படம் | Malarum

வட மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்படவிருந்த ஊடகவியல் பயிற்சிநெறி வேண்டுமென்றே பாதுகாப்புப் படையினராலும், திட்டமிடப்பட்ட முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலமும் இலங்கை அரசு இடைநிறுத்தியிருந்தது. ஏற்கனவே, வட மாகாண ஊடகவியலாளர்களுக்காக இரண்டு முறை நடத்தப்பட்ட பயிற்சிநெறி அரசாலும் அரசின் குண்டர் குழுக்களாலும் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மூன்றாவது முறையாக கொழும்பில் நடத்தப்படவிருந்த பயிற்சிநெறிக்காக கலந்துகொள்ள வந்துகொண்டிருந்த ஊடகவியலாளர்களின் வாகனத்தை ஓமந்தைப் பகுதியில் வைத்து சோதனையிட்ட இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், கஞ்சா போதைப் பொருள் இருப்பதாகக் கூறி அவர்களை கைதுசெய்ய முயற்சித்தனர். ஊடகவியலாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, வான் சாரதியை மட்டும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இருப்பினும், இராணுவமே அந்த கஞ்சா போதைப் பொருளை தாம் பயணம் செய்த வாகனத்தில் கொண்டு வந்து வைத்ததை பார்த்ததாக ஊடகவியலாளர் ஒருவர் கூறியுள்ளார்.

நடத்த சம்வத்தை தெளிவுபடுத்தும் முகமாக ஊடகவியலாளர் அமைப்புகள் கொழும்பு இதழியல் கல்லூரியில் ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

BteXASeCUAE4fPs.jpg large

ஊடகவியலாளர்களைச் சந்திக்க இருந்த சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளர் சுனில் ஜயசேகரவுக்கு தொடர்ந்து அநாமதேய இலக்கத்தினூடாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. “ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினால் உன்னைக் கொன்றுவிடுவோம். உயிர் மேல் ஆசை இருந்தால் மாநாட்டை நடத்தாதே” என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திட்டமிடப்பட்ட படி ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது. இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் போராடி வரும் அமைப்பினர், ஊடவியலாளர்கள் முகம்கொடுத்துவரும் அச்சுறுத்தல்களை நாங்கள் இணங்கண்டுள்ளோம். இதன் தன்மையை அறிந்துகொண்டே நாங்களும் செயற்பட்டு வருகிறோம். நாங்கள் இவற்றை குறைத்து மதிப்பிடவில்லை. இவ்வாறான அச்சுறுத்தல்களைக் கண்டு பயந்தோடி ஒளியவும் மாட்டோம். நான் இந்த நாட்டில்தான் பிறந்தேன். இங்குதான் இறப்பேன். அதை யார் தீர்மானித்தாலும் பரவாயில்லை. மரண அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் எம்மை தடுத்துநிறுத்த முடியாது” – என்றார்.

ஊடகவியல் பயிற்சிநெறி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக அல்ல

ஊடகவியல் கல்வியை கற்பதற்கான உரிமை தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மறுக்கப்படுவதாக இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ‘றைற்ஸ் நவ்’என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்ற ஊடக கற்கைநெறி அரசை கவிழ்ப்பதற்கான பயிற்சிப்பட்டறை அல்ல என்று ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் அ.நிக்ஸன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

திட்டமிடப்பட்ட முறையில் ஊடகவியலாளர்கள் பயணம் செய்த வாகனத்திற்குள் கஞ்சா பெட்டி ஒன்றை வைத்துவிட்டு அதனை ஊடகவியலாளர்கள் கடத்தியதாக படையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். ஊடகவிலாளர்களை கைதுசெய்யும் நோக்கிலும், குறித்த பாடநெறியில் அவர்கள் பங்குகொள்வதை தடுக்கும் வகையிலும் படையினர் இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர்கள் துணிச்சலாக செயற்பட்டு படையினருடன் வாக்குவாதப்பட்டனர். உண்மையை எடுத்துக் கூறினர். நள்ளிரவு என்றும் பாராமல் ஊடகவியலாளர்கள் வீதியில் அமர்ந்திருந்து நடத்திய போராட்டத்தினால் படையினர் அவர்களை விடுதலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும், தொலைபேசி மூலமாக ஊடகவியலாளர்கள் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

இது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு படையினரால் தொடர்ந்தும் விடுக்கப்படும் அச்சுறுத்தல் நடவடிக்கையாகும். அரசை கவிழ்க்கும் நோக்கம் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இல்லை. ஊடகத் தொழிலை உரிய தொழிற் தகுதியுடன் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசசார்பற்ற நிறுவனங்களினால் நடத்தப்படும் பயிற்சி நெறிகளை குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் – என்றார் அவர்.

நன்றி, விகல்ப