பூநகரி வலைபாடுவில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கடல்பாசி விவசாயிகளான மரியா பிரஷாந்தினி மற்றும் அமலா ஜுனஸ்தினா.  இலங்கையின் வட மாகாணத்தில் பரவலாக உணவு உற்பத்தியில் ஈடுபடும் பெண்கள் அறுவடை வீழ்ச்சியினால் ஏற்படும் வருமான குறைவிலிருந்து, தசைப்பிடிப்பு, வெப்ப மயக்கம், தலைவலி, மற்றும் வேனற்கட்டிகள் போன்ற உடலியல் பாதிப்புக்கள் வரை அதீத வெப்பத்தின் தாக்கத்தினைத் தாங்குகின்றனர். Photo: அமித்தா அருட்பிரகாசம்

###

வெப்பநிலை மீண்டும் உயர்ந்தவண்ணமுள்ளது. பூநகரியில் பெண்களால் நடத்தப்படுகின்ற முதலாவது மரமுந்திரிகை பதப்படுத்தல் தொழிற்சாலையில் இருபது பெண்கள் மரமுந்திரிகை விதைகளை தரம் பிரிக்க, ஓடுடைக்க, உலர்த்த மற்றும் பொதிசெய்ய, தமது ஆடைகளுக்கு மேலாக, முகக்கவசம், தலைமுடிக் காப்பு வலைகள், மேலங்கி போன்றவற்றை அணிக்கின்றனர். இலங்கையின் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் வன்னி மரமுந்திரிகை செய்கையில் மாற்றுத்திறனாளிகளான அல்லது பெண்களால் பாராமரிக்கப்படும் குடும்பங்களிலுள்ள பெண்கள் பணிக்கமர்த்தப்படுகின்றனர். மரமுந்திரிகை விதைகளின் ஓட்டிலிருந்து வெளிப்படும் நஞ்சுப் படர்கொடியின் சாற்றை ஒத்த ஒருவித செங்காவி நிறமான பதார்த்தத்தினால் ஏற்படும் தோல் எரிச்சல் மற்றும் உரிதலிலிருந்து தங்கள் கைகளைப் பாதுகாத்துக் கொள்ள, பெண்கள் ஒன்றன்மேல் ஒன்றாக மூன்று கைக் கவசங்களை அணிக்கின்றனர்.

ஈரப்பதமான கடலோரக் காற்று மரமுந்திரிகையின் தன்மையை பாதிப்பதைத் தடுக்கவும், பூச்சிகள் மற்றும் கிருமிகள் இல்லாமல் தயாரிப்பைப் பாதுகாக்கவும் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சீல் வைக்கப்படுகின்றன அல்லது வலைகளால் மூடப்படுகின்றன. தரச் சான்றிதழை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்து இப்பெண்கள் பிசகுவதில்லை. மதிய உணவு இடைவேளை அல்லது தேநீருக்கான சிறு இடைவேளைகளில் கைக்கவசங்களை சிறிது தளர்த்துதல் தவிர்த்து நாளாந்தம் கிட்டத்தட்ட ஏழு மணிநேரங்கள் இப்பெண்கள் வியர்வையில் புழுங்குகின்றனர். இவ்வெப்பம் வன்னி பிரதேசத்தின் மரமுந்திரிகை சந்தையின் அத்திவாரத்தை வாட்டியெடுக்கத் தொடங்கலாம். தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மின்விசிறிகள் மற்றும் காற்றுப் பதனிகள் விலையுயர்ந்தவை, வளிமண்டல வெப்பநிலை முப்பது பாகை செல்சியஸை விட அதிகரிக்கின்ற வெப்பமான மாதங்களில் மெல்லிய பிளாத்திக்கு விசிறிகளைக்கொண்ட ஒற்றை மின்விசிறிகள் ஓரளவுக்கு ஆறுதலாக இருக்கின்றன. தொழிற்சாலையின் உட்புறத்தில் உள்ள திணறடிக்கும் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், குறைந்தபட்சம் இரண்டுபேராவது அலுவலக முகாமைத்துவம் சார்ந்த அல்லது வேறு வேலைகளுக்கு மாறியுள்ளனர். 2025 ஆண்டு வெப்பநிலையின் அகோரம் தணியும்வரை அங்கு பணிபுரியும் பெண்கள் மூன்று அல்லது நான்கு நாட்கள் விடுமுறையில் செல்லவேண்டி இருந்தது என்றும் பிறகு நெகிழ்வான நேரசூசியின் அடிப்படையில் விடுபட்ட வேலை நேரங்களை சரிக்கட்ட முடியுமாக இருந்தது என்றும் மேலாளர் பிரான்சிஸ் ஜாஸ்மின் ஜெமிலா தெரிவித்தார். வீட்டில் பராமரிப்பு பொறுப்புகள் இருக்கின்ற பெண்கள், தாம் வெப்பத்துக்கு வெளிப்படுவதால் பாதிக்கப்பட்டாலோ அல்லது தனது குடும்ப அங்கத்தவர் ஒருவர் வெப்பம் சார்ந்த நோயினால் பீடிக்கப்பட்டாலோ தங்களது தொழிலை விடுவதைத் தவிர வேறு வழி இல்லை. “கடந்த வருடம் (2024) என் கை முழுவதும் வெப்பத் தடிப்புகள் பரவின” என்று ஜெமில்லா என்னிடம் கூறினார். இப்படி நடக்கும்போது, ​​பெண்கள் மீண்டும் வேலையிலிருந்து விடுப்பு எடுக்க வேண்டும். “நான் சூரியனை ஒரு நண்பனாக நினைத்தேன்,” என்றும் ஜெமில்லா கூறினார். “ஆனால் இப்போது எனக்கு அவ்வளவு உறுதியாகத் தெரியவில்லை.”

உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை பதிவானதிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாக 2024 கருதப்படுகிறது, மேலும் இவ்வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட வெப்ப உயர்ச்சி “வெதுப்பகத்துக்குள்ளே” என்பது போன்ற செய்தித்தலைப்புக்கள் இடம்பெறத் தூண்டியதோடு, பாடசாலைகள் வெளிக்கள செயற்பாடுகளை இடைநிறுத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியது. நாடு வெப்பவலைகளை உணராவிட்டாலும், அதன் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் தென்கிழக்கு சமவெளிகளை உள்ளடக்கிய வெப்ப வலயங்களும், சமதரைப் பிரதேசங்களும் வெப்பத்தின் தாக்கத்திற்கு முகம்கொடுக்கவேண்டி இருக்கிறது என இலங்கை வானிலை ஆய்வுத் துறையின் காலநிலை மாற்ற ஆய்வுகளின் இயக்குநர் ஏ.ஆர். வர்ணசூரிய தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மூன்று மணிநேர கால இடைவெளியில் வானிலை தொடர்பான தரவுகளை சேகரிக்கும் 24 காலநிலை மையங்களும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உயரந்துசெல்லும் வெப்பநிலைகளையே பதிவுசெய்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.

2025 ஆண்டு மே மாதத்திற்குள், வடக்கு மாகாணத்தில் கடுமையான வெப்பத்தால் குறைந்தது ஏழு பேர் இறந்ததாக தகவல்கள் பதியப்பட்டன. இந்த நூற்றாண்டின் இறுதியில், இலங்கையின் வடக்குப் பகுதி 35 டிகிரி செல்சியஸை அண்மித்த ஈரமான-குமிழ் வெப்பநிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – இது மனித உடல் தன்னைத்தானே குளிர்விக்க முடியாத ஆபத்தான புள்ளியாகும். இருப்பினும், இந்தப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொண்ட தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் அனுபவிக்கின்ற வாழ்க்கை அனுபவங்கள் குறித்த ஆராய்ச்சிகள் அல்லது ஊடகக் கட்டுரைகள் மிகக் குறைந்த அளவிலேயே கவனம் செலுத்துகின்றன.

உச்ச வெப்ப நிலைமைகளில் மூன்று அடுக்குகளில் கைக்கவசமும் மேலணியும் அணிந்து வன்னி, பூநகரி மரமுந்திரிகை பதனிடும் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளி. வீட்டில் பராமரிப்பு பொறுப்புகள் இருக்கின்ற இப்பெண்ணுக்கு வெப்பநிலையினால் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது தனது குடும்ப அங்கத்தவர் ஒருவர் வெப்பம் சார்ந்த நோயினால் பீடிக்கப்பட்டாலோ அவரது தொழிலை விடுவதைத் தவிர வேறு வழி இல்லை. Photo: அமித்தா அருட்பிரகாசம்

 

