“முஸ்லிம் அரசியல் தலைமைகள் யாருக்கு ஆதரவளித்தாலும், அது மக்கள் மீது செல்வாக்கு செலுத்தப்போவதில்லை. யாருக்கு வாக்களிக்கவேண்டும் என தலைமைகளுக்கு முன்னரே மக்கள் தீர்மானித்து விட்டனர்” என்று கூறுகிறார் சர்வதேச விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீப் பாரூக்.

“அரசுடன் இருந்தாலும், அரசை விட்டு வெளியேறினாலும் அவர்களது முடிவை மக்கள் ஆதரிக்கப்போவதில்லை. அவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு தவறிழைத்துவிட்டார்கள். இவ்வளவு காலம் அரசுடன் இருந்துவிட்டு இப்போது வெளியேறியிருப்பது முஸ்லிம் சமூகம் மீது கொண்ட அக்கறையால் அல்ல” என்கிறார் லத்தீப்.

‘மாற்றம்’ தளத்துக்கு வழங்கிய நேர்க்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில் –

முஸ்லிம் மக்களை அவமானப்படுத்தியதற்கு ஒப்பானதாகும்

தம்புள்ளை, அநுராதபுரம் பள்ளிவாசல் மீதான தாக்குதல்கள், ஹலால் பிரச்சினையின் போது, முஸ்லிம்களின் வியாபார ஸ்தானங்கள் மீதான தாக்குதல்கள், குறிப்பாக அளுத்கம பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னராவது வெளியேறியிருக்க வேண்டியவர்கள். ஏன் அப்போது அரசை விட்டு அகலவில்லை.

அளுத்கம பகுதியில் 2,000இற்கும் மேற்பட்டோர் ஆயுதங்கள் சகிதம் முஸ்லிம் மக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதோடு பெருமளவான சொத்துக்களை அழித்தனர். இன்னும் பெருமளவு சொத்துக்களை சூறையாடினர். அப்போதாவது அரசைக் கண்டித்து அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகி நிற்பார்கள் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி நடக்கவில்லை.

அதன் பின்னர் நடந்த சம்பவத்தை அடுத்தாவது முஸ்லிம் தலைமைகள் அரசு மீது அதிருப்தி கொண்டு வெளியேறுவார்கள் என மக்கள் எதிர்பார்த்தனர். மியான்மாரில் கிட்டத்தட்ட 1,800 – 2,000 அப்பாவி முஸ்லிம் மக்களை கொலை செய்த, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கடலில் தள்ளி கொலை செய்த இயக்கம் ஒன்றின் தலைவரான அஷின் விராத்து இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்தது முஸ்லிம் மக்களை அவமானப்படுத்தியதற்கு ஒப்பானதாகும். பிரமாண்டமாக வரவேற்பளிக்கப்பட்டு, விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டு, உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டபோதே முஸ்லிம் தலைமைகள் வெளியேறி இருக்கவேண்டும். இப்போது இவர்கள் செல்லாக்காசாகி விட்டனர்.

முஸ்லிம் காங்கிரஸோடு மட்டுமன்றி அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் முஸ்லிம் மக்கள் இப்போது வெறுப்பு கொண்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவ்வளவு நாள் இருந்துவிட்டு இப்போது ஏன் அரசை விட்டு வெளியேற வேண்டும்? தக்க தருணத்தில் தீர்மானம் எடுத்திருந்தால் மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்திருப்பார்கள். சுயநலம் கொண்டு செயற்படுகிறார்கள்.

5 வருடங்களுக்கு முன்னர் இருந்த முஸ்லிம் சமூகம் வேறு. இப்போது இருப்பர்கள் வேறு. தற்போது நன்கு விழிப்படைந்து காணப்படுகின்றனர். எது நல்லது, எது கெட்டது – யார் நல்லவர், யார் கூடாதவர் – முஸ்லிம்களுக்கு யார் உதவியாக இருப்பார், யாருடைய தலைமையின் கீழ் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை நன்கு அறிந்த சமூகமாக முஸ்லிம்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர்.

அரசின் ஆதரவுடன் அராஜகம்

நான்கு வருடகாலமாக 350இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இவையனைத்தும் நடந்திருக்கின்றன. தம்புள்ளை பகுதியில் பௌத்த மதகுரு தலைமையில் பள்ளிவாசல் அடித்து நொறுக்கப்பட்டது. மஹியங்கனைப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது பன்றி இரத்தம் வீசப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சிதான் அளுத்கம சம்பவம். 2,000இற்கும் மேற்பட்டோர் அளுத்கம பகுதியில் அராஜகம் புரிந்தனர். இதுவரை ஒருவரையாது கைதுசெய்தார்களா? தண்டித்தார்களா? இரண்டாயிரம் பேரும் வேற்று கிரகத்திலிருந்தா வந்தனர்? இந்த நாட்டில்தானே வாழ்க்கின்றனர். ஏன் கைதுசெய்யவில்லை. ஆக, இந்த கூட்டத்தினருக்கு அரசின் ஆதரவு, ஆசிர்வாதம் இருக்கிறதென்பதை முஸ்லிம் மக்கள் அறிவார்கள்.

முஸ்லிம்கள் மைத்திரிபாலவுக்கே ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்குதான் முஸ்லிம் மக்கள் வாக்களிப்பார்கள். அவர் இன ஒற்றுமை, நீதி நிலைநாட்டல், நீதிக்கு புறப்பாக செயற்படுகிறவர்களை தண்டிப்பது தொடர்பாக பேசிவருகிறார். ஆனால், மறுபுறம் ஒன்றுமே நடக்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம். இந்த அரசின் கீழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு, மத வழிபாடு தொடர்பாக எதுவித உத்தரவாதமும் இல்லை. மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாட்டில் அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீப் பாரூக் உடனான வீடியோ நேர்க்காணலை கீழ் காணலாம்.