படம் | TAMIL DIPLOMAT

திம்புக் கோட்பாடு வெளிவந்து கடந்த ஜூலை 13ஆம் திகதியோடு முப்பது வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது. எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி, தமிழின அழிப்பின் ஒரு முக்கிய அங்கமான கறுப்பு யூலையின் முப்பத்தியிரண்டாவது ஆண்டு நினைவு. ஜூலை 29ஆம் திகதி இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருபத்தெட்டு வருடங்கள் நிறைவடைகிறது. இதேவேளை, ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இலங்கைத் தீவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தல் தமிழர் தேசத்துக்கும் தென்னிலங்கைக்கும் முக்கியமான ஒரு தேர்தலாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் அரியணையேறுவாரா? இலங்கை சுதந்திரக் கட்சி பலவீனமடையுமா? ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் எழுச்சி பெறுமா? போன்ற பல்வேறு கேள்விகள் தென்னிலங்கையை மையப்படுத்தி நீள்கிறது. அதேவேளை, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்குப் பின்னர் ஒப்பீட்டளவில் போதிய தயார்ப்படுத்தல்களுடன் தமிழர் தேசம் இந்த தேர்தலை சந்திக்கவிருக்கிறது.

தமிழர் தேசத்தை பொறுத்தவரை, ‘தமிழ் தேசிய’ அடையாளத்தோடு தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் முக்கிய போட்டியாளர்களாக தேர்தல் களத்தில் குதித்துள்ளன. ஆயினும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உடையோர், தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மையினம் மற்றும் இலங்கையர் என்ற நிலைப்பாட்டுடனுள்ளனர். அத்துடன், இனஅழிப்பு தொடர்பான உறுதியான தீர்மானங்களை கூட்டாக எடுப்பதற்கு தயங்கியும் தவிர்த்தும் வருகின்றனர். அதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர்களாகிய நாம் ஒரு தேசம், தமிழ் மக்களுக்கு இடம்பெற்றது இன அழிப்பு என்பதை தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இத்தகைய நிலையிலேயே, பிரித்தானியாவுக்கு பயணம் செய்துள்ள வட மாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் நிகழ்வில் ஆற்றிய சிறப்புரை தமிழ் அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.

திம்புக் கோட்பாடு

தேர்தல் விஞ்ஞாபனங்களை இதுவரை எந்த தமிழ் அரசியற் கட்சியும் வெளியிடவில்லை. ஆயினும், தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பில் இக்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. இத்தகைய சூழலிலேயே, “அரசியல் தீர்வுத் திட்டங்களைத் தயாரிப்போர் திம்புக் கோடுபாடுகளை மனதிற்கொண்டு செயலாற்ற வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக, சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்று நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது திம்புக் கோட்பாடு. திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் தேர்தல் விஞ்ஞபனம் அமைவது தமிழர்களின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கும். தென்னிலங்கை எதனைத் தரத் தயாராக இருக்கின்றது என்ற அடிப்டையில் தமிழர்களுடைய செயற்திட்டங்களை வகுக்க முடியாது. மாறாக, தமிழர்களுக்கான உரிமையையும் நீதியையும் அடைவதற்கான உபாயங்களின் அடிப்படையிலான செயற்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டும். தோல்விமனப்பான்மையுடையோருக்கு இது எட்டாக் கனியாகத் தெரியலாம். அரசியலென்பது சாத்தியமற்றதை சாத்தியமாக்குகின்ற சவாலான பயணம். தளராத தன்னம்பிக்கையுடன், அடிப்பணிவின்றி தொடர்ச்சியாக செயற்படுவதனாலேயே இதனை செயற்படுத்தமுடியும்.

