படம் | AP Photo/Eranga Jayawardena, FOX NEWS
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு ஒரு சில பதில்களையாவது தன்னுடைய காலத்தில் கண்டடைய வேண்டிய பொறுப்பிலுள்ளவருமான சம்பந்தன் ஜயா, பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இலங்கையின் 67ஆவது சுதந்திரதின நிகழ்வில் பங்குகொண்டிருந்தார். அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசு கட்சி ஆகியவற்றின் சிரேஷ்ட தலைவர்கள் சிலர் வெளிப்படையாகவே இதனை கண்டித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தன் மற்றும் சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென்னும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. சம்பந்தன் மீது நடவடிக்கையா – இதனை பலரும் ஒரு நல்ல நகைச் சுவையாக எடுத்திருக்கலாம். ஆனால், வேடிக்கையான விடயமொன்றும் இடம்பெற்றுள்ளது. அதாவது, சம்பந்தன் விடாப்பிடியாக நின்று, அரசியலுக்கு அறிமுகப்படுத்திய வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மேற்படி சுதந்திர தினத்தை பகிஷ்கரித்திருக்கிறார். சுமார் 35 வருடங்களுக்கு பின்னர் தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தலைவர் இலங்கையின் சுதந்திரதின நிகழ்வில் பங்குகொண்டிருப்பது இதுவே முதல் தடவையாகும். ராஜபக்ஷவின் ஆட்சி தோற்கடிக்கப்பட்டிருக்கின்ற சூழலிலேயே சம்பந்தன், தமிழ் தலைவர்கள் நீண்டகாலமாக கடைப்பிடித்துவரும் உபவாசமொன்றை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். தன்னுடைய செயல் எத்தகைய விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதை அறிந்தே சம்பந்தன் இதனை செய்கிறார். சுருங்கச் சொன்னால், சம்பந்தன் தன்னை பலியிட்டு தமிழ் மக்களுக்கு எதையாவது செய்யலாமென்று நம்புகிறார். அதாவது, தமிழ் தரப்பின் நல்லெண்ணத்தை கொழும்பிற்கு உணர்த்தும் நோக்கில், சம்பந்தன் தன்னை தானே விலையாக கொடுக்கின்றார். அந்த வகையில் சம்பந்தனின் நல்லெண்ண முயற்சிகள் வரவேற்கத்தக்கவையே! தமிழர் தரப்பின் கடும்போக்குவாத நிலைப்பாடுகள் அனைத்துமே தோல்வியடைந்திருக்கின்ற நிலையில், சம்பந்தன் மேற்கொள்ளும் மிதவாத நகர்வுகள் அனைத்தையும் ஒருவரியில் நிராகரித்துவிடுவதும் பொருத்தமானதல்ல. ஆனால், இப்பத்திக்குள்ள கேள்வியோ வேறு! சம்பந்தனின் நல்லெண்ண முயற்சிகள் கொழும்பிற்கு விளங்குகிறதா? ஆகக் குறைந்தது சில பதில் – நல்லெண்ண முயற்சிகளையாவது கொழும்பு வெளிப்படுத்தியிருக்கின்றதா?
எனது கணிப்பில், கொழும்பு சம்பந்தனின் நல்லெண்ண முயற்சிகளை விளங்கிக் கொள்ளவில்லை. கொழும்பு சம்பந்தனின் நல்லெண்ண முயற்சிகளை விளங்கிக் கொண்டிருந்தால், கிழக்கு மாகாண சபை விவகாரம் இந்தளவிற்கு ஒரு அரசியல் விவகாரமாக உருமாறியிருக்காது. மைத்திரிபால சிறிசேன நினைத்திருந்தால், கிழக்கு மாகாண சபை விவகாரத்தை ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். முஸ்லிம் காங்கிரஸுடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்திய சம்பந்தன், அவை தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே மைத்திரிபால மற்றும் ரணில் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது தமிழர் தரப்பின் நியாயங்களை தான் விளங்கிக்கொள்வதாகவும் மைத்திரிபால தெரிவித்திருக்கின்றார். ஒரு விடயத்தில் நியாயமிருக்கிறது என்பதை விளங்கிக் கொண்டால், நியாயத்துக்குரியவர்களுக்கு நியாயத்தை வழங்குவதில் ஏன் தயங்க வேண்டும்? உண்மையில் சம்பந்தனின் நல்லெண்ண முயற்சிகளை மைத்திரிபால ஆகக் குறைந்தது விளங்கிக்கொள்ளக் கூட முயற்சிக்கவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் மக்கள் மட்டுமல்ல முஸ்லிம் மக்களும் வாக்களித்திருந்தனர். எனவே, ஆட்சிமாற்றத்திற்கு வாக்களித்தவர்கள் என்னும் உரிமையின் அடிப்படையில் மைத்திரிபாலவை தமிழர்கள் மட்டும் அணுக முடியாது. ஆனால், தமிழ் மக்கள் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக கொழும்பின் ஆட்சியாளர்களை