Photo, SELVARAJA RAJASEGAR

இலங்கையின் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ (Protection of the State from Terrorism Bill), பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) முடிவுகட்டுவதாக வாக்குறுதி அளிக்கிறது. ஆனால், உற்று நோக்கினால், அது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மிகவும் ஆபத்தான அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.

2024ஆம் ஆண்டில், தேசிய மக்கள் சக்தி (NPP) இலங்கை மக்களுக்குத் தெளிவான ஒரு வாக்குறுதியை வழங்கியது. “பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளடங்கலாக அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் ஒழிப்பதாக” அதன் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களும் அதை நம்பி, தேசிய மக்கள் சக்திக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையை வழங்கினர்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்த வாக்குறுதி நாடாளுமன்றத்தை வந்தடைந்துள்ளது. ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ 2026 செப்டெம்பர் 22 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, அக்டோபர் 6 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. ஒரு வகையில் பார்த்தால் அது நிறைவேற்றப்பட்டுள்ளது: ஒரு சரத்தின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச் செய்கிறது. புதிய சட்டமானது பயங்கரவாதத்தை மட்டுமே இலக்காகக் கொள்ளும் என்று நீதி அமைச்சர் கூறுகிறார். பயங்கரவாதம் என்பதற்கான பழைய வரைவிலக்கணம் மிகவும் பரந்ததாக இருந்ததால் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுத்தது என்பதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி, துல்லியமான வரையறைகளையும் வலுவான பாதுகாப்பு வழிமுறைகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மேலும் GSP+ வர்த்தகச் சலுகைகளுக்கான நிபந்தனை உட்பட, சர்வதேச தரநிலைகளுக்கு அமைவான ஒரு சட்டத்தைக் கொண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கை உறுதியளித்துள்ளது.

இவை வரவேற்கத்தக்க வார்த்தைகள். ஆனால், நாடாளுமன்றம் செய்தியாளர் சந்திப்புகளுக்கு வாக்களிப்பதில்லை. அது சட்டமூலத்தின் உரைகளுக்கே வாக்களிக்கிறது; அந்த உரையோ வேறு கதையைக் கூறுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கியக் கூறு இன்னமும் அதில் உள்ளது. நிறைவேற்று அதிகாரம் பிறப்பிக்கும் தடுப்புக் காவல் உத்தரவு அதில் உள்ளது. பிடியாணை அன்றி மனிதர்களைக் கைது செய்யும் அதிகாரம் அதில் உள்ளது. சாதாரண அரசியல் நடவடிக்கைகளைக் கூடக் குற்றமாக்கக் கூடிய அளவிலான பரந்த குற்றவியல் வரையறைகளும் அதில் உள்ளன. இது பழைய கூண்டின் முடிவல்ல; புதிய பெயரிடப்பட்ட அதே கூண்டுதான்.

சட்டமூலம் உண்மையில் என்ன சொல்கிறது?

சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ.நா மனித உரிமைகள் நிபுணர்கள் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (CPA) ஆகிய அனைத்தும் இச்சட்டமூலத்தை ஆராய்ந்துள்ளன. அவை அனைத்தும் நான்கு முக்கிய விடயங்கள் குறித்துக் கவலை வெளியிட்டுள்ளன:

அரசியலுக்குள் நுழையும் வரையறை: அரசாங்கத்தை “தேவையற்ற வகையில் நிர்பந்திக்கும்” நோக்கம் கொண்ட செயல்களும் பயங்கரவாதமாகக் கருதப்படும். இந்த வார்த்தைப் பிரயோகம் வேலைநிறுத்தங்கள், வெகுஜனப் போராட்டங்கள் அல்லது சாதாரண அரசியல் அழுத்தங்களைக் கூடக் குற்றமாக்கக் கூடும்.

பிடியாணை இன்றி கைது செய்தல்: பாதுகாப்புப் படையினர் “நியாயமான சந்தேகம்” என்பதன் அடிப்படையில் மட்டுமே ஒருவரைக் கைது செய்ய முடியும்.

நிறைவேற்று அதிகாரத்தின் கீழான தடுப்பு: பாதுகாப்புச் செயலாளர், ஒருவரை ஒரு வருடம் வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடலாம். அதை ஒரு நீதிவானால் ரத்துச் செய்ய முடியாது. எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி ஒருவரை இரண்டு ஆண்டுகள் வரை தடுப்புக் காவலில் வைக்க முடியும்.

குறைந்த மேற்பார்வையுடன் கூடிய தடைகள்: ஜனாதிபதி, அமைப்புகளுக்குத் தடை விதிக்கலாம். அதிகாரிகள் நீதிமன்றங்களின் தீவிர பரிசீலனை இன்றி “தடைசெய்யப்பட்ட இடங்களை” அறிவிக்கலாம்.

