படம் | Srilankabrief
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் கூடி சில முடிவுகளில் உடன்பட்டிருக்கின்றனர் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ‘தமிழ் தேசிய சபை’ ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. கூட்டமைப்பு அவ்வப்போது கூடி, முடிவெடுப்பதும், பின்னர் அந்த முடிவுகளை கிடப்பில் போடுவதும், தமிழ் அரசியல் வாசகர்களுக்கு புதிய விடயமல்ல. ஆனால், இதுவரை முடிவுகள் எடுக்கப்பட்ட போதிருந்த நிலைமைக்கும் தற்போதிருக்கின்ற நிலைமைக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. முன்னைய முடிவுகளின் போது, ஜயா சம்பந்தனே தமிழரசு கட்சியின் தலைவராகவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் இருந்தார். ஆனால், தற்போது அவர் தமிழரசு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேறி கூட்டமைப்பின் தலைவராக மட்டுமே இருக்கின்றார். ஆனால், தற்போது உடன்பாடு காணப்பட்டதாக சொல்லப்படும் இந்த முடிவுகளாவது செயல்வடிவம் பெறுமா?
வெளித் தோற்றத்தில் பார்த்தால் சிறந்த முடிவுகளே எடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பரந்துபட்ட மக்கள் அமைப்புக்களை உடள்ளடக்கி தமிழ் தேசிய சபை ஒன்றை உருவாக்குதல் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு எதிராகவோ அல்லது முரணாகவோ செயலாற்றும் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பது போன்ற முடிவுகள் வரவேற்கத் தக்கவையே. இதற்கு முதலில் கூட்டமைப்பின் கொள்கை என்னவென்பதை தெளிவாக வரையறுக்க வேண்டும். கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக வெளித்தெரிய ஆரம்பித்து ஜந்து வருடங்கள் கடந்துவிட்டன. இந்த ஜந்து வருடங்களில் கூட்டமைப்பானது, தேர்தல் விஞ்ஞாபனங்களில் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்ததைத் தவிர ஒரு அரசியல் கொள்கை நிலைப்பாட்டை இதுவரை முன்வைத்ததில்லை. தேர்தல் விஞ்ஞாபனங்கள் என்பவை ஒரு குறிப்பிட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படுபவையாகும். உதாரணமாக, ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனிநாடு பற்றி குறிப்பிட்டிருந்தது. இன்றைய சூழலில் அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பெறுமதி என்ன? எனவேதான் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஒரு அரசியல் கட்சியின் இறுதி நிலைப்பாடாக ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறேன்.
எனவே, கூட்டமைப்பிலுள்ள பலதரப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் ஒரு ஒழுக்க வரையறைக்குள் கொண்டுவர வேண்டுமாயின், முதலில் கூட்டமைப்பு தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை மக்கள் முன் தெளிவாக முன்வைக்க வேண்டும். அவ்வாறில்லாது போனால் உறுப்பினர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது போகும். இன்று கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்துவரும் நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை எடுத்து நோக்கினால் ஒரு சிலர் தீவிரவாத போக்கிற்கு நெருக்கமானவர்களாக தங்களை இணங்காட்ட முயல்கின்றனர். உண்மையில் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல தவிர, அதற்கான தகுதியும் அவர்களிடம் இல்லை. இருப்பினும், சில சலுகைகளுக்காகவோ அல்லது தங்களை பிரமாண்டமாக காண்பிக்கும் நோக்கிலோ அவ்வாறு நடந்து கொள்கின்றனர். ஆனால், அவர்களது பேச்சுகள் கூட்டமைப்பின் பயணத்திற்கு ஊறுவிழைவிக்கின்றன. கூட்டமைப்பின் தலைமைக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. எனவே, அப்படியானவர்கள் மீது கூட்டமைப்பின் தலைமையால் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க முடியும்? இதுவரை ஏதாவது நடவடிக்கையை எடுக்க முடிந்ததா? ஜக்கிய இலங்கைக்குள் நியாயமான ஒரு தீர்வை காண முயல்வதாக கூட்டமைப்பின் தலைவர் ஜயா சம்பந்தன் கூறி வருகின்றார். ஆனால், அவர் தலைமை தாங்கும் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ, என்னுடைய ஆத்மார்த்த தலைவர் பிரபாகரன் என்கிறார். இப்படியான ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கொள்கைசார் வரையறை கூட்டமைப்பிடம் இருக்கிறதா?
ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும், இலங்கை மீதான விசாணை தொடர்பில் ஏற்கனவே கூட்டமைப்பிற்குள் ஒரு தெளிவான நிலைப்பாடுண்டு. அதாவது, தருஸ்மன் அறிக்கையை பின்தொடர்வதென்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். இதனை பல தடவைகள் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பகிரங்கமாக கூறியிருக்கின்றார். தருஸ்மன் அறிக்கை அல்லது ஜ.நா. நிபுணர் குழு அறிக்கையில் எங்காவது இனப்படுகொலை (Genocide) என்னும் சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? அவ்வாறாயின் வடக்கு மாகாண சபையில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்று பிரேரணை நிறைவேற்ற முற்படும் டெலோ சிவாஜிலிங்கத்தின் மீது கூட்டமைப்பின் தலைமையால் எத்தகைய நடவடிக்கையை எடுக்க முடியும்? இதேபோன்று ஜயா சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு தற்போது மனித உரிமைகள் பேரவையால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் ஜ.நாவுடன் ஒத்துழைப்பது என்னும் முடிவை எடுத்திருக்கிறது. அவ்வாறாயின் குறித்த விசாரணைக்காக மனித உரிமைகள் பேரவை வரையறுத்திருக்கும் கால அளவை 1974 வரையில் மாற்றுமாறு கூறி கைச்சாத்திட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மீது கூட்டமைப்பின் தலைமையால் நடவடிக்கை எடுக்க முடியுமா? இப்படியான கேள்விகளுக்கு நிச்சயமாக கூட்டமைப்பின் தலைமையால் பதில் சொல்ல இயலாது.
கூட்டமைப்பு தமிழ் மக்களின் தலைமையாக வெளித்தெரிந்த நாளில் இருந்து இப்படியான முரண்பாடுகளும் தொடர்ந்தவாறுதான் இருக்கின்றன. இதற்கான அடிப்படையான காரணம், நான் மேலே குறிப்பிட்ட கூட்டமைப்பிடம் தெளிவானதொரு கொள்கை இன்மையாகும். கூட்டமைப்பு தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டைத் தெளிவாக முன்வைக்காத காரணத்தினால்தான் எதனையும், எவரும் பேசலாம் என்னும் நிலைமை காணப்படுகிறது. எனவே, கூட்டமைப்பு தற்போது இணக்கம் கண்டிருக்கிற தமிழ் தேசிய சபை’ என்னும் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டுமாயின், முதலில் தங்களுடைய கொள்கை நிலைப்பாடு என்ன என்பதை கூட்டமைப்பு பகிரங்கப்படுத்த வேண்டும். ஒரு கட்சியின் அல்லது அரசியல் இயக்கத்தின் கொள்கை நிலைப்பாடென்பது, உள்ளக மற்றும் வெளியக விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இந்த அடிப்படையில் நோக்கினால், இலங்கைக்குள் தங்களுடைய கொள்கை நிலைப்பாடு என்ன என்பதையும் அதேவேளை வெளிவிவகாரங்களில் தங்களின் கொள்கை நிலைப்பாடு என்ன என்பதையும் உள்ளடக்கியவாறு கூட்டமைப்பிற்கான அரசியல் கொள்கை தயார் செய்யப்பட வேண்டும்.
