படம் | JDS

மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர ஆகியோர் முறையே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் வெளிவிவகார அமைச்சராகவும் பதவியேற்றமையானது போர்க் குற்றங்கள் மற்றும் யுத்தத்தின்போது மனுக்குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச்செயல்கள் போன்ற விடயங்களிலே நீதிக்காகப் போராடுவோர் தமது போராட்டத்தைத் தொடரும் முயற்சிகளிலே பெரும் மாற்றம் ஒன்றைக் கொணர்விக்க வேண்டிய தேவைக்கு உள்ளாக்கியுள்ளது. புதிய அரசும் அதன் ஆட்சி வடிவமும் – குறிப்பாக மனித உரிமைகள் விடயத்திலே சர்வதேச அரசியலையிட்டதான அதன் அணுகுமுறை – ராஜபக்‌ஷ ஆட்சியைவிட அடிப்படையிலேயே வேறுபட்டதாகவே இருக்கும். எனவே, ராஜபக்‌ஷவுக்கு எதிராகக் கையாண்ட சாணக்கியமும் தந்திரோபாயமும் மாற்றப்பட்டு, புதிய சூழ்நிலையின்கீழ் நீதியை நாடும் இலக்கினைத் தொடர்வதற்கு புதிய தந்திரோபாயங்கள் கைக்கொள்ளப்பட்டாகவேண்டும்.

புதிய மைத்திரிபால – ரணில் அரசானது போர்க் குற்றங்கள் மற்றும் யுத்தத்தின்போது மனுக்குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச் செயல்கள் விடயத்திலே உண்மை மற்றும் நீதியை முன்னுரிமைப்படுத்தும் சாத்தியம் அவ்வளவாக இல்லை. அவர்கள் மஹிந்த ராஜபக்‌ஷ, கோத்தபாய ராஜபக்‌ஷ அல்லது இராணுவத் தலைவர்களை சர்வதேச குற்றவியல் விசாரணை மன்றத்துக்குக் கையளிக்கப்போவதில்லை என்பதை மீள வலியுறுத்திக் கூறிவந்துள்ளனர். ஆயினும், மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் விடயத்திலே சர்வதேச அழுத்தங்களை மைத்திரி – ரணில் ஆட்சி அணுகும் விதத்திலே சில பிரதானமான வேறுபாடுகள் இருக்கும்.

பிரதானமாக, போர்க் குற்றங்களுக்கு (இங்கு போர்க் குற்றங்கள் என்பது பொதுவாக போர்க் குற்றங்களையும் மனுக்குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச் செயல்களையும் குறிக்கும்) பொறுப்பானவர்களை உடனடியாகச் சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு இந்த ஆட்சியரசு விரும்பாவிட்டாலுங்கூட ராஜபக்‌ஷ அரசு தமது நடவடிக்கைகளால் வருவித்துக்கொண்ட சர்வதேச அழுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரப் பகீரதப்பிரயத்தனம் எடுக்கும். இந்த நாட்டத்திலே பின்வருவனவை எதிர்பார்க்கக்கூடியவையாகும்: முதலிலே – மைத்திரி – ரணில் ஆட்சி ஜனநாயகம் உள்ளதாய், அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் வெளிப்படையாகப் பேசி நீதியை நோக்கிச் செயற்பட அகலவெளியை வழங்கும். இரண்டாவதாக – வடக்கு மற்றும் கிழக்கிலே தற்போது இடம்பெற்றுவரும் காணிச்சுவீகரிப்பு, கற்பழிப்பு, சித்திரவதை, அரசை எதிர்ப்பவர்களை துன்புறுத்தல் போன்றதான பாரிய மனித உரிமை மீறல்களைக் மைத்திரி – ரணில் ஆட்சி குறைக்க எத்தனிக்கும். மூன்றாவதாக – சர்வதேச ஆதரவுடன் உள்ளூரிலே பொறுப்புக்கூறச்செய்யும் பொறிமுறையொன்றை அமைப்பதிலே மேற்கத்தேய நாடுகளுடன் ஒத்துப்போவதற்கு மைத்திரி – ரணில் ஆட்சி அதிகம் விருப்பம் கொண்டிருக்கும்.

