படம் | CHANNEL4

சில ஆண்டுகளுக்கு முன் ஜே.வி.பியின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஒருவரோடு உரையாடும் போது அவர் சொன்னார், “ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி நசுக்கப்பட்ட பின் அதில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வது என்பது உடனடுத்து வந்த ஆண்டுகளில் மிகவும் ஆபத்தாக இருந்தது. ஆனால், சந்திரிக்காவின் வருகைக்குப் பின் நிலைமை மாறத் தொடங்கியது. 90களின் முன்கூறில் ஓரளவுக்கு இரகசியமாக இறந்தவர்களை நினைவுகூரக் கூடியதாக இருந்தது. அப்பொழுது அது மிகவும் புனிதமானதாகவும் ஒரு வழிபாடாகவும் இருந்தது. அந்த வழிபாட்டிற்கு ஓர் ஆத்மா இருந்தது. பின் வந்த ஆண்டுகளில் நிலைமைகள் மேலும் இறுக்கம் குறைந்தன. இதனால், இறந்தவர்களை நினைவு கூர்வது ஆபத்தற்ற ஓர் அரசியல் நிகழ்வாக மாறியது. அந்நாட்களில் பொருந்திரளானோர் அந்நிகழ்வுகளில் உணர்வெழுச்சியோடு கலந்துகொண்டார்கள். அதன் பின் பகிரங்கமாகவே அந்நிகழ்வு நடாத்தப்பட்டது. பெருந்திரளானோர் அதில் கலந்துகொண்டார்கள். ஆனால், அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் படிப்படியாக பங்கு பற்றுவோரின் தொகை குறையத் தொடங்கியது. இப்பொழுது அது ஒரு சடங்கைப் போலாகிவிட்டது. அது அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. அது ஏறக்குறைய நாட்காட்டிக்குள் வரும் ஒரு திகதி போல் ஆகிவிட்டது…” என்று.

ஜே.வி.பியின் தியாகிகள் நாள் அதன் ஆன்மாவை இழந்ததற்கு முக்கிய காரணம் அதற்கிருந்த தடைகள் அகற்றப்பட்டதல்ல. மாறாக, மிதவாத அரசியலில் ஜே.வி.பியின் செயற்பாடுகள் அவற்றின் அரசியல் ஆன்மாவை எப்பொழுதோ இழந்துவிட்டது. ஓர் அமைப்பின் அரசியலானது புனிதமிழக்கும் போது அதன் தியாகிகள் வழிபாடும் ஆன்மாவை இழக்கிறது. இது சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய ஓர் ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட பின்னரான நிலை. ஆனால், தமிழ் மக்களின் நிலை?

இறந்தவர்களை நினைவு கூரும் விவகாரத்திலும் இச்சிறிய தீவு இனரீதியாக இரண்டாகப் பிளவுண்டே இருக்கிறது. சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய ஓர் ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே அதன் தியாகிகளை நினைவுகூரக் கூடிய சூழல் உருவாகியது. குறிப்பாக ஆட்சிமாற்றத்தோடு அப்படியொரு நிலைமை தோன்றியது. ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளாக அவர்களால் இறந்தவர்களை நினைவு கூர முடியவில்லை. இப்பொழுது ஆட்சி மாறிவிட்டது. இனிமேலாவது தமிழர்கள் இறந்தவர்களை நினைவு கூரக் கூடியதாக இருக்குமா?

கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் மக்களால் இறந்தவர்களை நினைவுகூர முடியவில்லை என்பது மட்டுமல்ல, இறந்தவர்களையும் காணாமற் போனவர்களையும் எண்ணிக் கணக்கெடுக்கவும் முடியவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இறந்தவர்களை நினைவுகூர்தல், இறந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் கணக்கெடுத்தல் ஆகியவை எல்லாமும் ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுரிமையின் பாற்பட்டவை. அவ்வாறு நினைவு கூர்வதற்கும் கண்கெடுப்பதற்கும் உரிய அரசியற் சூழல் நிலவவேண்டும். அப்படிப்பட்ட அரசியல் சூழலை உருவாக்குவது முழுக்க முழுக்க ஓர் அரசியற் தீர்மானம்தான். அப்படியொரு தீர்மானத்தை எடுப்பதற்கான அரசியற் திடசித்தம் மைத்திரி அரசிடம் உண்டா?

