படம் | @ShammasGhouse
“குரோதமும் இலஞ்சமும் எமது துக்கத்திற்கு காரணமாகின்றன. அதேபோன்று கருணையும் அன்பும் நிம்மதியின் பாதை என புத்த பெருமானின் போதனைகள் உணர்த்துகின்றன.”
“இனம், மதம், குலம், கோத்திரம் என சகலவற்றையும் பிரிப்பது அர்த்தமற்றது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை அளவிடுவது ஒரு நபர் இருப்பவர் அல்லது இல்லாதவர் என அளவிடுவதே.”
“புத்த பெருமானின் இந்த போதனைகளுக்கிணங்க எம்மை உயர்த்திக் கொண்ட நாம் இன்றும் ஒழுக்க விழுமியங்களையுடைய ஒரு இனமாக உலக மக்களின் முன் தலைநிமிர்ந்து நிற்கிறோம்.”
பௌத்தரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வெசாக் செய்தியில் மேலுள்ளவாறு கூறியிருந்தார்.
மேல்கூறப்பட்டுள்ள புத்தரின் போதனைகளை பின்பற்றி அதன்வழி நடந்துவந்த – இனம், மதம், குலம், கோத்திரம் என சகலவற்றையும் பிரிக்காமல் நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முயன்றுவந்த வட்டாரக்க – விஜித்த தேரர் ஜனாதிபதி தெரிவிக்கும் ஒழுக்க விழுமியங்களையுடைய இரு இனத்தால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டு வீதியில் வீசியெறியப்பட்டுள்ளார்.
விஜித்த வட்டாரக்க தேரர். மொஹமட் விஜித்த வட்டாரக்க என்றால்தான் பௌத்த அடிப்படைவாதிகளுக்குத் தெரியும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான விஜித்த தேரர் இலங்கையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த பௌத்தர்கள் சார்பாக தனியொரு ஆளாக நின்று போராடிவருபவர்.
இவர், இலங்கையில் இன, மத நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் பொதுபல சேனாவையும், அதன் பிரதான ஓட்டுனர் கலபொட அத்தே ஞானசார தேரரையும் தொடர்ந்து விமர்சித்துவருபவர். இதனால், பல தடவைகள் தாக்குதல்களுக்கும், இழிவுபடுத்தல்களுக்கும் உள்ளாகினார்.
கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடத்தவிருந்த தேசிய பலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டில் திடீரென புகுந்த கலபொட அத்தே ஞானசார தேரர், பொலிஸார் பார்த்திருக்க விஜித்த தேரரை மிகவும் இழிவாகப் பேசினார். விஜித்த தேரரின் உடையை களைந்து சாரம் மற்றும் தொப்பி அணிவிக்க முயற்சித்தார்; பலவந்தமாக மன்னிப்பு கேட்கவைத்தார்; அச்சுறுத்தி தாக்க முயற்சித்தார். இவையனைத்தும் பௌத்தர்களான இலங்கை பொலிஸாரின் முன்னால் அரங்கேறின.
ஏப்ரல் 20 ஆம் திகதி, மஹியங்கனையில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த விஜித்த தேரரின் வாகனத்தை மறித்த பொதுபல சேனா அமைப்பின் கண்டி மாவட்ட பொறுப்பாளர் தலைமையிலான குழுவொன்று அவரையும் அவரது சாரதியையும் தாக்கினர். மயிரிழையில் உயிர்தப்பிய அவர்கள் கேகாலை பொலிஸில் முறைப்பாடொன்றையும் செய்திருந்தார்.
ஏப்ரல் 22ஆம் திகதி, மஹியங்கனை பிரதேச சபை அமர்வில் கலந்துகொள்ள சென்ற விஜித்த தேரர், பிரதேச சபை கட்டடம் முன்னால் கூடியிருந்த புத்த பிக்குகள் தலைமையிலான குழுவொன்றின் தாக்குதலில் இருந்து உயிர்தப்பியிருந்தார்.
ஏப்ரல் 23ஆம் திகதி, விஜித்த தேரரை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் காரியாலயத்தினுள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மறைத்துவைத்திருக்கிறார் என குற்றம்சாட்டி பொதுபல சேனா அமைப்பினர் காரியாலயத்தினுள் புகுந்து அட்டகாசம் செய்திருந்தனர்
மத நல்லிணக்கத்துக்காக போராடி வருகின்ற விஜித்த தேரர் ஒரே மாதத்தில் நாட்கள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்து வந்துள்ளார்.