எனவே, புதிய அரசின் தெரிவானது அதனுடன் நீதிக்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புக்களைக் கொண்டுவரும். ஆனாலும், இந்த வாய்ப்புக்களுடன்கூட குறிப்பிடத்தக்க சவால்களும் இருக்கத்தான் செய்யும்.

நீதியை மேம்படுத்தும் வாய்ப்புக்கள்

முன்னர் கூறியபடி புதிய அரசைத் தெரிவுசெய்ததிலே உருவாக்கப்பட்ட அகலவெளியை நீதிக்கான எமது தாகத்திற்கு உச்சபட்சமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பெரும் அளவிலான சர்வதேசக் குற்றச்செயல்களுக்கான நீதியானது உள்நாட்டு குற்றவியல் வழக்குகளையன்றி பாதிக்கப்பட்டோர் மற்றும் பாதிப்புக்கு உள்ளான குழுவினர் ஆகியோரும் அதீத முன்னாயத்தங்களைச் செய்துகொள்வது வேண்டற்பாலதாகும். இதன்படி முதலாவதும் மிக அவசரமானதுமான செயலாற்ற இலக்கு எதுவெனில், பாதிப்புற்றோரிடமிருந்து உரிய சான்றுகள் ஆகியவற்றைச் சேகரித்துக் கொள்வதாகும். சான்றுகளைச் சேகரிப்பதென்பது சாதாரண மக்களால் கூடாது, அது படிவத்தை வெறுமனே நிரப்புவதை விடவும் அதிகமானவற்றை உள்ளடக்கியதாகும். அது சர்வதேச குற்றச்செயல்களை வழக்குத்தொடுக்கும் நோக்குடன் பயிற்றப்பட்ட நபர்களால் மட்டுமே செய்யப்படவேண்டும். எனவே, சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைப் பணியாளர்கள் ஆகியோர் அவசியமான சான்றுகளை ஆவணப்டுத்துவத்றகான கிரமமான பயிற்சி அத்தியாவசியமானதாகும். கடந்த காலத்திலே இழைக்கப்பட்ட குற்றச் செயல்களை வெளிக்கொணர்வதற்கு அதுபற்றிய அதிக சம்பவக்கதைகளும் அவசியமாகும். மே 2009 இலே யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே அரசபடைகளின்அட்டூழியங்கள் பற்றியோ அல்லது தமிழ்ப்பெண்கள் மீதான திட்டமிடப்பட்ட பாலியல் வன்முறைகள் பற்றியோ முழுத்தகவல்களையும் நாம் இன்னமும் அறியோம். எனவே, இப்படியான குற்றச் செயல்களையிட்ட சான்றுகள் சேகரிக்கப்பட்டு அவை தெரியப்படுத்தப்படவேண்டிய தேவை உள்ளது. மேலும், பாதிப்புற்றோரைப் பொறுப்பான விதத்திலே பிரதிநிதித்துவம் செய்யும்படிக்கு நம்பத்தகுந்த தொழிற்சாதூரியமான பாதிப்புற்றோருக்கான குழுக்களும் அவசியம். பாதிப்புற்றோரின் பிரதிநிதித்துவத்தின் இலக்கானது அரசியல்வாதிகள் எவ்வளவு நம்பக்கூடியவர்களாக இருந்தாலுமென்ன, அரசியல்வாதிகளின் கைகளிலே விடப்படமுடியாத அளவுக்கு அது முக்கியமானதாகும். எனவே, எமக்கு வேண்டியதான முன்னாயத்தமானது பயிற்றுவித்தல், சான்று சேகரித்தல் மற்றும் பாதிப்புற்றோரை அணிதிரட்டுதல் ஆகியவையாகும். இந்த செயலாற்ற இலக்குகள் ராஜபக்‌ஷ ஆட்சியின்கீழ் கைக்கொள்ளப்படுவதென்பது சாத்தியமற்றதாய் இருந்தது. இருந்தாலும் சிறு அளவிலான முயற்சிகள் ஆங்காங்கே எடுக்கப்பட்டுள்ளன. அவ்வகையிலே, அரச மாற்றமானது நீதியை ஏற்படுத்துவது அதிக சாத்தியமாகும்படிக்கு அவசியமானதைச் செய்வதை உறுதிப்படுத்தும் மெய்யான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது எனலாம்.

