படம் | THE WASHINGTON POST
,ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையிலான காலப்பகுதியை உற்று நோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பான அச்சுறுத்தலிருந்து புதிய அரசால் எந்த வகையிலும் விடுபட முடியவில்லை. இந்த நிலையில் அரசைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல முடியாதவொரு சூழல் தெற்கின் அரசியல் அரங்கில் வெளிப்படையாகவே தெரிகிறது. மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கின்ற போதும் அவரது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கட்சி இல்லை. கட்சியின் ஒரு பகுதியினர் தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஷவுடனேயே இருக்கின்றனர். இவ்வாறானதொரு பின்புலத்தில் அண்மைக்காலமாக மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான அரசியல் பிரச்சாரங்களும் தீவிரமடைந்திருக்கின்றன. கடந்த வாரம் மஹிந்தவிற்கு ஆதரவாக மாத்தறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் 76 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொண்டிருந்தனர். பெருமளவான மக்கள் மேற்படி கூட்டத்தில் பங்குகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்னும் கோரிக்கை அவரது ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்ற சூழலில், அதற்கு வலுச் சேர்க்கும் வகையிலேயே மேற்படி கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தின் எதிரொலியாவே தற்போது மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான புதியதொரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே, இது போன்றதொரு முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக மஹிந்த ராஜபக்ஷ – மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான நேரடி சந்திப்பொன்றும் இடம்பெற்றிருந்தது. ஆனால், அந்தச் சந்திப்பு எதிர்பார்த்த எந்தவொரு வெற்றியையும் அறுவடை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து மஹிந்தவுடனான சமர முயற்சிகள் முற்றாக கைவிடப்பட்டிருந்தன. ஆனால், தற்போது மீண்டுமொரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம், மகிந்தவுடன் மீண்டுமொரு சமர முயற்சிக்கு செல்லவேண்டிய நிர்பந்தம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதே!
வெளியாகிய செய்திகளின்படி, மஹிந்தவுடன் சமரச முயற்சிகளை மேற்கொள்வதற்கென ஆறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுசில் பிரேமஜயந்த, ஜோன் செனிவரத்தன, ரி.பிஎக்கநாயக்க, அனுர பிரியதர்சன யாப்பா, குமார வெல்கம மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே மேற்படி குழுவில் இடம்பெறும் ஆறு பேர். ஆனால், மேற்படி ஆறுபேரும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நெருக்கமானவர்களாக இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிந்தைய தகவல்களின்படி மேற்படி குழுவின் முதலாவது கூட்டம் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்றுள்ளது. ஆனால், இக்கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செய்தி ஒன்றும் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதில் ஜனாதிபதி மைத்திரிபால உடன்படவில்லை என்பதே அந்த செய்தி. மேலும்,, மேற்படி தகவல், மஹிந்தவின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஊடாக மஹிந்தவிற்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான ‘ஐலண்ட்’ செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், அதே வேளை குறித்த நபரின் ஊடாகவே மஹிந்தவும் தன்னுடைய செய்தியை மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரியப்படுத்தியிருக்கிறார். அதாவது, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு அங்கம் என்னும் வகையில் தன்னை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதை தாங்கள் அனுமதிக்காவிட்டால், நான் தனித்து பிறிதொரு அணியாக தேர்தல் களத்தில் நிற்பேன் என்பதே மஹிந்தவின் செய்தியாக இருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில் மஹிந்தவுடனான சமரச முயற்சிகள் வெற்றியளிக்குமா என்பதும் கேள்விக் குறியே!
