படம் | பொதுபல சேனாவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
இறுதியில் பல்வேறு சலசலப்புகளுக்குப் பின் விறாத்து பிக்கு இலங்கை வந்து சேர்ந்தாகிவிட்டது. விறாத்து பிக்குவின் வருகை சாதாராணமான ஒன்றல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் முனைப்பு பெற்றிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத நடவடிக்கைகளுக்கு தத்துவார்த்த பலத்தை கொடுத்ததும் விறாத்து பிக்குதான். BBSக்கு முன்னுதாரண தலைவராக விளங்குவதும் இவர்தான்.
மியான்மாரைச் சேர்ந்த 969 என்கிற அமைப்பின் ஸ்தாபகரும் அதன் தலைவருமான அஸின் விறாத்து என்கிற பௌத்த துறவி இன்று உலகம் முழுவதும் பிரபலமான பௌத்த பயங்கரவாதி. சென்ற வருடம் TIME சஞ்சிகை தனது பிதான அட்டைப்படக் கட்டுரையாக “பௌத்த பயங்கரவாதத்தின் முகம்” “The Face of Buddhist Terror” என்கிற கட்டுரையை வெளியிட்டது. அந்தக் கட்டுரையில் விறாத்து பிக்கு ஒரு பௌத்த பின்லாடன் என்று வர்ணித்திருந்தது. அந்த சஞ்சிகையின் 400 பிரதிகளை இலங்கை சுங்கத்திணைக்களம் தடை செய்தது. ஜூன் 30ஆம் திகதி ஆங்கில ஊடகங்கள் பல வெயிட்ட செய்தியின்படி பொதுபல சேனாவின் வேண்டுகோளுக்கமைய அது தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டிருந்தது.
‘டைம்ஸ்’ கட்டுரையைத் தொடர்ந்து மியன்மார் ஜனாதிபதி தைய்ன் சைன் (Thein Sein) விறாத்து பிக்குவிற்கு பூரண பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்திருந்தார். 969 இயக்கத்தை பாதுகாப்பதன் ஊடாக பௌத்த மத நலன்களை தாம் பாதுகாப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழிப்பதற்கு காரணமான இந்த 969 இயக்கத்துக்கும் பொதுபல சேனாவுக்கும் உள்ள ஒற்றுமைகள் வெறும் தற்செயலல்ல. அவற்றின் இலக்கு, அரசியல் முழக்கம், அமைப்பு வடிவம், கொள்கை பரப்பு முறைகள், வன்முறை வடிவங்கள் என அனைத்தும் சிறிதும் மாற்றமில்லாத ஒற்றுமை உண்டு.
‘969’ முஸ்லிம் அழித்தொழிப்பு
கடந்த ஜூன் 15ஆம் திகதி அழுத்கம பகுதியில் பொதுபல சேனா பின்னணியில் நடத்திமுடிக்கப்பட்ட இன வன்முறை ஒரு ஒத்திகை தான் என்று கூறியிருந்தோம். பொதுபல சேனா பயங்கரவாத நடவடிக்கைக்காக விசேடமாக உருவாக்கிய முன்னணி அமைப்பு கூட ‘மகாசென் 969’ என்கிற பெயரே சூட்டப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் மார்ச் 20ஆம் திகதியன்று மியான்மாரில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் வாய்த்தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தை சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில் அந்த கடை அடித்து சேதமாக்கி அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரு பௌத்த பிக்கு எரிக்கப்பட்டுவிடுகிறார்.
இதை சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது மோசமான இன அழித்தொழிப்பு நடந்தேறியது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தேடித்தேடி கொல்லப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள், உடைமைகள் சூறையாடப்பட்டன. பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கானோர் உடமைகளை இழந்து இடம்பெயர்ந்தார்கள். இராணுவம் ஊரடங்கு சட்டம் பிறப்பித்தது. அந்த ஊரடங்கு சட்டம் தம்மை பாதுகாக்கும் என்று நம்பினார்கள் முஸ்லிம்கள். ஆனால், அவர்களை தமது பகுதிக்குள் முடங்கச் செய்து முஸ்லிம்களை வேட்டையாட காடையர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இனப்படுகொலையும், சொத்துக்கள் அழித்தொழிப்பும் சுலபமாக நடந்தேறின. இராணுவத்தினரும், பொலிஸாரும் தமது மறைமுக ஆதரவை வழங்கின. இதனை நிகழ்த்த மியன்மார் அரசு பூரண அனுசரணையை வழங்கியது.
