படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO
2009இல் பிரபாகரன் யுத்தகளத்தில் வீழ்ந்தபோது எவ்வாறானதொரு ஆச்சரியம் நிலவியதோ, அவ்வாறானதொரு ஆச்சரியம்தான் மஹிந்த ராஜபக்ஷ விடயத்திலும் நிலவுகிறது. ஏனெனில், மஹிந்த ராஜபக்ஷவை இவ்வளவு எளிதாக அதிகாரத்திலிருந்து அகற்ற முடியுமென்பதை அவர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறும் வரையில் எவருமே நம்பியிருக்கவில்லை. எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்ததான உணர்வே எஞ்சியிருக்கிறது. இது எவ்வாறு நிகழ்ந்தது? இந்த புதிரை மெதுவாக அவிழ்க்கும் வகையில் தற்போது ஒரு சில தகவல்கள் கசிந்திருக்கின்றன. அதாவது, நடந்து முடிந்த ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இந்திய வெளியக உளவுத் துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்விற்கான (Research and Analysis Wing – RAW) அமைப்பின் திரைமறைவு செயற்பாடுகள் இருந்தன எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் டிசம்பர் மாதமளவிலேயே கசியத் தொடங்கியிருந்தது. இந்தியத் தூதரகத்திலிருந்து இயங்கிக்கொண்டிருந்த றோ அதிகாரி இளங்கோ திடீரென இந்தியாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இவரது இலங்கைப் பணிக்கான ஒப்பந்த காலம் முடிவுற்றமையே இவர் சென்றதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டது. அதிலும் உண்மையில்லாமலில்லை. சாதாரணமாக இலங்கையில் பணியாற்றும் இந்திய அதிகாரிகளுக்கான பணிக்காலம் மூன்று வருடங்களாகும். ஆயினும், தேர்தலொன்று இடம்பெறுவதற்கான திகதி நெருங்கிவரும் சூழலில் திடிரென்று இளங்கோ சென்றமையானது அரசியல் வட்டாரங்களில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது. அப்போது கூட்டமைப்பின் வட்டாரங்களின் ஊடாக ஒரு தகவல் கசிந்திருந்தது. மஹிந்தவின் முறைப்பாட்டைத் தொடர்ந்தே இளங்கோவை புதுடில்லி திடீரென்று அழைத்ததாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால், சில தகவல்களின் படி றோ அதிகாரி மாற்றப்பட்டாலும், அவர் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் ஏலவே வெற்றிகரமாக மேற்கொண்டுவிட்டே சென்றிருக்கிறார்.
இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னால் இந்திய உளவுத் துறை இயங்கியதாக வெளியாகும் குற்றச்சாட்டுக்களை இந்தியா மறுத்திருக்கிறது. இது தொடர்பில் பேசியிருக்கும் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையின் ஆட்சி மாற்றம் மக்களால் ஏற்பட்டதேயன்றி, றோவினால் அல்ல என்று பதிலளித்திருக்கின்றார். மங்கள சமரவீர கூறுவது போன்று ஆட்சி மாற்றம் மக்களால்தான் ஏற்பட்டது. ஆனால், அது ஜாதிக ஹெல உறுமயவின் வெளியேற்றம், மைத்திரிபால சிறிசேனவின் வெளியேற்றம், ஆரம்பத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதில் தீவிர ஆர்வம் காட்டிய ரணில் விக்கிரமசிங்கவின் பின்வாங்கல், சம்பந்தனின் இறுதிநேர மைத்திரி ஆதரவு ஆகியவை இல்லாதிருந்தால், மக்களால் ஆட்சி மாற்றம் நோக்கி அணிதிரண்டிருக்க முடியுமா?
