படம் | இணையம்

அண்மையில் லண்டனில் இடம்பெற்ற கூட்டமொன்று தொடர்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றிருந்தன. குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமத்திரன் பங்குகொண்டமை தொடர்பில் தமிழ் தரப்பால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. மறுபுறம் மேற்படி கூட்டத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்குகொண்டமை தொடர்பில் தெற்கில் விமர்சனங்கள் மேலெழுந்தன. தமிழ்ச் சூழலில் எழுந்த சர்ச்சைகளை இரண்டு வகையில் நோக்கலாம். ஒன்று, கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் இருக்கின்ற போதிலும் குறித்த கூட்டம் தொடர்பிலான தகவல்கள் அவர்கள் மத்தியில் பரிமாறப்பட்டிருக்கவில்லை. ஒரு சிங்கள அமைச்சருக்கு தெரிந்திருந்த விடயம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன, அடைக்கலநாதன் ஆகியோருக்கு தெரிந்திருக்கவில்லை. சில விடயங்களில் இரகசியம் பேணப்பட வேண்டும் என்பதை மறுப்பதிற்கில்லை ஆனால், சம்பந்தப்பட்ட அரசியல் அமைப்பொன்றின் சிரேஸ்ட தலைவர்களுக்கே தெரியாதவகையில், இரகசியம் காப்பதன் பொருளைத்தான் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது அங்கத்துவம் வகித்துவரும் முன்னைநாள் பேராட்ட அமைப்புக்களின் தலைவர்கள் எவரும் கடும்போக்குவாதிகள் அல்ல. எனவே, அவர்கள் விடயங்களை எழுந்தமானமாக எதிர்க்கப் போவதுமில்லை. ஆனால், விடயங்கள் உரியவாறு பகிரப்படாத போதுதான், அவை முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றன. லண்டனில் இடம்பெற்ற கூட்டம் தொடர்பில் இதுவரை கூட்டமைப்பிற்குள் எந்தவொரு கலந்துரையடல்களும் இடம்பெறவில்லை என்பதையும் இந்த இடத்தில் குறித்துக்கொள்ளலாம்.

தவறுகளை எங்கள் பக்கமாக வைத்துக் கொண்டு பின்னர் கூட்டமைப்பை உடைப்பதற்காக டொலர்கள் செலவிடப்படுகின்றன என்று பேசிக் கொண்டிருப்பதில் எவ்வித பொருளும் இல்லை. வீட்டில் ஓட்டையிருந்தால் அதன் வழியாக பல்வேறு விஷ ஜந்துக்கள் உள் நுழையத்தான் செய்யும். எனவே, முதலில் ஓட்டைகளை இனம்கண்டு அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறித்த லண்டன் கூட்டம் எதனை இலக்காகக் கொண்டு இடம்பெற்றது என்பதில் ஒவ்வொரு தரப்பினரும் அவரவர் அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்றதான கருத்துக்களை பதிவுசெய்கின்றனர். ஒரு சாரார் இது புலம்பெயர் அமைப்புக்களை சிதைப்பதற்கான சதி முயற்சியொன்றின் ஆரம்பம் என்கின்றனர். இன்னும் சிலரோ எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வெளிவருமென்று எதிர்பார்க்கப்படும் ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை வீரியமிழக்கச் செய்வதற்கான ஒரு நடவடிக்கையே இது என்கின்றனர். இன்னும் சிலரோ ஆட்சி மாற்றத்தை பலப்படுத்தும் நோக்கிலான பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒரு அங்கம். எனவே, இதற்கு பின்னால் அமெரிக்க அணுசரனை இருக்கலாம் என்கின்றனர். ஆனால், சிலர் சொல்லுவது போன்று ஜ.நா. அறிக்கையை இவ்வாறான சந்திப்புக்களின் மூலம் வீர்யமிழக்கச் செய்துவிடலாம் என்று நான் கருதவில்லை. ஜ.நா. அறிக்கையில் நிகழப் போகும் மாற்றங்கள் என்பது அதனை தீர்மானிக்கும் பலம்பொருந்திய, குறிப்பாக அமெரிக்காவின் காய்நகர்த்தல்களோடு தொடர்புபட்ட ஒன்று. அதனை புலம்பெயர் அமைப்புக்களை கையாள்வதன் மூலம் வீர்யமிழக்கச் செய்துவிடலாம் என்பதெல்லாம் அனாவசியமான அச்சங்களே. அதேபோன்று இவ்வாறான சந்திப்புக்கள் வாயிலாக புலம்பெயர் அமைப்புக்களை சிதைக்க முடியுமா என்பதனை விளங்கிக் கொள்வதற்கு முதலில் மேற்படி கூட்டத்தில் பங்குகொண்ட உலகத் தமிழர் பேரவையையின் ஆற்றலை மதிப்பிடுவது அவசியம்.

