படம் | COLOMBO TELEGRAPH

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு தன்னார்வக் குழு மற்றும் சுவிட்சர்லாந்து என்பவற்றின் உதவியோடு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் அண்மையில் சந்தித்திருக்கிறார்கள்.

தேர்தல் வரவிருக்கும் பின்னணியில் முன்னய அரசால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பில் நோர்வேயின் முன்னாள் சமாதானத்துக்கான தூதுவர் சொல்ஹெய்மும் பங்குபற்றியிருக்கிறார். இது ஒரு பகிரங்கப்படுத்தப்படாத உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என்று கூறப்பட்டாலும், இதில் பங்குபற்றியவர்கள் மற்றும் பங்குபற்றிய நிறுவனங்கள் என்பவற்றைக் கருதிக் கூறின் இது அதிகபட்சம் ஏதோ ஒரு விதத்தில் உத்தியோகபூர்வமானதுதான். இச்சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கும் தென்னாபிரிக்க தன்னார்வ நிறுவனமானது தனது அடைவு இலக்காக எதைக் கூறுகிறது என்பது இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நல்லிணக்க முயற்சியும் வெளித்தரப்புக்களில் தங்கியிருக்காமல் உள்நாட்டுப் பொறிமுறைகளுக்கூடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அது.

எனவே, இச்சந்திப்பு நிகழ்ந்த நேரம், கலந்துகொண்ட நபர்கள், ஒழுங்கு செய்த நிறுவனங்கள் என்பவற்றை வைத்துக் கூறின், இதை மேற்கு நாடுகளின் காய்நகர்த்தல்களில் ஒன்றாகவே பார்க்க வேண்டியிருக்கும். அதாவது, மாற்றத்தைப் பலப்படுத்தும் ஒரு பிரதான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே இது எனலாம். இப்பொழுது மாற்றத்தைப் பலப்படுத்துவது என்பது மாற்றத்திற்கு எதிராகக் காணப்படும் கடும்போக்காளர்களைக் கட்டுப்படுத்துவதுதான். சிங்கள மக்கள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கடும் போக்காளர்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் மாற்றத்தைத் தொடர்ந்து பலப்படுத்தலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். பெரும்பாலான சிங்களக் கடும்போக்காளர்களுக்கு ராஜபக்‌ஷ தலைமை தாங்குகிறார். எனவே, அவரை ஒருவித முற்றுகைக்குள் வைத்திருப்பதன் மூலம் அதாவது, அவருக்கு சிறகுகளாவும், கவசங்களாகவும் காணப்படும் ஆட்களை கைதுசெய்வதன் மூலமோ அல்லது அச்சுறுத்துவதன் மூலமோ அவரை ஒரு கட்டத்துக்கு மேல் தலையெடுக்கவிடாமல் செய்யலாம் என்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் நம்புகின்றன. அதே சமயம், ராஜபக்‌ஷவுக்கு விசுவாசமானவர்களை மைத்திரியை நோக்கி கவர்ந்திழுக்கும் பேரங்களும் நடந்தவண்ணமுள்ளன. இவற்றின் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் மாற்றத்தைப் பலப்படுத்தலாம் என்று மாற்றத்தின் பிதாக்களும் பாதுகாவலர்களும் நம்புகிறார்கள்.

அதேசமயம், தமிழர்கள் தரப்பில் மாற்றத்தைக் கேள்வி கேட்கும் சக்திகளோடு ஏதோ ஒரு தொடர்பைப் பேண அவர்கள் முற்படுகிறார்கள். இந்த அடிப்படையில்தான் அண்மையில் தாயகத்தில் சில மேற்கத்தேய நாடுகளின் தூதுவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டத்தைச் சந்தித்திருக்கிறார்கள். அதேசமயம், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள இலகுவாகக் கையாளப்படத்தக்க அமைப்புக்களையும் இலங்கை அரசையும் சந்திக்க வைக்கும் நகர்வுகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