இதனை தலைமையேற்று நடத்தியது யார் என்று நினைக்கிறீர்கள்? ‘969 இயக்கம்’. மேற்படி சம்பவம் நடப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மியன்மார் அரசு முஸ்லிம்களை திட்டமிட்டு இனச்சுத்திகரிப்பு செய்வதற்காக ஒரு நடவடிக்கை எடுத்தது. அங்கிருக்கும் வங்காள முஸ்லிம்களை (பங்களாதேஷ் பிரச்சினையின் போது இடம்பெயர்ந்த முஸ்லிம்கள்) நாடுகடத்துவது அந்தத் திட்டங்களில் ஒன்று. இதனை ஆதரித்து ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகளைத் திரட்டி ‘969 இயக்கம்’ பாரிய பேரணியொன்றை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பௌத்தர்களின் நிலம் பறிபோகிறது, முஸ்லிம்களுடன் கலப்புமணம் புரிந்து பௌத்தர்களின் தூய்மை கெடுகிறது. முஸ்லிம்கள் பல்கிப் பெறுகிறார்கள். இஸ்லாமிய கடைகளில் பொருட்கள் வாங்குவதை புறக்கணியுங்கள். தேசத்தின் உடனடி பிரச்சினை மதத்தையும், இனத்தையும் காப்பதே என பிரச்சாரம் செய்தார்கள். துண்டுபிரசுரம் கொடுத்தார்கள்.
விறாத்து பிக்குவின் பௌத்த உபதேச கூட்டங்கள் கவர்ச்சிகரமானது என்று சென்றவருடம் ஜூன் மாதம் தோமஸ் புல்லர் (THOMAS FULLER) என்பவர் எழுதிய கட்டுயோன்று NYtimes வெளியானது. “ஒரு பிரசித்திபெற்ற பாடகருக்காக கூடும் ரசிகர்களைப்போல அவரை சுற்றி அணி திரள்கிறார்கள். தான் ஒரு தீவிரவாத பௌத்தன் என்பதை சொல்லிக்கொள்ள தயக்கமில்லை என்றும் பௌத்தர்கள் பலவீனப்பட்டால் இந்த தேசம் முஸ்லிம்களின் தேசமாகிவிடுவதை தடுக்க முடியாது… அந்தப் பிக்கு தெரிவித்துள்ளார்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
விறாத்துவின் உபதேசங்கள் அடங்கிய டிவிடிக்கள் நாடுமுழுதும் வேகமாக விற்றுத்தீர்க்கின்றன.
‘969 இயக்கம்’ இயக்கம் துணிச்சலாக முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை மதத்தின் பேரால் நிறைவேற்றி வருகிறது. அங்குள்ள பௌத்தர்கள் பலர் அவர்கள் செய்வது சரி என்று நம்புகிறார்கள். அரச அனுசரணையுடன் அந்த இயக்கம் இன்று நாட்டுக்குள் மாத்திரமல்ல சர்வதேச அளவில் பௌத்த வலைப்பின்னலை பலமாக ஏற்படுத்தி வருகிறது.
இப்போது மேற்படி நிகழ்வுகளை அப்படியே இலங்கைக்கு பொருத்தி கண்முன் கொணருங்கள் அப்படியே அச்சில் வார்த்தாற்போல மியான்மார் சம்பவமும் சமீபகால இலங்கை நிகழ்வுகளும், அதன் தொடர்ச்சியான அளுத்கம சம்பவமும் அப்படியே பொருந்தும்.
‘969’ என்பது பௌத்த அடிப்படை மூலங்களைக் குறிக்கும் எண்கள். அவை பௌத்தம், தர்மம், சங்கம். எனவே, இந்த ‘969’ என்கிற நாமத்தை முதன்மைபடுத்த பௌத்தர்களுக்கு அறைகூவல் விடுக்கின்ற சுலோகங்களை உலக பௌத்தர்களுக்கு விரிவாக்குகிறது இந்த இயக்கம். இதன் நீட்சிதான் இன்றைய பொதுபல சேனாவின் துணிச்சல் மிக்க நிகழ்ச்சிநிரல்.