இச்சட்டமூலம் போராட்டங்கள், ஆதரவுக் குரல்கள், கருத்து வேறுபாடுகள், தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் மனிதநேயப் பணிகளை விலக்குகிறது. இவை உண்மையான முன்னேற்றங்கள் தான், ஆனால் முதன்மையான குறைபாட்டை அவை தீர்க்கத் தவறுகின்றன. யாரைச் சிறையிலடைப்பது, எவ்வளவு காலம் தடுத்து வைப்பது என்பதை இன்னமும் நிறைவேற்று அதிகாரமே தீர்மானிக்கிறது. அதை நிராகரிப்பதற்கு எந்தவொரு நீதிமன்றத்திற்கும் உண்மையான அதிகாரம் இல்லை. வெறுமனே நேரில் சென்று பார்ப்பது என்பது கட்டுப்பாடாகாது.

இத்தகைய அதிகாரங்கள் எங்கு கொண்டு போய்விடும் என்பதை இலங்கை ஏற்கனவே அனுபவித்துள்ளது.

என்றுமே விலகாத ஒரு தற்காலிகச் சட்டம்

1979 ஜூலையில், வடக்கில் அதிகரித்து வந்த வன்முறைகளை எதிர்கொள்ள, ஜெயவர்தன அரசாங்கம் பயங்கரவாதத் தடை (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தைக் கொண்டுவந்தது. இது மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. “அவசரம்” எனச் சான்றளிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்திற்கு மறுஆய்வு செய்ய சில மணிநேரங்கள் மட்டுமே வழங்கப்பட்டு, ஒரே நாளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன் அதிகாரங்கள் அசாதாரணமானவை. ஒரு அமைச்சர், 18 மாதங்கள் வரை தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பிக்க முடியும். பொலிஸாரிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் சாட்சியங்களாக மாறின. ஒரு ‘பயங்கரவாதியை’ பற்றி அறிவிக்கத் தவறுவது குற்றமாக்கப்பட்டது, ஆனால், அந்தச் சட்டம் பயங்கரவாதி யார் என்பதை வரையறுக்கவே இல்லை. 1982 இல், இது மீண்டும் ஓர் அவசரச் சட்டமூலமாகக் கொண்டுவரப்பட்டு நிரந்தரமாக்கப்பட்டது. இது இப்போது 47 ஆண்டுகளாக அமுலில் உள்ளது.

அதன் வீச்சு வேகமாக வளர்ந்தது. அதன்  மூலம், முதன் முதலில் தடுப்பில் வைக்கப்பட்டவர்கள் வடக்கு போராளிகள் அல்ல, இரண்டு சிங்கள எதிர்கட்சி ஆர்வலர்கள் என்று கூறப்படுகிறது. ஜூலை 1983 இல், வெலிக்கடைச் சிறையில் அரச பாதுகாப்பில் இருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தளுப்பில் இருந்த தமிழ் கைதிகள் கொல்லப்பட்டனர். சில நாட்களுக்குப் பிறகு, இந்த வன்முறைக்கு ஜே.வி.பி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நவ சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் மீது அரசாங்கம் குற்றம் சாட்டியது; அது பொய் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டது. அரசாங்கம் அவர்களைத் தடை செய்து, அவர்களின் தலைவர்களைக் கைது செய்தது. ஆரம்பத்திலேயே இந்த நடைமுறை உருவாக்கப்பட்டிருந்தது. பரந்த அதிகாரங்கள் இருந்தன, மிகக் குறைந்த நீதித்துறை மேற்பார்வையே காணப்பட்டது. அறிவிக்கப்பட்ட நோக்கம் விரைவில் கைவிடப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களின் 47 ஆண்டுகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் அல்லது எத்தனை பேர் குற்றச்சாட்டுகள் இன்றி விடுவிக்கப்பட்டனர் என்பதை எந்த அரசாங்கமும் வெளியிடவில்லை. அந்த மௌனமும் இந்தப் பிரச்சினையின் ஒரு பகுதியாகும்.

தற்போது கிடைக்கும் தரவுகள் மிகவும் கவலையளிப்பவை. 1990ஆம் ஆண்டளவில், ஜே.வி.பி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்ட சுமார் 6,700 பேர் அவசரகால மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 2018 ஆம் ஆண்டில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஒரு முக்கிய விடயத்தைக் கண்டறிந்தது: வழக்குகள் முடிவடையாத பயங்கரவாதத் தடைச் சட்டச் சந்தேகநபர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 5 முதல் 15 ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 2019 மற்றும் 2022 இற்கு இடையில் 600 க்கும் மேற்பட்டோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 2024 இல் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டவர்களின் விகிதம் அதிகமாக இருந்தது.