நாம் சிறுபான்மையினம் இல்லை

சிறுபான்மையினம் என்ற வாதம் தமிழர்களின் அரசியல் அடைவிலக்குகளை திசைதிருப்புவதற்காக அண்மைக்காலமாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழலில், தமிழர்கள் சிறுபான்மையினம் இல்லை என தனதுரையில் குறிப்பிட்டு அதற்கான வரலாற்று ஆதரங்களை முன்வைத்தார் நீதியரசர். “1921ஆம் ஆண்டில் சிங்கள மக்கட் தலைவர்கள் சேர் ஜேம்ஸ் பீரிசும், ஈ. சமரவிக்கிரம என்பவரும் வட கிழக்கு மாகாணங்களில் தமிழ்பேசும் மக்களே பெரும்பான்மையினர் என்றும், மற்றைய மாகாணங்களில்தான் சிங்களம் பேசும் மக்கள் பெரும்பான்மையினர் என்றும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இதை எதற்காகக் குறிப்பிடுகின்றேன் என்றால், நாங்கள் எங்கிருந்தோ வந்து சேரந்த சிறுபான்மையினர் அல்ல. அதாவது, வேறெங்கோ இருந்து விரட்டப்பட்டதால் இங்கு வந்து குடியேறிய சிறுபான்மையினர் அல்ல. எமக்குரித்தான தனித்துவ தேசிய அந்தஸ்து, சுயநிர்ணய உரிமை போன்ற கோட்பாடுகளை விடுத்து இலங்கைத்தமிழர் வெறும் சிறுபான்மையினம் என்ற வாதத்தைப் பயன்படுத்தும் எம்மவர் யாராக இருந்தாலும் அதனை அவர்கள் தவிர்க்க வேண்டும். தமிழ் மக்களுக்கு உரிமைகளையும் நீதியையும் பெற்றுத்தர அர்ப்பணிப்போடு அவர்கள் செயற்பட முன்வரவேண்டும்” என முதலமைச்சர் தனதுரையில் குறிப்பிட்டார்.

நடந்தது தமிழின அழிப்பே

கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வட மாகாண சபையில் இனஅழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து உள்ளக வெளியக சவால்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்கொண்டார். இனஅழிப்பு தொடர்பாக கதைப்பதை அடக்கி வாசிக்கும் படி, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜங்க செயலாளர் நிஸா பிஸ்வல், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அழுத்தம் கொடுத்ததாக அண்மையில் கொழும்பிலிருந்து வெளிவரும் ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அது முற்றிலும் தவறான செய்தி என குறிப்பிட்ட முதலமைச்சர், “உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், எதிர்பார்ப்புகளையும் நாங்கள் உதாசீனம் செய்யமாட்டோம். அவர்களின் நல்வாழ்விற்காக நாங்கள் தொடர்ந்து உழைத்து வருவோம்” என்றே நிஸா பிஸ்வல் கூறினார் எனத் தெளிவுபடுத்தினார். அத்துடன், தமிழினத்துக்கு எதிரான இனஅழிப்பு நிறுத்தப்படவில்லை என்பதை குறிப்பிட்ட முதலமைச்சர், “தமிழினத்துக்கு நடந்த இனஅழிப்பை வெளிப்படுத்தத் தயங்கும் அல்லது தடுக்கும் தமிழர்கள் தொடர்பாக – அவர்களின் அரசியல் நெறி தொடர்பாக – எமது மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். சட்டத்தால் சகித்துக் கொள்ளப்பட்டால்த்தான் இன அழிப்பை ஏற்கலாம் என்ற இன்றைய சில சாராரின் கருத்தை ஏற்பது சற்றுக் கடினமாகத்தாக இருக்கின்றது. எனினும், சட்டம் சரியென்று ஏற்கும் என்ற திடமான நம்பிக்கையுடன்தான் நாங்கள் இனஅழிப்புப் பிரேரணையைக் கொண்டு வந்தோம்” எனவும் தெரிவித்தார்.