2009இல் பிரபாகரனை வீழ்த்தும் யுத்தம் நிறைவுற்றது. ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில் பிரபாகரனை வீழ்த்துவதற்கு எந்த சக்திகளெல்லாம் மஹிந்தவை பலப்படுத்தினவோ, அவர்கள் அனைவரும் மஹிந்தவிற்கு எதிராகவும் திரும்ப வேண்டிய சூழல் விரைவிலேயே ஏற்பட்டது. மஹிந்த, தெற்காசியாவில் ‘சொல்கேளா அதிபர்’ என்னும் வகையில் செயலாற்றத் தொடங்கினார். இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்பதையே மறந்துபோகுமளவிற்கு மஹிந்தவின் செயற்பாடுகள் எல்லைமீறின. மஹிந்தவின் ஆட்சி அணுகுமுறை தெற்காசியாவில் ஒரு கிழக்காசிய அணுகுமுறையை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு நேரடியாகவே அச்சுறுத்தல் விடுமளவிற்கு, மஹிந்தவின் செயற்பாடுகள் எல்லைதாண்டின. இந்தியாவின் கவலைகளை புறம்தள்ளி, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருக்கிச் செல்லுவதில் மஹிந்த எந்தவொரு தயக்கமும் காண்பிக்கவில்லை. பாகிஸ்தானிய உளவுப் பிரிவின் முகவரான சாக்கிர் ஹூசைன் என்பர் கடந்த வருடம் மே மாதம் தமிழ் நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் போது கொழும்பில் இருக்கும் இலங்கைக்கான பாகிஸ்தானிய தூதரகத்தில் கடவுச்சீட்டு அலுவலகராக (Counsellor (Visa) கடைமையாற்றுகின்ற சித்திக் (Siddiqui) மற்றும் அவரது மேலதிகாரியான ஷா (Shah) ஆகியோருக்கும் கைதுசெய்யப்பட்ட ஹூசைனுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தமை கண்டறியப்பட்டது. குறித்த இருவரும் பாகிஸ்தானிய உளவுப் பிரிவான ஜ.எஸ்.ஜயின் (Inter Services Intelligence/ ISI) கீழ் பணிபுரிபவர்களாவர்.
இது இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்ச்சியையும் அதேவேளை, பாகிஸ்தானிய உளவுத்துறை கொழும்பிலிருந்து இந்தியாவிற்கு எதிராக செயலாற்றுமளவிற்கு இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதும் உறுதியானது. இது பற்றி கசிந்த தகவல்களின்படி மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இலங்கை பாதுகாப்பு செயலர் கோட்டாபயவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் வினவியபோது கோட்டாபய பின்வருமாறு பதிலளித்திருக்கின்றார். நாங்கள் விழிப்பாகத்தான் இருக்கிறோம். ஒன்று, இரண்டு சம்பவங்கள் நடக்கும். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. ஏன் உங்கள் இந்தியாவிலும் குண்டுகள் வெடிக்கின்றதுதானே. இந்தியாவை ஒரு பொருட்டாகக் கொள்ளாத மேற்படி பதில், இந்தியாவை எரிச்சலடையச் செய்ததாகவே சில தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன. இதுதான் முதலாவது முறுகலாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோன்று சீனாவின் நீர்மூழ்கிகளை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதித்தமையும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியதாகவும் அறிய முடிகிறது.
இதுபோன்ற விடயங்கள் புதுடில்லி வட்டாரங்களில் மஹிந்த கையாள முடியாத ஒருவர் என்னும் கருத்துநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், மஹிந்த தொடர்ந்தும் பதவியிலிருப்பது இந்தியாவின் நலன்களுக்கு ஆபத்தானது என்னும் கருத்தும் வலுவடைந்தது. நரேந்திர மோடி பெரும்பாண்மை பலத்துடன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் அழைத்திருந்தமை அரசியல் வாசகர்கள் அறிந்த விடயமே. ஆனால், அறியாத விடயம் ஒன்றுண்டு. சார்க் தலைவர்கள் என்னும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவும் அழைக்கப்பட்டிருந்தார். இதன் போது நட்பார்ந்த சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது. சந்திப்பில், மோடி 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது பற்றியும் வலியுறுத்தியிருக்கின்றார். ஆனால், இதற்கு பதலளித்த மஹிந்த அதனை ஒரு பொருட்டாக மதிக்காமல், நீங்கள் விருந்தோம்பலுக்கு அழைத்ததாக எண்ணித்தான் நான் வந்தனான் என்று பதிலளித்திருக்கின்றார். மஹிந்தவின் பதிலால் மோடி அதிர்ச்சியடைந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் இந்தியாவை பொருட்படுத்தாமல் சீன நீர்மூழ்கிகள் இலங்கைக்குள் உள்நுழைய அனுமதித்தமை, சீனாவுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஆகியவற்றையும் ஒன்றிணைத்து நோக்கிய போது இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை என்னும் முடிவுக்கு இந்தியா தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமாயின் அதனை எவ்வாறு சாத்தியப்படுத்துவது என்னும் ஆலோசனைகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இந்தப் பின்னணியில்தான் மிகவும் துல்லியமான திட்டங்கள் வகுப்பட்டிருக்கின்றன. புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொண்டவர் என்பதுதான் ராஜபக்ஷவின் செல்வாக்கிற்கு காரணம். எனினும், ராஜபக்ஷவின் அளவுகடந்த குடும்ப ஆதிக்கத்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி, யுத்தத்தின் போது மஹிந்தவிற்கு பக்கபலமாக தொழிற்பட்ட ஜாதிக ஹெல உறுமயவிற்குள் மஹிந்த தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் அகியவற்றை துல்லியமாக மதிப்பிட்டு காய்கள் நகர்த்தப்பட்டன. அதேவேளை, தமிழ், முஸ்லிம் கட்சிகளை எவ்வாறு கையாளுவது என்னும் திட்டமும் வகுக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னரே ஜாதிக ஹெல உறுமய ஜக்கிய மக்கள் சுதத்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. முதலில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலய ரத்ன தேரர் வெளியேறினார். அவரது வெளியேற்றம்தான் மஹிந்தவிற்கு எதிராக களமிறங்க முடியுமென்னும் நம்பிக்கையை மற்றவர்களுக்கு கொடுத்தது. ஒப்பரேசன் ஆரம்பமானது. உண்மையில் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் நாட்டு ஜோதிடர் ஒருவரின் உதவியுடன், கேரள ஜோதிடர் ஒருவர் ஊடாக தேர்தல் திகதியை நிர்ணயம் செய்ய முற்பட்டிருக்கின்றார். எப்போது தேர்தல் வைத்தால் தன்னால் வெல்ல முடியுமென்பதை குறித்த கேரள ஜோதிடர் வாயிலாக அறிந்துகொள்ள முற்பட்டிருக்கின்றார். இந்தத் தகவல்களை இந்திய மத்திய புலனாய்வு பணியகம் முகர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மஹிந்தவிற்கு கேரள ஜோதிடர் குறித்துக் கொடுத்த தேர்தல் திகதியிலிருந்தே மஹிந்தவின் ஆட்சிக்கான நாட்கள் எண்ணப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், விடயங்கள் துல்லியமாக கணிக்கப்பட்ட போதும் மக்கள் எந்தளவு தூரம் மைத்திரிபாலவின் பக்கமாக திரும்புவார்கள் என்னும் விடயத்தில் ஆரம்பத்தில் தெளிவற்ற நிலை காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தெற்கில் ஒரு தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முன்கூட்டியே சில தயாரிப்புக்களை ராஜபக்ஷாக்கள் மேற்கொண்டிருந்தனர். 2010இல் பெற்ற வெற்றியின் அடிப்படையிலேயே அவர்களின் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மஹிந்த வெற்றி பெற்றிருந்தார். இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு வருடங்கள் இருக்கின்ற நிலையிலேயே தேர்தலொன்றை எதிர்கொள்ளத் துணிந்தார். குறித்தளவான சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் முஸ்லிம் வெறுப்பை கையாண்டால், அதன் ஊடாக தெற்கின் வாக்கு வங்கியை பாதுகாத்துக் கொள்ள முடியுமென்று எண்ணினார். இதற்கான வேலைத்திட்டமாகவே பொதுபல சேனா என்னும் அமைப்பு உருவாகியது. குறுகிய காலத்தில் பொதுபல சேனா