சிங்கள – பௌத்த பேரினவாதிகள் அளுத்கம தர்ஹா நகரில் முஸ்லிம் மக்களுடைய சொத்துக்களை சூறையாடி, மூவரை கொன்றொழித்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. இத்தனைக்கும் பொலிஸார், இராணுவத்தினர் பார்த்திருக்கவே முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்திருந்தன.

சம்பவம் நடந்த ஜூன் 15ஆம் திகதி மாலை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் இனிமேல் பாதுகாப்பாக இருக்கலாம் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு, ஊரடங்கு சட்டம் தங்களின் பாதுகாப்புக்காக அல்ல, இனவாதிகளின் பாதுகாப்புக்காகவே என பின்னர் தாங்கள் தாக்கப்படும்போது தெரியவந்தது.

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் ஜூன் 15ஆம் திகதி மாலை 6.45 மணிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

அஜித் ரோஹண தெளிவாக தெரிவித்தவை,

“ஊரடங்கு காலப்பகுதியில் பொதுமக்கள், அளுத்கம மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பாதைகளில் பயணிப்பது, கூட்டம் கூடுவது, ஒன்று கூடுவது உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் கைதுசெய்யப்பட்டு 1983ஆம் ஆண்டின் குற்றவியல் கோவை தண்டனைச் சட்டத்தின் 10ஆம் சரத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.”

எமது சகோதர இணையதளமான Groundviews ற்கு கிடைக்கப்பெற்றுள்ள சி.சி.டி.வி. கமரா பதிவுகளை பார்த்ததன் பின்னர் பொலிஸ் பேச்சாளரிடம் சில கேள்விகளை கேட்கலாம் என்று தோன்றுகிறது.

உத்தியோகபூர்வமாக ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போது, சுதந்திரமாக – கூட்டமாக – ஒன்றுசேர்ந்து, அதுவும் பாதுகாப்புப் படையினர் இருக்கத்தக்க, சொத்துக்களை அடித்து நொறுக்கிக்கொண்டு இனவாதிகள் போகிறார்களே… அவர்களுக்கு எதிராக நீங்கள் குறிப்பிட்ட சட்டம் நடவடிக்கை எடுக்காதா?

நீங்கள் அளுத்கம பகுதியில் அமுல்படுத்தியதாகக் கூறும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்திற்கான தற்போதைய விளக்கம் என்னவென்று தெரிந்துகொள்ள முடியாமா? வன்முறைக் கும்பல், மத இனவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிராக கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதிக்கும் சட்டமா?

பதில்???

நன்றி: Groundviews