ஆட்சி மாற்றத்தால் பயனில்லை

தங்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காகவே தமிழ் அரசியல் கட்சிகளுடனான உறவை சிங்கள அரசியல் கட்சிகள் பாவிக்கின்றன எனக் தெரிவித்த விக்னேஸ்வரன், ஜனவரி 8இ​ல் நடந்த ஆட்சிமாற்றமும் அத்தகைய ஒன்றே எனத் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “ஏமாற்று வித்தைகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாம் இனியும் ஏமாறும் இனமாக இருக்க முடியாது. எமது மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சிதைக்கும் இராணுவ ஆக்கிரமிப்பை விலக்குவதற்குப் புதிய ஆட்சியாளர்களும் இதயசுத்தியுடன் செயற்படவில்லை. எமது மக்களுக்குச் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் நீதி கிடைப்பதற்கு ஒரு கால்வாயாக அமையவிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அறிக்கையைப் பிற்போடுவதற்காக புதிய அரசு பாடுபட்டது. இறுதியில் தங்கள் முயற்சியில் வெற்றியுங் கண்டுள்ளார்கள். இதனைத் தங்களது வெற்றியாகவும் கொண்டாடினார்கள்” எனவும் தெரிவித்த முதலமைச்சர், சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற தொனியில் உரையாற்றினார். இது, உள்நாட்டு பொறிமுறைக்கு அமைவாக நீதி கிடைக்கும் என கூறும் தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டுக்கு முற்றுமுழுதாக மாறுபாடான நிலைப்பாடு. இதேவேளை, வட – கிழக்கில் கடந்த பெப்ரவரி மாதம் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்த மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவான கருத்து.

எமக்கான அரசியல் – பொதுத்தேர்தல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நேரடியாக வெளிப்படுத்தாத விக்கினேஸ்வரன், “நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகிறார்கள் எனத் தெரிவித்தார். அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி – அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி – எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள். அதனை உணர்ந்து அவர்கள் தமக்குள்ள வரலாற்றுப் பொறுப்பை, தார்மீகக் கடமையைச் சரிவரச் செய்வதற்கு நான் துணையாக நிற்பேன்” எனவும் தெரிவித்தார்.

இளைஞர்கள் புரிந்த உயிர்த் தியாகங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தியாகங்களை பேசி வாக்கு கேட்கும் அரசியல் தொடர்கின்ற நிலையில், “உரிமை மறுக்கப்பட்டதாலும், அநீதி தொடர்ந்ததாலுமே எமது இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அத்தகையவர்களின் தியாகத்தை நாம் வீணடிக்கக் கூடாது, கொச்சைப்படுத்தக் கூடாது. அவர்களின் உற்றார் உறவினர்கள் இன்றும் எம்முன் வந்து கண்ணீர் சிந்துவதைக் காண்கின்றேன். எனவேதான், தேர்தல் காலங்களில் வாக்குகளை அள்ளுவதற்காக மட்டும் அவர்களைப் பயன்படுத்தி விட்டு மற்றைய காலங்களில் அவர்களின் அர்ப்பணிப்புக்கு அபகீர்த்தியையும் அவமானத்தையும் ஏற்படுத்துவதை நாங்கள் தவிர்க்க வேண்டும்” என்ற கோரிக்கையையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் முன்வைத்தார்.

இளைய சந்ததிக்கான செய்தி

தாயகத்தில் வாழும் மக்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் இடைவெளியையும், பிளவுகளையும் ஏற்படுத்தும் நோக்கில் தீயசக்திகள் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் செயற்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், “எமது தேசத்தில் வாழும் இன்றைய சந்ததிக்கும், இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் இன்றைய சந்ததிக்கும் இடையிலான தொடர்பு மலர்ச்சி அடையவேண்டும். அது இன்னும் ஆழமாக வேரூன்ற வேண்டும் என்பது எனது அவா. எமது தேசத்திலும் வெளிநாடுகளிலுமுள்ள அடுத்தடுத்து வருஞ் சந்ததிகளுக்கிடையிலான தொடர்புகள் மிக நெருக்கமாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற எனது கருத்தையும் மிக ஆணித்தரமாக இங்கு வெளியிடுகின்றேன். எமக்குப் புலிப்பட்டம் கட்டி, பயங்கரவாதப் பட்டம் கட்டி புகுந்தகத்தில் இருந்து பிறந்தகத்திற்கு வராது தடுக்க சதிகள் நடைபெற்று வருவதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என முதலமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பன்னெடுங்காலமாக எமது இனத்தின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் நாம் பல்வேறு வடிவங்களில் போராடி வந்திருக்கின்றோம். ஆயினும், எமது காலத்தில் எமது மக்களுக்கான உரிமையோ நீதியோ உள்நாட்டில் கிடைக்காது என்பதனை தென்னிலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் அரசுகள் புலப்படுத்திக் கொண்டுவந்துள்ளன. ஆதலால்தான், எமது காலத்தில் உறுதியான ஜனநாயக அத்திவாரத்தை இட்டு, எமது எதிர்கால சந்ததியிடம் இந்தப் பணியைத் தொடர்வதற்கு அவர்களிடம் கையளிக்கும் வண்ணம் நாம் விரைந்து பணியாற்ற வேண்டியிருக்கின்றது”.