மேலும், புதிய அரசானது உள்ளூரிலே உண்மை கூறுவிக்கும் பொறிமுறையை ஸ்தாபிக்கும் பட்சத்திலே, அந்தச் செயன்முறையானது மறைக்கப்பட்ட சான்றுகளை வெளிக்கொணரச்செய்யும் சந்தர்ப்பங்களை வழங்கும். எனவே, குற்றச்செயல்கள் இழைத்தவர்களைத் தண்டிக்கும்படி விடுக்கப்படும் சர்வதேச அழுத்தங்களைத் தணிக்கும்படிக்கு பொறிமுறைகள் ஸ்தாபிக்கப்பட்டாலுங்கூட, அவற்றிலே பங்கேற்பது பலத்த நன்மை பயக்கும். இப்படியான வாய்ப்புக்களை வினைத்திறனுள்ள விதத்திலே பயன்படுத்துவது பற்றிய பல உதாரணங்கள் உள்ளன. சிலீ மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளிலே உண்மை பேசவைக்கும் பொறிமுறைகள் ஸ்தாபிக்கப்பட்டதிலே, இராணுவத் தலைவர்கள் அரசால் கைதுசெய்யப்படமாட்டார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்துங்கூட, இராணுவத் தலைவர்களால் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களைப் பாதிக்கப்பட்ட மக்கள் பகிரங்கப்படுத்துவது சாத்தியமாயிற்று. காலப்போக்கிலே இராணுவம் இழைத்த குற்றச்செயல்கள் பற்றிய மோசமான சம்பவக்கதைகள் இராணுவத் தலைவர்களை இலச்சைக்கு உள்ளாக்குவதற்கு உதவின, இறுதியிலே பல வருடங்களுக்குப் பின்பாக அவர்களுக்கு எதிராக நீதிவழக்குகள் தொடுப்பதற்கு இட்டுச்சென்றது. எனவே, உள்ளூர் உண்மை கூறவைக்கும் பொறிமுறையால் வழங்கப்படும் சந்தர்ப்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்வது மிக முக்கியமானதாகும்.

இன்னுமொரு சந்தர்ப்பம் மார்ச் 2015இலே இடம்பெறவுள்ள மனித உரிமைப் பேரவையினூடாக எழக்கூடும். கடந்த வாரக் கட்டுரையிலே, போரையிட்டதான சர்வதேச விசாரணையை ஏற்கெனவே நிலைநாட்டியுள்ள பேரவையானது செய்யக்கூடியவை அதைவிட அதிகமாக எதுவுமில்லை என்பதைச் சுட்டிக்காட்டினேன். ஆயினும், புதிய அரசானது பிரதானமான சர்வதேசச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் சமூகம் ஆகியவற்றுடன் முரண்படுவதைத் தவிர்த்துக்கொள்வதிலே ஆர்வம் கொண்டிருக்கும் என்ற ரீதியிலே, மனித உரிமைகளைப் பொறுத்த விடயத்திலே அவர்களது உறுதிமொழிகள் பதியப்படும் ஒரு தீர்மானத்துக்கு புதிய அரசை இணங்க வைப்பது சாத்தியமானதாயிருக்கலாம். இந்த உறுதிமொழிகள், ஒருவேளை அரசு அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறினால், அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் புதிய அரசைத் திருத்துவதைச் சர்வதேச மயமாக்குவதற்கும் பயன்படுத்தப்படாலம்.

