படம் | COLOMBOTELEGRAPH
மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடப்போகிறார் என்று தெரிகிறது. ஒருவேளை அவர் இறுதியில் போட்டியிலிருந்து விலகுவாரானால், அதில் ஏதோவொரு பலம்பொருந்திய சக்தியின் திருவிளையாடல் ஒழிந்திருக்கிறது என்றே நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அது தவிர அவர் போட்டியிடுவார் என்பது உறுதியாகிவிட்ட ஒன்றுதான். நான் மஹிந்தவின் மீள்வருகை தொடர்பில் எழுதிய முன்னைய பத்தியில் குறிப்பிட்டவாறு மஹிந்த தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான், அவர் மீண்டும் தன்னால் அரசியலில் நிமிர்ந்தெழ முடியுமென்று நம்புகிறார். அவரது நம்பிக்கை சரியென்று கூறுவதற்கும் அதனை பலப்படுத்துவதற்கும் அவரைச் சுற்றி ஒரு வலுவான சிங்கள கடும்போக்காளர் கூட்டமும் இருக்கிறது. இந்த நிலையில், மஹிந்த போட்டியிடுவதில் சிக்கல்கள் இருக்கப் போவதில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்தில் அடுத்தது என்ன என்னும் கேள்விக்கான விடையைத் தேடும் பணிதான் தெற்கின் அரசியலாக இருக்கிறது. தெற்கின் அரசியலை உற்று நோக்கினால் இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் அங்கு அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதை காணலாம். ஒருபுறம் மஹிந்த தரப்பினரின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முன்னெடுப்புக்கள். அடுத்தது, மஹிந்தவின் மீள் எழுச்சியை தடுப்பதற்கான முன்னெடுப்புக்கள். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளதான செய்திகளும் வெளியாகியிருக்கின்றன. ஒருவேளை, சந்திரிக்கா குமாரதுங்க போட்டியிட்டால், தங்களின் அணி பின்னடைவை சந்திக்கக் கூடிய சூழல் உருவாகுமென்று மஹிந்தவிற்கு நெருக்கமான விமல் வீரவன்ச குறிப்பிடுகின்றார். உண்மையில் சந்திரிக்காவின் மீள்வருகை என்பது மஹிந்தவின் மீள்வருகையினால் தீர்மானிக்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் அப்படியான எண்ணம் ஏதும் தனக்கில்லை என்று கூறி சந்திரிக்காவும் களத்தில் இறங்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றதென்றால், தெற்கின் அரசியல் சூழல் அந்தளவிற்கு குழப்பமடைந்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி அபிப்பிராய ரீதியில் இரு அணியாக இருக்கிறது. ஒரு தரப்பினர் மஹிந்தவை எந்தவகையிலும் மீண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அனுமதிக்கக் கூடாது என்னும் நிலைப்பாட்டில் இருக்கின்றனர். பிறிதொரு அணியினரோ, மஹிந்தவிற்கு இடமளிக்காது விட்டால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உடைவை தடுக்க முடியாது, அவ்வாறானதொரு சூழல் ஏற்பட்டால் ஜக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்கும். ஆனால், நாங்கள் ஜக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருவதை அனுமதிக்க முடியாது. மேற்படி இரண்டு வகை அபிப்பிராயங்களின் விளைவாகவே மைத்திரிபால ஒரு முடிவு எடுக்க முடியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றார். இவ்வாறானதொரு சூழலில்தான் மஹிந்தவிற்கு இடமளித்தால் தாம் கட்சியிலிருந்து வெளியேற வேண்டியேற்படும் என்று குறிப்பிட்ட எண்ணிக்கையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபாலவை எச்சரித்திருக்கின்றனர்; ஒரு தரப்பினர் எச்சரிக்கின்றனர்; பிறிதொரு தரப்பினர் மஹிந்தவுடன் செல்லவுள்ளதாக கூறுகின்றனர். மைத்திரிபாலவை பொறுத்தவரையில் இது கையாளுவதற்கு கடினமான ஒரு விடயமாகவே இருக்கிறது. இந்த நிலைமைகளை உற்றுநோக்கியதன் விளைவாகவே சந்திரிக்கா குமாரதுங்க விடயங்களில் தலையீடு செய்ய முயல்கின்றார். மஹிந்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட அனுமதிக்கப்பட்டால் நாடாளுமன்ற தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெறுவது நிச்சயம். மஹிந்தவிற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டால் கட்சியின் உடைவு என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.
மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற போது, அது ஒரு வரப்பிரசாதமான அரசியல் நகர்வாகவே பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தது போன்று நிலைமை சாதகமாக அமையவில்லை. அரசு வாக்குறுதியளித்தது போன்று சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்த போதிலும் கூட, அதில் பெரியளவில் வெற்றிகளை பெற முடியவில்லை. குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே பின்னடித்து வந்த அரசு தங்களின் பின்னடிப்பிற்கு காரணமாக மஹிந்தவின் மீள் எழுச்சியையே காரணமாக காட்டியது. இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான நிலங்களை விடுவிப்பதில் அரசு எந்தவொரு முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை. இதற்கான காரணமாகவும் மஹிந்தவின் மீள் எழுச்சிக் கதையே சொல்லப்பட்டது. சம்பூர் காணி விவகாரத்தில் நிலைமை மேலும் மோசமாகியது. அரசு காணிகளை விடுவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை செய்தது. ஆனால், நீதிமன்ற வழக்கொன்றில் மூலமாக அது தடுத்து நிறுத்தப்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் இவை அனைத்தும் ஒரு விடயத்துடன்தான் தொடர்புபடுகிறது. அதாவது, நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள் மஹிந்தவிற்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது என்பதுதான் அது. ஆட்சி மாற்றம் தொடர்பில் அதிருப்தியடையும் தமிழர் தரப்பினர் அதற்கான காரணத்தை கூட்டமைப்பில் போட்டு விடுகின்றனர். ஆனால், அவ்வாறு விமர்சிப்பவர்களும் கூட்டமைப்பால் இது தொடர்பில் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதில் தெளிவற்றே இருக்கின்றனர். ஆட்சி மாற்றத்தை பலப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு மற்றும் இந்தியாவின் எதிர்பார்ப்பாக இருக்கின்ற போது, அதற்கு முரணாக கூட்டமைப்பு செயற்படுவதன் மூலமாக எதனைச் சாதிக்க முடியும்? இவ்வாறானதொரு சூழலில்தான் எல்லா கேள்விகளுக்கும் எல்லா சந்தேகங்களுக்கும் விடையளிக்கக் கூடிய நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இதன் பின்னர்தான் கூட்டமைப்பால் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியும். அந்த முடிவு ஒன்றில் புதிய அரசுடன் சில விடயங்களில் ஒத்துழைத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முற்படுவது அல்லது எதிர்ப்பு அரசியல் மூலம் விடயங்களை எதிர்கொள்வது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னர் கூட்டமைப்பு மேற்படி நிலைப்பாடுகளில் ஒன்றை நோக்கி நிச்சயம் பயணிக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும். ஏனெனில், அதன் பின்னர் தொடர்ந்தும் விளக்கமளித்துக் கொண்டிருக்க முடியாது.
இப்படியானதொரு இக்கட்டான சூழலில்தான் நாடாளுமன்றத் தேர்தலொன்று இடம்பெறவுள்ளது. இதில் மஹிந்த ராஜபக்ஷவின் கை ஓங்கினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உள்நாட்டுக்குள் சாதகமாக கையாளும் கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு நிச்சயம் பின்னடைவு ஏற்படும். இதனையும் இரண்டு விதமாக அவதானிக்கலாம். ஒன்று, மஹிந்த அரசை கைப்பற்றினால் கூட்டமைப்புடன் பேசுவதற்கான சூழல் கனியலாம். ஆனால், ஒருவேளை தேசிய அரசு அமைந்து, மஹிந்த எதிரணிக்கு தலைமை தாங்கினால், அரசும் கூட்டமைப்பும் இணைந்து முன்னெடுக்கும் முயற்சிகளை தடுப்பதே மஹிந்தவின் பிரதான அரசியல் நிகழ்சி நிரலாக இருக்கும். அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் சிலர் எதிர்பார்ப்பது போன்று மஹிந்தவின் கை ஓங்கினால் ஆட்சி மாற்றம் முற்றிலுமாக அர்த்தமிழந்து போகும். ஆனால், தற்போது சந்திரிக்கா நேரடியாக களமிறங்குவதானது, எப்பாடுபட்டேனும் மஹிந்தவின் கை ஒங்கிவிடாதவாறெ தடுப்பதற்கான ஒரு முயற்சிதான். ஆனால், அவரால் எந்தளவு முடியும், அவரது வருகை எந்தளவிற்கு மஹிந்தவை பலவீனப்படுத்தும் என்பதெல்லாம் பொறுத்திருந்து நோக்க வேண்டிய ஒன்றே. ஆனால், ஒன்று மட்டும் உண்மை, அது, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து தெற்கில் எவ்வாறானதொரு அரசு உருவாக்கப் போகிறது என்பதில்தான், இலங்கையின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. அத்துடன், தமிழரின் அரசியல் எதிர்காலமும் தங்கியிருக்கிறது.