வன்னி மரமுந்திரிகைச் செய்கைக்கு தென்மேற்கே 22 கிலோமீட்டர் தொலைவில், வாழைப்பாடு கடற்கரையிலிருந்து, பெண்கள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக கடற்பாசிப் பண்ணைகளை வளர்க்கின்றனர். அவர்கள் உலகளாவிய ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் இத்தொழிலில் ஈடுபடுகின்ற கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு உட்பட வட மாகாணம் முழுவதும் உள்ள பல கடலோர சமூகங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள். கடற்பாசி ஒரு கார்பன்-பிரித்தெடுக்கும் நுகர்பொருளாகும், இது ஒரு மருந்து மூலமாகவும், அதன் சாகுபடிக்கு எந்த உரமும் தேவையில்லாத கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வலைப்பாடு பகுதியில் இடம்பெறுகின்ற, ஆழமற்ற நீர் கடற்பாசி வளர்ப்பானது, அருகிலுள்ள கடலோர கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள் மற்றும் போர் விதவைகள் போன்றவர்களை ஈர்த்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்கள் மேம்பாட்டு மையத்தின்படி, இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரானது யுத்தம் உக்கிரமமாக இருந்த வட மாகாணத்தில் பெண்களின் பொறுப்பில் சுமார் 55,000 குடும்பங்களையும் சுமார்  46,000 போர் விதவைகளையும் விட்டுச் சென்றது. பலர் இன்னும் போரின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் உளவியல் தாக்கங்களில் இருந்து மீண்டுவருகின்ற செயன்முறையில் உள்ளனர். “முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு, குடியிருப்பாளர்களில் அரைவாசியானோர் மட்டுமே திரும்பி வந்தனர்,” என்று கடற்பாசி விவசாயி மரியா பிரசாந்தனி கூறினார், 2009 ஆம் ஆண்டு போர் முடிவின்போது, ஐந்து மாதங்களுக்குள் 40,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலைப் பற்றிக் குறிப்பிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பெண்களுக்கு வலுவூட்டும் தொழிலாக திகழும் கடற்பாசி மீன்வளர்ப்பானது, இப்பகுதியில் பலருக்கு தங்களது வாழ்க்கையை குறைந்தபட்சம் நிதி ரீதியில் மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. “இந்தக் கிராமத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள் ஏழைகள். எனவே, கடற்பாசி வளர்ப்பின் வருமானம் ஒரு வரப்பிரசாதமாக இருந்தது,” என்று 2013 இல் தனது பள்ளிப்படிப்பை முடித்ததிலிருந்து கடற்பாசி விவசாயம் மேற்கொண்டுவரும் அமலா ஜுனாஸ்டினா தெரிவித்தார். கடந்த ஐந்து வருடங்களாக வேலை செய்துவரும் பிரசாந்தனி, ஒரு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்குப் போதுமான அளவு பணத்தை சேமித்து வைத்துள்ளார். இவ்விரண்டு பெண்களும் தங்கள் சம்பாத்தியத்தை தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் பராமரிப்பிற்காகப் பயன்படுத்தியுள்ளனர் – மெக்சிகோ மற்றும் சீனா போன்ற நாடுகளின் ஆய்வுகளின்படி, இவ்வாறான செலவினங்கள் வேலை செய்யும் பெண்களுக்கான வழக்கமான மீள்முதலீட்டு வடிவமாகும்.

இருப்பினும், 2025 பிப்ரவரியில், கடல் வெப்பநிலை அதிகரிப்பினால் சுமார் 80 சதவீத கடற்பாசி விளைச்சல் பாதிக்கப்பட்டது. “2023ஆம் ஆண்டில், நாங்கள் 174,000 மெற்றிக் தொன் உலர் கடற்பாசியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தோம், ஆனால் 2024ஆம் ஆண்டில், எங்கள் அறுவடை மிகவும் குறைவாக இருந்தது” என்று பிரசாந்தனி கூறினார்.

வளரும் கடற்பாசிகள் கயிறுகள் அல்லது “மோனோலைன்கள்” மூலம் சுற்றப்பட்டு, மிதக்கும் பிளாஸ்டிக் போத்தல்களில் தொங்கவிடப்பட்டு, மீன்கள் வருவதைத் தடுக்க வலைகளால் மூடப்பட்டிருக்கும். இது ஒரு காலத்தில் கரைக்கு அருகில் வளர்க்கப்பட்டது, இது நடவு, பராமரிப்பு மற்றும் அறுவடைக்கு வசதியாக இருந்தது. ஆனால் வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக ஏற்படும் கடற்பாசி எரிவு மற்றும் எபிஃபைடிசம் எனப்படும் நோயின் அபாயத்தைக் குறைக்க விவசாயிகள் தங்கள் பயிர்களை குளிர்ந்த மற்றும் ஆழமான நீர்மட்டத்திற்கு நகர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாயினர். எபிஃபைடிசத்தின் தன்மையில் நிற மாற்றங்களை அவதானிக்க நேரிடும்போது, ​இனி அறுவடை செய்யவே முடியாத நிலையிலுள்ள கடற்பாசியின் முழுக் கயிறையும் பெண் விவசாயிகள் அகற்றிவிடுவதோடு, அக்கயிறுகளை முற்றாக உலரவிடுகின்றனர். “இல்லையெனில் ஒன்றோடொன்று தொடுகை ஏற்பட்டு கடற்பாசிகள் முற்றாக நோய்த்தொற்றுக்கு ஆளாகும்” என ஜூனாஸ்டினா கூறினார்.

அதிக வெப்பம் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் மயக்கத்தைய ஏற்படுத்தும் என்று ஜுனாஸ்டினா கூறினார். ஒரு கடற்பாசி விவசாயி வேலையின் போது மயக்கமடைந்து தண்ணீரில் விழுந்ததை அவர் நினைவு கூர்ந்தார். ஆழமான நீர்மட்டத்தில் தனித்து வேலை செய்வதை பெண்கள் பாதுகாப்பாக உணராததால், அவர்கள் இப்போது மூன்று அல்லது நான்கு குழுக்களாக பண்ணைகளுக்கு நீந்துகிறார்கள். ஆனால், அனைத்து பெண்களும் ஆழமான நீரில் நீந்த முடியாது என்று பிரசாந்தனி கூறினார். அதிகரித்து வரும் வெப்பநிலை பல பெண்களை எவ்வாறு தொழிலிலிருந்து வெளியேற்றியுள்ளது என்பதையும் அவர் விவரித்தார்.

