படம் | Screen Shot

இப்பொழுதெல்லாம் விஜய் தொலைக்காட்சியில் ஜுனியர் சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நன்றாகப் பாடுகின்ற சின்னக் குட்டிகள், அந்நிகழ்ச்சியினை நடத்துகின்ற ப்ரியங்கா ம.கா.பா. ஜோடியின் கிண்டல் நகைச்சுவைகள், இவையெல்லாவற்றோடும்கூட அங்கு இடைநடுவே வரும் சுவாரஷ்யமான விளம்பரங்கள் என சகலதுமே என்னைத் தொலைகாட்சியின் முன் கட்டிப் போடும் காரணிகளாகவுள்ளன. அட, விளம்பரங்களுமா உங்களைக் கட்டிப் போடுகின்றன என நீங்கள் கேட்பது புரிகின்றது. சாதாரணமாக எந்த நிகழ்ச்சியிலும் விளம்பரங்கள் வரும்போது அலுத்துக்கொண்டு அடுத்த சனலுக்கல்லவா தாவுவோம்? ஆனால், இப்பொழுதென்னவோ வரவர இம்மாதிரியான இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் விளம்பரங்கள் புதுமையைத் தழுவுபவையாகவும், இந்திய சமூகத்திற்குள் எற்படும் அமைதிப்புரட்சியினைக் கோடு காட்டுபவையாகவும் இருப்பதைப் பார்க்கின்றேன். இதனால்தான் விளம்பரங்களும் சேர்த்து எம்மைக் கட்டிப் போடுகின்றன என்பேன்.

இந்தப் புதுமை விளம்பரங்கள் அனைத்துமே இந்திய சமூகத்தில் மாறிவரும் பெண்களின் அந்தஸ்தினைக் காட்டுபவையாக இருக்கின்றன. குடும்பப் பெண்களாக, அப்படி வேலை செய்தாலும் பாரம்பரியத் தொழில்களில்ஈடுபடுபவர்களாக, அப்படி வேலை செய்பவர்களாக இருந்தாலும் குடும்ப நலன்களில் மட்டுமே அக்கறை கொண்டவர்களாகப் பெண்கள் சித்தரிக்கப்பட்ட காலம் மலையேறிவிட்டது போலத் தெரிகின்றது. அவற்றைப் பார்க்கும்போது இந்தியப் பெண்ணிலைவாதிகள் உண்மையிலேயே வர்த்தக மட்டங்களுக்குள், குறிப்பாக விளம்பரத் தொழில்களுக்குள் ஊடுருவியிருக்கின்றனர் அல்லது அவர்களுடைய செய்திகள் இந்த மட்டங்களில் தெளிவாகச் சென்றடைந்திருக்கின்றன என்பதை உணரலாம். அதற்கு ஒரு நல்ல உதாரணமாக சிந்தோல் சோப் விளம்பரத்தினை எடுக்கலாம்.

அதில் ஒரு மாமியார் கூறுகிறார், “நாங்கள் ஒரு டாக்டர் குடும்பம். ஆனா என்னோட மகன் ஒரு ஜேர்னலிஸ்டைக் கல்யாணம் பண்ணினான். வெளியில வேலையாகப் போகும்போது புகை, தூசியால சருமம் (இப்பொழுது வெளியூர்களிலும் குக்கிராமங்களிலும் அப்பெண் நின்று புகைப்படங்கள் எடுப்பது காட்டப்படுகின்றது) பாதிக்கப்படுவதைத் தடுக்க சிந்தோல் உபயோகிக்க சொன்னேன்…” முதலில் இந்த விளம்பரம் வரும்பொழுது அந்த ‘ஆனா’வை நாம் கவனித்துக்கொண்டோம். டாக்டர் குடும்பம் ஜேர்னலிஸ்ட் பெண்ணை மருமகளாக எடுப்பது ஒரு பெரிய ‘ஆனா’வுடன்தான் என்று. அது சிறிய காலத்துக்குத்தான் ஓடியது. பின்பு இப்போதோ அந்த ஆனாவை வெட்டி எடுத்துவிட்டார்கள்! மகன் ஜேர்னலிஸ்டை கல்யாணம் பண்ணினான், அவளுக்கு நான் சிந்தோல் சோப் பரிந்துரைத்தேன் என மாமியார் கூறுவதாக இப்போது அந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. பெண்ணிலைவாதிகளின் இடையீடு இருக்கவே வேண்டும் என நான் கூறுவதன் சாட்சி இந்த விளம்பரந்தான். அந்த ‘ஆனா’வை ஆட்சேபித்து எடுத்துவிடப் பண்ணியிருக்கின்றவர்கள் வேறு யாராக இருக்கக்கூடும்?

