படம் | Monsoonjournal

தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களுக்குப் பின்னர் ஒரு அடைமொழியுடன் நோக்கப்பட்ட ஒரு தலைவர் என்றால் அது இராஜவரோதயம் சம்பந்தன் ஒருவரேயாவார். செல்வநாயகம் ‘தந்தை’ என்று விழிக்கப்பட்டது போன்று, சம்பந்தன் ‘ஜயா’ என்று விழிக்கப்படுகின்றார். ஜயாவின் காலத்தில் என்ன நிகழும்? கடந்த அறுபது வருடங்களாக இப்படியொரு கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் உலவியவாறே இருக்கிறது. எப்பொழுதுதான் இதற்கொரு முடிவு வரப்போகிறது? இப்படியொரு கேள்வி தொடர்வதற்கான காரணங்களை நாம் மற்றவர்களுக்குள் தேட முடியாது. ஏனெனில், அதற்கான காரணங்கள் வெளியில் இல்லை. தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் சம்பந்தன் குறிப்பிட்டிருப்பது போன்று, நாம் கடந்த காலத்தில் கிடைத்த பல சந்தர்ப்பங்களை எங்களது வெற்றுக் கோசங்களாலும் கற்பனாவாதங்களாலும் இழந்து போயிருக்கிறோம். இனியும் நாம் அப்படியிருக்க முடியாது. இதனோடு இன்னொன்றையும் சேர்க்கலாம் என்பது எனது அபிப்பிராயம். அதாவது, தமிழ் திமிர் வாதம். வாய்ப்புக்களும் சந்தர்ப்பங்களும் கைநழுவிப் போனதற்கு அன்றைய சூழலில் அரசியலை கையாண்டவர்களின் திமிரும் ஒரு காரணம் ஆகும். சம்பந்தன் கூறும் விடயத்தின் கனதி எத்தனை பேருக்கு விளங்கியிருக்கும் என்பது சந்தேகமே! சம்பந்தன் மிக முக்கியமானதொரு நிகழ்வில், முக்கியமானதொரு தருணத்தில் இதனை குறிப்பிட்டிருக்கின்றார். இதுவரை தான் வகித்துவந்த தமிழரசு கட்சியின் தலைவர் பொறுப்பை மாவை சேனாதிராஜாவிடம் ஒப்படைத்துவிட்டு, அதே மேடையிலிருந்தவாறுதான் இதனை குறிப்பிட்டிருக்கின்றார். இதன் மூலம் தன்னுடைய காலத்தில் ஏதாவதொரு விடயத்தை உருப்படியாக செய்ய வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கின்றார் போலும்.

சம்பந்தன் ஏறக்குறைய அரை நூற்றாண்டுகால அரசியல் அனுபவம் உள்ள ஒருவர். ஆனால், இந்த அரை நூற்றாண்டுகால அரசியல் அனுபவத்தில் அவர் ஒரு தீர்மானிக்கும் தலைவராக எவ்வளவு காலம் இருந்திருக்கிறார் என்றால், அது வெறும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஆண்டுகள் மட்டுமே! இன்று சம்பந்தரின் அரசியல் அணுகுமுறைகளை விமர்சிக்க முற்படும் எவரும் இதனைக் கருத்தில் கொள்வதில்லை. அவர்கள் இதனை அறியாமல் செய்கின்றனரா அல்லது அறிந்தே செய்கின்றனரா என்பதை நானறியேன். ஆனால், இந்த விடயம் விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. தமிழ் மக்களது பெயரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நகர்வுகளை தொகுத்து நோக்கினால் ஒரு குறிப்பிட்ட காலம் மிதவாதிகளுடைய காலமாகவும், பிறிதொரு காலம் தீவிரவாதிகளது காலமாகவும் கழிந்திருப்பதை காணலாம். இதனை காலகட்ட அடிப்படையில் பிரித்து நோக்குவதானால், 1980களுக்கு முன்னர் என்றும், 90களுக்கு பின்னர் என்றும் பிரித்து நோக்கலாம். 1980களுக்குப் பின்னர் தமிழர் அரசியலென்பது ஆயுதப் பிணக்காக முகம்காட்டிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலம் எவரதும் கட்டுப்பாட்டில் இல்லை எனலாம். இதனை வேண்டுமானால் தமிழ் ஆயுத அமைப்புகளுக்கு இடையிலான மோதல் காலம் என்றும், மிதவாத அமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஆயுத அமைப்புக்களுக்கும் குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான முரண்பாட்டுக் காலம் எனலாம். 1989இல் அமிர்தலிங்கம் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மிதவாத தலைவர்களது குரல் முற்றிலுமாக அடங்கிப்போனது.