மாற்றத்தைக் கேள்வி கேட்கக் கூடிய தரப்புக்கள் அல்லது தமிழ்த் தேசியத்தின் கடும் போக்காளர்கள் என்று கருதப்படுகின்ற தரப்புக்களில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலேயே காணப்படுவதாக ஒரு பொதுவான கருத்து உண்டு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்படி புலம்பெயர்ந்த தரப்புக்களோடு அதிகதொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகின்றது. எனவே, தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் கூடுதலாக வேலை செய்வதன் மூலம் மாற்றத்தை பலவீனப்படுத்தக் கூடிய தமிழர் தரப்புக்களை தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் வைத்திருக்கலாமா என்று மேற்கு நாடுகள் முயன்று வருகின்றன.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள சில அமைப்புக்களின் மீதான தடைகளை அகற்றப்போவது பற்றிய உரையாடல்களும் இந்த நகர்வின்பாற்பட்டவைதான. முன்னைய அரசு மேற்படி அமைப்புக்களைத் தடை செய்தபோது உரிய சட்ட ஏற்பாடுகளை பூர்த்தி செய்திருக்கவில்லை என்றும், அவற்றைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் மேற்படித் தடைகளில் தளர்வை ஏற்படுத்தலாம் என்றும் கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இவ்வாறு தடைகளை அகற்றும் போது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள மிதவாத சக்திகளை இலங்கை அரசோடு ஏதோ ஒரு இணக்கத்துக்குக் கொண்டுவரலாம் என்று மேற்கு நாடுகள் நம்புகின்றன. அவ்வாறு சில அமைப்புக்கள் அரசோடு இணக்கத்துக்கு வருமிடத்து அவை தீவிர தேசிய நிலைப்பாடுகளை முற்றாகக் கைவிட வேண்டியிருக்கும். அவ்வாறு அவை தீவிர நிலைப்பாடுகளைக் கைவிடுமிடத்து அரசு அதை தனது வெற்றியாகக் காட்டமுடியும். அப்படியொரு நிலைமை வந்தால் அதை மஹிந்த ராஜபக்‌ஷ தனக்கு சாதகமாகக் கையாள முடியாமல் இருக்கும் என்று மேற்கு நாடுகள் நம்புகின்றன.

அதோடு, புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் தாயகத்துக்கும் இடையிலான இடைவெளி கூடும்போது திரும்பிச் செல்லவியலா தாயகத்தின் மீதான அவர்களுடைய பிரிவேக்கமும் அதிகரிக்கும். அப்பிரிவேக்கமே அவர்களுடைய தீவிர நிலைப்பாடுகளுக்கு ஒரு பலமான காரணமாகவும் அமைவதுண்டு. எனவே, புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தோடு இடையூடாடக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும் போது பிரிவேக்கத்தின் வேகம் குறைந்துவிடும் என்பது பொதுவாக புலம்பெயர்ந்த சமூகங்கள் பற்றிய அவதானிப்பாகக் காணப்படுகின்றது. இவ்வாறு தமிழர்கள் தடைகள் ஏதுமின்றி தாயகத்துக்கு வந்து போவார்களாக இருந்தால் பின்வரும் நன்மையான விளைவுகள் ஏற்படும் என்று மேற்கு நாடுகள் நம்புகின்றன.

விளைவு ஒன்று – அவர்கள் கள தயார்த்தத்தோடு நெருங்கிப் பழகுவார்கள். இது அவர்களிடம் உள்ள தீவிரத்தைக் குறைக்கும். மேலும், தொடர்ந்து தாயகத்துக்கு வந்துபோக வேண்டும் என்ற தவிப்பு அதிகரிக்கும். இதுவும் அவர்களுடைய நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இரண்டு – புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் முதலீட்டைச் செய்யக் கூடியதாக இருக்கும். இதன் மூலம் தாயகத்தின் பொருளாதார வாழ்வு செழிக்கும். உலகளாவிய நுகர்வுப் பண்பாட்டில் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாக ஈழத்தமிழர்களும் இணைக்கப்பட்டுவிடுவார்கள். இது காலகதியில் அவர்களுடைய தீவிர நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

மூன்று – புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் முதலீடுகளைச் செய்யும் போது சந்தை சார் நலன்களின் அடிப்படையில் அவர்கள் ஏதோ ஒருவித சுதாகரிப்புக்குத் தயாராவார்கள். இதுவும் அவர்களுடைய தீவிர நிலைப்பாடுகளைத் தணிக்க உதவும்.

நான்கு – இப்போதுள்ள முதலாம் தலைமுறை புலம்பெயரிகளின் மனப்பதிவும் இரண்டாம் தலைமுறை புலம்பெயரிகளின் மனப்பதிவும் வேறுவேறானவை. எனவே, நீண்டகால நோக்கில் முதலாவது தலைமுறை வயதாகிச் செல்லும் போது எழுச்சி பெற்றுவரும். இரண்டாம் தலைமுறையைத் தாயகத்துடன் இடை ஊடாட வைப்பதன் மூலம் அவர்களுடைய நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது.