குறித்த கூட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் சார்பில் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் பங்குகொண்டிருந்தார். மேற்படி கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும் ரணில் தலைமையிலான இலங்கை அரசிற்கும் இடையிலான சமாதான தூதுவராக தொழிற்பட்ட எரிக் சொல்ஹெய்மும் பங்குகொண்டிருந்தார். இந்தக் கூட்டம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து இது தொடர்பில் சுமந்திரன் மற்றும் சுரேன் சுரேந்திரன் ஆகியோர் இலங்கைக்குள்ளும் இலங்கைக்கு வெளியிலும் சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நோக்கிலேயே மேற்படி கூட்டம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தனர். அதேவேளை, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உலகத் தமிழர் பேரவை ஆகிய அனைத்தும் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்களில் இலங்கை புலம்பெயர் (Sri Lankan Diaspora) சமூகத்தின் ஆக்கபூர்வமான ஈடுபாடுகள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடியதாகவும், மேலும் தற்போதைய தேவைகள், குறிப்பாக அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் குடியேறவிருக்கும் 2000 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மானிப்பதற்கான உதவிகள் தொடர்பில் இலங்கையை தளமாகக் கொண்டிருக்கும் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோருடன் தொடர்ந்தும் கூட்டாக சந்திப்பதென்று உடன்பாடு காணப்பட்டிருப்பதாகவும் குறித்த கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இங்கு முக்கியமாக பலராலும் கவனிக்கப்பட்ட விடயம் மேற்படி அறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இலங்கை புலம்பெயர் சமூகம் என்னும் சொற்தொடராகும். நாடாளுமன்ற விவாதங்களின் போது குறித்த லண்டன் கூட்டம் தொடர்பில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, ஒரு கட்டத்தில் குறித்த சொற்தொடரைத்தான் தங்களது வெற்றியாக மங்கள சமரவீர காண்பிக்க முயற்சித்தார். அவர் அங்கு குறிப்பிடும் போது, இதுவரை சர்வதேச ரீதியில் எங்களுக்கு எதிராக செயலாற்றிவந்த உலகத் தமிழர் பேரவையின் தலைவர், கத்தோலிக்க மதகுரு இம்மானுவல் மற்றும் சுரேன் சுரேந்திரன் போன்றவர்கள் இன்று சிறிலங்கன் அடையாளத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்த்து எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் புலம்பெயர் திருவிழாக்கள் இலங்கையில் இடம்பெறும் என்னும் செய்தியும் வெளியாகியிருக்கிறது. அது என்ன புலம்பெயர் திருவிழா என்பதும் சரியாக விளங்கிக்கொள்ள முடியாதவொரு விடயமாகவே இருக்கிறது. ஆனால், விடயங்களை தொகுத்து நோக்கினால் ஜரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களில் ஒரு பகுதியினரை இணைக்கும் வகையில் இலங்கையில் சில நிகழ்வுகள் இடம்பெறலாம் என்றே நாம் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தகையெதாரு விழாவிற்கு புலம்பெயர் தமிழர்களின் சார்பில் உலகத் தமிழர் பேரவை தலைமை ஏற்கக் கூடுமென்று எதிர்பார்க்கலாம்.

