படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பல ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவின் கொடூரங்களையும், அது சுமந்து நிற்கும் பெரும் வலிகளையும் தமிழர் தேசம் கடந்து வந்திருக்கிறது. இவற்றில் பலவற்றிற்கு சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத உரிமை மறுப்பு இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவை வெறும் துயர் பகிர்வோடு நிறைவுற்றன. கிரிசாந்தி, கோணேஸ்வரி மற்றும் ரஜனி போன்றவர்கள், குறிப்பாக கிரிசாந்தி மீதான இலங்கை இராணுவத்தின் கூட்டு பாலியல் பலாத்காரம் சர்வதேச அளவில் பேசப்பட்டும் கூட, மக்கள் போராட்டத்திற்கான ஒரு உடனடியானதும் நேரடியானதுமான தோற்றுவாயாக மாற்றம் பெற்றிருக்கவில்லை.

ஆயினும், புங்குடுதீவில் சிவலோகநாதன் வித்தியா என்னும் பாடசாலை மாணவிக்கு பெரும் கொடூரம் நிகழ்ந்த சம்பவத்துக்குப் பின்னர் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நகர்வுகள் அரசியல் நோக்கம் உடையதாக காணப்படுகிறது. இந்த அரசியல் நோக்கம் என்பது தமிழர் தேசத்து அரசியலை ஒரு முடக்க நிலைக்குள் வைத்திருக்கும் நோக்கோடு, நேர்த்தியாக திட்டமிடப்பட்டு கூட்டிணைக்கப்பட்டுள்ளதாகவே படுகொலைக்குப் பின்னர் இடம்பெறும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுவதோடு, வித்தியாவின் குடும்பத்துக்கு நீதி கிடைப்பது இரண்டாம்பட்சமாக மாறியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தோடு தமிழ் மக்களுக்கான நீதியை வேண்டி முன்னெடுக்கப்பட்ட சர்வதேச விசாரணையை இல்லாமற் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை அரசாலும் அவர்களுக்கு ஆதரவான சக்திகளாலும் மேற்கொள்ளப்பட்டது. இதனை முறியடிக்கும் நோக்கோடு தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் போராட்டங்களும் நகர்வுகளும் தமிழர் பகுதிகளில் தொடர்ச்சியாகவும் பரவலாகவும் முன்னெடுக்கப்பட்டது. இது இலங்கை அரசுக்கு நெருக்கடியை கொடுத்தது. ஆதலால், இத்தகைய போராட்டங்களை முடக்குவதற்கு தருணம் பார்த்து காத்திருந்தன இலங்கை ஆட்சிபீடமும் அதன் கட்டமைப்புகளும். அதேவேளை, மஹிந்த ராஜபக்‌ஷ அரசு போன்று தந்திரோபாயமற்று செயற்பட்டு கண்டனங்களுக்கு உள்ளாகவும் இன்றைய ஆட்சிபீடம் விரும்பவில்லை. அத்துடன், மஹிந்த ராஜபக்‌ஷ அரசிலிருந்து வேறுபட்ட அரசு என்பதை வெளிக்காட்ட வேண்டிய கட்டாய தேவையும் இந்த அரசிற்கு உண்டு. இல்லையெனில், மாற்றம் என்பதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆதலால், தீவிரத்தன்மை குறைந்த விடயங்களில் முன்னேற்றங்களை காட்டவும் முற்படுகிறது. அத்துடன், ஜனநாயகத்தை மீள நிலைநாட்டுகிறோம், கருத்து சுதந்திரம், ஊடாக சுதந்திரம் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் போன்றவற்றை பேணிப் பாதுகாப்போம் என்ற தமது ஆட்சி கைப்பற்றலுக்கான கோசங்கள் விமர்சனத்துக்கு உள்ளாவதையும் சிறீலங்கா ஆட்சிபீடம் தவிர்த்தது.

அதேவேளை, வடக்கு கிழக்கில் இடம்பெறும் ஒவ்வொரு சம்பவங்களின் ஊடாகவும் எவ்வாறு தமிழர் பிரதேசத்தைப் பலவீனப்படுத்தலாம், தென்னிலங்கையைப் பலப்படுத்தலாம் என்ற கோணத்திலேயே சிந்தித்து, திட்டமிட்டு செயலாற்றிய இலங்கையின் கொள்கை வகுப்பு, திட்டமிடல் பிரிவு வித்தியாவுக்கு நீதி வேண்டி எழுந்த மக்களின் நியாயமான போராட்டத்தை தமது தந்திரோபாய நகர்வுகளால் வன்முறையாக மாற்றியிருக்கிறது. இலங்கை இராணுவ புலனாய்வுத் துறையால் இயக்கப்படும் மூன்று துணை இராணுவ குழுக்கள் வன்முறையின் கருவிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை இராணுவ புலனாய்வுத் துறையின் நெறிப்படுத்தலில் குறித்த மூன்று துணை இராணுவக் குழுக்களே வன்முறையில் ஈடுபட்டதோடு, வித்தியாவுக்கு இடம்பெற்ற கொடூரத்தால் ஆத்திரமடைந்திருந்த சில அப்பாவி இளைஞர்களை தமது பொறிக்குள் வீழ்த்தி வன்முறையை கையிலெடுப்பதற்கு தூண்டியுள்ளன.

நீதித்துறையும் காவல்துறையும் தாக்குதலுக்குள்ளானமை மற்றும் வன்முறைகள் அசாதாரண சூழலை தோற்றுவித்தன் பின்னணியில் மேற்கூறிய இந்த கூட்டிணைவே செயற்பட்டது.

ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளை காரணம் காட்டி நீதி கோரி சுன்னாகத்தில் இடம்பெறவிருந்த போராட்டத்திற்கு பொலிஸாரின் வேண்டுகோளின் படி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அதேவேளை, பருத்தித்துறை நீதிமன்றமோ பொலிஸாரின் வேண்டுகோளுக்கு மாறாக ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் வடமராட்சியில் இடம்பெறவிருந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது. ஆயினும், போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களிடம் சென்ற பொலிஸார், போராட்டத்தின் போது ஏதாவது வன்முறை வெடித்தால், ஏற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என அச்சுறுத்தியதால் வடமராட்சியில் இடம்பெறவிருந்த போராட்டத்தை கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், வன்முறையை ஏவிவிடக்கூடிய சக்திகள் பொலிஸாரின் நடவடிக்கைகள் மீதும் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்களாக இருப்பதே இதற்கு காரணம்.

ஆகமொத்தத்தில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளைக் காரணம் காட்டி, தமிழ் மக்களின் எதிர்கால நியாயமான, ஜனநாயக ரீதியிலான அமைதிவழிப் போராட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசும் அதன் கட்டமைப்புகளும் மிகக் கைங்கரியமாக முடுக்கிவிட்டுள்ளன. தமிழர்களின் அமைதி வழிப் போராட்டங்களுக்கான ஜனநாயக வெளியை மூடுவதன் ஆரம்பமே, தமிழ் மக்களின் போராட்டங்களை தடுத்து நிறுத்தும் நோக்கோடு, நீதிமன்றங்கள் ஊடாக பொலிஸார் வழங்கும் தடையுத்தரவு ஆகும்.

இதேவேளை, தமிழ் மக்களின் கூட்டு நினைவு கூரல்களை ஏன் அழுவதற்கான உரிமையையே தடுத்து நிறுத்தும் இலங்கை பொலிஸாரால் யாழ்ப்பாணத்தில் பெரும் கலவரம் வெடிப்பதை கட்டுப்படுத்தமுடியாமை அவர்களின் நம்பகத்தன்மையை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழலை காரணம் காட்டி இலங்கை இராணுவத்தை தமிழர் பகுதியில் தொடர்ந்தும் நிலைநிறுத்தி வைத்திருப்பது குறித்த தரப்புகளின் திட்டமிடலின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் தென்படுகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் மிகவும் புத்திசாலித்தனமான யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தில் பின்னணியில் தனித்து இலங்கையின் நலன் சார் நேரடியான கொள்கை வகுப்பாளர்கள் மட்டுமல்ல, ஆட்சிமாற்றத்துக்கு துணைநின்ற தமிழ்த் தரப்புகளும் செயற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இதனூடாக சமநேரத்தில் உள்ளக ரீதியாகவும் வெளியக ரீதியாகவும் தனக்கான ஆதரவு அலையொன்றை மைத்திரிபால சிறிசேன அவர்கள் கட்டியெழுப்பியுள்ளார். இது தமிழர்களுக்கான நியாயமான அரசியல் தீர்வையும் நீதியையும் மைத்திரிபால சிறிசேன அவர்கள் வழங்குவார் என்ற மாயையும் கட்டியெழுப்பக்கூடிய சாத்தியம் உண்டு. இதன் ஒரு தொடர்ச்சியாகவே, கொழும்பில் வித்தியாவுக்கு நீதி வேண்டும் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வையும் அவதானிக்க முடியும். இதில் பங்குபற்றிய குறிப்பிட்டளவானோர் இதயசுத்தியுடன் பங்குபற்றியிருப்பினும், இந்த ஏற்பாட்டின் தூரநோக்கென்பது மீள்நல்லிணக்கம் என்ற மாயையை உருவாக்குவதோடு, தேசிய ஒற்றுமை என்ற பெயரில் இலங்கையர் என்ற அடையாளத்தை கட்டியெழுப்பி, இலங்கையின் இறையாண்மைக்குள் அடையாளத்துக்குள்ளும் தமிழ்த் தேசிய அரசியலையும் அதன் தனித்துவ அடையாளத்தையம் புதைப்பதாகும்.​

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினதும், கொழும்பில் வித்தியாவுக்கு நீதி வேண்டும் என்ற அடிப்படையில் போராட்டத்தை மேற்கொண்ட ஏற்பாட்டாளர்களினதும் நகர்வுகள் இதயசுத்தியுடனும் நேர்மையுடனும் மேற்கொள்ளப்பட்டிருப்பின், அவர்களின் அடுத்த கட்ட நகர்வென்பது, படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட தமிழ்ப் பெண்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான போராட்டமாக மாற்றுநிலையாக்கம் அடைய வேண்டும்.

அதன் அடித்தளம் என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களில் ஆரம்பித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்களின் ஊடாகத் தொடரலாம். ஏனெனில், இசைப்பிரியாவுக்கு கொடூரம் இழைத்த போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன அவர்கள். வெளிச்சத்துக்கு வந்த கிரிசாந்தி, கோணேஸ்வரி மற்றும் ரஜனி போன்றவர்கள் மீதான பாலியல் வல்லுறவுக்குப் பின்னரான படுகொலைகள் சந்திரிகா அவர்களின் ஆட்சிகாலத்திலேயே இடம்பெற்றது.

இவர்கள் இருவருமே அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செயற்பட்டு, பாலியல் வல்லுறவுகளைப் புரிந்து, படுகொலைகளை செய்த ஆயுதப்படையினரை நீதியின் முன் நிறுத்துவார்களாக இருந்தால், தமிழர் தேசத்துக்கும் தென்னிலங்கைக்கும் இடையில் இதயசுத்தியுடன்கூடிய நல்லிணக்கத்திற்கான கதவுகள் இயற்கையாகவே திறக்கும்.