கடல் வெப்ப உயர்வுடன், பலத்த காற்று, வெள்ளம், குறுகிய நேரத்தில் ஏற்படும் தீவிர மழைவீழ்ச்சி போன்ற பிற நிகழ்வுகளும் இணைந்து பாரிய அளவிலான காலநிலை நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. பலத்த காற்று வீசும்போது, ​​மோனோலைன்கள் ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கொள்ளலாம் “நாங்கள் வலைக்கயிறுகளை கரைக்கு கொண்டு வருகிறோம், அவற்றை பிரித்து, சுத்தம் செய்கிறோம், பாட்டில்களில் இணைக்கிறோம்… அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா?” என்று ஜூனாஸ்டினா கேள்வி எழுப்பினார். “இதையெல்லாம் செய்த பிறகு, மீண்டும் காற்று, அதிக மழை அல்லது கடுமையான வெப்பம் போன்ற காலநிலை குழப்பங்கள் ஏற்படும். ஒரு நபர் எத்தனை முறை இதுபோன்ற இழப்பை சந்திக்க முடியும்? அதனால்தான் இங்குள்ள பல பெண்கள் மனச்சோர்வடைந்துள்ளனர்.”

2025 ஜனவரி மாதம் ஏற்பட்ட வெள்ளம் தனது விதைகள் மற்றும் நூற்றுக்கணக்கான அணிக் கடற்பாசிகளை எவ்வாறு அடித்துச் சென்றது என்பதை பிரசாந்தனி விவரித்தார். பெண்கள் மீண்டும் விவசாயம் செய்யத் தொடங்க போதுமான நாற்றுகளை சேகரிக்க ஒரு மாதத்திற்கும் மேலாக ஆனது. 2025ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் கடற்பாசி உற்பத்தி செய்யும் 300 அல்லது 400 பெண்கள் இருந்தனர். ஆனால் தற்போது அவர்களின் எண்ணிக்கை 100 ஐ விடக் குறைந்துள்ளது. “இழப்புகளைச் சந்திக்கும்போது, ​​பெண்கள் வளங்களை மட்டுமல்ல, உந்துதலையும் இழக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

எதிர்பாராத மழைக்குப் பிறகு பூஞ்சணத்தினால் பாதிக்கப்பட்ட  கருமையான முந்திரிகளை, முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளி காட்சிப்படுத்துகிறார். இலங்கையின் பல ஏற்றுமதித் தொழில்கள் கடுமையான வெப்பம் மற்றும் காலநிலை குளறுபடிகளுடன் தொடர்புடைய பிற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. Photo: அமிதா அருட்பிரகாசம்

 

ஒன்றுடன் ஒன்று முரணாக ஏற்படும் காலநிலை பாதிப்புகள் முந்திரித் தொழிலையும் பாதிக்கின்றன, கடந்த பத்தாண்டுகளில் காலநிலை குளறுபடியால் ஏற்பட்ட இழப்புகள் இலங்கையை முந்திரி இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளியுள்ளன. தொழிற்சாலை மேலாளரான ஜெமிலாவின் கூற்றுப்படி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் மாதத்தில் அறுவடைசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முந்திரி விற்பனை இப்போது மே மாதத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. முந்திரி உற்பத்தியானது விவசாயிகளிடமிருந்து முந்திரிப்பழங்களைக் கொள்முதல் செய்தல், அதன் பின்னர்  முந்திரிப் பழத்தில் இருந்து “முந்திரிக் கொட்டை” பிரிக்கப்படல், அதன்பிறகு ஓடு நீக்கப்படல் போன்ற செயன்முறைகளை உள்ளடக்கியது என்கிறார் ஜெமிலா. கொட்டைகள் மழை அல்லது வெள்ளத்தால் எளிதில் சேதமடைகின்றன, இது பூஞ்சை வளர்ச்சியை ஏற்படுத்தி விதை சீராக உலர்வதைக் குலைக்கின்றது. வன்னி முந்திரி வர்த்தகம் நேரடியாக 200 முந்திரி விவசாயிகளுடனும், மறைமுகமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 750 விவசாயிகளுடனும் இணைந்து செயல்படுகிறது.

முந்திரி அதன் குறிப்பிட்ட தரஅளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை என்றால் – உதாரணமாக, அவை எடை குறைவாகவோ அல்லது நிறமாற்றத்திற்கு உட்பட்டோ இருந்தால் – அவை கொள்வனவுசெய்யப்படுவதில்லை. “விவசாயிகளுக்கு இது மிகவும் வருத்தமான ஓர் நிலை, அவர்கள் பல மாதங்களாக முந்திரி பயிரிட்டு, அவற்றை விற்க முடியாமல் தவிக்கின்றனர்” என்று ஜெமிலா கூறினார்.

வெள்ளத்தினால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு சில விவசாயிகள் அரசாங்க நிவாரணம் பெற்றாலும், கடற்பாசி விவசாயிகளைப் பொறுத்தவரை, இது பொருந்தாது என்று பிரசாந்தனி கூறினார். ஏனெனில், அவர்கள் அதிகாரப்பூர்வமாக ‘விவசாயிகள்’ என்று கருதப்படுவதில்லை. கடற்பாசி வளர்ப்பில் சுயாதீனமான உற்பத்தித்திறன் இருந்தபோதிலும், தொழில்துறையில் உள்ள பெண்கள் கடுமையான ஒழுங்குமுறை மற்றும் அதிகாரத்துவ பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக, பயிர்கள் சேதமடையும்போது, ​​அவர்களின் கடற்பாசியை மீண்டும் வளர்க்க தேவையான விதைகளை வாங்குவது அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. “கடன் வழங்குபவர்களது கையொப்பங்களைப் பெற ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எங்களை அலைக்கழிக்கிறார்கள்” என்று ஜூனாஸ்டினா கூறினார். நாற்றுகள், வலைகள் மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளின் செலவை ஈடுகட்ட கடன்களைப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று விவரித்தார்.