969 இயக்கம்’ பொதுபல சேனா சந்திப்பு
இந்த வருடம் மார்ச் மாதம் 4ஆம் திகதி திகதி பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர் மியன்மார் சென்று ‘969 இயக்கம்’ இயக்கத் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியது ஒன்றும் தற்செயல் நிகழ்வல்ல. 969 இயக்கத்தின் தலைவர் அஸின் விராத்து ஞானசாரவுக்கு பிறந்த நாள் பரிசொன்றையும் வழங்கினார். பொதுபல சேனாவின் இணையத்தளத்தில் “969 இயக்கத்தின் வலைப்பின்னலுடன் பொதுபல சேனா இணைக்கப்பட்டது” என்கிற செய்தி ஞானசார பிக்கு ஆவணமொன்றில் கைச்சாத்திடும் புகைப்படமொன்றுடன் கடந்த மே மாதம் வெளியிட்டிருந்தது. ஞானசார பிக்குவை அங்கு அழைத்துச் சென்றவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மியன்மாரில் நடத்தப்பட்ட BIMSTEC மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவரின் குழுவில் ஞானசாரவையும் உள்ளடக்கியிருந்ததாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பம் குறித்த மாநாடொன்றில் ஞானசார உட்பட பொதுபல சேனா தலைவர்களையும் அழைத்துச் சென்றது எதற்கு என்கிற கேள்வி எழுகிறது.
இந்தச் சந்திப்பின் பின் நாடு திரும்பிய ஞானசார தனது வேலைத்திட்டங்களை தீவிரப்படுத்துகின்றார். 969 இயக்கத்தின் செயற்பாடுகளின் வெற்றி பொதுபல சேனாவுக்கு முன்னுதாரணமாக ஆகிறது. முன்னைய நிகழ்ச்சி நிரல் புதிய பரிமாணம் பெறுகிறது. பல பினாமி பெயர்களில் முன்னணி அமைப்புக்களும், ஊடகங்களும் ஆரம்பிக்கப்படுகின்றன.
“மகாசென் 969”
விறாத்துவின் வழியில் ‘மகாசென் 969’ (மகாசேனன்) என்கிற அமைப்பு ஆரம்பிக்கப்படுகிறது. இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு சிவசேனா போல பொதுபல சேனாவுக்கு ‘மகாசென் 969’. ஆனால், பொதுபல சேனா இப்படியான பெயர்களை நிரந்தரமாக வைத்திருப்பதில்லை என்று அதன் வளர்ச்சியை அவதானிக்கும் போது தெரிகிறது.
இந்த 969 இயக்கமே 15ஆம் திகதி அளுத்கமவில் கட்டவிழ்த்த காடைத்தனத்தை ஒழுங்கமைத்தது என்று தெரியவருகிறது. 17ஆம் திகதி இன்னொரு நடவடிக்கைக்கும் தயாராகும் வகையில் அது ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அன்றைய தினம் அந்த துண்டுபிரசுரம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். “பொலிஸார் இதற்கு அனுமதியளித்திருப்பதாக அறியக்கிடைத்துள்ளது. எனவே, இதனை நான் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். தயவுசெய்து இதனை உரிய முறையில் தடுத்து நிறுத்துங்கள். இந்த நிலை தொடர்ந்தால் இந்த நாட்டுக்கு பெரும் சேதமுண்டாகும். பௌத்தர்களாகிய நாமும் தலைகுனிய நேரிட்டுள்ளது…” என்று எச்சரிக்கை செய்தார். அதனைத் தொடர்ந்து மாவனெல்லையில் நடத்தப்படவிருந்த பேரணி பொலிஸாரால் தடை செய்யப்பட்டது.
மகாசென் 969 துண்டுபிரசுரத்தில்
“15ஆம் திகதி பிற்பகல் முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான பிக்குகள் உள்ளிட்ட பௌத்தர்கள் இன்னமும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பௌத்த விகாரைகளுக்கும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.
தேசப்பற்றுள்ளவர்களே பௌத்த சீருடைகளுக்கு கை வைக்குமளவுக்கு எதிரிகள் விளைந்துள்ளார்கள். கௌரவம், பயம், வெட்கம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. இது சிறு விடயமல்ல நாளை நம்மெல்லோரையும் பாதிக்கப்போகும் விடயம்.
இது நம் சிங்கள நாடு…
நாம் பிறந்து… இறக்கும் நாடு…
இதற்கு எதிராக மாவனல்லை நகரத்தில் நடத்தப்படும் விசேட சத்தியாகிரகம் நடக்கவிருக்கிறது.
தேசத்தின் இக்கட்டான காலப்பகுதியில் உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.”