மேற்கண்ட அனுகூலங்களை முன்வைத்து புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களில் சிலவற்றின் மீதான தடைகளை அகற்ற வேண்டும் என்று மேற்கு நாடுகளும் கருதுவதாகத் தெரிகிறது. இத்தகைய ஒரு பின்னணியிலேயே மேற்படி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

அதாவது, ஒன்றில் தமிழ் தரப்புக்களை மாற்றத்தின் பங்காளிகளாக்குவது அல்லது மாற்றத்தைக் குழப்பக் கூடிய தமிழ்த் தரப்புக்களைக் கையாள்வது அல்லது தனிமைப்படுத்தி சிறுபான்மையினராக்குவது. அல்லது மாற்றத்திற்கு எதிராக ஓரணியாகத் திகழ முடியாதபடி அவர்களைப் பிரித்துக் கையாள்வது போன்ற ஏதோ ஒரு நோக்குக் கோணத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களைக் கையாள வேண்டிய ஒரு தேவை இப்பொழுது மாற்றத்தின் பாதுகாவலர்களுக்கு வந்துவிட்டது.

ஆனால், இதில் தமிழர்கள் ஆச்சரியப்படவோ அதிர்ச்சியடையவோ எதுவும் கிடையாது. மாற்றத்தின் பின் தமிழர்கள் இதை எதிர்பார்த்திருந்திருக்க வேண்டும். மாற்றம் வரையிலும் போர்க்குற்றமே மேற்குநாடுகளின் பிரதான கருவியாகக் காணப்பட்டது. மஹிந்தவைக் கவிழ்ப்பதற்கு போர்க்குற்றத்தை முன்னிறுத்தினார்கள். அதற்காக புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களை ஊக்குவித்தார்கள். இது தொடர்பாக லண்டனில் வசிக்கும் எனது நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார், “மேற்கு நாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அவர்களின் கொள்ளளவை விட கூடுதலான முக்கியத்துவம் கொடுக்கின்றன” என்று. ஒவ்வொரு ஜெனீவாக் கூட்டத்தொடரிலும் இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அவர்களுடைய கொள்ளளவைவிடக் கூடிய முக்கியத்துவத்தைக் கொடுத்து அவர்களைக் கருவிகளாகக் கையாண்டு ராஜபக்‌ஷ அரசிற்கு எதிராக ஓர் அனைத்துலக அலையைத் தோற்றுவித்து அந்த அரசை நெருக்கடிக்குள்ளாக்குவதே மேற்கு நாடுகளின் உபாயமாக இருந்து வந்துள்ளது. ஆனால், ராஜபக்‌ஷ கவிழ்க்கப்பட்டபின் அந்தத் தேவை இல்லாமல் போய்விட்டது. இப்பொழுது மாற்றத்தைப் பலப்படுத்த வேண்டும். அதைச் செய்வதென்றால் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள பிரதான தளபதியை தனது பிரதானிகளில் ஒருவராகக் கொண்டிருக்கும் இப்போதுள்ள அரசைப் பாதுகாக்க வேண்டும். எனவே, போர்க்குற்ற விசாரணைகளை ஒன்றில் இழுத்தடிக்க வேண்டும். அல்லது நல்லிணக்கம் என்று சொல்லிக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை மன்னிக்கும் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். அதுதான் இப்பொழுது நடக்கிறது.

போர்க்குற்றத்தை ஒரு கருவியாகக் கையாள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களையே மேற்கு நாடுகள் ஊக்குவித்தன. இப்பொழுது போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் தமக்கு வசதியான ஒரு முடிவை எடுக்க முற்படுகையில் முன்பு தம்மால் ஊக்குவிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்பொழுது ஒரு பிரச்சினையாக மாறக் கூடாது என்று என்று மேற்கு நாடுகள் சிந்திக்கின்றன.