“நாமும் நாட்டுக்காக அந்நிய செலாவணியை ஈட்டுகிறோம் இல்லையா? ஆண் விவசாயிகளைப் போலவே எம்மையும் ஏன் மரியாதையாக நடத்த முடியாது?” என்று பிரசாந்தனி வினா எழுப்பினார்.

பிரசாந்தனி மற்றும் ஜுனாஸ்டினா பட்டியலிட்டது போன்றே வடக்கில் பெண்களின் வேலைவாய்ப்புக்கான தடைகள் அதிகமாக உள்ளன. 2023ஆம் ஆண்டில் தொழிலாளர் படை பங்கேற்பில் இலங்கையானது உலக வரிசையில் 14ஆவது பெரிய பாலின இடைவெளியைக் கொண்டிருந்தது. மேலும், வடக்கில் அந்த இடைவெளி நாட்டின் சராசரியை விட அதிகமாக உள்ளது. 2023ஆம் ஆண்டில் வட மாகாணத்தில் பெண் தொழிலாளர் பங்கேற்பு சுமார் 25 சதவீதமாக மட்டுமே இருந்தது, இது நாடு தழுவிய விகிதமான 31 சதவீதத்தை விட மிகக் குறைவு.

ஏற்கனவே, காணப்படும் பாலினம் மற்றும் புவியியல் ஏற்றத்தாழ்வுகளுடன் வெப்பம் காரணமாகவும் வருமான இழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உண்மையில், தீவிர வெப்பத்தின் தாக்கங்கள் வழக்கமான அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களில் காணப்பட்டதை விட அதிகரித்துச் செல்கின்றன.

ஒரு விவசாயியின் மனைவியான மகாதேவி, 2024ஆம் ஆண்டு இலங்கையின் வடக்கில் ஏற்பட்ட கடுமையான வெப்பத்தின் போது அவரது முழு குடும்பத்தினரும் “காய்ச்சலால்” பாதிக்கப்பட்டதாகக் கூறினார். வெப்பம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வது பெரும்பாலும் ஒரு பெண்ணின் கடமையாகக் கருதப்படுவதால், வெப்பம் அவர்கள் மீது கூடுதல் சுமையை சுமத்துகிறது. Photo: ஐசக் நிக்கோ

 

இலங்கையின் வடக்கு கடற்கரையில் உள்ள இலுப்பைக்கடவையில், மார்ச் 2024 இல் தனது முழு வீட்டாரும் “காய்ச்சலால்” பாதிக்கப்பட்டதாக மகாதேவி கூறினார். “எங்கள் தொண்டை வலித்தது, சளி காரணமாக எங்களால் பேச முடியவில்லை” என்று அவர் கூறினார். ஒரு விவசாயியின் மனைவியான மகாதேவி, மற்றவர்களை விட நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், தனது வழக்கமான வீட்டு வேலைகளைச் செய்ய முடியாமல் போனதாகவும் தெரிவித்தார். இப்பகுதியில் உள்ள சில தமிழ் வீடுகள் வெப்பத்தைத் தணிக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளன. அங்கு சாய்வான கூரைகள், நிழலான உட்புறங்கள், உட்புற முற்றங்கள் மற்றும் மகாதேவியின் வீட்டைப் போல ஒரு திண்ணை அல்லது வராண்டா அமைந்திருக்கும். அப்படியிருந்தும், விறகு அடுப்புகளிலிருந்து வரும் வெப்பம் சமையலறைகளை வறுத்தெடுக்க வைக்கும். அட்லாண்டிக் கவுன்சிலின் காலநிலை மீள்தன்மை மையம் நடத்திய சமீபத்திய ஆய்வில், அதிக வெப்பமானது, பெண்கள் ஒரே அளவிலான ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத வேலைகளைச் செய்யவேண்டிய நேரத்தை பெருமளவில் அதிகரிக்கிறது என்று கண்டறிந்துள்ளது. வெப்பம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்பது பெரும்பாலும் ஒரு பெண்ணின் கடமையாக இருப்பதால், வெப்பம் பெண்கள் மீது இரட்டைச் சுமையை சுமத்துவதோடு நேரப்பற்றாக்குறையை அதிகரிக்கிறது, இது பெண்களின் ஓய்வு, ஊதியம் பெறும் வேலை அல்லது தங்கள் சொந்த பராமரிப்பு போன்றவற்றுக்கான நேரத்தைக் குறைக்கிறது.

