படம் | TAMILCNN
அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களோடு நிகழ்ந்த சந்திப்பின் போது மரிஷா கேட்டார் “படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பாக அதிகரித்த அக்கறையைக் காட்டும் தமிழ்த் தரப்பானது தனது சமூகத்திற்குள் வாழும் குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகளையிட்டு ஏன் அந்தளவிற்கு அக்கறைப்படுவதில்லை என்று?” அவருடைய கேள்வி அன்று பகல் யாழ். நூலகக் கேட்போர் கூடத்தில் நடந்த கருத்தரங்கில் எழுப்பப்பட்ட ஒரு கேள்வியின் தொடர்ச்சிதான். மேற்படி கருத்தரங்கில் கேள்வி கேட்ட ஒருவர் சரண்யாவின் கொலையைச் சுட்டிக்காட்டி அதுபோன்ற குற்றங்கள் தொடர்பாக அதிகம் அக்கறைப்படாத தமிழ்ச் சிவில் செயற்பாட்டாளர்கள் அதேசமயம், அரச படைகளால் இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் தொடர்பில் பெருமளவிற்கு எதிர்ப்புக் காட்டுவது ஏன் என்ற தொனிப்பட கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரும் மரிஷாவும் கேட்ட கேள்விகளுக்கான பதிலை சரியாக ஒரு வாரத்திலேய தமிழ் மக்கள் வழங்கிவிட்டார்கள். வித்தியாவுக்காக புங்குடுதீவில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் வேகமாகப் பரவி குடாநாட்டையும் தாண்டி தென்னிலங்கை மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிற்கும் விரிவடைந்துவிட்டன. மே 18 நினைவு கூரலுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த ஒரு காலச் சூழ்நிலையிலேயே வித்தியா சிதைத்துக் கொல்லப்பட்டார். அவருக்கு நடந்த கொடுமையானது ஒரு விதத்தில் மே 18 ஒட்டிய நினைவுகளின் பின்னணியில் கூடுதல் அழுத்தத்தைப் பெற்றுவிட்டது. அவருக்காக யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்கள் பெருமளவிற்கு தன்னியல்பானவை. ஒப்பீட்டளவில் அதிகம் உணர்வெழுச்சியானவை. அரசியல் ஆய்வாளரான ஜோதிலிங்கம் சொன்னார், “மாற்றத்தின் பின் யாழ். பல்லைக்கழக ஆசிரியர் சமூகம் ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை விடவும் அதிகரித்த அளவிலான உணர்வெழுச்சியோடு தாமாக முன்வந்து மக்கள் இவ் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக”.
சுன்னாகம் நீர் விவகாரத்தை பேஸ்புக்கில் தொடக்கி வைத்து அதை ஒரு விவகாரமாக்கிய ஒரு விமர்சகர் பேஸ்புக்கில் பின்வரும் தொனிப்பட கேள்வி எழுப்பியிருந்தார். “வித்தியாவிற்காகத் திரண்ட அளவிற்கு பொதுமக்கள் மே 18இற்குத் திரளாதது ஏன்?” என்று. மற்றொரு எழுத்தாளர் பிரான்சில் இருந்து எழுதினார், “சரண்யாவிற்காகத் தெருவில் இறங்காத ஒரு சமூகம் வித்தியாவிற்காக ஏன் இவ்வளவு உணர்வெழுச்சியோடு தெருவில் இறங்கியது?” என்று.
உண்மைதான். கடந்த தசாப்தத்தில் வடக்கில் நிகழ்ந்த தன்னியல்பான ஆர்ப்பாட்டங்கள் எல்லாவற்றோடும் ஒப்பிடுகையில் உணர்வெழுச்சியோடு கூடிய ஆர்ப்பாட்டங்களாக இவை காணப்பட்டன. அதற்குக் காரணம் என்ன? மூன்று பிரதான காரணங்கள் உண்டு. ஒன்று உடனடியானது. மற்றது நீண்டகால அடிப்படையிலானது. மூன்றாவது இணையப் பெருக்கம்.