உள்ளக ரீதியில் ஜக்கிய இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வை காண்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பதில் விவாதங்கள் தேவையற்றது. ஏனெனில், அதுவே யதார்த்தமானது. ஆனால், அது எவ்வாறானதொரு தீர்வாக இருக்க வேண்டும் என்பதையும் கூட்டமைப்பு தெளிவாக முன்வைக்க வேண்டும். இரண்டு, வெளிவிவகாரங்களில் கூட்டமைப்பு எத்தகையதொரு கொள்கை நிலைப்பாட்டை கடைபிடிக்கிறது என்பதையும் தெளிவாக முன்வைக்க வேண்டும். உதாரணமாக, உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டமைப்பு எத்தகைய நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும். ஒரு சிறிய இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் கட்சிக்கு இப்படியொரு நிலைப்பாடு தேவைதானா என்னும் கேள்வி எழலாம். ஆனால், அது அவசியம் என்பதே இப்பத்தியின் வாதமாகும். கட்சி சிறியதா அல்லது பெரியதா என்பதற்கு அப்பால் ஒவ்வொரு அரசியல் அமைப்புக்களும் உலகளாவிய அரசியல் போக்குகள் தொடர்பில் தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். அப்படி வெளிப்படுத்தும் போதுதான் குறித்த அரசியல் கட்சிக்கான நட்புவட்டங்கள் உருவாகும். இதற்கும் அப்பால் பிறிதொரு முக்கியமான காரணமும் உண்டு. கூட்டமைப்பிற்குள் இருக்கும் மேலும் உள்நுழைய முயலும் தீவிரவாத சக்திகளை ஓரங்கட்ட அல்லது வெளியேற்றுவதற்கு மேற்படி கொள்கை நிலைப்பாடு உதவும். அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் தீவிரவாதம் தொடர்பாக அறிக்கையொன்றை (Country Reports on Terrorism) வெளியிட்டு வருகிறது. இறுதியாக வெளிவந்த அறிக்கையில் 57 அமைப்புக்கள், சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களாக பட்டியல் படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் ஒன்று.
இது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? இந்த அறிக்கையில் உலகளவில் அச்சுறுத்தக் கூடிய அமைப்புக்களாக கருதப்படும் பல அமைப்புக்கள் பட்டியல்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த புற யதார்த்தத்தை கருத்தில் கொண்டுதான் ஜயா சம்பந்தன் தன்னுடைய நாடாளுமன்ற உரையில் புலிகளின் செயற்பாடுகள்தான், அவர்கள் பயங்கரவாத வரையறைக்குள் கொண்டு வரப்பட்டதற்கான காரணம் என்பதை தெளிவுபடுத்தியிருந்தார். இதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் பயங்கரவாத வரையறையை அவர் நியாயப்படுத்தியிருந்தார். சிங்கள மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தை முன்வைத்தே ஜயா அவ்வாறு தெரிவித்திருந்தார். ஆனால், கூட்டமைப்பில் உள்ளவர்களால் அது போதியளவு விளங்கிக் கொள்ளப்படவில்லை. எனவே, இதனை அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லிக் கொண்டிருப்பதற்கு மாறாக ஒரு கொள்கை நிலைப்பாடாக முன்வைப்பதே சரியாகும். சமீபத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மாவை சேனாதிராஜா சாத்வீக போராட்டத்திற்கான காலக்கெடுவை அறிவித்திருந்தார். அது பிறிதொரு விவாதத்திற்குரியதாகும். ஆனால், அவ்வாறானதொரு சாத்வீக அரசியலை செய்ய வேண்டுமாயினும், கூட்டமைப்பினர் வசம் தெளிவானதொரு கொள்கை நிலைப்பாடு இருப்பது அவசியம். ஒரு பக்கம் புலிகளின் ஆதரவாளர்களாகக் காட்டிக் கொண்டு இன்னொரு புறம் எவ்வாறு காந்தீய வழியை பின்பற்ற முடியும்?
தமிழ் தேசிய சபை என்பது நல்ல சிந்தனை என்பதில் ஜயமில்லை. ஆனால், அந்த நல்ல எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டுமாயின், முதலில் ஒரு தெளிவான கொள்கை அவசியம். அவ்வாறில்லாது போனால் கூட்டமைப்பினால் உருவாக்கப்படும் தேசிய சபை என்பது மேலும் பல தீவிரவாத சக்திகளை வளர்த்துவிடுவற்கான களமாக மாறுவது நிச்சயம். இது மேலும் கூட்டமைப்பின் நகர்வை கேள்விக்குள்ளாக்கும். எனவே, கூட்டமைப்பின் முன்னாலுள்ள முதல் பணி, ஒரு தெளிவான நிலைப்பாட்டை முன்வைப்பதாகும். அவ்வாறு முன்வைக்கப்படும் கொள்கை கூட்டமைப்பினால் சீவித்துவரும் தீவிரவாத வேடம் போடும் சக்திகளை வெளியேற்றுவதற்கு அல்லது குரலற்றவர்களாக்குவதற்கு பயன்பட வேண்டும். மேலும், புதிய மக்கள் விரோத சக்திகள் உள்நுழைவதை தடுப்பதற்கும் அது பயன்பட வேண்டும். அப்படியொரு கொள்கையை கூட்டமைப்பால் உருவாக்க முடியுமா?
தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.