இதற்குப் பின்னரான காலத்தில் மிதவாதிகளுக்கோ, புலிகள் அல்லாத ஏனைய அமைப்புக்களுக்கோ தமிழர் அரசியலில் எந்தவிதமான தீர்மானிக்கும் இடமும் இருந்திருக்கவில்லை. இருந்திருக்கவில்லை என்பதை விடவும் புலிகள் அதனை அனுமதித்திருக்கவில்லை என்பதே சரியானது. புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவ அரசியல் சாம்ராஜ்யத்தில் சம்பந்தன் ஜயாவின் குரலுக்கு எந்தவொரு மதிப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இப்படியொரு பின்புலத்தில் தமிழர் அரசியலானது, மீண்டும் இராஜதந்திர அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கான இரண்டாவது வாய்ப்பு கதவைத் தட்டுகிறது. முன்னர் இந்திய தலையீட்டின் போது கைநழுவவிடப்பட்ட ஒரு வாய்ப்பு மீண்டும் மேற்குலகின் தலையீட்டால் நிகழ்கிறது. இந்த பின்புலத்தில்தான் மீண்டும் சம்பந்தன் தீர்மானிக்கும் அரசியலுக்குள் முகம் காட்ட நேர்கிறது. பிரபா – ரணில் உடன்பாட்டுக் காலத்தில் சம்பந்தன் ஏதேனும் ஆலோசனைகளை பிரபாகரனுக்கு வழங்கியிருந்தாரா என்பதை நானறியேன். அவ்வாறு சம்பந்தன் ஏதேனும் அறிவுரைகளை வழங்கிருந்தாலும் கூட அதனை புலிகள் பொருட்படுத்தியிருக்கப் போவதில்லை. ஏனெனில், பாலசிங்கத்தின் கருத்திற்கே செவிசாய்ப்பார் அங்கில்லை. இதன் பின்னர் நடந்தவைகளும், அதன் விளைவாக நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் முடிவும், நம் அனைவரும் அறிந்ததே! மே, 2009இற்குப் பின்னர்தான் சம்பந்தன் தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்தும் பொறுப்பை ஏற்கிறார். இந்த இடத்தில் ஒரு விடயத்தை அடிக்கோடிட வேண்டியிருக்கிறது. 1980களுக்கு முன்னரும் சரி 90களுக்கு பின்னரும் சரி சம்பந்தன் தமிழர் அரசியலை தீர்மானிக்கும் ஒருவராக இருந்ததில்லை. சம்பந்தனின் அரசியல் வாழ்வில் 2009இற்குப் பின்னர்தான் அவர் தமிழர் அரசியலுக்கு தலைமை ஏற்கிறார். தன்னுடைய ஜம்பது வருடகால அரசியல் வாழ்வில், சம்பந்தன் அரசியலை கையாளும் அதிகாரத்தில் இருந்த காலமென்பது, வெறும் ஜந்து வருடங்கள் மட்டுமே!