– ‘மகாசென் 969’ –
இந்த ‘மகாசென் 969’ என்கிற பெயரில் வெளியிடப்படுபவை வன்முறைக்கான அழைப்பாக கருதப்படுகிறது. இந்த வகை அழைப்பே 15ஆம் திகதியும் அளுத்கமவில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் ‘மகாசென் 969’ பெயரில் எந்தவித செயற்பாடுகளும் அறியக்கிடைக்கவில்லை.
விறாத்துவுக்கு விசா வேண்டாம்
கடந்த 25ஆம் திகதி ஞானசார தேரர் ஊடகங்களிடம், யாரும் எதிர்பார்க்க முடியாத முக்கிய வெளிநாட்டு பிரமுகர்கள் எல்லாம் வரவிருக்கிறார்கள். என்று ஒரு நமட்டு சிரிப்புடன் தெரிவித்தபோது அந்த பிரமுகர்கள் யார் என்று அறிய அதிக ஆவல் இருந்தது. விறாத்து தான் மாநாட்டுக்கு தலைமை தாங்க வருகிறார் என்கிற செய்தி கடந்த 26 அன்று கசிந்ததும் மீண்டும் ஞானசாரவிடம் அது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பின.
“…வெளிநாடுகளிலிருந்து பலருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். எதிர்ப்பு தெரிவித்திருக்கும் முஸ்லிம் கவுன்சிலுக்கு என்ன சொறிச்சலா… இது சிங்கள பௌத்தர்களின் நாடு. எங்களுக்கு தேவையான பௌத்தர்களை இந்த நாட்டுக்குள் கொணர எங்களுக்கு முடியும். யார் இவர்கள்… மாநாடு முடிந்ததும் ஒரு கை பார்த்துக் கொள்வோம்…” என்று ஞானசார தேரர் எச்சரிக்கும் ஒலிப்பதிவும் இணையத்தளமொன்றில் வெளியானது. அதே தினம் பல அமைப்புகள் கையெழுத்திட்டு விறாத்து பிக்குவுக்கு விசா வழங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது.
முஸ்லிம் எதிர்ப்பின் மூலம் மனிதப் பேரழிவை நடத்திய இவர் போன்றோர் இலங்கைக்கு வருவது இன ஒற்றுமைக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கும் என்றும் – விறாத்துவின் இனவாத பேச்சு நாட்டில் மேலும் பிளவுகளை உருவாக்கக்கூடும் என்றும் – சுட்டிக்காட்டப்படிருந்தது.
இலங்கை ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மத உரிமைகள் சங்கம், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் பேரவை, வணபிதா சக்திவேல் – புனித மரியாள் தேவாலயம் உள்ளிட்ட அமைப்புக்கள் இதில் கையெழுத்திட்டிருந்தன. இக்கடிதம் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், குடியகல்வு குடிவரவு திணைக்களம் ஆகியனவற்றுக்கு அவரசமாக அனுப்பப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் குறைந்தபட்சம் அரச தரப்பில் இருந்து எந்தப் பதிலும் தரப்படவில்லை.
புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மீள நாட்டிறகு வந்து சுதந்திரமாக கருத்துகூறுவது தடை செய்யப்பட்ட நாட்டில், அவர்களை நாட்டின் இன ஒற்றுமையை சீர்குலைத்தவர்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரின் நாடு கடத்தப்படும் நாட்டில், பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொள்வதற்கு காரணமான ஒருவரை, அதுவும் உலகம் முழுதும் பௌத்த பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒருவரை அனுமதித்ததானது இன்னொரு பாரிய இன அழிப்புக்கான அரசின் ஆசீர்வாதத்தையே காட்டுகிறது. அளுத்கம பகுதியில் முஸ்லிம்கள் மீதான பௌத்த பயங்கரவாத அவலம் நடந்து மூன்று மாதங்களே ஆன நிலையில் பாரிய ஒரு தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருதையே இவை உணர்த்துகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த மாநாடு
பொதுபல சேனாவின் இந்த மாநாடு மகா சங்க பேராளர் மாநாடு என்று அழைக்கப்படுகிறது. மாநாட்டுக்கு 7,000 பிக்குமார் வருவது உறுதியாகியிருக்கிறது என்று ஞானசார அறிவித்தார். அவர்களின் நூற்றுக்கணக்கான ஆதரவு இணையத்தளங்களிலும், பினாமி ஊடகங்களிலும் பாரிய சுவரொட்டி, துண்டுபிரசுர பிரசாரங்கள் செய்யப்பட்டுவந்தன. சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்புணர்ச்சியையும் கக்கும் வகையில் நாளுக்கு நாள் புதிய புதிய முழக்கங்கள் வெளியிடப்பட்டுவந்தன.
