படம் | AP Photo/Eranga Jayawardena

வட மாகாண சபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானமொன்று இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியிருப்பது மாத்திரமல்ல சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்திருக்கிறது.

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்ட அத் தீர்மானம் 1948ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பதவியில் இருந்த அரசுகள் தமிழர்களுக்கு எதிராக ‘இன அழிப்பு’ நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருப்பதுடன் அவை தொடர்பாக சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட்டு அவற்றுக்கு பொறுப்பானவர்கள் என்று அடையாளம் காணப்படக் கூடியவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறது.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஏற்பாட்டில் விசாரணை நடத்தி வருகின்ற மூன்று சர்வதேச நிபுணர்களைக் கொண்ட குழுவினரே 6 தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘இன அழிப்பு’ நடவடிக்கைகள் தொடர்பிலும் விசாரணை செய்ய வேண்டுமென்றே வட மாகாண சபை கேட்டிருக்கிறது. முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையால் 2014 ஜூன் மாதம் நியமிக்கப்பட்ட அந்த நிபுணர் குழுவினர் தங்களது விசாரணைகள் தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்குமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே வட மாகாண சபையின் இத்தகைய தீர்மானம் நிறைவேறியது. அத்துடன், கடந்த வருடம் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ‘இன அழிப்பு’ தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரும் பிரேரணையொன்றை சமர்ப்பிக்க முயற்சித்த வேளையில் ‘இன அழிப்பு’ என்ற சொற்பதத்தைப் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய சட்ட ரீதியான நுட்ப நுணுக்க சிக்கல்களைக் காரணம் காட்டி அவரின் முயற்சியைக் கைவிடச் செய்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களே இப்போது அத்தகைய தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேறச் செய்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு தமிழ் அரசியல் சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் முதலமைச்சர் முன்னர் தெரிவித்திருந்த பல்வேறு கருத்துக்களை கடுமையாக விமர்சனம் செய்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியல் இயக்கங்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் எதிர்த்துப் பேசுகின்ற உள்நாட்டில் இருக்கக்கூடிய தீவிர நிலைப்பாடுகளைக் கொண்ட தமிழ் குழுக்களும் விக்னேஸ்வரன் அவர்களின் இந்தப் பிந்திய செயலை வெகுவாகப் பாராட்டியிருப்பதைக் காண்கிறோம். தமிழக அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கூட வட மாகாண சபையின் தீர்மானத்தை வரவேற்றிருப்பதுடன் சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானமொன்றை இந்திய அரசும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கின்றன.

இத்தகையதொரு பின் புலத்திலே வட மாகாண சபையின் தீர்மானம் தோற்றுவிக்கக் கூடிய அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியான பிரதிபலிப்புகள் குறித்து பல்வேறு வகையான அபிப்பிராயங்கள் வெளியிடப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முதலமைச்சரும் மாகாண சபையும் தெரிவு செய்த தருணம் “தந்திரோபாய ரீதியில்” பொருத்தமானதா என்ற கேள்வியை சிலர் எழுப்பியிருக்கிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவின் தோல்வியைத் தொடர்ந்து சற்று துவண்டு போயிருக்கும் தென்னிலங்கையின் பேரினவாதச் சக்திகள் தமிழர்களுக்கு எதிரான குரோதப் பிரசாரங்களை மீண்டும் சிங்கள மக்கள் மத்தியில் உற்சாகத்துடன் முன்னெடுப்பதற்கான வாய்ப்பை வட மாகாண சபையின் தீர்மானம் ஏற்படுத்திவிடக் கூடும் என்பதே தருணப் பொருத்தம் குறித்து கேள்வி எழுப்புகின்றவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. மஹிந்த ராஜபக்‌ஷ முன்னெடுத்த இராணுவ வாத அரசியலை தங்களுக்கு வசதியான முறையில் பயன்படுத்தி அரசியல் ஆதாயமடைந்த பேரினவாத கட்சிகள் மீண்டும் அவரை முன்னிலைப்படுத்தி அடுத்த பொதுத் தேர்தலில் களமிறக்குவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றன. நினையாப் பிரகாரமெனும் தமிழர் தரப்பு அத்தகைய பேரினவாத அரசியல் சக்திகளுக்குத் தீனியாக அமைந்துவிடக் கூடிய செயற்பாடுகளில் இறங்காமல் நிதானமாக நகர்வுகளைச் செய்வதே விவேகமானது என்பதே அந்த ஆதங்கத்தின் பின்னாலுள்ள அபிப்பிராயமாகும்.

ஆனால், தமிழர் தரப்பு எந்தளவுக்குத் தான் நிதானமாக நடந்து கொண்டாலும் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகள் என்று வரும் போது தென்னிலங்கை பேரினவாத சக்திகள் அவற்றின் சுயரூபத்தைக் காட்டாமல் ஒதுங்கியிருக்கப்போவதில்லை. அதனால், கொழும்பு அரசு மீதான சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்களைத் தணியாமல் வைத்திருக்கக் கூடிய அணுகுமுறைகளையே தமிழ் அரசியல் சக்திகள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஒருவாதமும் மறுபுறுத்தில் இருக்கிறது என்பதைக் கவனிக்க நாம் தவறக்கூடாது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்டு 100 நாள் வேலைத் திட்டத்தை முன்னெடுத்திருக்கும் புதிய அரசு, மஹிந்த ராஜபக்‌ஷ அரசின் கொள்கைகளினாலும் செயற்பாடுகளினாலும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற முன்னணி வல்லாதிக்க நாடுகள் மத்தியில் இலங்கைக்கு ஏற்பட்ட தனிமையைப் போக்குவதிலேயே தீவிர கவனத்தைச் செலுத்திவருகிறது. அதில் அரசுக்கு ஓரளவுக்கு வெற்றி கிட்டுவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் மூன்று நிபுணர்களும் அடுத்த மாதம் ஜெனீவாவில் தங்களது அறிக்கையைச் சமர்ப்பிப்பதை அரசினால் தடுக்கக் கூடியதாக இருந்திருக்கிறது. அரசின் வேண்டுகோளின் பிரகாரம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செய்த் ராட் அல் ஹுசெய்ன் செய்த சிபாரிசை ஏற்றுக்கொண்டு விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படுவதற்கு மனித உரிமைகள் பேரவை இணங்கியிருக்கிறது. இது இலங்கை தமிழ் அரசியல் சக்திகளுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானம் மார்ச்சில் ஜெனீவாவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதை தாமதிக்கக் கூடாது என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்திக் கேட்டிருந்தது என்பது இவ்விடத்தில் கருத்தூன்றிக் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். விசாரணை அறிக்கையை தாமதப்படுத்துவதற்கு அரசு தீவிர இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டிருந்த வேளையில் ‘இன அழிப்பு’ தொடர்பில் கடுமையான தீர்மானமொன்றை நிறைவேற்றுவதன் மூலமாக குறைந்தபட்சம் மார்ச்சில் ஜெனீவாவில் அந்த அறிக்கையாவது சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யக்கூடியதாக இருக்குமென்று முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மாகாண சபையும் நினைத்திருக்கக் கூடும் என்று கருதவும் இடமிருக்கிறது.

கொழும்பு அரசின் மீதான சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்களில் மாத்திரம் முழுமையாக நம்பிக்கை வைத்து அரசியல் அணுகுமுறைகளை வகுத்துச் செயற்படுவதிலேயே தொடர்ந்தும் நாட்டம் காட்டினால் தமிழர்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் இதுபோன்ற பல ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வீ. தனபாலசிங்கம்