எதிர்த்து வருகின்றனர். இந்தக் காலத்தில் ஆட்சியாளர்களுடன் சேர்ந்தியங்க முற்படும் தமிழ் தலைவர்கள் அனைவரையும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக நிராகரித்தே வந்திருக்கின்றனர். ஆனால், இப்படியொரு பின்னணியில், கிழக்கு மாகாண ஆட்சியில் பங்குகொள்ளும் கூட்டமைப்பின் விருப்பத்தை மைத்திரிபால சாதகமாக பாசீலித்திருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் இணங்காத நிலையில், தான் தலைமை தாங்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை வழங்குவதன் ஊடாக கிழக்கு தமிழ் மக்களுக்கு புதிய ஆட்சியின் நல்லெண்ணத்தை நிரூபித்திருக்கலாம். ஆனால், மைத்திரிபால அப்படியான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை. ரணில் விக்கிரமசிங்க அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். கிழக்கு மாகாண சபை தொடர்பான உரையாடலின் போது ஒரு இடத்தில் தான் இதில் தலையீடு செய்ய விரும்பவில்லையென்று மைத்திரிபால கூறியதாகவும் தகவலுண்டு. ஒரு நாட்டின் தலைவர், தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட விடயமொன்றில் எவ்வாறு தலையீடு செய்ய முடியாதென்று கூற முடியும்? கிழக்கு மாகாண சபை விவகாரம் தொடர்பில் மைதிரிபால பல தரப்பினருடனும் பேசியிருக்கின்றார். ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பக்கமுள்ள நியாயத்தை குறிப்பிட்டு அனைவரையும் ஆதரவு தெரிவிக்குமாறு வலியுறுத்தியிருக்கவில்லை. இதில் தமிழர் தரப்பின் பக்கத்திலும் சில குறிப்பிடத்தகு பிரச்சினைகள் இருக்கின்றது என்பதையும் நிராகரிப்பதற்கில்லை. அது தனியாக விவாதிக்கப்பட வேண்டியதாகும்.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் சம்பந்தன் ஜயாவின் நல்லெண்ண முயற்சிகள் அர்த்தமிழந்து போகின்றன. அவர் அதிக விமர்சனங்களை எதிர்கொள்ளவும் நேரிடுகிறது. ஏனெனில், தமிழர் தரப்பின் நல்லெண்ண முயற்சிகள் தமிழ் மக்களுக்கு பயனுடையவையாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாது போனால் சம்பந்தனின் நல்லெண்ண முயற்சிகள் வெறும் இயலாமையின் வெளிபடாகவே புரிந்துகொள்ளப்படும். உண்மையில் கிழக்கு மாகாண சபை விவகாரம் சம்பந்தனின் நல்லெண்ண முயற்சியில் பெரும் பின்னடைவாகும். ஆகக் குறைந்தது கிழக்கு மாகாண சபை விவகாரத்தில் கூட புதிய ஆட்சியாளர்களின் ஆதரவை பெற முடியாத நிலையில், எவ்வாறு இவர்களின் ஊடாக புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காண முடியும். அந்த வகையில், சம்பந்தன் தன்னுடைய முதலாவது அரசியல் நகர்விலேயே தோல்வியடைந்திருக்கின்றார். இதற்கு கூட்டமைப்பின் தலைவர்கள் பதிலளிக்க வேண்டும். அண்மையில் ஒரு குடிமகன் (தேர்தல் காலத்தில் வாக்களிப்பதுடன் தன்னுடைய அரசியல் பணியை நிறைவுசெய்து கொள்ளும் ஒருவர்) மிக ஆவேசமாக பேசியதை நான் அவதானித்தேன். கிழக்கு மாகாண சபை விவகாரத்தில் கூட கூட்டமைப்பால் உருப்படியாக ஒன்றையும் செய்ய முடியவில்லையே என்னும் ஆதங்கமே அவரது ஆவேசத்தின் பின்னாலிருந்தது. தேர்தல் காலத்தில் நாங்கள் இந்தியாவுடன் பேசியிருக்கிறோம் – அமெரிக்காவுடன் பேசியிருக்கிறோம் என்கிறார்கள். ஆனால், தேர்தலின் பின்னர் எந்தவொரு முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. ஆகக் குறைந்தது கிழக்கு மாகாண சபை விடயத்தில் கூட தமிழ் மக்களுக்காக எவரும் நிற்கவில்லையே! தலைவர்களால் ஒன்றும் செய்ய முடியாவிட்டால் பரவாயில்லை, ஆனால், அதனையாவது வெளிப்படையாக மக்கள் முன்னால் ஒப்புக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் செல்வநாயகம் ஜயா குறிப்பிட்டது போன்று, கடவுள்தான் எங்களை காப்பாற்ற வேண்டுமென்று சொல்லுங்கள். அதன் பிறகு நாங்களுண்டு, எங்கள் வேலையுண்டு என்று மக்களிருப்பர். ஒரு சாதாரண மனிதர் இவ்வாறு ஆதங்கப்படுகின்றார் என்றால், அந்தளவிற்கு கிழக்கு மாகாண சபை விவகாரம் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்பதியை ஏற்படுத்தியிருக்கின்றது.
