படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம்.

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் திட்டமிடலாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்து மேலும் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கின்றது. கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான சுப்பிரமணிய சுவாமியே இக்குழுவினருக்கு தலைமை ஏற்றிருந்தார். சுவாமி, பாரதிய ஜனதாவின் உயர் மட்டத்தினருக்கு நெருக்கமானவர் என்பது இரகசியமல்ல. ஆனால், அவர் பாரதிய ஜனதா கட்சியின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவராக இருக்கின்றார் என்பது புதிய தகவலாகும். இது கூட்டமைப்பினருக்கு பேரதிர்ச்சியாக இருக்கலாம். சுப்பிரமணிய சுவாமி புலிகள் விடயத்தில் மிகவும் கடும்போக்கு கொண்டவராவார். அத்துடன், தமிழ் நாட்டு திராவிட கட்சிகளை தன்னுடைய பரம வைரியாகவும் கருதுபவர். எனவே, இவ்வாறான ஒருவர் பாரதிய ஜனதா கட்சியின் மூலோபாய திட்டமிடலாளராக இருப்பது கூட்டமைப்பு புதுடில்லியை அணுகுவதில் பெரிய தடையாகவே அமையும். ஏனெனில், கூட்டமைப்பு தமிழ் நாட்டின் ஆதரவாளர்களை கருத்தில் கொண்டே, சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களுடன் தொடர்புகளை பேணியிருக்கவில்லை.

இதேவேளை, இக்குழுவில் அங்கம் வகித்தவர்களின் ஒருவரான பாரதிய ஜனதா கட்சியின் வெளிவிவகார கொள்கையின் தேசிய அமைப்பாளரும், பா.ஜ.கவின் தேசிய நிறைவேற்று உறுப்பினருமான கலாநிதி சேசாத்திரி சாரி குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களும் இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கவை. “கொழும்புக்கும், இலங்கை தமிழர்களுக்கும் இடையிலான பிரச்சினை உள்நாட்டு விவகாரமாகும். எனவே, இந்தப் பிரச்சினைகளை அனைத்துலக மயமாக்குவதற்கு பதிலாக கொழும்பிற்கும் புதுடெல்லிக்கும் இடையில், இதனை சிறந்த முறையில் தீர்க்க முடியும். தீர்மானங்கள் மற்றும் தடைகள் விதிக்கும் யோசனைகளால் பயனில்லை. அவை எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியதை இரண்டாவது அணுகுண்டு பரிசோதனைக்குப் பின்னர் இந்தியா, ஈரான் மற்றும் மியன்மாரில் பார்த்திருக்கிறோம்.” இவ்வாறு குறிப்பிட்டிருக்கும் சாரி, கொழும்பு தமிழர்களின் கவலைகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இங்கு ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, இலங்கையின் உள் விவகாரம் முற்றிலுமாக இந்தியாவின் கைகளிலிருந்து விலகிச் செல்வதை மோடியின் திட்டமிடலாளர்கள் விரும்பவில்லை. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படின் அதன் விளைவுகளை இந்தியாவும் சந்திக்க நேரிடும் என்றே அவர்கள் கருதுகின்றனர். கொழும்பின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்குலக அழுத்தங்களின்போது, இந்தியா முற்றிலுமாக கொழும்பை கைவிடுவதானது, பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாமென்று அவர்கள் கருதுவதாகவே தெரிகிறது. மேலும் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த குழுவினர் எத்தகையதொரு உள்நோக்கத்துடன் வருகை தந்திருந்தனர் என்பது வெளியாகாவிட்டாலும் கூட, ஜ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலேயே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். இதன் மூலம் இவ்வாறான விசாரணைகளுக்கு ஆதரவாக இந்தியா இருக்காது என்பதே அவர்கள் சொல்ல முற்படும். இதன் மூலம் ஜ.நா. விசாரணையின் வாயிலாக சில மாற்றங்கள் வரக்கூடுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமிழர் தரப்பிற்கும் இந்தியா ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருக்கிறது. இப்போது கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது? கூட்டமைப்பின் முன்னால் இரண்டு தெரிவுகள்தான் இருக்கின்றன. ஒன்று, இந்தியாவின் ஆலோசனைகளை புறம்தள்ளிவிட்டு மேற்குலகை சார்ந்து செயற்படுவது. மேற்குலகின் இறுதி இலக்கு ஒரு ஆட்சி மாற்றமாக இருக்கலாம். இல்லாவிட்டால், புதுடில்லியின் எல்லையை விளங்கிக் கொண்டு, அதற்குள்ளால் பயணிப்பது. கூட்டமைப்பால் அவ்வளவு எளிதாக இந்தியாவை விட்டுவிட்டு விலக முடியாதென்பதும் இரகசியமான ஒன்றல்ல. சுப்பிரமணிய சுவாமியின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஒருபுறமாக வைத்துவிட்டு, கொழும்பு வந்திருந்த பா.ஜ.கவின் மூலோபாய திட்டமிடலாளர்கள் குழுவினர் தெரிவித்திருக்கும் கருத்துக்களிலிருந்து இந்தியா தமிழர் விவகாரத்தை கொழும்பு – புதுடில்லி என்னும் நிலையில் தீர்த்துக்கொள்ள விரும்புவதாகவே தெரிகிறது. இதன் மூலம் ஒரு விடயம் தெளிவாகிறது. இந்தியாவின் மத்தியில் எவர் ஆட்சியில் இருப்பினும், அவர்கள் இலங்கை தமிழர் தொடர்பில் காட்டும் அக்கறையின் எல்லையானது, இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைவான மாகாண சபை முறைமைதான்.