ஆட்சி மாற்றத்தின் பின்னரான சூழல் எதிர்பார்த்தது போன்று கையாளுவதற்கு இலகுவான ஒன்றாக இருந்திருக்கவில்லை. நூறு நாள் வேலைத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டியது கட்டாயமாகியது. இந்த இடத்தை மஹிந்த சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். உண்மையில் நிலைமைகளை சரியாக அவதானித்தால் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தாலும், நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை தொடர்ந்தும் தன்வசப்படுத்தி வைத்திருப்பதில் வெற்றிபெற்றிருக்கிறார். நிழல் அரசு ஒன்றின் தலைவராக இருக்கிறார். 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கியது. 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன அதேவேளை, அரசின் தலைவர் என்னும் வகையில் பிரதமரின் அதிகாரங்களும் கூடியிருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில்தான் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்னும் வாதத்தை ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் கையிலெடுத்தனர். மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவ்வாறு ஏற்றுக்கொண்டால் ஆட்சி மாற்றம் என்பதே அர்த்தமற்ற ஒன்றாவிடும். இந்த நிலையில்தான் அண்மைக்காலமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிளவுறலாம் என்னும் அச்சம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மூத்த உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி உடைவுறுமானால் அதன் பலனை ஜக்கிய தேசியக் கட்சி அனுபவிக்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும். இவை அனைத்தையும் சீர்தூக்கி பார்த்திருப்பதன் விளைவே மஹிந்தவுடன் சமரசத்திற்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்னும் நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.
மஹிந்தவுடன் சமரசம் செய்வது இலகுவான ஒன்றா? நிலைமைகளை அவதானித்தால் அது அப்படியொன்றும் இலகுவான ஒன்றாக தெரியவில்லை. தற்போதிருக்கின்ற சூழலில், மஹிந்தவுடனான சமர முயற்சிகள் இரண்டு அடிப்படையில்தான் நிகழ முடியும். ஒன்று அவர் எதிர்பார்ப்பது போன்று அவரை பிரதமர் வேட்பாளராக்கி ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையிலான புதிய அரசை உருவாக்குவது. ஆனால், அப்படியானதொரு தெரிவிற்கு மைத்திரிபாலவினால் செல்ல முடியாது. எனவே, அடுத்திருக்கின்ற தெரிவு ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரையும் இணைத்துக் கொண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய அரசை ஏற்படுத்த, அதன் மூலமாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது. குறிப்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறினால், ரணில் தொடர்ந்தும் பிரதமராக இருப்பது என்பது பொருளற்ற ஒன்றாவிடும். மைத்திரிபால சிறிசேன தன்னை எந்தக் கட்சிக்கும் உரித்தானவர் அல்ல என்பதாகவே காட்டிக்கொள்ள முயன்றுவருகின்றார். ஆனால், நிலைமைகளை அவதானித்தால் அவரால் அதனை தொடர முடியுமென்று தோன்றவில்லை.
வேறு சில தகவல்களின்படி நிலைமைகளை சமாளிக்க முடியாது போகுமானால் ரணிலுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையை வெற்றிபெறுவதற்கு அனுமதித்துவிட்டு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை உருவாக்கும் ஒரு முடிவுக்கே மைத்திரி செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை வெற்றிபெறுமாக இருந்தால் அது புதியதொரு அரசை உருவாக்குவதற்கான ஆரம்பமாக இருக்கும். இவ்வாறு நிலைமைகள் மாறினாலும், இதன் மூலம் மஹிந்தவை எவ்வாறு சாந்தியடையச் செய்வது. இது அடுத்த பிரச்சினை. சில தகவல் மூலங்களின் படி புதிய அரசில் சமல் ராஜபக்ஷவை பிரதமராக்கும் என்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அது சரிவராவிட்டால், மஹிந்தவிற்கு நெருக்கமான தினேஸ் குணவர்த்தனவை பிரதமராக்கலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்தவிற்கு நெருக்கமானவர்களை உள்வாங்குவதன் மூலம், மஹிந்தவை அமைதிப்படுத்தலாம் என்பதே மேற்படி உபாயத்தின் இலக்காகும். ஆனால், இவையெல்லாம் எதிர்பார்ப்பது போன்று மிக இலகுவில் நடந்தவிடக் கூடிய ஒன்றல்ல. இப்போதைக்கு சில ஊகங்கள் மட்டும் உண்டு. ஆனால், நிலைமைகள் எப்படியும் மாறலாம். முன்னர் மாறியது போன்று.
