படம் | Eranga Jayawardena/Associated Press, THE NEW YORK TIMES

“அவர்கள், ஈழத்திலிருந்தே அவர்களது பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்…” [i]

மஹிந்த ராஜபக்‌ஷ

தேர்தல் காலத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) சிறுபான்மைப் பீதியைக் கிளறிவிடுவதன் மூலமாக போதுமான சிங்கள வாக்குகளை வெல்வதற்கு முயற்சித்து – தவறிவிட்டது. தேர்தல் தோல்வியின் பின் கடுமையாக முனை மழுங்கடிக்கப்பட்ட ஐ.ம.சு.கூ., ஒரு துரிதமான மீள்வருதலை மேற்கொள்ளும் நம்பிக்கையில் இந்த இனவாத மேளத்தை அடிப்பதையே இப்பொழுதும் தொடர்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மெதமுலனவிலுள்ள தனது ஆதரவாளர்களிடம் வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்திலுள்ள வாக்காளர்கள் தனக்கு எதிராக வாக்களித்தமையினாலேயே தான் தோல்வியுற்றதாக அறிவித்ததன் மூலமாக இதற்கான வழியைக் காட்டிவிட்டார். அது உண்மை, ஆனால் முற்றிலுமான உண்மையல்ல. சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவைப் பெறத் தவறியதால் மட்டும் மஹிந்த தோற்கவில்லை. பெரும்பான்மைச் சமூகத்தின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறிய காரணத்தினாலும் கூட மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியுற்றார்.

“மோசமான வரலாறு தீங்கற்ற வரலாறன்று” [ii] என எரிக் ஹொப்ஸ்பவாம் எச்சரித்துள்ளார். திரு. ராஜபக்‌ஷவும் மற்றும் அவரது கடும்போக்கு ஆதரவாளர்களும் 2015 தேர்தல் பற்றி ஒரு மோசமான வரலாற்றைப் புனைவதற்கு எப்படியாகிலும் முயற்சித்தனர். பெரும்பான்மை மற்றும் சிறுபான்மைச் சமூகங்களிடையே ஓர் இணைக்க முடியாத பிளவை உருவாக்குவதன் மூலம் அரசியல் சம்பந்தத்தை மீளப்பெறுவது அவர்களது இலக்காக இருந்ததினால் அவர்களது முயற்சி ஒரு அபாயகரமானது. அவர்கள் பயம் மற்றும் வெறுப்பு என்பவற்றின் ஒரு அலையை உருவாக்கி மீண்டும் அதிகாரத்திற்கு வர, அதன் மேல் சவாரி செய்வதற்கு விரும்பினர்.

2010 அல்லது 2005இல் கூட, மஹிந்த ராஜபக்‌ஷ வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தின் ஆதரவைக் கொண்டிருக்கவில்லை. இருந்தும் அவரால் வெல்வதற்கு முடிந்தது; 2005இல் அவர் வென்றார், அதற்குப் புலிகள் விதித்த பகிஷ்கரிப்புக்கே நன்றி தெரிவிக்க வேண்டும். யுத்தத்தை வென்றமையைப் பாராட்டுவதற்கு அநேகமான சிங்களவர்கள் அவருக்கு வாக்களித்தமையினால் 2010இல் அவர் வென்றார்.

சிறுபான்மை வாக்குகளை அவர் இழந்த காரணத்தினால் மட்டும் மஹிந்த ராஜபக்‌ஷ 2015இல் தோற்கவில்லை. 2010இல் அவரை ஆதரித்த ஒரு பெரும் அளவிலான சிங்கள வாக்காளர்கள் 2015இல் எதிர்த்தரப்புக்கு வாக்களித்ததினாலும் மற்றும் முதலாவது தடவையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் ஒரு அறுதிப் பெரும்பான்மை அவருக்கு எதிராக வாக்களித்த காரணத்தினாலுமே மஹிந்த ராஜபக்‌ஷ 2015இல் தோல்வியுற்றார்.

மஹிந்த ராஜபக்‌ஷவிலிருந்து எதிர்த்தரப்புக்கான வாக்காளர் நகர்வு வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே உள்ள ஒவ்வொரு மாவட்டம் உட்பட இலங்கை முழுவதுமாக நிகழ்ந்தது. இந்த பாரிய நகர்வின்றி, சிறுபான்மை ஆதரவோடும் கூட மைத்திரிபால சிறிசேனாவினால் தேர்தலில் வென்றிருக்க முடியாது.

மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு வாக்களிக்காது மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்கையில் கற்பனை ரீதியான இனத்துவ – மதரீதியான தனியுரிமை இலங்கையை விட உண்மையிலேயே இருக்கின்ற இன, மத ரீதியான பன்மைத்துவ இலங்கை தன்னை வலியுறுத்திக் கொண்டது. மஹிந்த ராஜபக்‌ஷவின் தோல்வி சிங்கள, தமிழ் அல்லது முஸ்லிம் மேற்கொண்ட முயற்சியல்ல. அது இலங்கையரின் முயற்சியாகும். இனத் துவேஷத்தில் குளிர்காயும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் அது ஒரு வெட்கக்கேடானது மட்டுமன்றி எதிரிடையானது என்பதற்குமான ஒரு நினைவூட்டியாக இது திகழும் என நம்புகிறோம்.

2005, 2010 மற்றும் 2015

வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2015 மற்றும் 2010 என்பவற்றுக்கிடையில் மஹிந்த ராஜபக்‌ஷவின் சராசரி வாக்குகளிலான வீழ்ச்சி – அவரது வாக்கு வங்கியிலான ஒரு கணிசமான வீழ்ச்சியையே சுட்டிக்காட்டுகிறது.

அட்டவணை 1 | 2010 மற்றும் 2015இல் வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் மஹிந்த ராஜபக்‌ஷவின் சராசரி வாக்குகளினான வீழ்ச்சி

மாவட்டம் 2010 – 2015 சராசரி வாக்குகளிலான வீழ்ச்சி
கொழும்பு 18%
கம்பஹா 19.7%
களுத்துறை 16.5%
கண்டி 18.3%
மாத்தளை 13.9%
நுவரெலியா 22.8%
காலி 12.6%
மாத்தறை 11.8%
ஹம்பாந்தோட்டை 6.2%
குருநாகல் 15.25%
புத்தளம் 16.6%
அநுராதபுரம் 20%
பொலன்னறுவை 36.4%
பதுளை 7.7%
மொனராகலை 10.95%
இரத்தினபுரி 12.6%
கேகாலை 16.15%

தபால் மூல வாக்களிப்புகளில் கூடுதலான பின்னடைவை மஹிந்த ராஜபக்‌ஷ சந்தித்தார். தபால் மூல வாக்குகள் என்பது பொலிஸ் மற்றும் இராணுவப் படையணியினர் மற்றும் தேர்தல் பணிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுடையதாகும். துல்லியமான புள்ளி விபரங்கள் இல்லாத போதிலும், தபால் மூல வாக்குகளில் அறுதிப் பெரும்பான்மையானவை சிங்களவர்களுடையதாகும்.

2005 மற்றும் 2010இல் மஹிந்த ராஜபக்‌ஷ பெரும் வித்தியாசங்களில் தபால் மூல வாக்குகளில் வென்றிருந்தார். 2015இல் அவர் தபால் மூல வாக்குகளிலும் கூட தோற்கடிக்கப்பட்டிருந்தார். பெரும்பான்மைச் சமூகம் மத்தியில் அவருக்கான ஆதரவு குறைந்து போயுள்ளமைக்கு இது ஒரு மிகவும் தெளிவான குறிக்காட்டியாகும்.

அட்டவணை 2 | 2010 மற்றும் 2015இல் வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் மஹிந்த ராஜபக்‌ஷவின் தபால் மூல வாக்குகளிலான வீழ்ச்சி

மாவட்டம் 2010 – 2015 தபால் மூல வாக்குகளிலான வீழ்ச்சி
கொழும்பு 19.4%
கம்பஹா 26.52%
களுத்துறை 22.6%
கண்டி 18.3%
மாத்தளை 26.7%
நுவரெலியா 28.45%
காலி 20%
மாத்தறை 16.2%
ஹம்பாந்தோட்டை 8.9%
குருநாகல் 28.6%
புத்தளம் 26.4%
அநுராதபுரம் 35.45%
பொலன்னறுவை 56%
பதுளை 22.8%
மொனராகலை 25.1%
இரத்தினபுரி 18.4%
கேகாலை 24.2%

புள்ளிவிபரங்கள் தெளிவாக நிரூபிப்பது போன்று, 2010 – 2015 இற்கிடையில் மஹிந்த ராஜபக்‌ஷவின் வாக்காளர் ஆதரவு, அவரது சொந்தப் பிரதேசமான ஹம்பாந்தோட்டை உட்பட, இலங்கையின் நீள மற்றும் அகலமெனும் அனைத்துப் பகுதிகளுமாக வீழ்ச்சி அடைந்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி கூறுவது போல, ராஜபக்‌ஷவின் தேர்தல் தோல்வி அதிசயம் வடக்கு – கிழக்கு – பெருந்தோட்டத்தினால் ஏற்பட்ட நிகழ்வல்ல. அது உண்மையில் ஒரு இலங்கையர்களினால் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வாகும்.

வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் மஹிந்த ராஜபக்‌ஷவினால் இழக்கப்பட்ட வாக்குகள் எதிர்த்தரப்பினால் ஈட்டிக் கொள்ளப்பட்ட வாக்குகளாகும் என்பதை 2010 மற்றும் 2015 இற்கிடையில், எதிர்த்தரப்பின் மொத்த மற்றும் தபால் மூல வாக்குகளிலான பெரும் அதிகரிப்பு தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

அட்டவணை 3 | 2010 – 2015 இற்கிடையில் வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் எதிர்த்தரப்பின் வாக்குகளிலான அதிகரிப்பு

மாவட்டம் 2010 – 2015 சராசரி வாக்குகளிலான அதிகரிப்பு 2010 – 2015 தபால் மூல வாக்குகளிலான அதிகரிப்பு
கொழும்பு 21.8% 28.4%
கம்பஹா 33.7% 56.2%
களுத்துறை 30.9% 50%
கண்டி 24.3% 55.6%
மாத்தளை 24.2% 58.9%
நுவரெலியா 22.5% 57.3%
காலி 24.5% 37.7%
மாத்தறை 25.5% 32.5%
ஹம்பாந்தோட்டை 15.1% 21.4%
குருநாகல் 29% 61.2%
புத்தளம் 26.4% 53.5%
அநுராதபுரம் 42.2% 90.6%
பொலன்னறுவை 71.9% 138.1%
பதுளை 10.5% 42.7%
மொனராகலை 28.7% 58.8%
இரத்தினபுரி 25.2% 42.1%
கேகாலை 29.1% 50.9%

மஹிந்த ராஜபக்‌ஷவின் 2015இலான செயற்பாட்டை அவரது 2005இன் செயற்பாட்டுடன் ஒப்பிடும் போது ராஜபக்‌ஷவின் வாக்கு வங்கி வீழ்ச்சியானது மேலும் ஒரு தெளிவான ஒரு தோற்றப்பாட்டை வெளிப்படுகிறது.

அட்டவணை 4 | 2005 – 2015இல் வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஒப்பீட்டுச் செயற்பாடு

மாவட்டம் 2005 2015 மாற்றம்
கொழும்பு 47.96% 43.4% -9.5%
கம்பஹா 54.78% 49.49% -9.7%
களுத்துறை 55.48% 52.65% -5.1%
கண்டி 44.3% 44.23% -0.2%
மாத்தளை 48.09% 51.41% 6.9%
நுவரெலியா 27.97% 34.06% 21.8%
காலி 58.41% 55.64% -4.7%
மாத்தறை 61.85% 57.81% -6.5%
ஹம்பாந்தோட்டை 63.43% 63.02% -0.7%
குருநாகல் 52.26% 53.46% 2.3%
புத்தளம் 48.14% 48.97% 1.7%
அநுராதபுரம் 55.08% 53.59% -2.7%
பொலன்னறுவை 52.61% 41.27% -19.7%
பதுளை 45.18% 49.15% 8.8%
மொனராகலை 56.94% 61.45% 7.9%
இரத்தினபுரி 53.01% 55.74% 5.1%
கேகாலை 51.02% 51.82% 1.6%

இதற்கு முரணான வகையில் எதிர்த்தரப்பினர் வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே உள்ள அநேகமான மாவட்டங்களில் 2005இல் செயற்பட்டதை விட 2015இல் சிறப்பாகச் செயற்பட்டுள்ளனர். மாத்தறையிலிருந்து காலி வரை முன்னோக்கிய பெரும் முன்னேற்றத்துடன், தென் மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் இது உள்ளடக்குகிறது.

