படம் | Dinouk Colombage/ Al Jazeera
சிறுபான்மையினரான முஸ்லிம்கள் உறவுகளை இழந்துள்ளனர்; தந்தையை இழந்துள்ளனர்; சகோதரர்களை பறிகொடுத்துள்ளனர்; வாழ்வதற்கு வீடின்றி உள்ளனர்; வழிபடுவதற்கு வழிபாட்டுத் தளமின்றி உள்ளனர்; ஜீவனம் நடத்த வியாபாரத் தளங்களை, முதலீடை இழந்துள்ளனர்; சந்தோஷமாக வாழ்ந்து வந்தவர்கள் சாப்பாடின்றி பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
பௌத்த அடிப்படைவாதிகளின் அராஜக செயற்பாடுகளினால் மியான்மாரில் இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் நடந்தன. ஆனால், இது மியான்மாரில் இல்லை. முஸ்லிம்கள் செறிந்துவாழும் இலங்கையின் தென்பகுதியில் உள்ள தர்ஹா நகரில்.
உலகிலேயே மிகவும் கொடூரமான பயங்கரவாதிகளை தோற்கடித்து சமாதானத்தை நிலைநாட்டியுள்ள இலங்கையில்தான் மேற்கண்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
இலங்கையில் சமாதானம், சகவாழ்வு, நல்லாட்சி, ஜனநாயகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் என்னவோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சமாதானத்துக்கும் ஜனநாயகத்துக்கும் அளித்த பங்களிப்புக்கான விருது பொலிவியாவின் துணை ஜனாதிபதி அல்வரோ கார்சியா லினேராவினால்வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய சமாதானம், சகவாழ்வு, நல்லாட்சி, ஜனநாயகம் போன்ற உரிமை சார்ந்த விடயங்கள் அனைத்தையும் சிங்கள – பௌத்த பேரினவாதிகள் மட்டுமே அனுபவித்து வருகின்றனர். இந்த உரிமைகளைப் பயன்படுத்தி சிறுபான்மையினரை துன்புறுத்தலாம்; உடமைகளை அழிக்கலாம்; உரிமைகளப் பறிக்கலாம்; ஏன் கொலையும் செய்யலாம். அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. ஏன் என்றால், இவர்கள்தான் ஆட்சி செய்பவர்களின் எதிர்கால அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவர்கள்.
சிறுபான்மையினருக்கு எதிரான பொதுபல சேனாவின் செயற்பாடுகள் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல. நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகின; உள்ளாகிவருகின்றன. அதற்கான ஆதாரங்கள் நிறையவே உள்ளன. இருப்பினும், பொதுபலசேனா அமைப்புக்கு தலைமை தாங்கும் கலபொட அத்தே ஞானசார தேரரை இதுவரை கைதுசெய்ய ராஜபக்ஷ அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அந்த அமைப்பின் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, நிகழ்வை சிறப்பித்து, அவர்களது நடவடிக்கைகளுக்கு அனுசரணை வழங்கிவருகின்றனர்.
2013 ஆம் ஆண்டு இலங்கையில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து அல்-ஜசீரா வௌியிட்டுள்ள வரைபடம்.
யாருக்குப் பாதுகாப்பு?
அளுத்கம தர்ஹா நகரில் கலவரம் ஏறபட்டதைத் தொடர்ந்து 400 விசேட அதிரடிப் படையினர் உட்பட 1,200 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் இருந்துள்ளனர். அதுவும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது. இருப்பினும், முஸ்லிம் மக்களின் வீடுகள், வியாபார ஸ்தானங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
“நான் இங்குதான் இருந்தேன். அவர்களும் இங்குதான் நின்றுகொண்டிருந்தார்கள். பேக்கரி ஒன்று கலவரக்காரர்களால் தாக்கப்படுவதை அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்” என பரீனா என்ற பெண் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
“நேற்றோடு எமக்கு வெறுத்துப்போய்விட்டது. அல்லாஹ்வுக்கு பாரம் கொடுத்துவிட்டோம். இந்த நிலைமை தொடர்ந்தால் இன்னும் நீண்ட நாட்கள் செல்லும் முன்னர் முஸ்லிம் பிரபாகரன் ஒருவர் உருவாகிவிடுவார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஊடரங்கு சட்டம் அமுலில் இருந்தபோது – பாதுகாப்புப் படையினர் கடமையில் இருந்தபோது 60இற்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் தாக்கப்பட்டுள்ளன. பௌத்த – சிங்கள பேரினவாதிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் 80இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மூவர் கொல்லப்பட்டுள்ளனர். 7 பேர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன என டுவிட்டர் செய்தியொன்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Death toll from riots in the past two days has risen to 8 people, according to information received from hospital sources #lka #aluthgama
— Dinouk Colombage (@Dinoukc) June 17, 2014
அத்தோடு, நேற்றிரவு அளுத்கம, வெலிபன்ன பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான பண்ணையில் காவலாளியாக இருந்த தமிழர் ஒருவர் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளார். இவையனைத்து சம்பவங்களும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பின் கீழேயே நடந்துமுடிந்துள்ளன. கலவரக்காரர்களை எந்தவகையிலும் அவர்கள் கட்டுப்படுத்த முன்வரவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று அளுத்கமவின் ஐந்து பிரதேசங்களிலும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில்ஈடுபட்டுள்ளனர் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்தெரிவித்துள்ளது. எவ்வளவு பேர், எத்தனை பிரதேசங்களிலும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடலாம். ஆனால், அவர்கள் பாதுகாப்பு வழங்குவது யாருக்கு என்பதே தர்ஹா நகர் மக்களின் கேள்வியாக உள்ளது.
விசாரணை?
ஜ 77 குழு மாநாட்டில் கலந்துகொள்ள சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “அளுத்கம சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது தண்டனை வழங்குவதற்காக விசாரணை ஒன்று இடம்பெறும்” என்று தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
An investigation will be held for law to take its course of action to bring to book those responsible for incidents in Aluthgama. -MR (2/2)
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) June 15, 2014
சுத்தமான குடிநீர் வேண்டி வெலிவேரிய பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 37 பொதுமக்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், பொதுமக்கள் மீதான தாக்குலுக்கு உத்தரவு பிறப்பித்த பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தனவுக்கு துருக்கியிலுள்ள இலங்கைக்கான தூதரகத்தில் இராஜதந்திரப் பதவி இலங்கை அரசால் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின்போது 27 பேர் கொல்லப்பட்டு 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். பின்னர் வெளிவந்த விசாரணை அறிக்கையில், சிறைக்கைதிகள் சுட்டுக்கொண்டதால் உயிரிழப்பு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த இரு சம்பவங்களும் பெரும்பான்மையினத்தோடு தொடர்புபட்டவையாகும். இவர்களுக்கே நீதி கிடைக்காதபோது சிறுபான்மையினரான அளுத்கம தர்ஹா நகர் முஸ்லிம் மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பது?
மஹிந்த அரசால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை குழுக்களுடன் புதிதாக இன்னொரு குழுவும் இணையப்போகிறது. அவ்வளவுதான்.
இந்த விடயம் முஸ்லிம் மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறியாமல் இருக்கமுடியாது. அரசில் அமைச்சராக இருந்தும் தனது மக்களை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது எனத் தெரிவிக்கும் ஹக்கீம், முஸ்லிம் மக்களின் – சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்து சிந்திப்பாரா என்பது சந்தேகமே?
இல்லையென்றால், தொடர்ந்தும் அரசுடன் ஒட்டிக்கொண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிரான பலசேனாவின் நடவடிக்கைகளுக்கு மெளனித்து அனுமதி வழங்கட்டும்.