உடனடியான காரணம் ஆட்சிமாற்றம்தான். ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் வடக்குக் கிழக்கில் படிப்படியாக நிழ்ந்து வரும் சம்பவங்களின் ஒரு கட்ட வளர்ச்சியே இவ்வார்ப்பாட்டங்கள் எனலாம். ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ் மக்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் அச்சம் குறைந்துள்ளது. தமது குரல்வளையை நெரிக்கும் இரும்புக்கரங்களின் பிடி ஒப்பீட்டளவில் தளர்ந்திருப்பதாக சாதாரண சனங்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள். இத்தகையதோர் பின்னணியில் யாழ். பல்லைக்கழக ஆசிரியர் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட மிகப்பெரிய ஊர்வலம் முதலில் நடந்தது. அதைத் தொடர்ந்து சுன்னாகம் நீர் விவகாரத்தை ஒட்டி போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பின் அண்மையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் பரப்பில் அண்மைத் தசாப்தங்களில் நிகழ்ந்த ஒரு நூதனம் என்று வர்ணிக்கத் தக்க பகிரங்க விவாதம் ஒன்று இடம்பெற்றது. யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் இடம்பெற்ற பகிரங்க விவாதமே அது. அச்சிறிய மாநாட்டு மண்டபம் தாங்க முடியாத அளவிற்கு பெருந்திரளானோர் அதில் கலந்துகொண்டார்கள். தமிழ் அரசியல் பரப்பில் இது போன்ற பகிரங்க உரையாடல்கள் கடந்த சில தசாப்தங்களாக அரிதாகவே நிகழ்ந்திருக்கின்றன. தமிழ் அரசியலின் அகஜனநாயக வெளியானது ஆரோக்கியமான விதத்தில் அகன்று வருவதை இது காட்டுகின்றது. இப்பகிரங்க விவாதத்தின் பின் மே 18 வந்தது. 2009இற்குப் பின் தாயகத்தில் மே 18 இந்தளவிற்கு நினைவு கூரப்பட்டது இதுதான் முதற்தடவை. சட்டத் தடைகள் போடப்பட்ட போதும் சிறிய அளவிலேனும் இறந்தவர்கள் நினைவுகூரப்பட்டார்கள். அநேகமான நினைவு கூரல்கள் கட்சி நிகழ்வுகளாகவே காணப்பட்டன. கத்தோலிக்கத் திருச்சபையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வைத் தவிர ஏனையவற்றுள் பெரும்பாலானவை கட்சி நிகழ்வுகளே. கட்சிப் பிரமுகர்கள் தமது செல்வாக்குப் பிரதேசங்களுக்குள் ஓரளவிற்கு நினைவு கூரலைச் செய்தார்கள். அதை கட்சி மதங் கடந்த ஒரு பெருவணக்க நிகழ்வாக ஒழுங்குபடுத்துவது குறித்து கட்சிகள் அடுத்த ஆண்டு சிந்திக்கக் கூடும். எனினும், இது ஒரு நம்பிக்கையூட்டும் தொடக்கம்தான். இத்தகையதோர் அரசியல் சூழலில்தான் வித்தியா கொல்லப்பட்டார்.
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சமூகம் செய்த ஊர்வலத்தில் இருந்து தொடங்கி படிப்படியாக மெதுமெதுவாக அகட்டப்பட்டு வரும் சிவில் ஜனநாயக வெளிக்குள்ளேயே வித்தியாவுக்கான ஆர்ப்பாட்டங்களும் நடந்திருக்கின்றன. இதை இப்படி எழுதுவதன் மூலம் இக்கட்டுரையானது மாற்றத்தை மனோரதியப்படுத்துவதாக யாரும் நினைக்கக் கூடாது. ஆனால், மாற்றத்தின் பின் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஒருவித அசுவாசச் சூழலின் பின்னணியிலேயே இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் செய்யப்படுகின்றன என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இது உடனடிக்காரணம்.
இரண்டாவது, நீண்டகாலக் காரணம். 2009இற்குப் பின்னிருந்து அமுக்கப்பட்டுவந்த உணர்ச்சிகளின் வெடிப்பே இது. இங்கு வித்தியா ஒரு பொறி மட்டுமே. ஏற்கனவே, நீறுபூத்துக்கிடந்த கோபத்தின் மீது வெறுப்பின் மீதும் வீழ்ந்த ஒரு பொறி.
வித்தியாவுக்காக திருநெல்வேலிச் சந்தையில் முகப்பில் கட்டப்படிருந்த பதாதையில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. “நேற்று கிருசாந்தி, இன்று வித்தியா? நாளை யார்?”