அட்டவணை 5 | 2005 – 2015இல் வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே அமைந்துள்ள மாவட்டங்களில் எதிர்த்தரப்பின் ஒப்பீட்டு ரீதியிலான செயற்பாடு

மாவட்டம் 2005 2015 மாற்றம்
கொழும்பு 51.12% 55.93% 9.4%
கம்பஹா 44.23% 49.83% 12.7%
களுத்துறை 43.2% 46.46% 7.5%
கண்டி 54.33% 54.56% 0.4%
மாத்தளை 50.25% 47.22% -6.0%
நுவரெலியா 70.37% 63.88% -9.2%
காலி 40.26% 43.37% 7.7%
மாத்தறை 36.71% 41.24% 12.3%
ஹம்பாந்தோட்டை 35.23% 35.93% 2.0%
குருநாகல் 46.72% 45.76% -2.0%
புத்தளம் 50.71% 50.04% -1.3%
அநுராதபுரம் 43.62% 45.44% 4.2%
பொலன்னறுவை 46.25% 57.8% 25.0%
பதுளை 53.11% 49.21% -7.3%
மொனராகலை 41.65% 37.45% -10.1%
இரத்தினபுரி 45.55% 43.01% -5.6%
கேகாலை 47.67% 47.05% -1.3%

மஹிந்த ராஜபக்‌ஷவின் தோல்விகள், 2010 மற்றும் 2015இற்கு இடையிலானவை மட்டுமல்ல, அவை 2005 மற்றும் 2015 இற்கும் இடையிலானவை என்பதோடு அது மைத்திரிபால சிறசேனவின் வெற்றியுமாகும். அந்தத் தோல்விகள் இன்றி எதிர்த்தரப்பு தோல்வியடைந்திருக்கும் என்பதோடு ராஜபக்‌ஷ நிலைத்திருந்திருப்பார்.

2015இல் மஹிந்த ராஜபக்‌ஷ சிறுபான்மைச் சமூகத்தின் ஆதரவைப் பெறத் தவறியதாலும் மற்றும் 2010 அல்லது 2005இலும் அவர் வென்ற சிங்கள வாக்குகளைத் போதியளவு தக்கவைப்பதன் மூலம் இழப்பைச் சரி செய்வதற்குத் தவறியதினாலும் தோற்கடிக்கப்பட்டார்.

திரு. ராஜபக்‌ஷவின் ஆபத்தான – தவறான தேர்தல் பகுப்பாய்வானது, சிங்கள – பௌத்தர்களே இலங்கையின் தனியுரிமையாளர்கள்; சிறுபான்மையினர் இணை உரிமையாளர்கள் அல்லர், அவர்கள் வெறுமனே விருந்தாளிகள் எனும் அவரது பிற்போக்கான மற்றும் எதிர்விளைவான உலகக் கண்ணோட்டத்தின் ஒரு தவிர்க்க முடியாத உப உற்பத்தியாகும். அவரது பார்வையில் அவர் ‘சிறுபான்மை விருந்தாளிகளால்’ தோற்கடிக்கப்பட்டாரேயன்றி ‘சிங்கள உரிமையாளர்களால் அல்ல’. அதனால், அவரது பார்வையில், அவரது தோல்வி ஒரு சட்ட விரோதமானதொன்று. இந்த இனவாத பொருள் கொள்ளல் திரு. ராஜபக்‌ஷ ஏன் நல்லிணக்கம் மற்றும் போருக்குப் பிந்திய ஓர் ஒத்திசைவான சமாதானத்திற்காகச் செயற்படவில்லை என்பதையும் மற்றும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களையும் அச்சுறுத்துவதற்கு பொதுபல சேனா மற்றும் ஏனையவர்களையும் ஏன் அனுமதித்தார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. ராஜபக்‌ஷவின் பாதுகாப்பு, பெரும்பான்மை சிறுபான்மைகள் குறித்து அச்சங் கொள்வதையும் மற்றும் சிறுபான்மைகள் பெரும்பான்மை குறித்து அச்சங் கொள்வதிலுமே தங்கியுள்ளது.

உண்மையில் பிரித்து ஆள்வதே ராஜபக்‌ஷவின் வழியாகும். அதனாலேயே அவர்களது தோல்வி நாட்டின் வெற்றியாகும்.

[i] http://www.gossiplankanews.com/2015/01/mahinda-rajapaksas-medamulana-speech.html#more

[ii] Identity History is not enough – On History

Racist Tom-Toms and Electoral Statistics என்ற தலைப்பில் Groundviews தளத்துக்காக திஸரணி குணசேகர எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.