ஆனால், இங்கு பிறிதொரு விடயத்தையும் முக்கியமாக குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தபோது அதனை எவரும் இயல்பானதொரு ஆட்சி மாற்றமாக பார்த்திருக்கவில்லை. அதற்கு பின்னால் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் திரைமறைவு வேலைத்திட்டங்கள் இருந்ததாகவே பிரஸ்தாபிக்கப்பட்டன. மஹிந்த ராஜபக்ஷவும் அவ்வாறானதொரு பிரச்சாரத்தையே முன்னெடுத்தார். ஆரம்பத்தில் இந்தியாவை மட்டும் இலக்கு வைத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த மஹிந்த, பின்னர் அமெரிக்க உளவுத்துறையும் தன்னுடைய வீழ்ச்சியின் பின்னணியில் இருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய சம்பந்தன் ஜயா, மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நிற்கக் கூடிய ஒரு வேட்பாளர் தெற்கில் இருந்திருக்கவில்லை. அவரை தோற்கடிக்கக் கூடிய ஒரு வேட்பாளர் இருந்திருக்கவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் மைத்திரிபால சிறிசேன அவரை எதிர்த்து போட்டியிட முன்வந்தார் என்று தெரிவித்திருந்தார். இதன் மறைபொருளும் மஹிந்தவின் குற்றச்சாட்டும் ஓரளவு பொருந்திப் போகவே செய்கிறது. ஆனால், எமது ஊடகப்பரப்பில், இந்தியா பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டளவிற்கு அமெரிக்கா பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், இன்று நிலைமைகளை உற்று நோக்கினால் இந்தியாவை விடவும் அமெரிக்காவின் ஈடுபாடு அதிகமாக இருக்கின்றதோ என்னும் காட்சியே எங்கள் முன் விரிகிறது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு பயப்பட வேண்டியதில்லை என்று கூறிச் சென்றிருந்தார். அவர் அவ்வாறு கூறிச் சென்றதன் பின்னரான வாரங்களில் மஹிந்த மற்றும் அவர்களின் சகாக்களின் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கென, அமெரிக்க நிபுணர் குழுவொன்று இலங்கை வந்திருந்தது. மஹிந்தவின் ஊழல் குற்றச்சாட்டுக்களை கண்டுபிடிக்க வேண்டுமென்பதில் அமெரிக்காவிற்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? பதில் ஒன்றுதான் – மஹிந்த மீண்டும் தெற்கில் எழுவதை தடுக்கும் தற்போதைய அரசின் வேலைத்திட்டங்களை பலப்படுத்துவது. இவற்றை தொகுத்துப் பார்க்கும் போது மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வருவதானது அமெரிக்க நலன்களுக்கு எந்தவகையிலும் ஏற்பான ஒன்றல்ல. இந்தியாவிற்கும் மஹிந்தவின் மீள் வருகை உவப்பான ஒன்றல்ல. எனினும், ஒரு உடனடி அயல்நாடென்னும் வகையில் இந்தியா இதில் மிகுந்த நிதானத்தையே கடைப்பிடித்துவருவதாக தெரிகிறது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்தியா எந்தவொரு அபிப்பிராயங்களையும் வெளியிடவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ கூறி வருவதுபோன்று, சிலர் சொல்லுவது போன்று மஹிந்தவின் வீழ்ச்சிக்குப் பின்னர் திரைமறைவு சக்திகள் இருப்பது உண்மையெனின், அந்த திரைமறைவு சக்திகள் மஹிந்த மீண்டும் எழுவதையும் முடிந்தவரை தடுக்கத்தானே முயற்சிக்கும். ஆனால, நம்புவதற்கு கடினமான விடயங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கும் இலங்கை அரசியல் சூழலில் (தமிழ் சூழலுக்கும் பொருந்தும்) எதுவும் நிகழலாம்.