சில மாதங்களுக்கு முன்பு ஒரு மேற்கத்தேய தூதுவரோடு உரையாடும் போது அவர் சொன்னார், “போரில் இறந்தவர்கள், காணாமற் போனவர்கள் தொடர்பில் எந்தவொரு நாடும் மிகச் சரியான கணக்கு விபரத்தை வைத்திருப்பதில்லை” என்று. இங்கு பிரச்சினை, எது சரியான கணக்கு விபரம் என்பதல்ல. தமிழ் மக்களால் இன்னமும் சுதந்திரமாக கணக்கெடுக்க முடியவில்லை என்பதுதான். நம்பகத்தன்மை மிக்க, சுயாதீனமான, அனைத்துலக நியமங்களுக்கு ஏற்புடைய எந்தவொரு அமைப்பும் அப்படியொரு கணக்கெடுப்பை இன்னமும் செய்யத் தொடங்கவில்லை என்பதுதான்.

ஆட்சி மாற்றத்தின் பின் வடக்குக்கு விஜயம் செய்த அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் ஒரு வட மாகாணசபை உறுப்பினர், காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் குறித்து கதைத்திருக்கிறார். அப்பொழுது அமெரிக்கப் பிரதானிகள் இது தொடர்பான புள்ளி விபரங்களைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், மாகாணசபையிடம் அப்படியொரு புள்ளிவிபரமும் இருக்கவில்லையாம். அமெரிக்கப் பிரதிநிதிகள் கேட்டபோது புள்ளிவிபரங்ளைக் கொடுக்கமுடியவில்லை என்பது இணையத் தளங்களில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது.

ஆனால், இங்கு விவகாரம் எதுவெனில், எந்தவொரு தமிழ்த் தரப்பினாலும் திருத்தமான புள்ளிவிபரங்களைக் கணக்கெடுக்கத் தேவையான ஓர் அரசியல் சூழல் உருவாகவில்லை என்பதுதான். அதைத்தான் வெளிநாட்டுத் தூதுவர்களிடம் சுட்டிக்காட்ட வேண்டும்.

மேலும், அவ்வாறு கணக்கெடுப்பது என்பதையே ஒரு சிவில் போராட்டமாக, ஒரு சிவில் செயற்பாட்டியக்கமாக முன்னெடுக்க முடியும். ஆட்சிமாற்றத்தின் பின் கிடைத்திருக்கும் ஒப்பீட்டளவில் அதிகளவிலான சிவில் வெளிக்குள் மேற்சொன்ன போராட்டத்தை ஒரு பரிசோதனையாக தமிழ்க் கட்சிகளோ அல்லது செயற்பாட்டியக்கங்களோ முன்னெடுத்திருக்கலாம். இது விடயத்தில் அனைத்துலக மனித உரிமை நிறுவனங்களிடமும் மனிதநேய நிறுவனங்களிடமும் ஒத்துழைப்பைப் பெற முயற்சிக்கலாம். தமிழ் கட்சிகள் கிராமங்கள் தோறும் தமது வலையமைப்பை விஸ்தரிப்பதற்கும் தமது ஆதரவாளர்களோடு உயிர்த்தொடர்பைப் பேணுவதற்கும் இது உதவக்கூடும். ஆனால், எந்தவொரு தமிழ்க் கட்சியிடமும் அப்படியொரு அரசியல் தரிசனம் இருப்பதாகத் தெரியவில்லை.

இத்தகையதோர் பின்னணியில் ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது நினைவுநாள் அடுத்த கிழமை வருகிறது. தமிழ்க் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் செயற்பாட்டியக்கங்களும் என்ன செய்யப்போகின்றன? வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகள் கடந்த 5 ஆண்டுகளாகக் கடந்து சென்றது போல இம்முறையும் மே 18ஐ கடந்து செல்லப்போகின்றனவா? சில மக்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட முறையில் நினைவு கூர்வது வேறு. அதைக் கட்சிகள் தமது கொள்கைத் தீர்மானமாக நிறைவேற்றி கட்சிச் செயற்பாடாக முன்னெடுப்பது என்பது வேறு. அவ்வாறு முன்னெடுப்பதில் சட்டச் சிக்கல்களும் பாதுகாப்புப் பிரச்சினைகளும் இருப்பதாக ஒருவிளக்கம் கூறப்படுகிறது. ஏனெனில், 2009 மே மாதமளவில் கொல்லப்பட்டவர்களில் பொதுமக்களும் விடுதலைப் புலிகள் இயக்கப் பிரதானிகளும் அடங்குவர். அந்த இயக்கத்தின் உயர் மட்டத்தினர் கூட்டாக இல்லாமற் செய்யப்பட்ட ஒரு காலகட்டம் அது. எனவே, இறந்தவர்களை நினைவு கூர்தல் என்பது புலிகள் இயக்கத் தலைவர்களையும் நினைவு கூர்வதாக அமைந்துவிடலாம் என்பதே கடந்த 5 ஆண்டுகளாக அதைத் தடுப்பவர்கள் கூறும் காரணமாக இருந்து வந்துள்ளது.