இவ்வாறு சுதந்திரமாக எங்கும் திரிந்து செய்திகள் மற்றும் கதைகள் சேகரிக்கும் ஜேர்னலிஸ்ட் பெண்ணை, அவளைப் பெருமையுடன் ஏற்றுக் கொள்ளும் மாமியாரை இந்த விளம்பரம் காட்டியது. இன்னொரு விளம்பரம் சிரேஷ்ட பணியாளர்கள் மட்டத்துக்குப் பதவியுயர்வுக்காகப் பாடுபடும் ஒரு பெண்ணைப் பற்றியது. இது சலவைத்தூளுக்கான விளம்பரமாகும். காலையில் நன்றாகத் துவைக்கப்படாத ஆடைகளுடன் மல்லுக் கட்டிவிட்டு அலுவலகத்துக்குப் போய் வேலையில் அமரும்போது ஒரே டென்ஷனாக இருக்கின்றது என்கிறாள் அந்தப்பெண். இதனால் தான் இலக்கு வைக்கும் பதவியுயர்வு கிடைக்காமல் போனாலும் போகலாம். ஆனால், பின்பு ஃசேர்வ் சலவைத்தூள் உபயோகிப்பதனால் ஒரு கழுவுதலுடனேயே அழுக்குகள் போய் பளிச்சென்று வருவதனால் தான் ஆறுதலாக அலுவலகத்துக்குச் செல்லக்கூடியதாக இருக்கின்றது. வெகு சீக்கிரம் சீனியர் ஸ்டாஃவ் மட்டத்துக்கு செல்லலாம் என மகிழ்ச்சியுறுகின்றாள். பெண்கள் வேலைக்குப் போய் வருபவர்களாக மட்டுமல்லாமல் தொழில் ரீதியான இலட்சியங்களைக் கொண்டவர்களாகவும் இந்த விளம்பரம் காட்டுகின்றது.

இன்னொரு விளம்பரம், ஸ்மார்ட் போனுக்கான விளம்பரமாகும். ஒரு பெண் மேலதிகாரி தனது ஆண் அலுவலர் ஒருவருக்கு ‘ஸொறி கய்ஸ் (Guys)… இந்த வேலையை முடித்தேயாகவேண்டும் என்கிறார். அந்த அலுவலர் தனது மேலதிகாரியினைப் பெயர் சொல்லி அழைப்பதன் மூலம் அவர்தான் கணவர் என எமக்கு உணர்த்தப்படுகின்றது. மேலதிகாரி நேரத்தோடு அலுவலகத்தை விட்டுக் கிளம்பகின்றாள். அவள் காரை ஓட்டிக் கொண்டு போகும்போது இரவுச் சாப்பாட்டுக்கு என்ன வேண்டும் எனத் தனது கையடக்கத் தொலைபேசியின் மூலம் கேட்கின்றாள். வீட்டுக்கு வந்தவுடன் உடை மாற்றி நல்லதொரு விருந்தினை சமைத்து விட்டு கணவனை அழைக்கின்றாள். வேலையில் இருக்கும் கணவனோ “பொஸ் நிறைய வேலை கொடுத்திருக்கின்றார் வர முடியாது…” என்கிறான். “பொஸ்கிட்டே மனைவி கூப்பிடுறாள் என்று சொல்லு…” என்கிறாள் இவள். சமைத்த கறிகளையெல்லாம் போன் மூலம் வீடியோவாக அனுப்பி விடுகிறாள். “சீக்கிரம் வா” எனக் கட்டளையிடுகின்றாள். இங்கு மேலதிகாரி வைத்திருக்கும் போனாகவும், அவளுடைய வேலையின் போக்கிலேயே இயற்கையாக ஏற்படக்கூடிய பிணக்குகளைத் தீர்த்து வைக்க உதவும் தொடர்பாடல் மூலோபாயமாகவும் இந்த ஸ்மார்ட் போன் காட்டப்படுகின்றது. கணவனுக்கு மனைவி மேலதிகாரியாக இருந்தாலும் அந்த உறவில் ஏற்படக்கூடிய அழுத்தங்களை ஸ்மார்ட் போன் கொண்டு தீர்க்கலாம் என்பதுதான் செய்தி.