இக்கேள்விக்குள் இருக்கிறது மூலகாரணம். இதற்கு முன் நிகழ்ந்த இதுபோன்ற எல்லாச் சம்பவங்களினதும் ஆகப்பிந்திய ஒரு குறியீடாக வித்தியா மாறிவிட்டார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கைகளில் வித்தியாவின் ஒளிப்படம் இருந்தது. ஆனால், அவர்களுடைய மனங்களில் கிருசாந்தியினுடையதும், இசைப்பிரியாவினுடையதும் அதுபோன்ற எல்லாப் பெண்களினுடையதும் ஞாபகங்கள் நிறைந்திருந்தன. வித்தியாவிற்கு நடந்த கொடுமையில் வெளிப்படையான அரசியல் இருக்கவில்லை. எனவே, வெளிப்படையான அரசியல் இல்லாத ஒரு விவகாரத்தை முன்வைத்து வெளிப்படையாகப் பேசமுடியாத எல்லா விவகாரங்களுக்குமான எதிர்ப்பை மக்கள் வெளிக்காட்டினார்கள் என்பதே சரி. மே 18ஐ பரவலாக நினைவுகூரமுடியாத சூழலில் தமது கூட்டுத் துக்கத்தை வெளிப்படுத்த முடியாதததால் ஏற்பட்ட கூட்டுக் கோபத்தை வித்தியாவின் பெயரால் தமிழ் மக்கள் வெளிப்படுத்தினார்களா? என்றும் கேட்கலாம். இது ஒரு வெளிப்படையான அரசியலை முன் வைக்கும் ஆர்ப்பாட்டமாக இருந்திருந்தால் இந்தளவிற்கு பெருந்திரளானோர் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் பங்குபற்றியிருந்திருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு தமிழ் மக்கள் மாற்றத்தை முழுமையாக நம்பவும் இல்லை.
முள்ளிவாய்க்காலை நினைவு கூர்வது என்பது ஒரு வெளிப்படையான அரசியல். அதில் றிஸ்க் எடுக்க நடுத்தர வர்க்கம் தயங்கியது. சரண்யா கொல்லப்பட்டபோது இப்போதிருக்கும் அளவிற்கு சிவில் வெளி அதிகரித்திருக்கவில்லை. எனவே, சரண்யாவுக்காகவும் முள்ளிவாய்க்காலுக்காகவும், இசைப்பிரியாவுக்காகவும் கிளர்ந்தெழாத மக்கள் வெளிப்படையான அரசியலைக் கொண்டிராத வித்தியாவுக்காகத் தெருவில் இறங்கினார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஒரு முக்கியஸ்தர் கேட்டார், “நாங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களைச் செய்தபோது மிகச் சிலரே எங்களோடு நின்றார்கள். மிகுந்த ஆபத்தின் மத்தியில் நாங்கள் அவற்றைச் செய்தோம். ஆனால், இப்பொழுது நிறையப் பேர் முன்வருகிறார்கள்” என்று. ஆனால், அவ்வாறு முன்வருவோர் கூட நேரடியாக படைத்தரப்போடு மோதும் அரசியல் விவகாரங்களுக்காக போராடத் தயார் இல்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
மூன்றாவது காரணம், இணையப் பெருக்கம். அபிப்பிராயங்களை உருவாக்குவதிலும், கோபத்தையும் வெறுப்பையும பரப்புவதிலும் இணையம் பெரிய பங்காற்றுகின்றது. ஒரு புறம் நியாயமான கோபம் காட்டுத் தீயாய் பரவுகிறது. இன்னொரு புறம் உள்நோக்கமுடைய வதந்திகளும் குருட்டுத் தனமாகப் பகிரப்படுகின்றன.
மேற்சொன்ன மூன்று பிரதான காரணங்களின் விளைவாக வித்தியாவின் விவகாரம் வெடித்துக் கிளம்பியது. அந்த ஆர்ப்பாட்டங்கள் தன்னியல்பானவை என்பதும் யாரும் தூண்டாமலேயே தாமாகவே உருக்கொண்டவை என்பதும் அவற்றின் பிரதான பலமாகும். அதேசமயம், அரசியல் தரிசனமுடைய ஒரு கட்சியோ அல்லது செயற்பாட்டு இயக்கமோ மேற்படி ஆர்ப்பாட்டங்களுக்கு ஒட்டுமொத்த தலைமைத்துவத்தை வழங்கவில்லை என்பது அவற்றுக்குள்ள பிரதான பலவீனமாகும்.