புலிகள் இயக்கத்திலிருந்து இறந்தவர்களை நினைவு கூருமிடத்து அது அந்த இயக்கத்தை மகிமைப்படுத்துவதாகவும், அதை மீள உயிர்ப்பிப்பதாகவும் அமைந்துவிடும் என்றுமோர் விளக்கம் கூறப்படுகிறது. இந்த இடத்தில் சில கேள்விகளைக் கேட்கலாம்.

  1. கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதால் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் அரசியலானது மீளத்துளிர்க்கலாம் என்ற ஓர் அச்சம் உண்டெனில் குறிப்பிட்ட அந்த அமைப்பை அழித்ததன் மூலம் அதன் அரசியலை அழிக்க முடியவில்லை என்றா பொருள்?
  2. ஆயின் மே 19ஆம் திகதி முடிவுக்குள் கொண்டுவரப்பட்டது ஓர் இயக்கமா அல்லது அது முன்னெடுத்த அரசியலா?
  3. அந்த அரசியல் அப்படியே நீறு பூத்திருக்கின்றதென்றால் இனப்பிரச்சினையின் மூல காரணங்கள் தீர்க்கப்படவில்லை என்பது தானே பொருள்?
  4. இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது ஒரு கூட்டுரிமை. அக்கூட்டுரிமையானது இலங்கைத்தீவில் இரண்டு இனங்களுக்கும் சமமானது இல்லையா?

ஆட்சி மாற்றத்தின் பின்னரான ஓர் அரசியற் சூழலில் இக்கேள்விகளின் மீதான வாதப்பிரதிவாதங்கள் மாற்றத்தின் உண்மையான உள்ளடக்கத்தையும் மாற்றத்தின் பின் தமிழ் மக்களின் நிலைமைகளையும் விளங்கிக்கொள்ள உதவக் கூடும்.

தமிழ்ப் பெரும்பரப்பில் நவீன வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய உயிர் இழப்பை கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுக்குள் வாழும் ஈழத்தமிழர்களால் நினைவு கூர முடியவில்லை. இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது மனித நாகரிகத்தின் மிக ஆதித் தொடக்கங்களில் ஒன்றாகும். இறந்தவர்களுக்கு மரியாதை செய்தல், மூதாதையரை வழிபடுதல், பூதவுடலுக்கு மரியாதை செய்தல் போன்றவை மனிதன் நாகரீகமடையத் தொடங்கியதன் பிரதான குறிகாட்டிகளாகக் கொள்ளப்படுகின்றன. மிருகங்களிடமிருந்து மனிதர்கள் துலக்கமாக வேறுபடும் இடங்களில் இதுவும் ஒன்று. சில மிருகங்கள் பறவைகளின் மத்தியில் இறந்த தமது இனத்தவரைச் சுற்றியிருந்து துக்கம் கொண்டாடும் சில நடைமுறைகளைக் காணமுடியும். ஆனால், மனிதர்களே அதனைச் சடங்காகவோ வழமையாகவோ பேணி வருகிறார்கள். மனிதன் நாகரீகமடையத் தொடங்கியதன் ஒரு முக்கிய குறிகாட்டியாக அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அப்படிப் பார்த்தால் அது ஓர் அரசியல் உரிமை மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டுரிமையும் கூட.

மனித நாகரிகத்தின் ஆதித்தடங்களைத் தேடிச் சென்றால் மனித குலத்தின் முதலாவது நிரந்தரக் குடியிருப்புக்களில் ஒன்றாக கருதப்படும் ஹெற்றல்கியூக்கிலும், ஜெரிக்கோவிலும் மனிதர்கள் மூதாதையர்களை வழிபட்டிருப்பதைக் காணலாம். மனித நாகரிகமானது நதிக்கரைகளில் எண்ணோடும் எழுத்தோடும் கட்டியெழுப்பப்படுவதற்கு சில நூற்றாண்டுகளுக்கும் முன்னரே உருவாக்கப்பட்ட நிலையான குடியிருப்புக்கள் அவை. நீர்ச்சுனைகளை மையமாகக் கொண்டிருந்த அந்நிலையான குடியிருப்புக்களில் மூதாதையர் வழிபாட்டுக்குரிய சான்றாதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அதாவது, மனித நாகரீககத்தின் ஆதித் தொடக்கங்களைக் கண்டுபிடித்த போது அங்கே இறந்தவர்களை மரியாதை செய்ததற்கான சான்றாதாரங்களும் காணப்பட்டன.

