படம் | Channel4

தமிழ் பரப்பில் இயங்கும் புத்திஜீவிகள் தளம் எப்படியானது? அது தன் பெயரில் முன்னொட்டாகக் கொண்டிருக்கும் புத்தி அதாவது, அறிவுக்கும் அதன் ஜீவித நிலைத்திருப்புக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? கடந்த 30 வருடங்களாக இயங்கும் இந்தப் புத்திஜீவிகள் தளத்தை அவதானிக்கும் ஒருவருக்கு இந்தச் சந்தேகங்கள் எழுவது சாதாரணமான விடயம்தான்.

புத்திஜீவிகள் யார்?

குறித்த ஒரு சமூகத்தின் ஒருவகைப் பிரதிநிதிகள். அதாவது, அரசியல் தலைவர்களுக்கும் அந்த சமூகத்துக்கும் இடையில் நிற்கும் இடையீட்டாளர்கள். அதற்குள் நின்று தொடர்ச்சியாகத் தொழிற்படுபவர்கள். ஒட்டுமொத்த சமூகத்தினதும் அறிவுப் பெட்டகமாகக் கொள்ளத்தக்கவர்கள். அவர்கள் நடமாடும் வெளிக்கும், நிகழும் எந்த மாற்றங்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள். ஆக, அவர்கள் இயங்கும் சமூகத்தின் கேள்விகளாகவும், பதில்களாகவும் நின்று, அதை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் எனப் பலவாறான விளக்கங்களைப் புத்திஜீவிகளுக்கு கொடுக்க முடியும். அந்தவகையில் இந்த வட்டத்துக்குள் அறிஞர்கள், கல்வியலாளர்கள், சமயத் தலைவர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், எனப் பலதரப்பட்டவர்களும் அடங்குகின்றனர்.

தமிழ் பரப்பில் புத்திஜீவிகள்

தமிழ் பரப்பில் புத்திஜீவிகளின் காலம் தொன்மையானது. சங்க இலக்கியப் புலவர்களிலிருந்து இந்த வகுப்பாரின் பாரம்பரியத்தை அவதானிக்கலாம். மக்கள் பக்கம் நின்று மன்னனுக்கு அறிவுரை வழங்குபவர்களாகவும், மன்னன் மிலேச்சத்தனமிக்கவனாகவும், மக்கள் நலனில் அக்கறை கொள்ளாதவனாகவும் இருந்த காலத்தில் வசைவாகவேனும் தம் பாடல்களில் எடுத்துச் சொல்பவர்களாகவும், மக்களின் நாட்பட்ட துயரங்களை எழுத்தில் பதிவு செய்தவர்களாகவும், அரசவை ஆலோசகர்களாகவும் இயங்கியிருக்கின்றனர். இதில் மன்னனின் பொன் பொருளுக்காக மட்டும், மாறி…மாறி… புகழ்பாடும் மரபினரும் இருந்திருப்பதை வரலாறு பதிவுசெய்திருக்கின்றது. இந்த வகை புத்திஜீவிகளின் தொடர்ச்சி சோழ சாம்ராஜ்யத்தின் சரிவு வரைக்கும் நீடித்திருக்கின்றமையை தமிழ் இலக்கியங்கள் ஆதாரப்படுத்தியிருக்கின்றன.

கீழைத்தேசங்கள் நோக்கி மேலைத்தேயர்களின் – ஆங்கிலேயர்களின் ஆதிக்கப்படர்ச்சி நிகழ்ந்த காலத்தில், புத்திஜீவிகள் மட்டத்தில் முதல் தடவையாக மாற்றம் நிகழ்கின்றது. வெளிப்படையாக இருவகையாகப் பிரிந்து இயங்கத் தொடங்குகின்றனர். ஒருசாரார் ஆங்கிலம் கற்று, வெள்ளைக்காரத் துரைமார்களின் எடுபிடியாகவும், தமிழ் கலாசாரத்தினையும், பண்பாட்டையும் அவர்களுக்குக் கற்பிக்கும் கோர்ட்-சூட் அணிந்த சேவர்களாக மாறுகின்றனர். இன்னொரு சாரார் தமிழர்களின் பண்பாட்டையும், கலாசார விழுமியங்களையும் ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்களில் இருந்து காப்பாற்றும் சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்து, சமூகத்தின் கலாசார இருப்பைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். காலம்செல்ல செல்ல கோர்ட்-சூட் அணிந்த புத்திஜீவிகள் வெள்ளைக்காரர்களின் அரண்மனைகளின் அரசியல்வாதிகள் ஆகும் அந்தஸ்தைப் பெற்று வரலாற்றில் தலைவர்களாக நிலைபெற, தெருவில் இறங்கிப் போராடிய புத்திஜீவிகள், சமயத்துறவிகளாகவும், கண்டுகொள்ளப்படாதவர்களாகவும் மாறியது தமிழ் வரலாற்றின் துயரான பக்கங்களில் ஒன்று.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்பு, இந்தப் புத்திஜீவிகளின் போராட்டமும், அவர்கள் வெள்ளைக்கார அரசியலில் பெற்ற முக்கியத்துவமும் சிங்களவர்களுக்கு ஏற்படுத்திய கோபமே, முள்ளிவாய்க்காலில் முடிந்ததும், இன்றுவரை நீடிப்பதுமான மனச்சாட்சியைத் தொலைத்த அரசியல். இலங்கையின் சுதந்திரத்தோடு தமிழர் மத்தியில் உருவான அகிம்சைப் போராட்டத்தின் மைய சக்தியாகவே புத்திஜீவிகள் இயங்கினார்கள். ஏனெனில், தமிழர்களை வெள்ளைக்காரன் பரிசளித்து விட்டுப்போன இணைக்கப்பட்ட இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்தியது அவர்கள்தான். அகிம்சைப் போராட்டத்தின் முதிர்ச்சிநிலையிலேயே அரசியல் செய்வதை ஒரு தொழிலாகக் கருதும் தரப்பினர் தமிழ் அரசியலுக்குள் நுழைந்தனர். அவர்கள் சமூக மட்டத்தில் பெற்றிருந்த செல்வாக்கும், ஜனநாயக வாக்களித்தலிலும், கல்வியறிவிலும் சாதாரண மக்கள் பெற்ற அறிவும் புத்திஜீவிகள் தரப்பிலிருந்து அரசியல்வாதிகளைத் தனித் தொகுதியினராக்கியது. அரசியல்வாதிகள் வேறு, புத்திஜீவிகள் வேறு என்கிற நிலை உருவானது. புத்திஜீவிகள் கல்வி, சமய, வணிக நிறுவனங்களுக்குள் போன காலத்தில் அகிம்சை தன் தோல்வியை அறிவித்தது. இளைஞர்கள் ஆயுதங்களைக் கொண்டு விடுதலையைத் தேட எல்லாத்திசைகளிலிருந்தும் புறப்பட்டார்கள்.