தமிழ் மக்களின் கோபமும் வெறுப்பும் ஒரு வெகுசன சக்தியாக ஒரு அரசியல் ஆயுதமாகத் திரட்டப்படுவது என்றால் அதற்கு அரசியல் தரிசனமுடைய தலைமை இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த வெறுப்பும் கோபமும் விரயமாகிவிடும். இது சில சமயம் போராட்டத்தின் நோக்கத்தையும் வீரியமிழக்கச் செய்துவிடும். புதன்கிழமை நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களின் முடிவில் என்ன நடக்கக் கூடும் என்பதை செவ்வாய்க்கிழமையே அனுமானிக்கக் கூடியதாக இருந்தது. செவ்வாய்க்கிழமையன்று பலாலி வீதியில் ஒரு சிறு குழு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அவர்கள் வீதியின் ஓரம் வீடுகளில் காய்த்துக் குலுங்கிய மாங்காய்களை மதில்களில் ஏறிப் பறித்தார்கள். இன்னொரு குழுவினர் நகரத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும், பொது நிறுவனங்களை அச்சுறுத்தியும் நகரத்தை உறைய வைத்தார்கள். மறுநாள் அதாவது புதன்கிழமை இது அதன் அடுத்தகட்ட வளர்ச்சியை அடையக் கூடும் என்பதை மக்களின் நாடித்துடிப்பை உணரத்தக்க எந்தவோர் அரசியல் வாதியும் கண்டுபிடித்திருக்கலாம்.
வித்தியாவின் சாவீட்டுக்குச் சென்று துக்கம் தெரிவித்துவிட்டு தமது கட்சி அலுவல்களுக்கு திரும்பிச் சென்றுவிட்ட அரசியல்வாதிகளால் தமது வாக்காளர்களின் அடிமனதில் படிப்படியாகத் திரண்டு வந்த நெருப்பைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. புதன்கிழமை நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களில் அவர்கள் பெருமளவிற்கு பார்வையாளர்களாகவே நிற்கவேண்டியதாயிற்று. இதுபோலவே ஆட்சிமாற்றத்தை உடனடுத்து பல்கலைக்கழக சமூகம் மேற்கொண்ட ஊர்வலத்திலும் அரசியல்வாதிகளுக்கு மேடை கிடைக்கவில்லை. அதாவது, அண்மைக்காலங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிவில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் ஓரத்திற்குத் தள்ளப்படுவதைக் காண முடிகிறது. அதேசமயம், அரசியல்வாதிகள் இல்லாத வெற்றிடத்தில் சிவில் எதிர்ப்புக்களுக்குத் தொடர்ச்சியாக தலைமைதாங்கவல்ல மாற்று அமைப்புக்களையோ செயற்பாட்டு இயக்கங்களையோ அரங்கில் காண முடியவில்லை. இது எதைக் காட்டுகிறது?
கடந்த 6 ஆண்டுகளாக அரசியல்வாதிகளை அதிகளவில் உற்பத்தி செய்த ஒரு சமூகம் செயற்பாட்டு வீரர்களை உற்பத்தி செய்யத் தவறிவிட்டது. உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உண்டு. மாகாண சபைகளிலும் மகத்தான மக்கள் ஆணையைப் பெற்ற பிரதிநிதிகள் உண்டு. நாடாளுமன்றத்திலும் பிரதிநிதிகள் உண்டு. இவர்களில் யார் சொன்னால் மக்கள் அதைக் கேட்பார்கள்? மக்களை தமது கண்ணசைவிற்குள் வைத்திருக்கும் தலைவர்கள் எத்தனை பேருண்டு? அப்படியாரும் இருந்திருந்தால் அண்மைக்கால போராட்டங்களுக்கு நிச்சயமாக அவர்களால் தலைமையைக் கொடுத்திருக்க முடியும்.
சரி அரசியல்வாதிகளை விடுவோம். இவர் சொன்னால் மக்கள் அதைக் கேட்பார்கள் என்று சொல்லத்தக்க சமூக செயற்பாட்டாளர்கள் யாராவது உண்டா? அல்லது மதச் செயற்பாட்டாளர்கள் யாராவது உண்டா? கிராம மட்டங்களில் இவர் சொன்னால் மக்கள் அதைக் கேட்பார்கள் என்று சொல்லத்தக்க எத்தனை சமூகத் தலைவர்கள் உண்டு? எத்தனை பங்குத் தந்தைகள் உண்டு? எத்தனை மதகுருமார் உண்டு? எத்தனை தொழிற்சங்கத் தலைவர்கள் உண்டு? உயர்கல்வி நிறுவனங்களில் இவர் சொன்னால் மாணவர்கள் கேட்பார்கள் என்று சொல்லத்தக்க எத்தனை விரிவுரையாளர்கள் உண்டு? எத்தனை மாணவத் தலைவர்கள் உண்டு? கிராம மட்டத்தில் அல்லது நகர மட்டத்தில் அல்லது மாகாண மட்டத்தில் இவர் சொன்னால் பெற்றோரும் மாணவர்களும் கேட்டு நடப்பார்கள் என்று சொல்லத்தக்க கல்வியாளர்கள் எத்தனைபேர் உண்டு? அதிபர்கள் எத்தனைபேர் உண்டு? ஆசிரியர்கள் எத்தனைபேர் உண்டு?