ஆனால், இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது – புலம்பெயர் அமைப்புக்களை உலகத் தமிழர் பேரவையினால் கட்டுப்படுத்த முடியுமா? இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஒரு பிரிவான பயங்கரவாத எதிர்ப்பிற்கான அமையத்தினால் (Bureau of Counterterrorism) ஆண்டு தோறும் வெளியிடப்படும் அறிக்கை வெளிவந்திருக்கிறது. மேற்படி அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலயமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாகவும், அவர்கள் நிதி சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் நிர்மூலமாக்கப்பட்டு, அதன் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு எவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது? கிடைக்கும் தகவல்களின் படி நெடியவன் தலைமையிலான விடுதலைப் புலிகள் பிரிவே தற்போதும் ஓரளவு ஆற்றலுடனும், அதேவேளை ஒழுங்கமைப்பட்ட வகையிலும், இயங்கிவருவதாக சொல்லப்படுகிறது. அந்த வலையமைப்பு தொடர்பில்தான் அமெரிக்காவும் குறிப்பிடுகின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அதன் பிரதான தலைவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது முற்றிலுமாக செயலிழந்துவிட்டது. 2009இற்குப் பின்னர் பலர் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக தங்களை புலம்பெயர் மக்கள் மத்தியில் அடையாளப்படுத்த முற்பட்டனர். ஆனால், எவராலும் முழு அமைப்புக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் செயலாற்ற முடிந்திருக்கவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில் புலம்பெயர் சூழலில் முகம் காட்டிய அமைப்புக்களில் ஒன்றுதான் மேற்படி உலகத் தமிழர் பேரவை. ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விடயம், உலகத் தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புக்களை ஒரு உயரடுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் (Elite Diaspora organizations) என்றே வரையறுக்கலாம். இவர்களால் ஜரோப்பிய நாடுகளில் பரந்து காணப்படும் பல்வேறு குழுக்களை கட்டுப்படுத்தவோ அல்லது ஒரு வடத்திற்குள் கொண்டுவரவோ இயலாது. அதாவது, இவர்களுக்கு இராஜதந்திர வட்டாரங்களுடன் தொடர்புகள் இருக்கின்ற அளவிற்கு சொந்த மக்களுடன் தொடர்புகள் இல்லை.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இவ்வகை அமைப்புக்கள் ஆரம்பத்திலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நெருங்கிச் செயற்பட்டு வருகின்றன. ஆனால், கடும்போக்குவாத முகம் காட்டிவரும் சில குழுக்கள் கூட்டமைப்பை தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றன. ஆனால், இவர்களின் எதிர்ப்பு வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரிய தாக்கங்கள் எதனையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தை முன்னிறுத்தி நோக்கினால் தற்போதைய சந்திப்பு தொடர்பில் சிலர் வெளியிட்டுவரும் விமர்சனங்களும் பெரியளவில் தாங்கங்களை ஏற்படுத்துமென்று கூறமுடியாது. ஏனெனில், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஆதரவு கூட்டமைப்புக்கு இருக்கின்றவரையில், புலம்பெயர் நாடுகளில் காண்பிக்கப்படும் எதிர்ப்புக்கள் எவையும் கூட்டமைப்பால் கருத்தில்கொள்ளப்படப் போவதில்லை. புலம்பெயர் சூழலில் முன்னெடுக்கப்படும் இவ்வகை விடயங்கள் புலம்பெயர் சூழலில் மட்டுமே விவாதிக்கப்படுகின்றன. மேற்படி சந்திப்பு தொடர்பிலும் அதுவே தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மேற்படி சந்திப்பு தொடர்பில் அமெரிக்காவை தளமாகக் கொண்டிருக்கும் வி. உருத்திரகுமாரனை தலைவராக (பிரதமராக) கொண்டியங்கிவரும் தமிழீழத்திற்கான நாடு கடந்த அரசாங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ் மக்கள் சார்பில் பேசுவதற்கான ஆணை உலகத் தமிழர் பேரவைக்கு இல்லை என்று குறிப்பிடப்பிட்டிருக்கிறது. இதேபோன்று வேறு சில புலம்பெயர் குழுக்களும் இதனை விமர்சித்திருக்கின்றன. இத்துடன் இந்த விடயம் ஓய்ந்துவிடும், பின்னர் மீண்டுமொரு கூட்டத்தில் சுரேன் சுரேந்திரன் பங்குகொள்ளும் போது மீண்டும் இந்த விடயம் பொது வெளியில் எட்டிப்பார்க்கும், பின்னர் கொஞ்சம் சூடான வார்த்தைகள் ஆங்காங்கே உலவும், மீண்டும் அனைத்தும் ஓய்ந்துவிடும்.

என்னுடைய கணிப்பில் இது போன்ற விடயங்களை எழுந்தமானமாக எதிர்க்காமல் விடயங்களை தொடர அனுமதித்து, அதன் பெறுபேறுகளை உற்று நோக்குவதுதான் சரியானதொரு அணுகுமுறையாக இருக்க முடியும். அரசு குறிப்பிடுவது போன்று புலம்பெயர் விழாவொன்று இடம்பெற்றால் அதனையும் வரவேற்போம். எடுத்த எடுப்பிலேயே புலம்பெயர் அமைப்புக்களை ரணில் சிதைக்க முற்படுகின்றார் என்று கூக்குரலிடுவதை விடுத்து, நிகழப்போகும் விளைவுகளை ஆதாரமாக் கொண்டு அவற்றை விமர்சிக்க முற்படுவதே சரியானது. பொதுவாக தமிழ் அரசியல் உ உரையாடல்களில் அடிக்கடி தலைநீட்டும் ஒரு கருத்து, அவர்கள் எங்களை சிதைக்க சதி செய்கிறார்கள் என்பதுதான். இப்படியான கதையும், கூட்டமைப்பை உடைப்பதற்காக டொலர்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று கூறித்திரிவதும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைக் கருத்துக்கள்தான். எனவே, எதிர்ப்பு சுலோங்களை முன்வைப்பதை விடுத்து, இது போன்ற விடயங்களையும் கையாளுவதற்கு தமிழர் தரப்பு தயாராகுவதில் தவறில்லை.