தெற்கில் செல்வாக்குமிக்க அமைப்பாக உருவெடுத்தது அல்லது உருவாக்கப்பட்டது. ஆனால், உண்மையில் பொதுபல சேனாவின் பலம் என்ன? அவர்களால் எந்தளவிற்கு தெற்கின் சிங்கள வாக்குகளை மஹிந்தவின் பக்கமாக திருப்ப முடியும்? இப்படியான கேள்விகளுக்கு பதில் தேடும் வகையில் பொதுபல சேனாவின் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டதாகவே சொல்லப்படுகிறது. இதற்கென இலங்கையில் செயற்பட்டு வந்த இந்து சம்மேளனங்கள் மற்றும் இந்து குருமார்கள் கையாளப்பட்டதாவும் தகவல்கள் வெளியாகின்றன. இவர்கள் பொதுபல சேனாவுடன் நெருங்கிப் பழகி விடயங்களை சேகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விடயங்கள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில் இன்னொரு புறமாக வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் பெரும்பாண்மையாக மைத்திரிபாலவிற்கு மட்டும் போய்ச் சேர்வதற்கான வாய்ப்புக்கள் பற்றியும் கணிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. இந்த நேரத்தில் மைத்திரிபால மற்றும் மஹிந்த ஆகிய இருவரையும் நம்புவதில் பொருளில்லை என்னும் கருத்துக்களும் தமிழர் தரப்பிலிருந்து மேற்கிளம்பின. ஒருவேளை, புலம்பெயர் சமூகம் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு அழைப்பு விட்டால் என்ன செய்யலாம் என்பதும் உற்றுநோக்கப்பட்டது. இதனை தடுக்கும் ஒரு உபாயமாக புலம்பெயர் சமூகம் அவ்வாறு தெரிவிப்பதற்கு முன்னரேயே, அவ்வாறான கருத்துக்கள் ஊடக மட்டத்தில் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பகிஷ்கரிப்புக் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்படும் சூழலில் தமிழ் மக்கள் அதனை எவ்வாறு நோக்குவர் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால், தமிழ் மக்கள் மஹிந்தவின் மீதுகொண்டுள்ள கோபத்தின் முன்னால் வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை என்னும் உண்மையும் கணிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே சில வாரங்கள் இந்தியாவில் தங்கியிருந்துவிட்டு நாடு திரும்பிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உடனடியாக மைத்திரிக்கான பகிரங்க ஆதரவை தெரிவித்தார். தமிழ் மக்கள் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை சிலர் உளப்பூர்வமாக முன்வைத்த போதும், அது தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதற்கே பயன்பட்டது. ஏனெனில், பகிஷ்கரிப்பு கோரிக்கை அனைத்தையும் அரசின் திட்டமென்றே மக்கள் நம்பினர். இதனால், வாக்களிப்பில் ஆர்வத்துடன் பங்குகொண்டனர். ஒட்டுமொத்தத்தில் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு மரத்தின் கிளைச் செயற்பாடுகளாகவே இருந்திருக்கின்றன. ஒப்பரேசன் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிகரமாக நிறைவுற்றது.
நான் ஆட்சி மாற்றம் தொடர்பில் பலருடன் தொடர்பு கொண்டு திரட்டிய தகவல்களின் அடிப்படையிலேயே என்னுடைய கணிப்பை செய்திருக்கிறேன். பலம்பொருந்திய சக்திகள் ஒரு போதும் தங்களின் செயற்பாடுகளுக்கு உரிமை கோருவதில்லை. ஆனால், பெரும் வன்முறைகளுடன் இல்லாவிட்டாலும், ஒருவேளை இராணுவ ஆட்சியாக உருமாறலாம் என்று கணிக்கப்பட்ட ஒரு விடயத்தை மிகவும் எளிதாக கையாண்டு, தங்களின் பணியிலக்கை நிறைவு செய்தமையானது இலங்கைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளுக்கும் ஒரு தெளிவான செய்தியை வழங்கியிருக்கிறது. பிராந்திய சக்தியான இந்தியாவின் நலன்களை புறம்தள்ளி செயற்படும் தெற்காசிய நாடுகளை கட்டுக்குள் கொண்டுவரும் வல்லமை இந்தியாவிடம் உண்டு. இது நாடுகளுக்கு மட்டுமான செய்தியல்ல மாறாக, தமிழ்களுக்கும்தான்.
தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.