தான் எதிர்கொள்ளும் உயிர் அச்சுறுத்தல் குறித்து நாட்டின் தலைவர் – பௌத்தர் – மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டுவர விஜித்த தேரர் நினைத்தார்.
அநுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு ஜனாதிபதி வந்திருப்பதை அறிந்த விஜித்த தேரர், அங்கு சென்று ஜனாதிபதியைச் சந்தித்து தனது பிரச்சினையைக் கூறியுள்ளார். விஜித்த தேரர் கூறியவற்றை செவிமடுத்த ஜனாதிபதி, “நீங்கள் ஏன் இதற்கு முதலில் வந்து தெரிவிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.
இலங்கையில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தான் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டுத் தெரிவித்தார் என்றும் – தான் மேற்கொண்டுவரும் நல்லிணக்க செயற்பாட்டை தொடர்ந்து செய்யும்படி தெரிவித்த ஜனாதிபதி, தனக்கு பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்தார் என்றும் விஜித்த தேரர் பி.பி.சி. சிங்களச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற அனுமதிக்கமாட்டேன் என ஜனாதிபதி உறுதியளித்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உறுதியளித்ததன் பின்னரும் விஜித்த தேரருக்கு எதிராகப் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
நாட்டின் தலைவரே தனது பாதுகாப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். இனிமேலும் தனது நல்லிணக்க செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படாது என நினைத்திருந்த விஜித்த தேரருக்கு மீண்டும் மீண்டும் பொதுபல சேனாவால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வகையிலான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. அதன் உச்சக்கட்டம்தான் அண்மைய சம்பவம். புத்தரின் போதனைகளை பின்பற்றும் இந்த பௌத்த பிக்கு ஜனாதிபதியிடம் முறையிட்டு பலனில்லை என்றாகிவிட்ட நிலையில் வேறு எங்கு போய் முறையிடுவது?
நாட்டின் ஜனாதிபதி – தலைவன் – மன்னர் – பெருமைக்குரிய தந்தை (ஆரம்பரகார தாத்தா) என்ற வகையில் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியது மஹிந்த ராஜபக்ஷவின் பொறுப்பாகும்; கடமையுமாகும். ஆக, தன்னை சந்தித்து காப்பாற்றுமாறு கோரிய பௌத்த பிக்குவுக்கு நேரடியாகவே பாதுகாப்பு வழங்குவதாக உத்தரவாதமளித்தும், அந்த உத்தரவாதத்தை காப்பாற்ற முடியாமல் அல்லது அடிவாங்கட்டும் என அக்கறைகொள்ளாமல் இருப்பதா நாட்டின் ஜனாதிபதிக்கு – பௌத்தத்தை தர்மத்தின் படி நடப்பவனின் அழகு?
விஜித்த வட்டாரக்க தேரர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டு இன்றோடு 3 நாட்கள் ஆகப்போகின்றன. ஆனால், இதுவரை ஜனாதிபதி வாய்த்திறக்கவில்லை. தேரருக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள மிருகத்தனமான செயலை கண்டித்து அறிக்கையோ அல்லது விசாரணைக்கான உத்தரவையோ இதுவரை ஜனாதிபதி விடுக்கவில்லை.
‘புத்த பிக்குகளைக் கொண்ட குழு’ ஒன்றினால் தான் தாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டேன் என விஜித்த தேரர் தன்னிடம் தெரிவித்தார் என சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ பி.பி.சிக்குத் தெரிவித்துள்ளார்.
ஆக, பொதுபல சேனாவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கும், விஜித்த தேரர் சட்டத்தரணியிடம் தெரிவித்த வாக்குமூலத்துக்கும் தொடர்பிருப்பதாக இதன்மூலம் தெளிவாகிறது.
தான் வழங்கிய பாதுகாப்பு உத்தரவாதம் மீறப்பட்டுள்ளதை நினைத்தாவது விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பாரா அல்லது புத்த பெருமான் போதிக்காத பொதுபல சேனாவின் வன்முறை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செல்வராஜா ராஜசேகர்