நோய்களுக்கான அறிகுறிகள் தென்படும் போது, ​​ஆண்களை விட பெண்கள் மருத்துவமனையை நாடுவது குறைவு என்று யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் மருத்துவரும் துணை இயக்குநருமான சி.எஸ். ஜமுனாநந்தா கூறினார். குழந்தை பராமரிப்பு மற்றும் குடும்பக் கடமைகள் காரணமாக, அவர்கள் பொதுவாக நோயின் முற்றிய நிலைகளில் மட்டுமே சிகிச்சைக்காக வருகிறார்கள். காலநிலைக் குளறுபடியானது டெங்கு, சுவாச நோய்கள் மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய்கள் ஏற்படும் வீதத்தை அதிகப்படுத்தியுள்ளது என்பதை பகிர்ந்துகொண்ட ஜமுனானந்தா, வெப்ப அலைகளின் தாக்கம் எழுப்பும் பீதி நிலை குறித்தும் எச்சரித்தார்.

2025ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெப்ப அலைகளால் ஏழு பேர் இறந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும், அப்பதிவுகளை ஆய்வு செய்த ஜமுனானந்தா, இந்த அறிக்கைகள் “தவறு” என்று கூறினார். இலங்கை சுகாதார அமைச்சின் அதிகாரியான இனோகா சுரவீர, “வெப்பம் மரணத்தின் நேரடியான காரணமாக அமைவதில்லை” என்று கூறினார், மேலும் “வெப்பம்” என்பது இறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவ பதிவில் அரிதாகவே இறப்புக்கான காரணமாக குறிப்பிடப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இது வெப்பம் தொடர்பான இறப்பைக் கணக்கிடுவதை சிக்கலாக்குகிறது.

காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் செயற்பாட்டின்கீழ் இலங்கையின் வெப்ப-சுகாதார செயற்றிட்ட வடிவமைப்பில் உதவிபுரியும் சுரவீர, கடுமையான வெப்பத்திற்கு ஆளாகும்போது தசைப்பிடிப்புகள், தடிப்புகள், வெப்ப மயக்கம் (தலைச்சுற்றல் அல்லது மயக்கம்) மற்றும் வெப்ப பக்கவாதம் ஆகியவை ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்டார். ஆண்களை விட பெண்கள் உடலியல் ரீதியாக அதிக வெப்பத் தாக்கத்துக்கு ஆளாகிறார்கள் என்றும், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் ஆபத்தில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆலோசக மருத்துவரான சுரவீர, போதுமான ஒதுங்குமுறை வசதிகள் இல்லாமல் வெளியில் வேலை செய்யும் பெண்கள் சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க தண்ணீர் குடிக்காமல் இருக்கும் வாய்ப்புகள் இருக்கலாம் என்றார். இது நீரிழப்பு மற்றும் வெப்பம் தொடர்பான சிக்கல்களை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். மேலும் கடும் வெப்பமானது உடலியல் நோய்களுக்கு அப்பால் சென்று, உளவியல் ரீதியிலான ஆரோக்கியத்தை பாதித்து, எரிச்சல், கடுகடுப்பு மற்றும் மனச்சோர்வை அதிகரிக்கும் என்கின்றன சில ஆராய்ச்சிகள்.

சமீப காலங்களில், வானிலை ஆய்வு மையம், சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, வெப்பக் குறிகாட்டியைப் பயன்படுத்தி வெப்ப ஆலோசனைகளை வழங்கத் தொடங்கியுள்ளது, இது காற்றின் வெப்பநிலை மற்றும் வளிமண்டல ஈரப்பதத்தின் அளவீடுகளை இணைத்து, நிலவும் வெப்பம் எவ்வாறானது அல்லது எவ்வாறு உணரப்படுகிறது என்பதைக் கணிக்கிறது. அரசாங்கம்கூட, தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக இவை தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என்றும் சுரவீர கருத்துரைத்தார். மேலும், இது தொடர்பில் ஊழியர்களும் தொழில்தருநர்களும் கூட பொறுப்பேற்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார். கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட வெப்ப-சுகாதார செயல் திட்டத்தை மீளத் தயாரித்து அமுலாக்க இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகலாம். இவ்விடைக்காலத்தில், முதலுதவி அளிக்கவும், வெப்பம் தொடர்பான நோயின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காணவும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது மிகவும் முக்கியம் என்று சுரவீர கூறினார். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் மற்றும் குளிப்பு அல்லது உடலில் தண்ணீர் தெளிப்பு போன்றவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டும் என முதலாளிகளுக்கு அவர் அறிவுறுத்துகிறார். “இவை சிறிய விஷயங்கள் என்று மக்கள் நினைக்கலாம். ஆனால் இந்த முறைமைகள் உயிர்களைக் காப்பாற்றும்” எனவும் அவர் கூறினார்.

