படம் | Asiantribune
மேலோட்டமாக பார்த்தால் சீனாவையும், இந்தியாவையும் தமிழர் பிரச்சினையுடன் தொடர்புபடுத்துவதில் எந்தவொரு பொருளும் இருப்பதாகத் தெரியாது. தமிழர் விவகாரத்தை வெறுமனே தமிழர்களுக்குள் மட்டும், அதாவது, தமிழர்கள் என்னும் பொழுது, வடக்கு – கிழக்கு, புலம்பெயர் மற்றும் தமிழ்நாடு என்னும் முக்கோண நிலையில் புரிந்துகொள்பவர்களுக்கு, நான் முன்கொண்டு வந்திருக்கும் தலைப்பின் பொருள் குழப்பமாகவே இருக்கும். ஆனால், ஒரு நாட்டின் உள்விவகாரங்கள் என்பவை வெறுமனே உள்விவகாரங்கள் மட்டுமல்ல. அவை அந்த நாட்டின் அயலுறவு அணுகுமுறைகளில் பெருமளவுக்கு தங்கியிருக்கிறது. இதனை விளங்கிக் கொண்டால்நாம் குழப்பமடைய ஏதும் இருக்கப் போவதில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவுற்று ஜந்து வருடங்களாகின்றன. இந்த ஜந்து வருடங்களில் இலங்கையின் அரசியலில் இடம்பெற்ற உரையாடல்களை உற்றுநோக்குவோமாயின், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு, சீனா, இந்தியா ஆகிய மூன்று தளங்களில் விடயங்கள் எடுத்தாளப்பட்டிருப்பதை ஒருவர் காணலாம். இதில் மேற்குலகை எடுத்துக் கொண்டால், அது மிகவும் தெளிவான நிலையில் கொழும்பின் மீது குற்றஞ்சாட்டுவதையே தமது நிகழ்ச்சி நிரலாகக் கொண்டிருக்கிறது. இந்தியாவை எடுத்துக் கொண்டால் அதனை இரண்டாகப் பார்க்க வேண்டும். ஒன்று, காங்கிரஸ் இந்தியா. மற்றையது, தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற பாரதிய ஜனதாவின் இந்தியா. யுத்தத்திற்குப் பின்னரான கொழும்பின் மீது அமெரிக்கா அழுத்தங்களை அதிகரித்தபோது ஆரம்பத்தில் காங்கிரஸ் இந்தியா அதற்கு முண்டுகொடுத்திருந்தது. ஆனால், ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் கீழ் இலங்கை மீது விசாரணை ஒன்றை கோரும் பிரேரணையை அமெரிக்கா கொண்டுவந்த போது காங்கிரஸ் இந்தியா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இது இலங்கையின் மீதான மேற்குலக அழுத்தங்களுடன் தொடர்ந்தும் இந்தியா இணைந்திருக்கப் போவதில்லை என்பதையே சுட்டிக்காட்டியது. இதனை காங்கிஸின் முடிவு என்பதை விடவும் புதுடில்லியின் கொள்கை நிலைப்பட்ட முடிவு என்பதே சரி.
இங்கு ஒரு சுவாரஷ்யமான விடயத்தை பார்க்கலாம். விடுதலைப் புலிகள் மீண்டும் யுத்தத்திற்குள் பிரவேசித்த போது எவ்வாறு இரண்டு இந்தியாவிற்கு முகம் கொடுத்தனரோ, அதற்கு ஒப்பான ஒரு சூழலே தற்போது நிலவுகிறது. யுத்த வெற்றியின் போதும் பின்னர் யுத்தம் தொடர்பான மனித உரிமைசார் குற்றச்சாட்டுக்களின் போதும் இந்தியாவின் மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தது. ஆனால், தற்போது மேற்படி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இலங்கையின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் விசாரணைகள் ஆரம்பமாகியிருக்கின்ற சூழலில் இந்தியாவின் மத்தியில் பாரதிய ஜனதா அரசு இருக்கிறது. விடுதலைப் புலிகள் எவ்வாறு 2009இல் ஒரு ஆட்சி மாற்றத்தை இந்தியாவில் எதிர்பார்த்திருந்தனரோ, அதேபோன்றே கொழும்பின் அதிகாரப் பிரிவினரும் 2014இல் இந்தியாவில் ஒரு ஆட்சிமாற்றத்தை எதிர்பார்த்திருந்தனர். இதிலுள்ள பிறிதொரு சுவாரஷ்யம் என்னவென்றால் விடுதலைப் புலிகளும் அன்று பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதையே எதிர்பார்த்திருந்தனர். புலிகளது தமிழக ஆதரவாளர்களால் அப்படியொரு நம்பிக்கையே பிரபாகரனுக்கு கொடுக்கப்பட்டுமிருந்தது. ஆனால், புலிகள் எதிர்பார்த்த பா.