படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெறவுள்ள ஒரு தேர்தல் என்னும் வகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது, தமிழ் மக்களை பொறுத்தவரையில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஒன்றாகும். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் உள்ள அதிருப்திகளை காண்பிக்க இது பொருத்தமான தருணமல்ல. இவ்வாறு நான் குறிப்பிடும் போது இது ஒரு வழமையான கதைசொல்லல் போன்று தெரியக்கூடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்னும் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைத்து வந்த நானே, இவ்வாறு கூறும் போது இதனை சில வாசகர்கள் ஆச்சிரியமாகவும் பார்க்கலாம். ஆனால், இங்கு விளங்கிக் கொள்ள வேண்டிய விடயமோ வேறு, அதாவது, எனது கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கானதேயன்றி, பலவீனப்படுத்துவதற்கானதல்ல. எனவே, அதிருப்திகள், விமர்சனங்களை கடந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மக்கள் கைகோர்க்க வேண்டிய தேவை உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியின் பின்னர் மீண்டும் அதனை பலப்படுத்துவதற்கான விமர்சனங்களை தொடரலாம்.

இத்தேர்தலை பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு ஒன்றுதான், அது வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சார்பில் வெல்லப்படும் அனைத்து ஆசனங்களும் கூட்டமைப்பின் வசமாக வேண்டும். இவ்வாறு நான் குறிப்பிடும் போது, சிலர் இதனை ஒரு வகை எதேச்சாதிகாரம் என்றும், இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல என்றும் வாதிடலாம். நான் இங்கு கூட்டமைப்பிற்கு மாற்றாக கட்சிகள் மற்றும் அணிகள் செயற்படக் கூடாது என்று கூறவில்லை, மாறாக பல்வேறு கட்சிகளுக்கு மத்தியில் கூட்டமைப்பு மட்டும் வெல்ல வேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்துகின்றேன். ஏன் வடக்கு கிழக்கில் வெல்லப்படும் அனைத்து ஆசனங்களும் கூட்டமைப்பின் வசமாக வேண்டும். எனது கணிப்பில் இதுதான் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியலை கையாளுவதற்கான இறுதி சந்தர்ப்பம். இதன் பின்னர் அரசியலை கையாளுவதற்கான சந்தர்ப்பம் கூட்டமைப்பிற்கு கிடைக்குமா என்பது சந்தேகமே! எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுவது வெண்ணை திரண்டு வரும் போது தாழியை உடைத்துவிட்ட கதையாகிவிடலாம். வடக்கு கிழக்கில் வெல்லப்படும் அனைத்து ஆசனங்களும் கூட்டமைப்பின் வசமாக வேண்டும் என்பதற்கும், நான் விவாதிக்கும் விடயத்திற்கும் என்ன தொடர்பு?

ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் எதிர்பார்த்தது போன்று, முயல் வேகத்தில் நடைபெறவில்லை, மாறாக ஆமை வேகத்தில்தான் நடந்தேறியது. எனவே, இது தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்திகள் இருப்பது இயல்பே! இவ்வாறானதொரு சூழலில்தான் மிகக் குறுகிய காலத்தில் ஒரு தேர்தலுக்கு தமிழ் மக்கள் முகம்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஒரு முக்கிய விடயம் நிகழ்ந்திருக்கிறது. அதாவது, ஆட்சி மாற்றம் தெற்கின் ஸ்திரத் தன்மையை குலைத்துள்ளதுடன், தெற்கின் அரசியல் நிகழ்ச்சி நிரலையும் கூறுபடுத்தியுள்ளது. இவ்வாறான சூழல் தமிழ் மக்களை பொறுத்தவரையில் அடிப்படையில் ஒரு சாதகமான அம்சமாகும். அதாவது, கூட்டமைப்பு பேரம் பேசுவதற்கான புறச் சூழல் கிடைத்துள்ளது. ஆனால், அது முன்னர் இருக்கவில்லை. ஏனெனில், கூட்டமைப்புடன் பேச வேண்டிய தேவைப்பாடு முன்னைய ஆட்சியாளருக்கு இருந்திருக்கவில்லை. இவ்வாறு நான் கூறுவதால் அனைத்து விடயங்களையும் கூட்டமைப்பால் சாதமாக கையாள முடியும், கூட்டமைப்பின் அனைத்து நிபந்தனைகளுக்கும் தெற்கு செவிசாய்க்கும் என்று நான் கூறுவதாக நினைக்க வேண்டாம்.