உள்நாட்டு பொறிமுறை என்ற பொறிக்குள் இனஅழிப்புக்குள்ளான மக்களுக்கான நீதியை முடக்குவதற்கு கூட்டுச்சதியொன்று உடன்பட்டுக் கொண்டிருக்கின்ற தருணத்திலே, “எமது மக்கள் தமது உரிமையையும் நீதியையும் பெறுவதற்குச் சர்வதேச ரீதியான ஆதரவு இன்றியமையாதது. அந்த ஆதரவை பெற்றுக் கொள்வதற்கும் பெருக்கிக் கொள்வதற்கும் உலகெங்கும் பரந்து வாழும் இளைய தமிழ் சமுதாயம் தம்மை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்த முன்வர வேண்டும். இதற்கான, அடித்தளத்தை அமைக்க அவர்தம் பெற்றோர்கள் முன் வரவேண்டும். இங்கே வாழும் இளைய சமுதாயத்தினர் தாம் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, ஜனநாயக ரீதியில், இலங்கைத் திருநாட்டில் வாழ்கின்ற தமது சொந்தங்களின் உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராட முடியுமென்று நான் நம்புகின்றேன்” என முதலமைச்சர் தனதுரையில் குறிப்பிட்டார். இது, ஈழத்தமிழர்களின் மறுக்கப்பட்ட உரிமைக்காகவும், நீதிக்காகவும் சர்வதேச ரீதியாக போராடி வருகின்ற இளைய சந்ததிக்கு உற்சாகமூட்டும் ஒரு பேச்சு மட்டுமல்ல, மாறாக, சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமிழர்களின் போராட்டத்தை முன்னகர்த்தி செல்வதில் இளைய சந்ததிக்குள்ள முக்கிய வகிபாகத்தையும் எடுத்துக் காட்டுகிறது.

‘இலங்கையர்’ என்றும், தமிழர் ஒரு சிறுபான்மையினம் என்றும் அடையாளத்தை பேண விரும்புகின்ற தரப்புகள், புலம்பெயர் மக்களை பிரச்சினைக்குரிய தரப்பாக அடையாளப்படுத்தும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தருணத்திலேயே, தாயகத்திலுள்ள மக்களின் மறுமலர்ச்சிக்கு புலம்பெயர் மக்கள் பங்களிப்பு அவசியம் என்பதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், புலம்பெயர்ந்துள்ள இளைய சமுதாயத்துக்குள்ள பொறுப்புக்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையும், ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் சரியான முறையில் கவனத்திலெடுத்து, புதிய வீச்சுடன் புலம்பெயர் தமிழர் செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, தாயகத்திலுள்ள மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள தருணத்தில், தமிழ் மக்களுக்கான அடிப்படைக் கோட்பாடுகளையும், அது சார்ந்து அவர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகளையும் முதலமைச்சர் லண்டனில் ஆற்றிய உரை தொட்டுக்காட்டியது எனலாம். இருட்டடிப்புகளையும் தாண்டி முதலமைச்சரின் உரை தாயகத்தில் வாழும் அடிமட்ட மக்கள் வரை செல்லுமாக இருந்தால், எதிர்வரும் பொதுத்தேர்தலில் அதன் தாக்கத்தை உணரலாம்.

நிர்மானுசன் பாலசுந்தரம்