இன்று, எப்படியானதொரு காலத்தைக் கையாளவேண்டிய பொறுப்பு அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்பதையும் இந்த இடத்தில் குறித்துக்கொள்வது அவசியம். இதனை ஒரு வரியில் குறிப்பிடுவதானால், பாலைவன வெளியொன்றில் நீரூற்று ஒன்றை தேடியலையும் பணியைத்தான் சம்பந்தன் இன்று ஏற்றிருக்கிறார். ஏனெனில், முன்னர் அரசியலை ஏகபோகமாக கையாண்டவர்கள் அப்படியொரு (அரசியல்) பாலைவன வெளியைத்தான் தமிழ் சமூகத்தின் முன் விட்டுச் சென்றிருக்கின்றனர். சம்பந்தனை நோக்கி விமர்சனங்களை அடுக்க விளையும் எவரும் இந்த விடயத்தை தொட்டே தங்கள் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் அது ஒரு சரியான பார்வையாக இருக்க முடியும். சம்பந்தனின் காலத்தில் ஒருவேளை அவர் தோல்வியடைய நேரிடினும் கூட, அது அவரின் தவறாக இருக்க முடியாது. ஏனெனில், அந்தளவிற்கு நிலைமைகள் சிக்கலாக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய சூழலில் சம்பந்தனின் முன்னால் இரண்டு பணிகள் இருக்கின்றன. ஒன்று, அடுத்த தலைமுறை (இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்கள்) நிம்மதிப் பெருமூச்சுவிடக் கூடியதொரு அரசியல் அடித்தளத்தை உருவாக்குவதற்கான பொறுப்பு. இரண்டு, தனக்குப் பின்னர் தமிழர் அரசியலை சுமூகமாக கொண்டு செல்வதற்கான உள்ளார்ந்த பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான கடமை. மேற்படி இரண்டையும் செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்குண்டு. ஒரு சரியான அடித்தளம் இடப்படாது போனால் சம்பந்தனின் காலத்திற்கு பின்னர் நிலைமைகள் மேலும் மோசமடையலாம்.

தன்னுடைய காலத்தில் ஒரு சரியான அடித்தளத்தை போடுவதற்கான தற்துனிவும் ஆற்றலும் உள்ள தலைமைத்துவம் அவரிடம் உண்டு. இதற்கு அவர் தன்னுடைய அரசியல் வாழ்வில் கடைப்பிடித்துவரும் நிதானமும் நெகிழ்சியுடன் கூடிய அணுகுமுறையுமே காரணமாகும். தந்தை செல்வாவின் மிதவாத பாரம்பரியத்தில் வந்த தலைவர்களில் நிதானமும், நெகிழ்வும் உள்ள ஒரு தலைவராக சம்பந்தனையே குறிப்பிடலாம். இன்றுவரை அவர் எங்கும் இளைஞர்களை விழித்து ஆவேசமாக பேசியதற்கு ஒரு சான்றில்லை. இளைஞர்களை உசுப்பேத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்தற்குச் சான்றில்லை. இந்த நிதானம்தான் இன்றும் அவரை ஒரு தனித்துவமான தமிழ்த் தலைவராக அடையாளம் காட்டுகிறது. இன்று தமிழரசு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேறியிருக்கும் அவர், பிறிதொரு பொறுப்பைச் சுமந்திருக்கிறார். அது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு. கூட்டமைப்பை ஒரு வலுவான அமைப்பாக தரமுயர்த்துவது தொடர்பான வாதங்கள் தொடர்ந்தவாறே இருக்கின்றன. அதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய பொறுப்பு தற்போது அவரை சார்கிறது. இதற்கு ஒரு சரியான பொறிமுறைய வகுக்காது போனால், பிற்காலங்களில் முரண்பாடுகளும் உடைவுகளும் நிச்சயம் ஏற்படும். தற்போது சம்பந்தன் என்று ஒருவர் இருப்பதால் அனைத்தும் சமூகமாக இருப்பது போன்ற தோற்றம் தெரிகிறது. ஆனால், அது ஒரு உண்மைத் தோற்றம் இல்லை. இன்று வடக்கு – கிழக்கை இணைக்கும் பலமானதொரு குறியீடாக சம்பந்தனே விளங்குகின்றார். ஆனால், சம்பந்தனுக்கு பிற்பட்ட காலத்தில் இந்த சமநிலையையும் எதிர்பார்க்க முடியாது. விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் அவ்வமைப்பின் கவிஞர் புதுவை இரத்தினதுரை – காலத்தை தவறவிட்டால் கண்டவனெல்லாம் கதவைத் தட்டுவான் – என்று எழுதினார். அவர் எதனை மனம்கொண்டு இதனை எழுதினாரென்று தெரியவில்லை. ஆனால், அது புலிகளுக்கே அச்சொட்டாகப் பொருந்திப் போனது. காலத்தை தவறிவிட்ட புலிகள் இறுதியில் அனைத்தையும் இழந்து உருத்தெரியாமல் போயினர். இப்போது சம்பந்தன் ஜயாவின் காலம். சரியானதொரு அடித்தளம் இடாது போனால் என்ன வகையான கட்டடங்களை கனவு கண்டாலும் எதுவும் ஆகப் போவதில்லை. மீண்டுமொரு பெருமூச்சே எஞ்சும்.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.