ஆனால், கொழும்பு ஆட்சியாளர்களுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி உரையாடுவதற்கான, அவர்களும் கூட்டமைப்புடன் உரையாட வேண்டிய புறச்சூழல் முன்னரை காட்டிலும் கனிந்திருக்கிறது. இந்த கனிவான சூழலை சாதகமாக கையாள வேண்டுமாயின், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் வெல்லப்படும் அனைத்து ஆசனங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாக வேண்டியது கட்டாயமானதாகும். அவ்வாறு கூட்டமைப்பு அனைத்து ஆசனங்களையும் வெற்றி கொள்ளும் போதுதான் கூட்டமைப்பாலும் தெற்கை வலுவாக எதிர்கொள்ள முடியும். அவ்வாறில்லாது வடக்கு கிழக்கில் முக்கியமாக, வடக்கில் ஒரு சில ஆசனங்கள் கூட்டமைப்பிற்கு வெளியில் போகுமாக இருந்தால், அது கூட்டமைப்பின் அரசியல் பலத்தை சிதைக்கும். கூட்டமைப்பின் அரசியல் பலம் சிதைவடைவது என்பது, தமிழ் மக்களின் சார்பில் பேசுவதற்கான அரசியல் வலு சிதைவுறுகிறது என்பதாகும். எனவே, இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டுதான் நான் கூட்டமைப்பின் வெற்றியின் அவசியத்தை வலியுறுத்துகின்றேன். தவிர கூட்டமைப்பின் மீது விமர்சனங்களை முன்வைக்கக் கூடாது என்று நான் வாதிடவில்லை அவ்வாறு வாதிடுவது, கூட்டமைப்பு நம்பும் ஜனநாயக நெறிக்கும் முரணானதாகும்.

இங்கு இன்னொரு விடயத்தையும் முக்கியமாக குறித்துக்கொள்ள வேண்டும். அதாவது, அரசியல் ரீதியாக நோக்கினால் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு எதிரான அரசியல் போர் இன்னும் முற்றுப்பெறவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் தமிழ் மக்கள் மீண்டுமொரு தேர்தலுக்கு முகம் கொடுத்திருக்கின்றனர். இவ்வாறானதொரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதன் மூலம் பெரிய விடயங்களை சாதித்துவிட முடியுமென்று எவரேனும் வாதிட்டால் அவர் ஒன்றில் அரசியல் சூழலை கணிக்கத் தெரியாதவராக இருக்க வேண்டும் அல்லது அவருக்கு தமிழ் மக்கள் குறித்து எவ்வித கரிசனையும் இல்லாதிருக்க வேண்டும். விமர்சனங்களும் விவாதங்களும் அவசியம். ஆனால், அது வெறுமனே தேர்தல்கால வெற்றியை இலக்காகக் கொண்டதாக இருக்கக் கூடாது. மேலும், ஒரு சிலர் தலைமையை மாற்றுவது, சுமந்திரனை தோற்கடிப்பது என்னும் கோசங்களுடனும் கூட்டமைப்பை எதிர்க்கின்றனர். இப்படியான கோசங்கள் கூட, எவ்வித அரசியல் நோக்குமற்ற நடவடிக்கை என்பதே எனது அபிப்பிராயம். தலைமையை அல்லது சில நபர்களை மாற்றிவிட்டால் அல்லது இல்லாமலாக்கிவிட்டால், தாங்கள் நினைக்கும் விடயங்கள் நடந்தேறிவிடும் என்று எண்ணுவதும் கூட ஒரு அரசியல் அறிவீனம் என்பதே எனது அபிப்பிராயம்.