ஜ.க. ஆட்சி அவர்கள் அழிவுற்று ஜந்து வருடங்களின் பின்னர்தான் வந்திருக்கிறது. தாங்கள் பொறிக்குள் அகப்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்தியாவின் மத்தியில் ஆட்சிமாற்றம் நிகழுமாயின், ஒரு யுத்த நிறுத்தம் வரும், அதன் மூலம் தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்பதே புலிகளின் கணிப்பாக இருந்தது. 2009இல் புலிகள் எத்தகையதொரு கணிப்பை கொண்டிருந்தனரோ அதனையொத்த ஒரு கணிப்பையே 2014இல் கொழும்பு கொண்டிருந்தது. தமிழ் நாட்டுடன் கூட்டமைத்திருக்கும் காங்கிரஸ் இந்தியா வீழ்சியடையுமானால், புதிதாக ஆட்சிபீடமேறும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா, மஹிந்த அரசின் மீதான மேற்குலக அழுத்தங்களை புறம்தள்ளிவிட்டு, கொழும்புடன் நெருங்கிச் செயலாற்ற முற்படும் என்பதே அவர்களின் கணிப்பாக இருந்தது. விசித்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த முரண்பட்ட நிலைமையை வரலாற்றின் விசித்திரம் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், இதிலுள்ள இன்னொரு சுவாரஷ்யம் என்னவென்றால், புலிகளின் கணிப்பு புலிகளுக்கு கைகொடுக்கவில்லை, ஆனால் மஹிந்த அரசின் கணிப்பு அவர்களுக்கு கைகொடுக்கிறது.
மேற்குலகத் தலையீடுகள் பின்னர் இந்தியாவின் தலையீடு பற்றி பார்த்தோம். இந்த இடத்தில் ஒரு கேள்வி குறிக்கிடலாம், அப்படியாயின் இதில் சீனா எங்கு நுழைகிறது? சீனா, கொழும்புடன் நெருங்கி வந்ததற்கான பொறுப்பை எவர் மீதாவது சுமத்த வேண்டுமாயின், அது நிச்சயமாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவையே சாரும். தமிழ் தேசியவாதிகள் என்போரில் ஒரு பிரிவினர் இப்போதும் காங்கிரஸ் இந்தியாதான் புலிகளை அழித்ததாக குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், உண்மை நிலைமை வேறு. அன்றைய சூழலில் தமிழ் நாட்டின் அழுத்தங்களுக்கு முகம்கொடுத்திருந்த காங்கிரஸ் இந்தியாவினால் இராணுவ ரீதியான ஒத்துழைப்புக்களை முழு அளவில் வழங்க முடியாமலிருந்தது. அதேவேளை, காங்கிரஸ் இந்தியா யுத்தத்தை நிறுத்துவதற்கான முயற்சிகளை செய்யவுமில்லை என்று கூறுவதும் சரியான கருத்தல்ல. அப்படியொரு முயற்சி இடம்பெற்றதை நோர்வேயின் அறிக்கை உறுதிப்படுத்துகின்றது. இந்த இடத்தில்தான் பெய்ஜிங் – கொழும்பு தேனிலவு ஆரம்பமாகின்றது. 2005இல் மீண்டும் யுத்தத்தை நோக்கிப் போகும் முடிவை பிரபாகரன் எடுக்கிறார். அதே 2005இல் தான் சீனாவை நோக்கி கொழும்பு நகர்கிறது. கொழும்பின் இராணுவ ஆர்வங்களுக்கு முழு அளவில் உதவுவதற்கான சைகைகளை காங்கிரஸ் இந்தியா காண்பித்திருக்குமானால், கொழும்பு சீனாவை நோக்கிப் அதிகம் பயணித்திருக்காது. இந்தியா முழு அளவில் கொழும்பின் யுத்தத்திற்கு கைகொடுத்திருக்குமானால் கொழும்பு – பெய்ஜிங் நெருக்கம் இந்தளவிற்கு வலுவடைந்திருக்காது. ஆனால், தமிழர்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டே அன்று இந்தியா மௌனமாக இருந்தது.