இந்த எண்களுக்கு பின்னால் மனித உயிர்கள் உள்ளன. மூன்று பிள்ளைகளின் தாயாரான வசந்தி ரகுபதி சர்மா, 2015 இல் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுப்பில் தனது வாழ்க்கையை கழித்தார். சந்திரபோஸ் செல்வசந்திரன் சுமார் 14 ஆண்டுகள் தடுப்பில் வைக்கப்பட்டு, 2019 இல் விடுவிக்கப்பட்டதன் பின்னர் 18 மாதங்களுக்குப் பிறகு இறந்துபோனார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியான நடேசு குகநாதன், மீண்டும் கைது செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி சுமார் எட்டு ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பேச்சுரிமையைப் பயன்படுத்தியவர்களுக்கு எதிராகவும் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் ஜே. எஸ். திஸ்ஸநாயகத்திற்கு அவரது எழுத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கவிஞர் அஹ்னாப் ஜசீம் ஒரு தமிழ் கவிதை புத்தகத்திற்காக 19 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தடுப்பில் இருந்தார். இச்சட்டத்தின் கொடூரமான கூறுகள் அவருக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாணவர் தலைவர் வசந்த முதலிகே அமைதியான போராட்டங்களுக்காக 2022 இல் தடுத்து வைக்கப்பட்டார். 2026 மார்ச்சில், அவரது கைதுக்கு எந்தச் சட்டப் பின்னணியும் இல்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொலிஸாரிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதால், பயங்கரவாதத் தடைச் சட்டமானது சித்திரவதைக்கு வழிவகுக்கிறது. தனிப்பட்ட விரோதங்களைக் கூட எளிதில் குற்றச்சாட்டாக மாற்ற முடிகிறது. பின்னர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டவர்களிடம் எந்த அரசாங்கமும் மன்னிப்பு கேட்கவோ, இழப்பீடு வழங்கவோ அல்லது எந்தவொரு அதிகாரியையும் பொறுப்பேற்க வைக்கவோ இல்லை.

புதிய அரசாங்கத்தின் பழைய பழக்கங்கள்

தற்போதைய அரசாங்கம் இந்த கடந்தகால வரலாற்றிலிருந்து ஒரு மாற்றத்தை எற்படுத்தப்போவதாக உறுதியளித்தது. ஆனால், அதன் செயல்பாடுகள் கலவையாகவே உள்ளன. மனித உரிமைகள் ஆணைக்குழு 2025ஆம் ஆண்டில் 46 பயங்கரவாதத் தடைச் சட்டக் கைதுகளையும், 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மேலும் 12 கைதுகளையும் பதிவுசெய்துள்ளது.

2025 மார்ச்சில், 22 வயதான கடை ஊழியரான மொஹமட் ருஸ்தி தடுத்து வைக்கப்பட்டார். அதற்கான உத்தரவில் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியே கையொப்பமிட்டிருந்தார். அவர் செய்த குற்றம் என்ன? கொழும்பில் உள்ள ஒரு வர்த்தக மையத்தில் வெளிநாடு ஒன்றை விமர்சித்து stickers ஒட்டியமையாகும். இது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வரும் குற்றமல்ல எனப் பொலிஸார் பின்னர் ஒப்புக்கொண்டனர். இருப்பினும், விடுவிக்கப்பட்ட போது அவர் மீது கட்டுப்பாட்டுகள் பிறப்பித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரது கைது சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என ஆணைக்குழு தீர்மானித்தது. 2026 ஜூன் மாதம், 24 வயதான தமிழ் ஹிப்-ஹாப் கலைஞர் சங்கீதன் கணேஷ்குமார் ஒரு இசை வீடியோவிற்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டமானது இப்போது முக்கியமாக திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுவதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால், 2026 மார்ச்சில், சாதாரண குற்றங்களுக்கு இதனைச் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்தகாலத்தின் மோசமான துஷ்பிரயோகங்களை மீண்டும் செய்யவே இந்த அரசாங்கம் எண்ணுகிறது என நாம் கூற வரவில்லை. ஆனால், பலவீனமான காரணங்களுக்காக நிறைவேற்று அதிகார உத்தரவின் மூலம் தடுப்புக் காவலில் வைப்பதும், பொதுமக்களின் எதிர்ப்பிற்குப் பிறகே விடுவிப்பதும் வழக்கமான நடைமுறையாகிவிட்டது. இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் சட்டத்தை நன்றாகப் பயன்படுத்துவதாக வாக்குறுதி அளிப்பதால் மட்டுமே அது பாதுகாப்பான சட்டமாக மாறிவிடாது.