இறந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது நாகரீகமற்றது என்று நம்பியதாலேயே மேற்கத்தேய நாடுகளைச் சேர்ந்த ராஜதந்திரிகள் அதற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஐரோப்பிய பிரதானி ஆனையிறவுக்கு அருகே மலர் வணக்கம் செலுத்தினார். அதைப் போலவே சில மாதங்களுக்கு முன்பு ஒரு அமெரிக்கப் பிரதிநிதியும் முள்ளிவாய்க்காலுக்குச் சென்று மலர்வணக்கம் செலுத்தியிருக்கிறார். இவைகள் யாவும் குறியீட்டு நடவடிக்கைகளே. ஆனால், தமிழ் மக்களுக்குத் தேவையாயிருப்பது குறியீட்டு நடவடிக்கைகள் அல்ல. மாறாக தமது கூட்டு உரிமையை உறுதி செய்யும் ஓர் அரசியல் சூழலே. அதற்கு வேண்டிய ஓர் அனைத்துலக அழுத்தமே. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அதை பின்னிருந்து பலப்படுத்தும் மேற்கு நாடுகள் முன்னைய ஆட்சி காலத்தில் அதை ஒரு குறியீட்டு நடவடிக்கையாகச் செய்தது என்பது வேறு. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அப்படிச் செய்வது என்பது வேறு. மாற்றத்தைக் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஐயங்களையும் அச்சங்களையும் விரக்தியையும் போக்குவது என்றால் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

நவீன தமிழ் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய உயிரிழப்பை நினைவு கூர்வதற்கு 5 ஆண்டுகளுக்குப் பின்னராவது தமிழ் மக்கள் அனுமதிக்கப்படுவது என்பது மாற்றத்தின் மீது அவர்களுக்கு ஏதாவது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடும் என்பது மட்டுமல்ல பின்வரும் காரணங்களுக்காகவும் அது மிக அவசியமானது.

  1. இலங்கைத் தீவில் நல்லிணக்கத்தை நடைமுறைச் சாத்தியமான வழியில் சிந்திப்பதற்கு அது ஒரு தவிர்க்கப்படவியலாத நுழைவுப் புள்ளியாக இருக்கும்.
  2. அது ஒரு கூட்டுச்சிகிச்சை. வெளிப்படுத்தப்படாத கூட்டுத்துக்கமானது உளவியல் அர்த்தத்தில் தீங்கானது. கூட்டுக்காயங்களிலும், கூட்டு மனவடுக்களிலும் உழன்று கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்குக் கூட்டு சிகிச்சை அளிப்பது பற்றி சிந்திக்கும் எல்லா உள மருத்துவ நிபுணர்களும் இதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது, ஒரு சமூகத்தின் கூட்டுத்துக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு வெளிப்படுத்தப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது சிகிச்சைக்கு உதவியாக அமையும் என்று.
  3. அது ஒரு கூட்டுவழிபாடு. மத நம்பிக்கைகளுக்கூடாக சிந்திப்பவர்களை பொறுத்தவரை இது இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதோடு தொடர்புடையது. இறந்தவர்களுக்குரிய இறுதி கிரியைகளை அச்சமின்றி செய்வதன் மூலம் அந்த ஆத்மாக்கள் மட்டும் சாந்தியடைவதில்லை. ​அந்தத் துக்கத்தை அடைகாத்துக்கொண்டிருக்கும் அவர்களுடைய உறவுகளும் சாந்தியடைகிறார்கள் என்பது மதம் சார்ந்த ஒரு நம்பிக்கை.
  4. அது தமிழ் மக்களின் கூட்டு உரிமைகளில் ஒன்றாக இருக்கிறது என்பதும் அதை மேற்கு நாடுகளும் இந்தியாவும் பகிரங்கமாக நிராகரிக்கத் தயாரில்லை என்பதும்.
  5. அது ஒரு பண்பாடு. அதை ஏற்றுக்கொள்வது ஒரு அரசியல் நாகரீகம். மனிதகுலம் நாகரீகம் அடைந்ததற்குரிய முக்கிய குறிகாட்டிகளில் ஒன்றாக இறந்தவர்களை மதித்தல் காணப்படுகிறது. எனவே, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஈழப்போரில் கொல்லப்பட்டவர்களையும் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களையும் நினைவு கூர அனுமதிக்கப்படும் போது அது முழு இலங்கை தீவின் அரசியலையும் நாகரீகமடையச் செய்யும்.

இலங்கைத் தீவின் நவீன அரசியலில் அது ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் தொடக்கப்புள்ளியாகவும் அமையும்.

தினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.