படம் | JDSrilanka

நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் இணைத்துக்கொண்டு ஒரு நாட்டை ஆளுகின்றீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அரசிலுள்ள அதிகாரம் மிக்க, நிறைய நிதிகள் கையாளக்கூடிய ஒவ்வொரு பதவியும் உங்களின் யாராவதொரு உறவினருக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. எந்தப் பாரிய திட்டமானாலும் சரி, சிறிய திட்டமானாலும் சரி, அதில் வருகின்ற கொமிஷன் பணமெல்லாம் உங்கள் உறவினர்கள் மத்தியிலேயே பங்கிடப்படுகின்றது. அவர்களில் யாரேனும் விரும்பினால் இலங்கையின் விமானமான ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸினை தமது சொந்தத் தேவைக்காக எந்த விமான நிலையத்திலும் காத்திருக்க வைக்கலாம். ஏன், அதனை அது சாதாரணமாகப் போகத் தேவையில்லாத விமான நிலையத்திற்கும் போக வைக்கலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படித் துணிந்து கேட்டால், தொலைபேசி மூலம் மட்டுமே அச்சுறுத்தி நாட்டை விட்டே ஓட வைக்கலாம். இப்படி எத்தனை எத்தனையோ சௌகரியங்கள். சொர்க்கமே பூலோகத்தில் வந்த மாதிரியல்லவா? ஆனால், இந்த சொர்க்கத்தை நித்தமும் அனுபவிக்கலாமென்றால் அதற்கு சில எதிரிகள் முட்டுக்கட்டை போட முனைகின்றனர். அவர்கள் வேறு யாரும் இல்லை. உங்கள் குடும்பத்தவரின் பதவிகளும் அந்தக் கமிஷன்களும் கிடைக்கின்ற நிலையில் இருந்தும் கிடைக்காமல் போனவர்கள். உங்களைச் சுற்றி எத்தனை எதிரிகளைச் சம்பாதித்திருப்பீர்கள். ஆனால், உங்கள் பதவி ஏதோவொரு முறையினால் பறிபோய் விட்டால்… இந்த எதிரிகளெல்லாரும் சேர்ந்து ஐயகோ உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உண்டு இல்லையென்று பண்ணிவிடுவார்களே. ஒரு சாதாரண எதிர்க்கட்சி உறுப்பினராகக்கூட இருக்க முடியாதே. சிறையில் போட்டுத் தூக்கிலும் ஏற்றி விடுவார்களே. இதுவரை அனுபவித்த சொர்க்கம் நரகமாகி விடுமே. ஆதலினாலே, தோற்கக்கூடாது, தோற்கவே முடியாது.

இதுதான் இப்போதுள்ள ஆட்சியாளர்களின் நிலைமை. இலங்கையர் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஆட்சியாளர்களை பதவியிலிருந்து இறக்கும் பண்பாடு அற்றவர்களென்பதால், ஒவ்வொரு தடவையும் தேர்தல்கள் வரும்போதுதான் தமது நிலைமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றது என்பது அவர்களுக்குத் தெரியும். ஒன்றொன்றாக மாகாணசபைத் தேர்தல்கள் நடத்துவது இலகுவானது. சகல வளங்களையும் ஒரே இடத்தில் இறக்கி வாக்குகளை வேட்டையாடி விடலாம். ஆனால், ஜனாதிபதித் தேர்தலோ நாடு முழுவதம் ஒரே சமயம் நடத்த வேண்டியது. நினைத்தாலே பயங்கரமானதல்லவா? அப்படியிருந்தும் செய்தேயாக வேண்டும். அதனையும் சோதிடர்களின் ஆலோசனையின்படியும் அரசியல் நிலைமைகளின்படியும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் என உத்தேசமாக தீர்மானித்தாகி விட்டாயிற்று. இதற்குள் சிக்கல்கள் பல இருக்கின்றன. எப்படியும் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மக்களின் வாக்குகள் கிடைக்கா. அப்படியானால் பௌத்த சிங்களவர்களின் வாக்குகளை மட்டும்தான் நம்ப வேண்டியிருக்கின்றது. அதில் யாரும் ஆப்புவைக்காமல் பாதுகாக்க வேண்டும். இப்படி அவர்கள் குலை நடுங்கிக் கொண்டிருக்கும்போதுதான் அமெரிக்க அரசு பத்திரிகையில் ஒரு விளம்பரத்தினைப் போட்டு, இவர்களது வயிற்றில் புளியைக் கரைத்தது.