பிரபா – ரணில் உடன்பாடானது தமிழர்களுக்கான கதவை மட்டும் திறக்கவில்லை. மாறாக பல உலக சக்திகள் இலங்கை விவகாரத்திற்குள் உள்நுழைவதற்கான கதவாகவும் கூட அது இருந்தது. அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், ஜப்பான், சீனா, தென்னாபிரிக்கா என பல நாடுகள் உள்நுழைகின்றன. ஆனால், பிரபாகரன் மீண்டும் யுத்தத்தைத் தொடங்கிய போது அனைவருக்குமான கதவு மூடப்பட்டது. இறுதியில் பிரபாகரன் அனைவரது கோபத்தையும் சம்பாதித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது நான் மேலே குறிபிட்ட நாடுகள் அனைத்துமே கொழும்பின் யுத்த வெற்றிக்கு, ஏதோவொரு வகையில் பங்களித்திருக்கின்றன. ஆனால், சீனா மட்டும் இதில் விதிவிலக்காகும். சீனாவோ 2005இல் மீண்டும் ஆரம்பித்த யுத்தத்தை தனக்கான புதிய கதவாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்தியாவின் தயக்கத்தை துல்லியமாக கணித்துக்கொண்ட சீனா, கொழும்புடனான தேனிலவை தொடங்கியது. இன்று இலங்கையின் பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்களில் சீனா என்பது தவிர்த்துச் செல்ல முடியாதவொரு இடத்தை பெற்றுவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு ஒன்றில் கைச்சாத்திடவுள்ளது. இது கொழும்பு – பெய்ஜிங் உறவை மேலும் வலுப்படுத்தும். இன்றைய புள்ளிவிபரங்களின் படி இலங்கையின் பிரதான வர்த்தக பங்காளியாக இந்தியாவே இருக்கிறது. ஆனால், அந்த இடத்தை சீனா எடுத்துக்கொள்ள அதிக ஆண்டுகள் எடுக்கப் போவதில்லை. இதனை பல அரசியல் பொருளாதார நிபுணர்களும் பல விதமாக விளக்குகின்றனர். ஜப்பான் முன்னர் எவ்வாறு கிழக்காசிய நாடுகளுடன் உறவுகொண்டதோ, அதற்கு நிகரான வகையிலேயே தற்போது சீனா தெற்காசிய நாடுகளில் செல்வாக்குச் செலுத்தி வருவதாகவே அவர்கள் கணிக்கின்றனர். விளக்கங்கள் எதுவாக இருப்பினும் சீனா, இலங்கையில் வலுவாக காலூன்றிவிட்டது என்பதே உண்மை. இங்கு இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். 2005இல் மீண்டும் தொடங்கிய யுத்தத்தைப் பயன்படுத்தி உள்நுழைந்த சீனா, 2009இற்கு பின்னர் கொழும்பு மேற்குலகால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட சூழலை, தனது வலுவான காலூன்றலுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. எனவே, இன்று கொழும்பு – பெய்ஜிங் நெருக்கத்தின் முதல் கட்டத்திற்கு காங்கிரஸ் இந்தியாவின் தயக்கம் காரணமென்றால், இரண்டாவது கட்டத்திற்கு மேற்குலகின் தொடர்ச்சியான அழுத்தங்களே காரணம் எனலாம்.
இப்போது நான் மேலே குறிப்பிட்டிருக்கும் தலைப்பிற்கு வருகிறேன். சீனா, இலங்கையில் வலுவாக காலூன்றியிருக்கும் விவகாரத்திற்கும் தமிழர் பிரச்சினைக்கும் என்ன தொடர்பு? தொடர்பு நிச்சயம் உண்டு. நான் ஏலவே குறிப்பிட்டேன், ஒரு நாட்டின் உள்விவகாரங்கள் என்பவை, அந்த நாட்டின் அயலுறவை கையாளும் அணுகுமுறைகளுடன் பெருமளவிற்கு தொடர்புபட்டிருக்கிறதென்று. ஏனெனில், அரசியல் என்பது ஒரு தனித்த விடயமல்ல. மாறாக அது ஒரு பல்வகை விடயங்களின் பிரதிபலிப்பு. சீனாவின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படையாக இருப்பது உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை (Non-interference in internal affairs) என்பதாகும். அந்த அடிப்படையில் தமிழர் விவகாரத்தில் சீனா எந்தவிதமான சாதக அல்லது பாதக தலையீடுகளையும் செய்யாது. இது கொழும்பின் ஆர்வங்களுக்கு மிகவும் சாதகமான வெளிவிவகார அணுகுமுறையாகும். இதனால், கொழும்பு எப்போதும் சீனாவை நெருங்கியிருக்கவே வாய்ப்புக்கள் அதிகம். ஏனெனில், இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யும் ஏனைய சக்திகள் ஏதோவொரு வகையில் கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பவர்களாகவே இருக்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சீனா, மேலும் இலங்கையில் கால்பரப்பவே முயற்சிக்கும். இது உடனடி அர்த்தத்தில் இந்தியாவின் கவலைக்குரிய ஒரு விடயமாகும். இந்தியாவினால் கொழும்பு – பெய்ஜிங் உறவை தடுக்கவும் முடியாது. அதேவேளை, அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது. எனவே, இந்த இடத்தில் மேற்குலகு என்னதான் கொழும்பு குறித்து அபிப்பிராயங்களைக் கொண்டிருந்தாலும், கொழும்புடன் இணைந்து செயலாற்றுவதில்தான் இந்தியா கவனம் கொள்ளும்.
