படம் |
இலங்கையில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செயற்படுகின்றன. இந்த இரண்டு பிரதான கட்சிகள்தான் இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சி புரிந்தும் வருகின்றன. மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற கருத்து இந்த இரு கட்சிகளிடமும் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தமிழ் மக்களின் 60 ஆண்டுக்கும் மேற்பட்ட அரசியல் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை குறைப்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் சார்ந்து சர்வதேச ரீதியாக வரக்கூடிய அழுத்தங்கள், யோசனைகளை தவிர்ப்பது.
பிரதான நோக்கம்
இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் மக்கள் பிரச்சினைகள் பொதுவானவை என்று கூறி தமிழ் மக்களையும் அவர்கள் சார்ந்து நிற்கின்ற அரசியல் கட்சிகளையும் சாதாரண கட்சி அரசியல் செயற்பாட்டிற்குள் கொண்டுவருவது பிரதான நோக்கமாகும். 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான அரசியல் சூழலில் இந்த நோக்கத்தை இரு பிரதான அரசியல் கட்சிகளும் திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று கொண்டு நிறைவேற்ற முற்படுகின்றன.
இந்த நோக்கத்தை நிறைவேற்ற அரச அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர். 1920இல் தேசிய இயக்கத்தின் பிளவுடன் ஆரம்பித்து நீடித்து வருகின்ற இனமோதல் அல்லது இன முரண்பாடு பின்னர் அரசியல் யாப்பு ரீதியாகவும் சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்களை ஓரம் கட்டியது எனலாம். தற்போது நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் இருக்கக் கூடிய சட்ட ஏற்பாடுகள் கூட சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்களின் அபிலாஷைகளுக்கு நேர்மாறானதாகவே உள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல்.
சில உதாரணங்கள்
அரசியல் யாப்பில் உள்ள சட்டங்களை திருத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு சரியான அரசியல் தீர்வு காண முடியாது என்பதை இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரான காலத்தில் இருந்தே அனுபவ ரீதியாக கண்ட உண்மை. இலங்கைத் தேசியம் என்ற வரையறைகளுக்குள் நின்று கொண்டு சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்களும் வாழவேண்டும் என்ற நோக்கத்தில் மேற்படி இரு கட்சிகளும் செயற்படுகின்றனர் என்பதற்கு இன்றுவரை உதாரணங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. இலங்கையில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவதற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுவதற்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இல்லை.
தமிழ் – முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள குடியேற்றத்தை ஆரம்பித்தது ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசுதான். அத்துடன், திருகோணமலை மாவட்டத்துக்கான அரச அதிபரையும் சிங்களவராக நியமித்ததும் ஜே.ஆர்தான். ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனை எதிர்த்தது. ஆனால், 1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு சிங்கள அரச அதிபரை மாற்றி தமிழ் ஒருவரை நியமிக்கவில்லை.
இன்றும் அதே நிமைதான்
அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசில் ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ முற்று முழுதாக தமிழ் மக்கள் வாழுகின்ற வவுனியா, மன்னார் மாவட்டங்களில் சிங்கள அரச அதிபரை நியமித்தார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நல்லாட்சி எனக் கூறி ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன அரசு இதுவரை மாற்றங்கள் எதனையும் செய்யவில்லை. இரண்டு மாவட்டங்களின் அரச அதிபர்களையும் தமிழர்களாக நியமிப்போம் என்று ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்குறுதி வழங்கிய ஐக்கிய தேசிய கட்சி, ஆட்சிக்கு வந்ததும் வடக்கு – கிழக்கு மாகாண நிர்வாகத்தை தொடர்ந்தும் இராணுவ நிர்வாகத்திலேயே நடத்தி வருகின்றது.
இதன் காரணத்தினால்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மக்கள் பிரச்சினை என்று கூறி தமிழர்களின் அரசியல் பிரச்சினையை பத்தோடு பதினொன்றாக மாற்ற முற்படுகின்றனர். இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் பிரச்சினைகள் உண்டு. ஆனால், இனமுரண்பாட்டு விடயத்தை மக்களின் சாதாரண அடிப்படை பிரச்சினைகளுடன் ஒப்பிடுவது ஒரு தேசிய இனத்தின் இறைமையை அந்த தேசிய இனத்தின் அரசியல் உரிமையை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாடு எனக் கூறலாம்.
நல்லாட்சியிலும் மாற்றமில்லை
ஆகவே, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி என்பது ஒரு இனத்துக்குரியதாக மட்டும் இருப்பதுடன், மக்களின் பொதுவான பிரச்சினைகள் என்ற வரையறைக்குள் இனப்பிரச்சினையை கொண்டு வந்து அபிவிருத்தியை மட்டும் செய்தால் போதும் என்ற நிலை உருவாக்கப்படுகின்றது. இந்த அணுகுமுறையைத்தான் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும், சந்திரிக்காவும், மஹிந்த ராஜபக்ஷவும் செய்து வந்தனர். இந்த நிலையில், 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழல் என்பது மேற்படி இரண்டு கட்சிகளுக்கு மேற்படி அணுகுமுறையை தங்கு தடையின்றி பின்பற்ற வசதியாக அமைந்து விட்டது என்ற முடிவுக்கு வரலாம்.
பழைய பானைக்குள் புதிய கள்ளு என்ற பழமொழியின் அர்த்தம் என்ன என்று அரசியல் விஞ்ஞான மாணவன் ஒருவன் கேட்டான். அதற்கு விளக்கமளித்த விரிவுரையாளர், தமிழ் மொழியில் உள்ள பழமொழிகளுக்கு பல்வேறு வகையான விளக்கங்களை கொடுக்கலாம். ஆனால், நீ கேட்ட அந்த பழமொழிக்கு தமிழர்களின் அரசியலுக்குள்ளேயே விளக்கம் உண்டு என்று கூறி முடித்தார். இப்போது பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. பல தமிழ் அரசியல்வாதிகள் 60 ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய வீர வசனங்களை மீண்டும் கூற ஆரம்பித்து விட்டனர். புலிகளை மாவீரர்கள் என்றும் வெளிப்படையாக பேசுகின்றனர். மாற்றுச் சிந்தனை இல்லாத இந்த அரசியல் செயற்பாடுகளினால்தான் தமிழர் பிரச்சினையை உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் மூடி மறைக்க சிங்களத் தலைவர்களுக்கு வாய்ப்பாகவும், புதிய கள்ளு என்று கூறி பழைய கள்ளை புதிய பானைக்குள் ஊற்றுவதற்கு வசதியாகவும் உள்ளது.
தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.