அதற்கு மேலாக இந்திய மத்திய அரசு செல்லாது. இதன் காரணமாகவே, இலங்கை ஜனாதிபதியுடனான முதலாவது சந்திப்பின்போதே மோடி 13ஆவது திருத்தச் சட்ட விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே, எங்கெல்லாம் சுற்றி வந்தாலும் இறுதியில் அனைவரும் தரித்து நிற்கப் போகும் இடம், முன்னர் தமிழர் தரப்புக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட அந்த மாகாணசபை முறைமைதான். ஆனால், மாகாண சபை முறைமையை சிறந்த முறையில் நடாத்திச் செல்வதற்கு கூட்டமைப்பிற்கும் – ஆளும் அரசிற்கும் இடையில் ஒரு நல்ல புரிந்துணர்வு இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படும். ஒருவேளை, மோடி இந்தியா அவ்வாறானதொரு புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவும் கூடும். அதற்கு முன் நிபந்தனையாக கூட்டமைப்பு மேற்குலக அழுத்தங்களுக்கு ஆதரவளிப்பதை தவிர்க்க வேண்டிவரும். ஆனால், அது கூட்டமைப்பால் முடியுமா? கூட்டமைப்பு, மக்கள் மத்தியில் மேற்குலக அழுத்தங்கள் குறிப்பாக, அமெரிக்கப் பிரேரணைகள் மற்றும் மனித உரிமை விவகாரம் தொடர்பில் அதீத நம்பிக்கையை ஏற்கனவே ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில், அதனை முற்றிலுமாக கைவிட்டுவிட்டு புதியதொரு அரசியல் அரங்கில் அவ்வளவு எளிதாக பிரவேசிக்க முடியாது. அவ்வாறு பிரவேசிக்க வேண்டுமாயின், இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை மட்டும் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கும் நிலைக்கு கூட்டமைப்பு தன்னையொரு அரசியல் பண்பு மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும்.

நிலைமைகள் முற்றிலும் சிக்கலாக இருக்கின்றன. தற்போது இருக்கின்ற நிலைமையை கருத்தில்கொண்டே இப்பத்தி சில விடயங்களை இங்கு பதிவு செய்கிறது. மோடி தலைமையிலான இந்தியா, அயல் நாடுகளுடன் இணக்கத்துடன் பயணிக்க முயல்வதாகவே தெரிகிறது. இந்த பின்புலத்தில் கொழும்புடன் நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா எதிர்பார்க்கிறது. அதேவேளை, இலங்கை தற்போது சர்வதேச ரீதியாக எதிர்கொண்டிருக்கின்ற நெருக்கடிகளால் புதுடில்லியிருந்து விலகிச் சென்றுவிடக்கூடாது என்னும் கரிசனையும் இந்தியாவிடம் உண்டு போல் தெரிகிறது. எனவே, இவ்வாறான விடயங்கள் அனைத்தும் ஒரு புள்ளியில் சந்திக்கும் போது, இலங்கை தமிழர் விவகாரத்தில் புதிதாக எதனையும் செய்யக் கூடிய சூழல் இந்தியாவிற்கு இல்லை. இருப்பது முன்னர் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒரு உடன்பாட்டின் கீழ் செயலாற்றுமாறு வலியுறுத்துவது ஒன்றே. எனவே, மோடி இந்தியாவின் திட்டமிடலாளர்களின் கருத்துக்கள் மூலம் தமிழர் தரப்பிற்கு சொல்லப்படுகிறது, நீங்கள் இந்தியாவிடமிருந்து 13ஆவதற்கு மேல் எதிர்பார்க்காதீர்கள் என்பதே!

எனவே, கூட்டமைப்பிற்கு முன்னால் இருக்கின்ற பணி, 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழுள்ள உரிமையை தமிழ் மக்கள் முழுமையாக அனுபவிப்பதற்கு தடையாக இருக்கின்ற விடயங்களை இந்தியாவின் கவனத்திற்கு கொண்டு செல்வதுதான். ஏலவே உள்ள உடன்பாட்டிற்கு அமைவாக கொழும்பு நடந்துகொள்வதற்கு மோடி இந்தியா உதவவேண்டும் என்பதை கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும். கூட்டமைப்பு மாகாண சபை விவகாரத்தில் அசமந்தப் போக்கோடு இருக்குமாயின், அரசிற்கு அது வாய்ப்பாகவே அமையும். 13ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தை புறம்தள்ளி கூட்டமைப்பு செயற்படுமாயின், இந்தியா அதில் ஈடுபாடு காட்ட வாய்பிருக்காது. அரசு, மோடி இந்தியாவோடு நெருங்கிச் செயற்படவே முயல்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைவாக, தமிழர் விவகாரத்தில் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு இந்தியா வலியுறுத்த முடியும். இந்தியாவின் எல்லைக்குள் பயணிக்க கூட்டமைப்பு விரும்பவில்லையாயின், இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. அவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூட புதிதாக வருபவர்களும் உடனடியாக தமிழர்களுடன், ஒரு சமஷ்டி அரசுக்கு இணங்குவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

Jathindra