நீதிக்கான புதிய சவால்கள்

புதிய அரசின் அணுகுமுறையானது நீதியையிட்டதான நாட்டத்துக்குச் சில புதிய சவால்களையும் அறிமுகம் செய்யக்கூடும். ராஜபக்‌ஷ ஆட்சியின் மேற்குலக அழுத்தங்களுக்கு இம்மியும் இசையாத அந்த நிலைப்பாடும், மனித உரிமை மீறல்களை அது நிராகரித்தமையும், எல்.எல்.ஆர்.சி. அறிக்கையின் குறைந்தபட்ட சிபாரிசுகளைக்கூடப் பின்பற்றுவற்கு அதன் இணக்கமின்மையும், சீனாவுடனான அதன் சார்வுப்போக்கும் மார்ச் 2014 இலே சர்வதேச விசாரணையைக் கட்டாயமாக்கும் பிரச்சாரத்துக்கு இட்டுச்சென்றது. மைத்திரி – ரணில் ஆட்சியானது மேற்குலகுடனும் இந்தியாவுடனுமான அதன் உறவுகளை மீள்சீரமைத்துக்கொள்ளும் என்பதை ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அதாவது, இலங்கை அரசின்மீது பொதுவான ஒரு அழுத்தக் குறைப்பு இடம்பெறக்கூடும். கொழும்பை வாஷிங்டன் ஆக்ரோஷத்துடன் அணுகியமை இனியும் இடம்பெறாது. வாஷிங்டன், டெல்லி மற்றும் லண்டன் ஆகியவை கொழும்புக்குத் தமது கதவுகளை அகலத் திறந்து வைக்கும். மார்ச் 2014 இலே ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொழும்புடனான விரிவான கலந்துரையாடல் இல்லாமலேயே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும்படி முன்வைத்ததைப்போல அல்லாது, மார்ச் 2015 இன் ஜெனீவா தீர்மானங்கள் புதிய அரசுடனான கலந்துரையாடலின்பேரிலேயே மேற்கொள்ளப்படும். இன்னொரு விதத்திலே கூறுவதானால், சர்வதேச அழுத்தம் மிகவும் விளைதிறன் கொண்டதாக இருக்கும் ஒரு சூழ்நிலைக்கும், ஆயினும், அந்த அழுத்தத்தை உருவாக்குவது கடினமானதாக இருக்கும் சூழ்நிலைக்கும் முகங்கொடுக்க நேரிடும். சர்வதேச அழுத்தங்கள் இல்லாது போய்விடும் என்பது அல்ல நான் கூற விளைவது, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்கள் விடுத்த கூற்றுக்கள் மனித உரிமைகளை அவர்கள் தொடர்ந்தும் முன்னுரிமைப்படுத்துவதைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், மைத்திரி – ரணில் அரசு மனித உரிமைகள் சூழ்நிலையை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கும் பட்சத்திலே அவை விடுக்கும் அழுத்தம் மிருதுவானதாயும், ஆக்ரோஷம் குறைந்ததாயும் இருக்கும்.

அப்படியாயின், ஏற்பட்ட மாற்றத்தால் விளைந்துள்ள சவால்களையும் சந்தர்ப்பங்களையும் நாம் எப்படியாக மேற்கொள்ள வேண்டும்? இரண்டு முக்கிய குறிப்புக்களைப் பட்டியலிட்டு இதனை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.

முதலாவது –

நாம் உள்ளூர் உண்மை பேசவைக்கும் செயன்முறையிலே முழுமையாகப் பங்கேற்றாலுங்கூட, மோசமான குற்றச்செயல்களுக்கான மிகப்பெரும் பொறுப்பாளிகள் அந்தக் குற்றங்களுக்காக தண்டனைகளை பெறவேண்டும் என்பதை நாம் இடைவிடாது தொடர்ந்து கோரவேண்டும்.

இரண்டாவது –

உயர் வினைத்திறனும் உயர் தராதரமும் கொண்ட சான்று சேகரிக்கும் செயற்பாடுகளுடன் பங்கேற்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். இறுதியாக, நாம் பொறுமையுடனும் நிதானமாகவும் செயற்பட்டு, திறமைமிக்க சாணக்கியத்தினூடாகவும் கிடைக்கும் வாய்ப்புக்களைச் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இது எங்கள் தார்மீகப் பொறுப்பு.

நிறான் அங்கிற்றல்