படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO

நாடாளுமன்றத் தேர்தல் இனப்பிரச்சினை பற்றிய தீர்வு விடயங்களையும் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகளையும் கைவிட்டுள்ள தன்மையை காணக் கூடியதாகவுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல் என்றாலே இனப்பிரச்சினை பற்றிய விடங்கள் முக்கியமாகப் பேசப்படும். அது இரண்டு வகைப்படும். ஒன்று, இனவாத நோக்கில் வேறு சமூகங்களைத் தாழ்த்துவது. இரண்டாவது, யுத்தத்தைத் தீவிரப்படுத்தல். இந்த இரண்டு வகையிலும் யுத்தத்தை தீவிரப்படுத்தல் என்பது 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பேசப்படுவதில்லை. ஆனால், யுத்த வெற்றிக்கான உரிமைகள் கோரப்பட்டன.

நிலைமை மாறியது

இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் யுத்த வெற்றிக்கான உரிமைகோரல் என்பதை விட சிங்கள பௌத்த தேசியவாதத்தை மேலும் வளப்படுத்தல் மற்றும் சர்வதேச சக்திகளின் பிடியிலிருந்து இலங்கையைக் காப்பாற்றுதல் என்ற நிலைமைக்கு மாற்றியிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் செயற்பாடுகளே இந்த நிலைமைக்குக் காரணம்.

2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வி கண்ட பின்னரே இவ்வாறான நிலை ஏற்பட்டது என்று கூறலாம். இந்த இடத்தில் இனப்பிரச்சினை விவகாரம் என்பது உள்நாட்டுப் பிரச்சினையாக மாறியதுடன், நடைமுறையிலுள்ள அரசியல் யாப்புக்குள்ளே தீர்வை முன்வைப்பது குறித்து பேசப்படுகின்றது. குறிப்பாக, தேசியக் கட்சிகள் என்று கூறப்படுகின்ற ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இனப்பிரச்சினை விவகாரத்தை முடிந்தவரை 13ஆவது திருத்தச் சட்டத்துடன் அல்லது அதற்கும் குறைவான சட்டங்களைப் பயன்படுத்தி அல்லது சலுகைகளை வழங்கி, தீர்ப்பதற்கு முற்படுகின்றன.

மஹிந்த ராஜபக்‌ஷவின் முயற்சி

இனப்பிரச்சினையை நோர்வேயின் சமாதான முயற்சியிலிருந்து முறியடித்து, அதனை உள்நாட்டு விவகாரமாகவும் பத்தோடு, பதினொன்றாகவும் மாற்றியது மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசு என்பது கண்கூடு. ஆனால், தமிழர்களுக்கு பிரச்சினை உண்டு என்றும், 60 ஆண்டு காலத்திற்கு மேலாக அது தீர்க்கப்படவில்லை என்றும் கூறிவந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அந்த முயற்சியை தொடர்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலைக் கூட அதற்குச் சாதகமாகப் பயன்படுத்தி தற்போது நாடாளுமன்றத் தேர்தலையும் அதற்கு ஏற்றவாறு மாற்றியுள்ளனர். குறிப்பாக இனப்பிரச்சினை இல்லை என்பதையும், தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேன அரசை ஆதரிக்கின்றார்கள் என்பதையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்கள் மத்தியில் கூறிவருகின்றார். அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, தமிழ் மக்களுக்கு இனிமேல் அதிகாரம் தேவையில்லை. அதிகாரம் பற்றிய பிரச்சினை 2009ஆம் ஆண்டு முடிவடைந்து விட்டது என்றும், அபிவிருத்தியே வடக்கு கிழக்கில் தேவையென்றும் கூறியிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில்

இந்த இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றிய செயற்பாடுகள் எழுகின்றன. ஜனாதிபதித் தேர்தலின் போது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உறுதி மொழிகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைப்பது, வடமாகாண சபையை சுதந்திரமாக செயற்பட அனுமதிப்பது, மீள்குடியேற்றத்திற்கு அனுமதிப்பது மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்ற விடயங்கள் உறுதியளிக்கப்பட்டன.

ஆனால், ஜனவரி 8ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து இன்றுவரை இந்த உறுதிமொழிகள் ஒன்றுகூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. யுத்தத்தின் பக்கவிளைவுகளைக்கூட தீர்ப்பதற்கு இந்தப் பிரதான அரசியல் கட்சிகளும் விரும்பாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மிதவாத அரசியல் என்ற போர்வையில் சிங்கள அரசியல் தலைவர்களை நம்பிக்கொண்டு இருப்பதன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் தற்போது மக்கள் மத்தியில் எழுகின்றன.

ஒற்றையாட்சிக் கோட்பாடு

கொழும்பை மையப்படுத்திய ஒற்றையாட்சியிலிருந்து மேற்படி இரண்டு கட்சிகளுமே விலகப் போவதில்லை என கடந்த 60 ஆண்டு காலமாக மக்கள் கண்டிருக்கின்றார்கள். ஆனால், 60 ஆண்டு கால அரசியலில் தொடர்ச்சியாக ஈடுபடுகின்ற சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்ற தலைவர்கள் சுமந்திரன் போன்ற இளம் தலைமுறைக்கு தவறான பாதையை காட்டுகின்றனர் அல்லது சுமந்திரனின் சட்ட அறிவை நம்பி 60 ஆண்டுகால அரசியல் பிரச்சினையை ஓர் சட்டப் பிரச்சினையாக பார்க்கின்றனர் என்ற சிந்தனைகள் கூட மக்கள் மத்தியில் தற்போது எழுகின்றன. இந்தநிலையில், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 1970ஆம் ஆண்டிலிருந்து பேசிவந்த வீர வசனங்களை பேசுவதால் வெற்றியைச் சாதிக்க முடியாது. ஆகவே, மூன்று விடங்களை இவர்கள் செய்தாக வேண்டும்.

ஒன்று – 60 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்த இரண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் செய்துகொண்ட திருகுதாளங்களை வெளிப்படையாகவே பேச வேண்டும்.

இரண்டாவது – உறுதி மொழிகள், நம்பிக்கைகள் என்பதைக் கைவிட்டு தமிழ் மக்களின் நம்பிக்கையையும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மாற்றுவழிகளையும் இந்தத் தேர்தலின் மூலமாகக் கண்டுகொள்ள வேண்டும்.

மூன்றாவது – இளம் தலைமுறையினருக்கு கூட்டமைப்பில் இடமளிக்க வேண்டும். இல்லையேல் இன்னும் 60 ஆண்டுகாலத்திற்கு தற்போதைய நிலையைவிட மோசமான நிலையே மக்கள் சந்திக்க வேண்டி ஏற்படும்.

அ.நிக்ஸன்