கடந்த காலங்களில் இவ்வாறு நபர்களை இல்லாதொழித்தல் என்னும் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் நிகழ்ந்ததை நாங்கள் கண்டிருக்கிறோம். ஆனால், இவ்வாறான “நபர்களை அகற்றும் அரசியலால்” ஏதாவது உருப்படியாக நிகழ்ந்துள்ளதா? இறுதியில் தமிழ் மக்கள் மத்தியிலிருந்த பெறுமதிமிக்க மனிதர்களை இழந்து போனதுதான் மிச்சம். இதன் காரணமாக ஏனைய இனச் சமூகங்கள்தான் நன்மையடைந்துள்ளன. எனவே, அந்தத் தவறை நாம் மீண்டும் செய்ய முடியாது. எனவே, இன்று சம்பந்தனை வீழத்துவோம், சுமந்திரனை வீழ்த்துவோம் என்பது என்னளவில் முன்னைய அணுகுமுறையின் தொடர்ச்சியே அன்றி வேறொன்றுமல்ல. இவர்களை அகற்றிவிட்டால் அப்படியென்ன தமிழ் சமூகத்திற்கு நன்மை வந்துவிடும்? இது தவிர இதில் ஒரு முரண் நகையான விடயமும் உண்டு. இன்று இவர்களை கூட்டமைப்பிலிருந்து அகற்ற வேண்டுமென்று வாதிடுவோரும் கூட்டமைப்பு எந்த வழிமுறையை தங்களுக்கான அரசியல் பாதையாகக் கைக்கொண்டு வருகிறதோ, அதே நாடாளுமன்ற வழிமுறையைத்தான் தெரிவு செய்திருக்கின்றனர். நாடாளுமன்றம் சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போவதாகத்தான் சொல்லுகின்றனர். கூட்டமைப்பும், கூட்டமைப்பை எதிர்ப்பவர்களும் ஒரே பாதையில்தான் பயணிக்கப் போகின்றார்கள் என்றால் பிறகெதற்கு தனியான அமைப்புக்கள். அனைவரும் கூட்டமைப்புடன் கைகோர்ப்பதில் என்ன பிரச்சினை? இப்படி பல கேள்விகளை எழுப்ப முடியும்.

நடைபெறவுள்ள தேர்தலில் கூட்டமைப்பின் முன்னாலுள்ள ஒரே இலக்கு, வடக்கு கிழக்கில், தமிழ் மக்களின் சார்பில் வெற்றிகொள்ளப்படும் அனைத்து ஆசனங்களும் கூட்டமைப்பின் வசமாக வேண்டும் என்பது ஒன்றே. கூட்டமைப்பு இவ்வாறானதொரு இலக்கை முன்னிறுத்தித்தான் தற்போது பணியாற்றி வருகின்றது. இந்த இலங்கை முன்னிறுத்தியே இம்முறை பல புதியவர்களை களமிறக்கியுள்ளது. ஆனால், இலக்கு சரியானது, தேவையானது என்பதால் மட்டுமே ஒரு இலக்கை வெற்றிபெறச் செய்துவிடாது. கூட்டமைப்பின் இலக்கை வெற்றி கொள்வதற்கு புதிய உக்திகளும் சிறந்த பிரச்சார உபாயங்களும் வகுக்கப்பட வேண்டும். அதற்கான ஒரு திட்டமிடல் குழுவை நியமித்து, ஒவ்வொரு விடயங்களையும் சிறப்பாக முன்னெடுக்க வேண்டும். அவ்வாறில்லாது போனால் இலக்கு சரியானதாக இருந்தாலும் கூட இந்த இலக்கை மக்களால் புரிந்துகொள்ள முடியாமலும் போகலாம்.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.