மேலும், கிழக்கு மாகாண சபை விவகாரத்தில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து மட்டக்களப்பில் புதிய அமைப்புக்களும் உருவாகியிருக்கிறன. குறிப்பாக வடக்கு தலைவர்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நலன்களை பாதிக்கும், எனவே, அதற்கேற்ப கிழக்கிற்கான தனியான உபாயங்கள் வகுக்கப்பட வேண்டுமென்னும் சிந்தனையும் வலுவடைந்திருக்கிறது. இது நீண்டகால நோக்கில் தமிழ் தேசிய அரசியலை பாதிக்கக் கூடும். ஆனால், கிழக்கில் அவ்வாறான சிந்தனைகள் மேலெழுவதில் நியாயம் இல்லையென்றும் சொல்லிவிட முடியாது. கிழக்கை பொறுத்தவரையில் மொழி ரீதியாக தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கக் கூடியதாக இருப்பினும், அரசியல் ரீதியாக இரு சமூகங்களும் ஒட்ட முடியாதளவிற்கு வேறுபட்ட தேவைகளை கொண்ட சமூகங்களாகவே இருக்கின்றன. தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் போது, அதற்கு எதிராக குரல் கொடுப்பவர்களாகவே இருந்திருக்கின்றனர் – இருக்கின்றனர். ஆனால், முஸ்லிம் தலைவர்களோ அல்லது முஸ்லிம் சிவில் சமூகமோ தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருக்கின்றனர். உதாரணமாக, தெற்கில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போது, அதற்கு எதிராக கூட்டமைப்பு குரல் கொடுத்திருந்தது. ஆனால், வடக்கு கிழக்கில் அல்லது இலங்கையில் எங்காவது இந்துக் கோவில்கள் அல்லது தமிழருக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறும்போது, அதற்கு எதிராக முஸ்லிம் அரசியல் தலைமைகள் குரல் கொடுத்ததாக எந்தவொரு சான்றும் இல்லை. ஏன்? ஏனெனில், முஸ்லிம்களிடம் ஏனைய சமூகங்கள் குறித்து எந்தவிதமான கரிசனையும் இருந்ததில்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம். நான் இங்கு சில பொதுவான அம்சங்களையே குறிப்பிடுகின்றேன். இதற்காக தமிழர்கள் முஸ்லிம்களை குற்றம்காண முடியாது. உண்மையில் அது முஸ்லிம்களின் அரசியல் கலாசாரம். இலங்கையை அரசியலை பொறுத்தவரையில் முஸ்லிம் தலைமைகள் எப்போதும் ஆளும் தரப்பினருடனேயே இருக்கின்றனர். இந்த நிலையில் உரிமைசார் அரசியலை முன்னெடுக்கும் தமிழர் தலைமையும் (அது எந்த தலைமையாக இருப்பினும்) முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இணைந்து பணியாற்றுவது என்பது சாத்தியமான ஒன்றல்ல. ஆகக் குறைந்தது தமிழ் – முஸ்லிம் தலைமைகள் ஒன்றாக இணைந்து ஆளும் தரப்பிற்கு அழுத்தங்களை கூட கொடுக்க முடியாதவொரு புறச் சூழலே காணப்படுகிறது. முஸ்லிம் காங்கிரஸ் சம்பந்தனின் அழைப்பை ஏன் நிராகரித்தது என்பதை இப்படியொரு பின்புலத்தில்தான் தமிழர் தரப்பு விளங்கிக்கொள்ள வேண்டும். சம்பந்தனின் நல்லெண்ணத்தை கொழும்பும் விளங்கிக்கொள்ள முயற்சிக்கவில்லை, முஸ்லிம் காங்கிரஸும் விளங்கிக்கொள்ள முயற்சிக்கவில்லை. ஏனெனில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது வியாபாரம் முக்கியமானது. இதில் பெருந்தன்மை, நியாயம், மனச்சாட்சி என்பதெல்லாம் அரசியல் தெரியாத தமிழர்களின் பிரச்சினையாகும்.
எனவே, தொடர்ந்தும் அவர்கள் எங்களின் நியாயத்தை விளங்கிக் கொள்வார்களென்று கூறிக் கொண்டிராமல், அவர்கள் விளங்கிக்கொள்ள வில்லையாயின், எவ்வாறான வழிகளில் அவர்களுக்கு நிலைமைகளை விளக்க முடியுமென்று சிந்திப்பதே தற்போது கூட்டமைப்பின் தலைவர்கள் செய்ய வேண்டிய விடயமாகும். அதைவிடுத்து எல்லாவற்றுக்கும் விளக்கமளித்துக் கொண்டிருப்பதானது, உண்மையில் கூட்டமைப்பின் அசியல் இயலாமையே அம்பலப்படுத்துகின்றது.
தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.