சட்டங்கள் இயற்றுபவர்களை விட சட்டம் நீண்ட காலம் வாழ்கிறது

இன்றைய அரசாங்கத்தின் மையப் புள்ளியான ஜே.வி.பியை விட பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பற்றி வேறு எவருக்கும் நன்றாகத் தெரியாது. 1983 இல் ஒரு பொய்க் குற்றச்சாட்டின் கீழ் அது தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அதன் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்; பலர் கொல்லப்பட்டனர், பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். பல தசாப்தங்களாக, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தீவிர விமர்சகர்களாக இருந்தனர். இன்றைய ஜனாதிபதியும் அவர்களில் ஒருவர்.

1979 ஆம் ஆண்டின் ஐ.தே.க அரசாங்கம், ஜே.வி.பி ஒரு நாள் இந்த அதிகாரங்களைக் கொண்டிருக்கும் என்று நினைத்தும் பார்த்திருக்காது. அரசாங்கங்கள் மாறுகின்றன; அதிகாரங்கள் அப்படியே இருக்கின்றன. எனவே ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனக்குத்தானே ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும். “ஒருநாள் எனது அரசியல் எதிரிகளின் கைகளுக்கு இந்த அதிகாரங்கள் செல்லலாம் என நம்பிக்கை கொள்ள முடியுமா?”

2018 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும் 2023 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மறுவடிவங்கள் எனக் கண்டனம் செய்யப்பட்டு, எதுவுமே சட்டமாகவில்லை. இந்த அரசாங்கத்தின் சொந்த 2025 டிசம்பர் வரைவு கூட திரும்பப் பெறப்பட்டது. புதிய சட்டமூலமும் அதே அதிகாரங்களில் பெரும்பாலானவற்றைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இது நிறைவேற்றப்பட்டால், தேசிய மக்கள் சக்தி (NPP) ஒரு காலத்தில் மற்றவர்கள் மீது சுமத்திய அதே குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும், அதை மறுப்பதும் கடினமாக இருக்கும்.

நாடாளுமன்றம் என்ன செய்ய வேண்டும்?

நாடாளுமன்றம் இலங்கையைப் பாதுகாப்பற்றதாக விட்டுவிட வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. கடந்த 47 ஆண்டுகால அநீதிகளை மீண்டும் செய்யாமல் நாட்டைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதற்கு ஏழு விடயங்களை செய்ய வேண்டியிருக்கிறது:

  1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக இடைநிறுத்த வேண்டும்.
  2. பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட சமூகங்கள், சட்டத்தரணிகள் சங்கம், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுடன் பகிரங்கமாகக் கலந்தாலோசித்து, திருத்தப்பட்ட சட்டமூலத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  3. ஐ.நா. மாதிரி வரையறைக்கு அமைவாக, பயங்கரவாதம் என்பதைச் சுருக்கமாக வரையறுக்க வேண்டும்.
  4. ஒவ்வொரு தடுப்புக் காவலையும் நீதித்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்; தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை தாமதமின்றி நீதிவான் முன் ஆஜர்படுத்த வேண்டும்.
  5. பொலிஸாரிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களைச் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ள முடியாதபடி செய்ய வேண்டும்; சாதாரண குற்றங்களைச் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும்.
  6. திருத்தப்பட்ட சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும்.
  7. கடந்தகால பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். எஞ்சியுள்ள பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்குகளை மறுஆய்வு செய்ய வேண்டும். குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணைகள் இன்றி தடுப்பில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும், மன்னிப்பு மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்தச் சட்டமூலம் தற்போது உள்ள வடிவில் அதற்கு வாக்களிக்காதீர்கள் என அரசாங்கத்திலும் எதிர்கட்சியிலும் உள்ள ஒவ்வொரு உறுப்பினரிடமும் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.

இந்த அரசாங்கத்திற்கு ஒரு அரிதான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் ஆணை என்பது பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மறுபெயரிடுவது மட்டுமல்ல; அதைத் துஷ்பிரயோகம் செய்ய வழிவகுத்த கட்டுப்பாடற்ற அதிகார அமைப்பிற்கு முடிவுகட்டுவதாகும். இது இலங்கை மக்களைப் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வைத்திருக்க முடியும். மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் அரசாங்கம் மக்களின் மரியாதையைப் பெறும்.

லயனல் போபகே