தற்போதைய மோடி அரசும் இதனைத்தான் செய்ய முற்படுகிறது. இலங்கையின் உள்விவகாரங்களில் அதிகம் அழுத்தங்களை பிரயோகித்தால் உள்விவகாரங்களில் தலையிடாக் கொள்கையை கொண்டிருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் இலங்கை மீதான செல்வாக்கை இந்தியாவினால் சமநிலைப்படுத்த முடியாது போகலாம். எனவே, தற்போது இந்தியாவின் முன்னால் உள்ள ஒரே தெரிவு, கொழும்புடன் நெருங்கிப் பணியாற்றுவது ஒன்றேயாகும். இந்த பின்புலத்தில், தமிழர் விவகாரம் தொடர்பில் இந்தியாவால் பெரிய அழுத்தங்கள் எதனையும் பிரயோகிக்க முடியாது போகும். இன்றைய மோடி அரசில் அப்படியொரு முகம்தான் தெரிகிறது. எனவே, இந்தப் பின்புலத்தில் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் தலையீட்டு எல்லையென்பது, முன்னர் இந்தியாவின் தலையீட்டினால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையாகவே இருக்கும். அதிலும் கூட பொலிஸ் அதிகாரம் தொடர்பான விடயங்களில் இந்தியா பெரியளவில் அழுத்தம் கொடுக்க வாய்ப்பில்லை. இந்த விடயங்களை மத்திப்பிட்டுத்தான் தமிழர் தரப்பு நிலைமைகளை கையாள வேண்டியேற்படும்.
இன்றைய சூழலில், தமிழர் விவகாரம் என்பது சீனா – இந்திய நகர்வுகளுக்கிடையில் அகப்பட்டுவிட்டது. ஆனால், அரசை பொறுத்தவரையில் சீனா – இந்திய ஆர்வங்களை, உள் விவகாரங்களை கையாளும் பொறிமுறையாக மாற்றுவதில் வெற்றிபெற்றுவிட்டது. இதனால் இலங்கை விவகாரங்கள் மீதான வெளியார் தலையீடு மேற்கு – ஆசியா என்று பிரிந்து கிடக்கிறது. மேற்கின் அழுத்தங்களை ஆசியாவின் எழுச்சியடைந்துவரும் இரு பெரும் சக்திகளைக் கொண்டு சமாளித்துவிட முடியுமென்றே அரசு கருதுகிறது. மேற்குலகைப் பொறுத்தவரையில் இதனை கையாளும் இறுதிச் துருப்புச் சீட்டாக பொருளாதாரத் தடை ஒன்றே இருக்கிறது. அப்படியொரு பொருளாதாரத் தடை வரும் பட்டச்சத்தில், அதன் விளைவாக இலங்கை சீனாவின் செல்லப்பிள்ளையாக மாறிவிடக் கூடிய ஆபத்தும் நேரிடலாம். அப்படியொரு நிலைமையை இந்தியா நிச்சயம் விரும்பாது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தமிழர் பிரச்சினையில் வெளியார் தலையீட்டிற்கான வாய்ப்புக்கள் மிகவும் மட்டுப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. சுற்றிச் சுற்றியும் சுப்பரின்ர கொல்லை என்பது போல, தமிழர் விவகாரம் எங்கு சுற்றியும் இறுதியில் இந்திய தலையீட்டினால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையில்தான் தரித்துநிற்கப் போகிறது. அதனைத் தாண்டிப்போக வேண்டுமென்பது தமிழர் தரப்பின் அவாவாக இருந்தாலும் கூட, சூழல்நிலை அதற்கு மாறாகவே இருக்கிறது. உலக ஒழுங்கில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டும்தான் தமிழர்கள் தற்போதைய நிலையில் மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம்.
தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.