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக படைத்துறை மயப்பட்டுவந்த தமிழ்ச் சமூகமானது அதன் உள்ளூர் தலைமைத்துவங்களை (local leadership) பெருமளவிற்கு இழந்துவிட்டது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்ததன் பின்னரான கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் தமது மக்களுக்கு ஒரு புதிய அரசியல் தரிசனத்தைக் கொடுக்கத் தவறிவிட்டார்கள். உள்ளூர் அரசியல் தலைவர்கள் பிரமுகர்களாகச் செயற்படுவதற்குப் பதிலாக சமூகச்சிற்பிகளாக செயற்படத் தவறிவிட்டார்கள். தமிழ் மக்கள் அரசியல் தரிசனமற்ற, இலட்சியவேட்கை இழந்த ஒரு சமூகமாகத் தேங்கிப்போய் நிற்கிறார்கள். தமிழ் சமூகத்திற்கு ஓர் அரசியல் தரிசனத்தை, தெளிவான இறுதி இலட்சியத்தைக் காட்டும் ஒரு தலைமைத்துவத்துக்கே, குறிப்பிட்ட அந்த அரசியல் தரிசனத்தை நோக்கி சமூகத்தை ஆற்றுப்படுத்துவதற்குரிய உள்ளூர் தலைமைத்துவங்களை கட்டி எழுப்ப வேண்டிய ஒரு தேவை ஏற்படும். அவ்வாறு அரசியல் தரிசனமுடைய இலட்சியப்பாங்கான அல்லது குறைந்தபட்சம் நீதிமான்களாகக் காணப்படும் ஊர்த் தலைவர்கள் இல்லாத ஒரு வெற்றிடத்திலேயே வித்தியா போன்றவர்கள் சிதைக்கப்படுகிறார்கள். கோஷ்டி மோதல்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
இப்பொழுது தண்டனைகளை இறுக்குவதன் மூலம் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தலாம் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது. அதில் ஓரளவிற்கு உண்மை உண்டு. ஆனால், தண்டனைகளால் மட்டும் ஒரு சமூகத்தை ஆற்றுப்படுத்த முடியாது. குற்றவாளிகளைத் தண்டிப்பது உடனடியானது. ஆனால், குற்றவாளிகளை உருவாக்கும் சமூகச்சூழலை மாற்றியமைப்பதே நிரந்தரமானது. சமூகத்தை அரசியல் தரிசனமுடைய சமூகமாக அல்லது இலட்சியப்பாங்கான ஒரு சமூகமாகக் கட்டி எழுப்பும் போதே விழுமியங்களை உருவாக்க முடியும். அதற்கு உள்ளூர் தலைமைத்துவங்கள் வேண்டும். உள்ளூர் தலைமைத்துவங்களால்தான் ஒரு புதிய பண்பாட்டை கீழிருந்து மேல் நோக்கி உருவாக்க முடியும். மாற்றத்தின் விரிவைச் சோதித்தறியும் ஒரு பரிசோதனைக்களமாகவும் அது அமையும்.
எனவே, உள்ளூர் தலைமைத்துவங்களை கட்டி எழுப்பாதவிடத்து கோஷ்டி மோதல்களையும் நிறுத்த முடியாது. பெண் பிள்ளைகளை ஆள் அரவமற்ற தெருக்களில் தனியாகச் செல்லவிடவும் முடியாது.
புங்குடு தீவில் வல்லன் கிராமத்துப் பெண்கள் ஓர்மமானவர்கள், நெஞ்சுரம்மிக்கவர்கள் என்று ஓர் அபிப்பிராயம் உண்டு. வல்லன் கிராமத்து பெண்ணில் கை வைப்பதற்கு மற்றவர்கள் அச்சப்படும் ஒரு காலமும் இருந்தது. ஆனால், இப்பொழுது அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அக்கிராமத்தவர்களும் சேர்ந்து அவரது வீட்டில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் வைத்து சிதைத்துக் கொன்றுவிட்டார்கள். எமது கிராமங்கள் அவற்றின் அப்பாவித் தனத்தை இழந்துவிட்டன; அவற்றின் தனித்துவங்களை இழந்துவிட்டன.
புங்குடுதீவைச் சேர்ந்த கவிஞர் வில்வரத்தினம் கூறுவார், “சாவிலும் ஒரு வாழ்விருந்தது எமது கிராமங்களுக்கு” என்று. ஆனால், இப்பொழுது?
தினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.