படம் | Asiantribune

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அல்லது சர்வதேசத்தின் கணிசமான கவனத்தை ஜெனீவா மனித உரிமை பேரவையின் சர்வதேச விசாரணைக்கான ஏற்பாடுகள் உருவாக்கியுள்ளன. ஆனாலும், இலங்கை அரசைப் பொறுத்தவரை பொறுப்புக்கூறல் அல்லது கடந்தகால வரலாறுகளை மீட்டிப்பார்த்து பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரியவில்லை. சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் கடந்தகால வரலாறுகளை மீட்டிப் பார்க்க வேண்டிய தேவையும் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு 1948ஆம் ஆண்டில் இருந்து கூறப்படுகின்றது.

சுதந்திர வரலாறுகள்

இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் பிரித்தானியர் விட்ட தவறு தமிழர்களின் இன்றைய இந்த அவல நிலைக்கும் இலங்கை அரசின் இறுமாப்புக்கும் காரணமாகும். அரசியல் யாப்பு திருத்தம் செய்வதற்கு 1927இல் டொனமூர் பிரபு இலங்கைக்கு வந்தார். சர்வஜன வாக்குரிமை வழங்க முற்பட்டபோது ஜி.ஜி.பொன்னம்பலம் உட்பட சிங்கள அரசியல் தலைவர்கள் எதிர்த்தனர். ஆனால், அந்த எதிர்ப்புகளுக்கு உரிய விளக்கம் கொடுத்து சர்வஜன வாக்கெடுப்பு முறையை மொனமூர் பிரபு அமுல்படுத்தினார்.

ஆனால், தமிழ் மக்கள் தங்களுக்குரிய அதிகாரங்கள் பற்றி பேசியபோதும், அரசியல் யாப்பில் பாதுகாப்புகள் குறித்து கேட்டபோதும் செவிமடுத்த டொனமூர் பிரபு அதனை எற்று ஒரு சரியான அதிகார முறைகளை உருவாக்கத் தவறிவிட்டார். சிங்கள தலைவர்களுடன் வாதாடி தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த அவர் முற்படவில்லை. டொனமூர் பிரபு அவ்வாறு உறுதியாக ஏதாவது செய்திருந்தால், அவரை தொடர்ந்து அரசியல் யாப்பு திருத்தம் செய்ய 1945இல் இலங்கைக்கு வந்த சோல்பரி பிரபு நிச்சயம் இன்னும் மேலே சென்று 50க்கு 50 அல்லது 50க்கு 40 என்று கொடுத்திருப்பார்.

50க்கு 40 என்று கேட்டபோது, இல்லை, 50க்கு 50 என்று வாதாடிய ஜி.ஜி.பொன்னப்பலத்தை எதிர்த்து சோல்பரி பிரபுவினால் 50க்கு 40 என்ற திட்டத்தை அமுல்படுத்த முடியாமல் போனது ஏன் என்ற கேள்விகளும் எழுகின்றன. எவ்வாறாயினும் பிரித்தானியர் அன்றைய தவறுகளை இன்று ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பதை விட தற்போதைய மஹிந்த ராஜபக்‌ஷ அரசுக்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என அமெரிக்காவுடன் சேர்ந்து செயற்படுவது குறிப்பிடத்தக்க மாறுதலான அரசியல் என்று கூறலாம். இந்த நிலையில், சர்வதேச அரசியல் காய்நகர்தல்கள் பற்றி அறிந்து செயற்பட வேண்டியது தமிழர்களின் பொறுப்பு.

அமெரிக்கா கொடுத்த ஆயுதங்கள்

2009ஆம் ஆண்டு மே மாதத்துடன் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இலங்கை தொடர்பாக ஏற்பட்ட மாற்றங்கள், போக்குகள் ஜெனீவா மனித உரிமை பேரவையில் சங்கமித்து இன்று சர்வதேச விசாரணைக்கு வழிவகுத்துள்ளது என்று கூறலாம். அது முழுமையாக தமிழர்களுக்கு சாதகமான நிலை என்று கருத முடியாது. ஆனாலும், அந்த சிறிய மாற்றத்தை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்பது தமிழர்களின் இராஜதந்திரத்தில் தங்கியுள்ளது. 30 வருட அஹிம்சை போராட்டம் தோல்வி கண்ட நிலையில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அது 30 ஆண்டுகள் இடம்பெற்றன. 2006ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற போரில் அமெரிக்கா இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியது என்று கூறப்படுகின்றது.

அதில் உண்மை இருக்கலாம். ஏன் 1983இல் ஆயுதம் போராட்டம் ஆரம்பித்த காலப்பகுதியில் அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு, அமெரிக்கா ஆலோசனை வழங்கியிருந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள வீதிகளை ஒவ்வொரு நாளும் சுற்றி வளைத்து 50 இளைஞர்களை கைதுசெய்தால், அவற்றில் ஐந்து புலி உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி றீகன், முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவாத்தனவிடம் கூறியிருந்தார்.

ஆகவே, அரசுக்கு அரசு என்ற கொள்கைகளுக்கு ஏற்ப நாடுகள் உதவியளிக்கும் என்ற யதார்த்தத்தை மறுக்க முடியாது. உரிமைக்காக போராடும் இயக்கங்களை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சில நாடுகள் ஆதரித்தும் உள்ளன. ஆனாலும், அரசுக்கு அரசு என்ற அணுகுமுறைதான் கூடுதலாக காணப்படும். இலங்கை அரசுடன் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் அவ்வாறு இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ளாது தொடர்ந்து பழகினாலும் ஜெனிவா கூட்டத்தொடரின் பின்னர் ஏற்பட்ட நிலைமைகள் எதிர்காலத்தில பாரிய தாக்கத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தலாம். அதற்காக இன்னும் 30 ஆண்டுகள்கூட செல்லும் என எதிர்பார்க்கலாம்.

30 ஆண்டுகள் காத்திருப்பதா?

30 ஆண்டுகள் காத்திருப்பதா என்று தமிழத் தரப்பு கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. கம்போடிய நாட்டு அரசியல் ஒரு உதாரணம். தமிழ் தரப்பு சர்வதேச இராஜதந்திர அணுகுமுறைகளை அறிந்து செயற்பட்டால் 30 ஆண்டுகள் அல்ல மூன்று ஆண்டுகளுக்குள், ஏன் மூன்று மாதங்களுக்குள் கூட நிலைமையை மாற்றலாம். எவ்வாறாயினும் சர்வதேச மாற்றங்கள், கொள்கை திருப்பங்கள் என்பது உடனடியாக மாறிவிடக்கூடியதுமல்ல. எனவே, அதி உச்சமான வேலைத்திட்டம் ஒன்றை தமிழத் தரப்பு முன்வைக்க வேண்டும்.

அதற்காக அமெரிக்காவுக்கு குடைபிடிக்காமல், இந்தியா எங்கள் பக்கம் என்று கூறி கற்பனையில் மிதக்காமல் ஏற்புடைய அரசியல் காய்நகர்த்தல்களை செய்ய வேண்டும். முதலில் உலக அரசியல் ஒழுங்குகளை படிக்க வேண்டும். புகழ்வது, நன்றி கூறுவது சர்வதேச இராஜதந்திர நகர்வுகளுக்கு சிறிதளவேனும் ஏற்புடையதல்ல. உள்ளுரில் கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி கொளரவிப்பது போன்ற நிகழ்வு அல்ல சர்வதேச அரசியல் என்பது.

தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

Nix P0001