி சனங்களை உசுப்பேத்தி வாக்குப் பெறுவதே அவர்களுக்கும் சுலபமானது. எனவே – எதைப் பேசியென்றாலும் 20 ஆசனங்களை வெல்லட்டும் என்று ஐயாவும் விட்டுவிட்டார். ஏனைய தலைவர்கள் எதிர்ப்பு-அரசியல் பேசி வாக்குப் பெற்ற பின்பு, அதில் கிடைக்கும் 20 ஆசனங்களை வைத்து இணக்க-அரசியல் செய்யப் போகின்றார்கள் ஐயாவும் சுமந்திரனும். இதுதான் சுத்துமாத்து அரசியல். இந்த சுத்துமாத்து அரசியலின் இன்னொரு மோசமான விளைவு என்னவெனில் – வடக்கு கிழக்கில் தமிழ் இனவாதத்தை உசுப்பேத்திப் பெற்ற வாக்குகளினால் வென்றெடுத்த நாடாளுமன்ற ஆசன எண்ணிக்கையை வைத்துக்கொண்டே ஐயாவும் சுமந்திரனும் தம்மிடம் இணக்க-அரசியல் பேசிக்கொண்டு வருகின்றார்கள் என்பது சிங்களத் தலைவர்களுக்கும் தெரியும். அது இந்தியாவுக்கும் புரியும், அமெரிக்காவுக்கும் விளங்கும். அதனால் – தமிழர் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு என்று வரும்போது, நாம் கேட்பதைத் தருவதற்குப் பதில், தாம் தருவதையே ஏற்றுக்கொள்ளச் சொல்லுவார்கள். உண்மையில் எங்களால் எந்த பேரமும் பேச முடியாது.

தமிழர் வாக்குகளைப் பிரித்துத் தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தோற்படிப்பதற்கே பல்வேறு குழுக்கள் களமிறக்கப்பட்டிருப்பதாக எழுந்தமானத்திற்கு எல்லோர் மீதும் கறை பூசப்படுகின்றது. வஞ்சக நோக்கோடு ஆட்கள் களமிறங்காமல் இல்லை; ஆனால், இறங்கியிருப்போர் எல்லோரும் வஞ்சகர்கள் என்பதற்கு என்ன ஆதாரங்கள் உண்டு…? அத்தோடு, சொந்தக் கொள்கை நேர்மையானதாக இருந்தால், அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தன்னம்பிக்கை இருந்தால், கடந்த காலங்களில் மக்களின் நம்பிக்கைக்கு உரித்தானவர்களாக வாழ்ந்திருக்கின்றோம் என்ற மனச்சாட்சி இருந்தால், நாம் ஆற்றிய சேவை மக்களை எம்முடன் வைத்திருக்கும் என்ற திடம் இருந்தால் – வாக்குப் பிரிப்பாளர்களைப் பற்றி கவலைப்படுவானேன்…? தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது செய்ய முனைவது ‘மென்சக்தி’ பிரயோக அரசியல். அதாவது, மனித மனங்களோடு உறவாடி, மனங்களிற்கு எம்மைப் புரிய வைத்து, அந்த மனங்களை வெல்லுவது. சொந்த மக்களிற்கே தமது நிலைப்பாட்டை விளக்கி அவர்களின் மனங்களை வெல்ல முடியாமல் வாக்குப் பிரிப்பாளர்களுக்கு அஞ்சுகின்ற தலைவர்கள், எப்படி நாளைக்குச் சிங்கள மக்களின் மனங்களை வெல்லப் போகின்றார்கள். துணிந்து தமது மக்களை எதிர்கொண்டு உண்மையை எடுத்தியம்பும் திராணி இல்லாத தலைவர்களே – “அவன் துரோகி, இவள் காசு வாங்கிவிட்டாள், அவர்கள் வாக்குகளைப் பிரிக்க வந்துள்ளார்கள்” என்று கதைகளை அளப்பார்கள். தமது கொள்கைகள் மீதும், அவற்றைச் செயற்படுத்தும் தமது ஆற்றல்கள் மீதும் நம்பிக்கை உடையோர்களோ அந்தக் கொள்கையைத் தமது மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பார்கள். அவர்களே – துரோகிகளையும் வாக்குகளைப் பிரிப்போரையும் கடந்து மக்களைத் தமக்கு வாக்களிக்களிக்கவும் வைப்பார்கள்.

தமிழ் மக்களும் ஒரு விடயத்தில் தெளிவாக இருந்துவிட வேண்டும்; தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது சம்பந்தன் ஐயாவும் சுமந்திரனும் தான். ஏனைய எல்லோருமே வெறும் எண்ணிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே. பிரபாகரனைப் பாடும் புகழுரைகளுக்கும், சிங்கள-எதிர்ப்பு ஆவேசப் பேச்சுக்களுக்கும், இலக்கற்ற தமிழ் தேசிய கோசங்களுக்கும் மயங்கி வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்கும் மக்கள் உணர வேண்டியது என்னவெனில் – இந்த வாக்குகளால் உண்மையில் பலம் பெறப் போவது பிரபாகரனின் கோட்பாடுகளோ அல்லது சிங்கள-எதிர்ப்போ அல்லது தமிழ் தேசியமோ அல்ல. இவற்றை உரைப்பவர்கள் கூட ஆகக்கூடியது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவதற்கு அப்பால் – தமிழ் மக்களின் தேசிய அரசியற் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை – வீட்டுச் சின்னத்திற்கு மக்கள் அளிக்கப்போகும் வாக்குளின் மூலம் பலம் பெறும் ஐயாவும் சுமந்திரனும் மட்டுமே தீர்மானிக்கப் போகின்றார்கள். ஐயாவாலும் சுமந்திரனாலும் எவ்வளவைக் கொண்டு வர முடியுமோ, அவ்வளவும் தான் தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வின் அளவு.

2010ஆம் ஆண்டில் தான் அரசியலுக்கு வந்த விதம் பற்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது யாழ்ப்பாண வேலைத் தளத்தில் வைத்து அண்மையில் எனக்குக் கூறிக்கொண்டிருந்தார். அவர் சொன்னார், “ஐ சே, வீட்டுச் சின்னத்தில தும்புத்தடியை நிப்பாட்டினாலும் சனம் வோட்டுப் போட்டு வெல்ல வைக்கும்”.

தமிழர்கள் இப்போது தீர்மானித்தே ஆக வேண்டும்.

தினக்குரல் பத்திரிகைக்காக திருச்சிற்றம்பலம் பரந்தாமன் கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.