அடுத்தது நகை விளம்பரமாகும். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக நகைக் கம்பனிகள் இப்பொழுது மிகப் புதிய முறைகளில் விளம்பரங்கள் செய்கின்றன. முன்னொருதரம் ஒரு விளம்பரத்தில் மணப்பெண்ணாக அழகான நகைகள் அணிந்து ஒருத்தி தயாராகின்றதைக் காட்டப்படுகின்றது. ஒரு சிறு பிள்ளை அவளைச் சுற்றி “அம்மா அம்மா” எனக் குறும்பு செய்கின்றாள். இதைப் பார்த்து சுற்றி நின்ற உறவினர்கள் எல்லோரும் டென்ஷன் அடைகின்றனர். அவளும் பிள்ளையைக் கண்டிக்கின்றாள். அடுத்த ஷொட்டில் அவளும் மணமகனும் அக்கினியை வலம் வருகின்றனர். பிள்ளை அங்கும் இவர்களுடன் போக அடம் பிடிக்கின்றது. உடனே மணமகன் அப்பிள்ளையை அணைத்தெடுத்துக் கொள்ளுகின்றான். இரண்டாம் கல்யாணம் முடிக்கும் ஒரு பெண்ணைக்கொண்டு நகை விளம்பரம். கணவனுக்கும் மனைவிக்குமிடையில் இந்த வகையான புரிதலையும் அவனுக்கும் தனக்குப் பிறக்காத பிள்ளைக்குமிடையில் ஏற்படவேண்டிய தந்தை மகள் பாசத்தினையும் இந்த விளம்பரம் எடுத்துக்காட்டியது. அதேபோன்றே சுப்பர் சிங்கரிலும் ஒரு நகை விளம்பரம் இருக்கின்றது.

ஒரு மாமியார் வரப்போகின்ற மருமகளுக்கு முத்துக்காப்பு செய்து போடுகின்றார். காப்பினை அணிவித்து விட்டு “உனக்கு உன் அப்பாவிலா இல்லை உன் புருஷனிலா கூட அன்பு?” என்று கேட்கின்றார். அவள் பதில் சொல்லத் தடுமாறிக்கொண்டிருக்கையில் மாமனார் தனது பங்குக்கு “இவன் சும்மா ஒரு ரோசாப்பூவைக் கொடுத்து கல்யாணம் பண்ணுவியா எனக் கேட்டதற்காக அப்பாவை விட்டு விடுவியா?” என்று மாப்பிள்ளையைக் குறித்துக் கேட்கின்றார். பின்னே மாமியார் “உனக்கு அப்பாவிலதானே பிரியம்?” எனத் திரும்பக் கேட்கவும் இவள் தயக்கத்துடன் ஆமா போடவும், “நீ உன் அப்பா பெயரையே வச்சுக்கோ” என்கிறார்! அடுத்த காட்சி இவர்களின் பதிவுத் திருமணமாகும். மணப்பெண்ணும் மணமகனும் வேறுவேறு பெயர்களில் தமது கையொப்பங்களை இடுகின்றனர். மணப்பெண் உடனேயே திரும்பி சந்தோஷத்துடன் மாமியாரை அணைத்துக்கொள்ளுகின்றாள். மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் உருவாகக்கூடிய ஒரு உயரிய நட்பினை இந்த விளம்பரம் வெளிப்படுத்துகின்றது. இங்கு மணப்பெண் தனது பெயரை மாற்றாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் கேட்கவில்லை. மாமியாரே குறிப்பறிந்து அவளுடைய தயக்கத்தைப் போக்கி பெயரை மாற்றாமல் வைத்திருக்க உதவுகின்றார் எனக் காட்டப்படுகின்றது.

இத்தொலைக்காட்சி விளம்பரங்கள் யாவும் இந்தியாவில் உருவாகிக்கொண்டு வரும் பெண்களின் புதிய கொள்வனவு செய்யும் சக்தியினை சித்தரிக்கின்றன. நகைமற்றும் சலவைத்தூள் இவையெல்லாம் பாரம்பரியமாகவே பெண்களை நுகர்வோராகக் குறித்தே வெளியிடப்பட்டன. ஆனால், ஸ்மார்ட் போன் இதில் புதிய வருகையாகும். இது பெண்களின் வருமானம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கின்றது எனக் காட்டுகின்றது. வழக்கமாக விளம்பரங்கள் புதிய பரிசோதனைகளில் ஈடுபடுவதில்லை. அப்படி ஈடுபடவும் முடியாது. தன்னுடைய வாடிக்கையாளர்களின் திருப்தியையே என்றும் நோக்கக்கூடியன. அப்படியிருந்தும் அவை புதுமை மொழி பேசுகின்றன என்றால், இவ்வாறு காட்டினால்தான் நுகர்வோரான இப்போதைய சந்ததிப் பெண்களின் அங்கீகாரம் கிடைக்கும் என்கின்ற அடிப்படையில்தான் இந்த விளம்பரங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன எனக்கொள்ளலாம். இன்னும் சில வருடங்களில் இந்தியாவின் சமூகத் தளங்கள் முற்றிலும் மாற்றமடையப் போகின்றன.

எங்களுடைய நாட்டில் இப்போக்குகளை அவதானிக்க முடியவில்லை. நாமோ, இன்னமும் பாரம்பரிய தலைகளுக்குள் கட்டுண்டு கிடக்கின்றோம். எமது பெண்ணிலைவாதிகள் தமது இந்தியத் தோழிகளிடமிருந்து இம் முன்னேற்றத்தினை எப்படி சாதித்தார்கள் எனக் கற்றுக்கொள்ளவே வேண்டும்.

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதி கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.