ஆரம்பத்தில் விடுதலைப் போராட்டங்களுக்கும் இருந்த பல கிளைகள், அவரவர் கருத்துகளுக்கும், விடுதலை குறித்த புரிதலுக்கும் அமைவான இயக்கங்களை உருவாக்கின. அதற்கெனப் போதியளவான பெயர்களும் உடனுக்குடன் கிடைத்தன. நினைவிருக்கும் கணக்கின்படி 32 அமைப்புகள் உருவாகியிருந்தனவாம். அவரவர் வாசிப்புக்கும், அறிவுக்கும் ஏற்புடைய ஆயுதப் போராளிகளின் முகாம்களுக்குள் புத்திஜீவிகள் புகுந்துகொண்டனர். ஆயுதங்களின் அபாயம் உணர்ந்து எதுவும் பேசாது ஒதுங்கிக் கொண்டவர்களும் இருந்தனர். துப்பாக்கிகள் கண்டவனை யெல்லாம் சுட்டுத் தள்ளியபோது, அதற்கு உயிரைக் கொடுத்த புத்திஜீவிகளும் இருந்தனர். புத்திஜீவித்தனத்திலிருந்து விலகியவர்கள் போக, தொடர்ந்தும் இயங்கியவர்கள் ஏதாவதொரு ஆயுத அமைப்பின் கூடாரத்துக்குள் இயங்க வேண்டிய சூழல் உருவானது. எல்லா ஆயுத அமைப்புகளும் ஓரியக்கமாக்கப்பட்ட நேரத்தில், அதில் உடன்பாடில்லாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி புலம்பெயர் தேசங்களில் மாயமானார்கள். மறைந்து போனர்கள். அவ்வப்போது சிலர் எழுத்து சர்ச்சைகளில் வெளிப்பட்டார்கள்.

விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொண்ட புத்திஜீவிகள் அமைப்பின் தொடர்ந்தும் உள்ளும் புறமுமாக இயங்கினார்கள். சமாதான காலத்தில் அதற்குள்ளும் பிளவுகள் உருவாகின. சிலர் மௌனித்தார்கள். நந்திக்கடலில் ஆயுதப் போராட்டம் இறுதியாக கரைந்ததுடன், புத்திஜீவிகள் எனப்பட்டோர் பூசியிருந்த சாயமும் கரைந்தது.

இதுவரை எழுதிய எழுத்துக்களும், நெஞ்சாரத் தாங்கிய தத்துவங்களும் பொய் என்றும், பிழையென்றும் வாதிட்டார்கள். சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் தம் தற்போதைய நிலைப்பாட்டை நிரூபித்தார்கள். ஏதாவதொரு அதிகாரத் தரப்பின் ஆதரவுடன் தம் இருப்பை தொடர்ந்தும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கருதி செயற்பட்டதை தெளிவாக அவதானிக்க முடிந்தது.

கல்வி துறையில் இயங்கிய புத்திஜீவிகளின் நிலையோ சிரிப்பை வரவைத்தது. கொஞ்சமும் கூச்சப்படாது, மேடையேறினார்கள். அதிகாரத்தரப்பின் முன்னால் கூனிக் குறுகினார்கள். வாழ்த்துப் பாடினார்கள். மீண்டும் சங்க காலத்தின் ஒரு தரப்பினராகிய புலவர்கள் அரங்கிற்கு வந்தார்கள். இப்படியே, மாற்றம் ஒன்றே மாறாததென்று சொல்லி ஆரம்பத்தில் கேட்கப்பட்ட அனைத்து கேள்வி களில் இருந்தும் தப்பித்துக் கொண்டார்கள் புத்திஜீவிகள்.

ஆயினும், இதிலிருந்து சிலர் மறுபடியும் ஒதுங்கிக் கொண்டார்கள். இன்றும் சிலர் தொடர்ந்தும் மக்களுக்காக, மக்கள் பக்கம் நின்று இயங்குகின்றார்கள். எல்லா வகையான தடைகளையும், அச்சுறுத்தல்களையும் மீறி தம்மால் இயன்றளவு எல்லைக்குள் பயணித்துக் கொண்டிருப்பதை தமிழ் உலகம் மறந்துவிடவில்லை.

நன்றி: உதயன்

ஜெரா