சக்திமிக்க நாடுகள் இப்படி சிந்திப்பது என்பது இதுதான் முதற்தடவை அல்ல. ஈழத்தமிழர்களின் கடந்த சுமார் நான்கு தாசாப்தகால வரலாற்றில் ஏற்கனவே பல தடவைகள் இவ்வாறு நடந்திருக்கிறது. குறிப்பாக 1987இல் இந்திய – இலங்கை உடன்படிக்கையின் போதும் இவ்வாறுதான் நடந்தது. ஜெயவர்த்தனவை வழிக்குக் கொண்டுவருவதற்காக ஈழத்தமிழர்களை ஒரு கருவியாகக் கையாண்டு ஜெயவர்த்தனா மீது அழுத்தங்களைப் பிரயோகித்த இந்தியாவானது அவர் வழிக்கு வந்ததும் தன்போக்கை மாற்றியது. இப்பொழுது மேற்கு நாடுகளும் அதைத்தான் செய்ய முற்படுகின்றன. இதில் உள்ள சுவாரஸ்யமான முரண் என்னவென்றால் 28 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு விசுவாசமாக இருந்த இரண்டு தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளே இம்முறை இலண்டன் சந்திப்பைக் குறித்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள் என்பதுதான். 28 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இந்திய – இலங்கை உடன்படிக்கையை நியாயப்படுத்தியபோது விடுதலைப் புலிகளின் ஆதவாளர்களால் இவர்கள் விமர்சிக்கப்பட்டார்கள். ஆனால், இப்பொழுது முன்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் காணப்பட்ட ஓர் அமைப்பு மேற்கின் நிகழ்ச்சி நிரலின் பின்னோடி அரசோடு ஒரு சந்திப்பை ஏற்படுத்தியதற்காக இந்த இரண்டு அரசியல்வாதிகளும் அந்த அமைப்பை விமர்சிக்கிறார்கள். இங்கு தமிழர்களுக்கு ஒரு செய்தி உண்டு.

28 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் விசுவாசிகளாகப் பார்க்கப்பட்டவர்கள் இப்பொழுது மேற்கின் விசுவாசிகளை அம்பலப்படுத்துகிறார்கள். 28 ஆண்டுகளுக்கு முன் தீவிர தேசியவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள் இப்பொழுதும் தீவிர தேசிய வாதிகளாகக் காட்சியளிக்கிறார்கள். 28 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்த மாற்றம் இது. ஆனால் தமிழர்கள் தொடர்பில் சக்திமிக்க வெளிநாடுகளின் நோக்கு நிலைகளில் மாற்றம் எதுவும் ஏற்பட்டுள்ளதா? இல்லை என்பதே மிகக் கொடுமையான உண்மையாகும். இந்தியாவும் சரி மேற்கு நாடுகளும் சரி இலங்கை அரசையே கையாள முற்படுகின்றன. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைக்கப்பட்ட உறவுகளுக்கூடாக இலங்கை அரசைக் கையாள்வதற்கே அவர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். பணியாத அரசைப் பணிய வைப்பதற்கு சில சமயங்களில் அரசற்ற தரப்பான தமிழர்களைக் கருவிகளாகக் கையாண்டு வருகிறார்கள். சக்திமிக்க எல்லா வெளித்தரப்புக்களும் தமது பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் மக்களை கறிவேப்பிலைகளைப் போலக் கையாளப் பார்க்கிறார்கள். தமிழ் மக்களும் வெளிச்சக்திகளால் கையாளப்படுமளவிற்கு சிதறிக் காணப்படுகிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள சில அமைப்புக்களை சக்திமிக்க நாடுகளும் அவற்றின் முகவர் அமைப்புக்களும் கையாள முடிகிறது என்று சொன்னால் அவ்வாறு கையாள முடியாத தரப்புக்கள் ஓரணியாகத் திரண்டு தமிழ் மக்களின் சரியான பிரதிநிதிகள் தாங்களே என்று ஏன் நிரூபிக்க முடியாமல் போயிற்று? புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஆகக் கூடியபட்சம் பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஜனவசியம்மிக்க ஒரு தலைமைத்துவமோ அல்லது செயற்திறன்மிக்க அமைப்போ கிடையாது. தாயகத்தில் மக்களாணையைப் பெற்ற கூட்டமைப்பும் அவ்வாறான ஒரு தலைமைத்துவத்தை வழங்கப்போவதில்லை. அது அவர்களுடைய நிகழ்ச்சி நிரலே அல்ல. சொல்ஹெய்ம் ஒருமுறை தனது ருவிட்டர் தளத்தில் தமிழ் டயஸ்போறாவை “உலகின் சக்திமிக்க டயஸ்போறாக்களில் ஒன்று” என்று வர்ணித்திருந்தார். ஆனால், லண்டன் சந்திப்பையும் அதன் பின்னரான புலம்யெர்ந்த தமிழர்களின் செயற்பாடுகளையும் வைத்துப் பார்த்தால் அப்படியா தெரிகிறது?

தினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.