கடுமையான வெப்பத்தின் உடல்நலப் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளையில், வெப்பம் மற்றும் குளிர்ச்சியின் சொற்கருப்பொருள் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பாத்திரமாக விளங்குகின்றது. சங்க காலத் தமிழ்க் கவிதைகள் பிரிவு மற்றும் மனத் துன்பத்தை சித்தரிக்க ஒரு பாலைவனச் சூழலை உதாரணம் காட்டுகின்றன. உண்ணும் உணவுகள் ஒவ்வொன்றும் உடலுக்கு உஷ்ணம் அல்லது குளிர்வாக கருதப்படுகின்றன; மேலும் பெண் உடல்கள் மாதவிடாயின் போது வெப்பத்தை வெளியாக்குவதாக நம்பப்படுகிறது. வெப்பத்தைப் பற்றிய சிந்தனை தமிழ் பழமொழிகள் மற்றும் பேச்சுமொழிகளிலும், பாரம்பரிய கட்டடக்கலையில், கவிதைகளில், உடல் மற்றும் உணவு பற்றிய கருத்துக்களில் ஆழமாக பதிக்கப்பட்டுள்ள நிலையில், தெற்காசியப் பெண்களும் அவர்களின் வெப்ப அனுபவங்களும் புள்ளிவிபர ஆய்வுகளில் அரிதாகவே மையப்படுத்தப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க வீரர்களை வெப்பத் தாக்கம் மற்றும் உறைபனியிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கும் வெப்ப ஆராய்ச்சியாளர்களின் ஆடை காப்பு பற்றிய ஆய்வை லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வெப்ப ஆய்வகத்தின் இயக்குனர் பாரத் வெங்கட் “எதை அணியக்கூடாது” என்ற தனது கட்டுரையில் மேற்கோளிடுகிறார். அது வணிக உடையான சூட் – பெண்கள் அணியும் உள்ளாடைகளோ, சேலைகளோ அல்ல, மாறாக அமெரிக்காவின் ஒரு சிறு தொகையினரை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும், வெண்ணிற, உயர்தர, ஆண்களால் அணியப்படும் வணிக உடையான சூட்.

யாழ்ப்பாண நகரத்தில் உள்ள இளம் பெண்கள் கடுமையான வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள குடைகளைப் பயன்படுத்துகிறார்கள். பெண்கள் வெப்பத்துக்கு வெளிப்படுகையைக் குறைக்க குடைகளையும் தொப்பிகளையும் பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், ஆண்கள் இவற்றை பெண்மைக்கான அம்சங்களாகக் கருதுவதால் ஆண்கள் இவற்றை தவிர்க்கும் வாய்ப்புகள் உள்ளன. Photo: அமிதா அருட்பிரகாசம்

 

வெப்பம் குறித்த ஆய்வுகள் சமீப காலமாகவே வளிமண்டல மாசு மற்றும் ஈரப்பதத்துடனான தட்ப வெட்பத்தின் தொடர்புகளை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளன, இவ்விரண்டு காரணிகளும் உலகின் தெற்கில் உள்ள பல வெப்பமண்டல நாடுகளில் வாழ்க்கைமுறையை நிர்ணயிக்கும் இரண்டு முக்கிய காரணிகளாகும். நடுத்தரநிலை வானிலை முன்னறிவிப்புகளுக்கான ஐரோப்பிய மையம் (ECMWF) வானிலை கணிப்புகளில் உலகளாவிய ரீதியில் முதன்மையானதாகக் கருதப்பட்டாலும், உள்ளூர் சூழலில் ECMWF மாதிரிகளை மட்டுமே முழுமையாக நம்புவதற்கு வரையறைகள் இருப்பதாக இலங்கையின் வானிலை ஆய்வுத் துறை தெரிவிக்கின்றது. இலங்கையின் இடைக்கால பருவமழை காலத்தில் ECMWF இன் வானிலை எதிர்வுகூறல் முற்றுமுழுதாக நம்பகமானதல்ல என திரு.வர்ணசூரிய கூறுகிறார். மேலும், இவ்வமைப்பின் எதிறவுகூறல்கள் நடு-அட்சரேகை நாடுகளை மையப்படுத்தி நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், ECMWF மாதிரியாக்கம் பூமத்திய ரேகையை அண்மிய நாடுகளின் காலநிலை நிகழ்வுகளை செம்மையாக வரையறுக்கத் தவறுகிறது. வானிலை ஆய்வகங்கள் செயற்கைக் கோள்களினால் பெறப்பட்ட படங்களோடு இணைந்த காலநிலை மாதிரிகளின் எண்ணிகள், வேளாண்-அளவியல் மற்றும் வானிலை நிலையங்களிலிருந்து பெறப்படும் அவதானிப்புகள் மற்றும் ஒவ்வொரு பிராந்தியத்தினதும் காலநிலை தன்மைகள் போன்ற அம்சங்களை ஒருங்கிணைத்தே வானிலை எதிர்வுகூறல்களை மேற்கொள்கின்றது.