வரலாற்றில் இந்தளவு பிக்குமாரை எந்தவொரு சக்திகளாலும் ஒன்றாக திரட்ட முடியவில்லை. முதன்முதலில் அந்த வரலாற்று ஒன்று கூடலை செய்கிறோம் என்றார். அரசின் ஆதரவு, பௌத்த பெருமுதலாளிகளின் ஆதரவு, பௌத்த சமய மற்றும் சமூக நிறுவனங்களின் ஆதரவு என திரட்டியதும், தம்மோடு இணையாவிட்டால் தனிமைப்பட்டுபோவீர்கள் என்கிற மறைமுக மிரட்டலினால் ஏற்கெனவே பின்வாங்கிய பௌத்த சக்திகளும் இதில் ஒன்றிணைந்துள்ளனர். மூன்று நிகாயக்களின் மகா நாயக்கர்களும் இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என அறியமுடிகிறது.
மாநாட்டு பரப்புரைக்கான தனித் தனி விளம்பரங்கள்
“சிங்களத்தின் எதிர்காலத்தை காண வாருங்கள்…”
“சிங்கள பௌத்த ராஜ்யத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டத்துடன் நாங்கள் 28 அன்று வெளியிறங்குவோம்.”
“சிங்களவர்களின் ‘முடி’ யாருக்கு”? 28 வாருங்கள்…
“பௌத்த கொள்கையுடனான தேசியத் தலைவர் ஒருவரை கண்டடைவதில் இதுவரை சிரமமிருந்திருக்கலாம் பொதுபல சேனாவிடம் தேசியத் தலைவர் இருக்கிறார் என்பதையும், அது யார் என்பதையும் 28 தெரிந்து கொள்ளலாம்”
“…14 வயதிலேயே தீட்சை பெற்று அனைத்தையும் துறந்து அனைத்து கஷ்டங்களையும் எங்களுக்காக எதிர்கொண்ட ஞானசாரரே உங்களுக்கு தேசத்தின் நமஸ்காரம்…”
“…பௌத்த துறவிகளே 28 முக்கியமான நாள். நீங்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும். நாம் ஏமாந்தது போதும். அப்படியென்றால் இந்த உடலுக்கு உயிரூட்ட இணையுங்கள்…”
“…அடிப்படைவாதத்தை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப வழி சொல்லும் வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்ற மகா சங்க மாநாடு…”
“நாட்டுக்கும், இனத்துக்கும் உரிய தலைவரின் அவசியத்தை நாடு வேண்டிநிற்கிறது. அது யார் என்பதை 28 தெரியப்படுத்துவோம்…”
“…சிங்கள பௌத்தர்களே நாடு, இனம் புத்தமதம் என்பவற்றுக்காக எழுந்துநிற்க வேண்டிய காலமிது. இது சிங்கள நாடு. அதை நாளைய தலைமுறைக்கும் அப்படியே ஒப்படைக்க வேண்டும்…”
“சிங்கள பௌத்தர்களின் ஒரே எதிர்பார்ப்பு நீங்கள் தான் ஞாசார தேரரே…”
விறாத்துவின் இந்த விஜயமும், ஆலோசனைகளும், ஆதரவும் இந்த நாட்டின் பௌத்த தீவிரவாத அமைப்புக்களை இன்னும் பலமடங்கு உற்சாகம் கொள்ளச்செய்யும் ஒன்றாக நிச்சயம் இருக்கும். மாறாக இன நல்லுறவை ஏற்படுத்த ஒரு சிறு துளியும் உதவாது என்பது மட்டும் நிச்சயம்.
இந்த மாநாடு ஏனைய இனங்களின் அழிவுக்கான பாதை வகுக்கும் மாநாடா அல்லது மஹிந்த ராஜபக்ஷவையோ, கோட்டாபயவையோ அடுத்ததாக ஜனாதிபதியாவதற்கான தயாரிப்பா அல்லது இலங்கைக்கான விறாத்துவாக ஞானசாரவை முடிசூட்டி அறிவிக்கும் நாளா அல்லது இவை அனைத்துமா… என்பதே இப்போது எழுந்துள்ள வினா.
என். சரவணன்