வாக்காளர் விழிப்புணர்விற்கான கல்வியினை நடத்தும் திட்ட முன்மொழிவுகளைக் கோரி அரசு சாரா நிறுவனங்களுக்கு அது போட்ட விளம்பரம்தான் அது. அமைச்சரவையே (ஜனாதிபதியென்றே நீங்கள் வாசித்துக்கொள்ளலாம்) அதிர்ந்தெழுந்தது. வேறு வேறு நாடுகளில் ஆட்சி மாற்றத்தினைக் கொண்டு வந்த வல்லரசல்லவா அமெரிக்கா? தமது ஆட்சியினைத் தோற்கடிப்பதற்கு மறைமுகமாக போடப்பட்ட சதித் திட்டமே இது என்று நம்பியது. வாக்காளர் கல்வி என்பதற்குப் பின்னால் தமக்கெதிராக வாக்களிக்க மக்களைத் தூண்டப் போகின்றனர் என முடிவு செய்தது. அமெரிக்கத் தூதுவரை விளக்கமளிக்கக் கூப்பிட்டதுடன், அடுத்த நாள் நடந்த அமெரிக்க சுதந்திர தின வைபவத்திற்கு அரசை பிரதிநிதித்துவப்படுத்த வழக்கம்போல் சிரேஷ்ட சிங்கள அமைச்சர்களை அனுப்பாமல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினை அனுப்பி வைத்தது.

பிரஜை என்னும் இத்திட்டத்தினை அமெரிக்க அரசு உடனேயே வாபஸ் வாங்கிக் கொண்டாலும், ஆட்சியாளர்களுக்கு எற்பட்ட சந்தேகம் போகவில்லை. முதலும் முடிவுமாக அரசு சாரா நிறுவனங்களைக் கட்டிப் போடத் துணிந்தனர். அதன் விளைவாகவே சென்ற வாரம் பாதுகாப்பு அமைச்சினால் தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களின் நடவடிக்கைகளை முற்றாக மட்டுப்படுத்தும் சுற்று நிருபங்கள் அல்லது கடிதங்கள் அனைத்து அரசு சாரா நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதன்படி, இவை ஊடக அறிக்கைகள் வெளியிடுவதோ, ஊடக சந்திப்புக்கள் நடத்துவதோ, ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகள் நடத்துவதோஅல்லது பட்டறைகள் நடத்துவதோ தடை செய்யப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னார்வத் தொண்டரமைப்புகள் பொதுவாக இரண்டு வகையானவை. அரசு வழங்குவது போன்று சேவைகளை வழங்குவன ஒரு வகையைச் சேர்ந்தவை. இச்சேவைகள் தேவையானவர்களுக்கு போதுமான அளவில் தரமாக அரசினால் வழங்கப்படுவதை உறுதி செய்யும் கட்டமைப்புக்களையும் பொறிமுறைகளையும் அரசியல் சூழல்களையும் மக்கள் உருவாக்கி பேணும் வகையில், மக்களுக்கான கல்வி புகட்டுவது மட்டுமின்றி அரசிற்குள் கொள்கைத் திட்ட மாற்றங்களையும் எற்படுத்துவன மற்றைய வகையின. சேவைகளை வழங்குவதென்றாலும், அச்சேவைகளைப் பராமரிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் மக்களுக்குத் தேவை. அரசியல் நிலைமாற்றத்தினைக் கோருகின்ற திட்டங்களென்றாலும் அதன் தகவல்களும் செய்திகளும் மக்களைச் சென்றடைய வேண்டும். எப்படிப் பார்த்தாலும், மக்களுடன் தொடர்பாடும் செயற்பாடுகளே தன்னார்வத் தொண்டரமைப்புக்களின் பிரதான கடமையாகும். அது இன்றி இவற்றின் எந்த நடவடிக்கையும் கிடையாது. அதனையே வேரறுத்திருக்கின்றது பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய சுற்று நிருபம்.

மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தலும், சகல துறைகளிலுமான அபிவிருத்தியினை உறுதி செய்தலும் சமூகத்தில் சட்டத்தினையும் ஒழுங்கினையும் நிலைநாட்டுதலும் ஒரு அரசின் கடமைகளாகும். அவற்றினைப் பதவியிலிருப்பவர்கள் எப்பொழுதும் முறையாகச் செய்வார்கள் என்றில்லை. அரசினால் தர முடியாத சேவைகளை வழங்குவதற்கு மக்கள் தம்மை பொது அமைப்புக்களாக வடிவமைத்தக்கொள்ளுகின்றனர். மேலும், அரச இயந்திரமானது அதிகார ஏற்றத்தாழ்வு சார்ந்ததும் பாரிய கட்டமைப்புக் கொண்டதுமாக இருக்கின்ற காரணத்தினால், நெகிழ்வுத் தன்மையுடன், அதனால் புத்தாக்கமான தீர்வுகளை நாட முடிவதில்லை. இதனால், புத்தாக்கமான தீர்வுகளைத் தரும் முன்மாதிரியான திட்டங்களை அரசு சாரா நிறுவனங்கள் செயற்படுத்தக் கூடியன. அவற்றின் திட்டங்கள் பின்பு அரச திட்டங்களையே மாற்றியமைக்க உதவுகின்றன. இவற்றை விடவும், மக்கள் நலன் சார்ந்து அரசு இயங்காத பொழுதுகளிலெல்லாம் அதனைக் கண்டித்து அதனை சரியான பாதைகளில் திசை திருப்ப அரசு சாரா நிறுவனங்களே உகந்தன. ஏனெனில், அவை எந்த அரசியல் தலைவருக்கும் அமைச்சருக்கும் சலாம் போடத் தேவையில்லாதன. இவையெல்லாவற்றையும் நோக்கினால், மக்களின் நலன் சார்ந்து இயங்கம் ஒரு ஜனநாயக அரசு நிலைப்பதற்கு இந்தத் தன்னார்வ அரசு சாரா நிறுவனங்கள் எவ்வளவு இன்றியமையாதன என்பது புரியும். அவற்றைத்தான் இல்லாதொழிக்கப் பார்க்கின்றது இந்த அரசு. இதற்கு மாறாக, எங்கள் அயல் நாடாகிய இந்தியாவிலோ அரசு சாரா நிறுவனங்களின் நன்மைகளைக் கருதி, அந்த அரசு தனது நிதிகளை வழங்கி புதிய நிறுவனங்களைத் தானே தோற்றுவிப்பதைக் காணலாம். இங்கோ, எமது அரசு தொண்டரமைப்புக்களின் ஒவ்வொரு திட்டங்களிலுமிருந்து வரியைத்தான் வசூல் செய்கின்றது. ஆனால் பதிலுக்கு ஒரு சதம் கொடுப்பதில்லை!

நகர்ப்புற மக்களுக்கு தொண்டரமைப்புக்களின் நன்மைகள் நேரடியாக அவ்வளவாகத் தெரியாவிட்டாலும், கிராமப்புற மக்களுக்கு அவற்றின் நன்மைகள் நன்றாகவே தெரிந்திருக்கின்றன. இவற்றின் செயற்பாடுகளினால் எத்தனையோ ஆயிரம் வறிய மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விளக்கேற்றப்பட்டிருக்கின்றது. நேரடியாகவன்றி பொதுவாகவும் மக்களுக்குப் பாதிப்பான பல சட்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் எமது அரசியல்வாதிகள் நிறைவேற்றாமல் இவற்றின் நடவடிக்கைகள் தடுத்திருக்கின்றன. உள்ளூராட்சி நிர்வாகங்களில் ஊழல் நடவடிக்கைகளை நிறுத்தி மக்களுக்கு நீதி கிடைக்க இவை வழி செய்திருக்கின்றன. இன்றும்கூட, பாதுகாப்பு அமைச்சின் உத்தரவினை நாம் மீறியே தீருவோம் என்று யுத்தச் சங்கினை ஊதியிருக்கின்றன இந்நிறுவனங்கள்.

ஆயினும், இதனை ஏதோ அரசு சாரா நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையிலான போராக நாம் எண்ணக் கூடாது. மக்கள் மீது இலங்கை அரசு விதித்த யுத்தமாகவே இது கருதப்படவேண்டும். ஏனெனில், அரசு சாரா நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டால், அதனால் முழுமையாகப் பாதிக்கப்படப் போகின்றவர்கள் மக்களேயன்றி அரச உத்தியோகத்தர்களோ அரசியல்வாதிகளோ அல்ல. எனவே, நடப்பதை வெறுமனே பார்த்துக்கொண்டிராமல் மக்கள் இப்போராட்டத்தில் குதிக்க வேண்டும். தத்தமது ஊர்களில் கூட்டங்கள் நடத்தியும் பத்திரிகைகளுக்கு எழுதியும் பேசியும் தமது கருத்துக்களை வெளியிடவேண்டும். எமது நாட்டில் அழிந்து கொண்டு போகும் ஜனநாயகத்தினைக் காப்பாற்றும் போக்கின் முதல் படியாக இது இருக்கட்டும்.

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.