இன்று கடுமையான வெப்பத்தை அறிவியல் ரீதியாக ஆவணப்படுத்தும் வழிமுறைகள் – அவற்றை இயைபாக்கும் முயற்சிகள் – சேலை கடைகளிலோ, நிகாப் கொள்வனவிலோ நேரம் செலவிடுகின்ற பெண்களின் நிலைபற்றி கவனத்தில் கொள்வதில்லை. இவ்வாறான உடைகள் பெண்களை வெப்பத்திலிருந்து உண்மையிலேயே பாதுகாக்கின்றதா என்பதில் தெளிவு இல்லை, மேலும் கடுமையான வெப்பச் சூழ்நிலையில் அரச ஊழியம் செய்யும் பெண்கள் புடைவை அணியவேண்டும் (ஆண்கள் தேசிய உடை அல்லது கால்சட்டை மற்றும் சட்டை அணியலாம்) என்ற விதிமுறை நியாயமற்றது. சேலை அணியும் பெண்கள் மென்மையான வர்ணங்களையும் வெப்பச் சூழலுக்கு ஏற்ற துணிகளையும் தேர்வுசெய்யலாம் என்றும் சுரவீர தெரிவித்தார். சேலை “அனைத்து வானிலைக்கும் ஏற்றது” அல்லது வேண்டிய வகையில் வடிவமைத்துக்கொள்ளக்கூடிய, இயைபுபடுத்தக்கூடிய தன்மை கொண்ட ஆடை என்று கண்டறிந்த அறிஞர் மாதவி இந்திரகாந்தியின் 2016ஆம் ஆண்டு ஆய்வையும் சுரவீர மேற்கோளிட்டார்.

சுரவீர மேலும் கூறுகையில், பாலினத்தை மையப்படுத்திய ஆடை தொடர்பான கணிப்பீட்டில், பெண்கள் சில நேரங்களில் ஆண்களை விட கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் பாலின விதிமுறைகளால் குறைவாகவே கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்கிறார். பெண்கள் விளிம்புகள் கொண்ட தொப்பிகள் மற்றும் வெப்பத் தாக்கத்தைக் குறைக்க குடைகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், ஆண்கள் இத்தொப்பிகளையும் குடைகளையும் பெண்களுக்கானவைகளாகக் கருதி அவற்றைத் தவிர்த்து தீவிர வெப்பத்திற்கு தங்களை அதிகமாக வெளிப்படுத்தி பாதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார். வடக்கில் ஒப்பீட்டளவில் பெண்களைவிட ஆண்களிடையே வழக்கமாகி இருக்கும் மதுப்பழக்கம் வெப்பத்தின் போது அவர்கள் நோயுறும் அல்லது இறப்பைச் சந்திக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும், எவ்வாறாயினும் இவற்றால் பெரிதும் பாதிப்பை அனுபவிப்பவர்கள் பெண்களே என்றும் சுரவீர குறிப்பிட்டார்.

வடமாகாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை, குறிப்பாக அவர்கள் முறையற்றவிதத்தில், வெட்டவெளியில் வேலைசெய்கின்றபொழுது வெப்பம் அவர்களை அசாதரணமாகப் பாதிக்கின்றது. வட மாகாணத்தில் உள்ள, முறையற்ற வேலைவாய்ப்பு விகிதம் சுமார் 75 சதவீதமாக உள்ளது, அத்தோடு அங்குள்ள பல சமூகங்கள் மதப் பாகுபாடு, நிலமின்மை அல்லது தலைமுறை தலைமுறையான சாதிய ஒடுக்குமுறைமைகளுக்கு முகம்கொடுத்தவண்ணமுள்ளனர்.

‘சீரற்ற வெப்பம்: தெற்காசியாவின் காலநிலை, பாலினம் மற்றும் சாதியம்’ என்ற தனது கண்காட்சியின் அறிமுகத்தில், தலித் புகைப்பட ஊடகவியலாளர் பூமிகா சரஸ்வதி, வெப்பம் என்பது “தலைமுறைகளாக ஒடுக்குமுறையில் இருந்து பிறந்த தணியாத கோபத்தின் உருவகம்” என குறிப்பிட்டிருந்தார். ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் நமது உணவுத் திட்டங்களிலும், சுற்றுச்சூழல் சமநிலை நிலவுகைக்கும் ஆதாரமானவர்கள் என்ற போதும், காலநிலை தொடர்பான பேச்சுக்களில் அவர்கள் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள் என்று அவர் வாதிட்டார்.

இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கில் அரசியல், தொழில்முறை மற்றும் அதிகாரத்துவ வாழ்வின் உயர்மட்டங்களில் இன்னும் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பேசாலை கிராமத்தில் கருவாடு அல்லது உலர் மீன் விற்கும் பெண் சமூகமானது அவர்கள் வாழும் ஒட்டுமொத்த சமூகத்தில் அதிக்குறைந்த பிரதிநிதித்துவம் உள்ள சமூகத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

கேப்ரியல் எலிசபெத் 35 ஆண்டுகளாக உலர் மீன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். அதேநேரத்தில் ஜேசுதாசன் ராஜேஸ்வரி பெர்னாண்டோ கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக அதே வேலையைச் செய்து வருகிறார். பேசாலை கடற்கரையில் வலைகளைப் பழுதுபார்த்தல், மீன் வெட்டுதல், நண்டுகளை சுத்தம் செய்தல் மற்றும் உலர் மீன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தல் போன்ற தொழில்களுடன் நெருக்கமான கத்தோலிக்க சமூகத்தின் ஒரு பகுதியாக அவர்கள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, உலர் மீன் விற்பனைத் தொழிலில் 200 முதல் 300 பெண்கள் இருந்தனர் என்று எலிசபெத் கூறினார். ஆனால், இப்போது அந்த அளவு குறைவு. அவர்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை மீன்பிடி வீதம் குறைந்தமைதான். இதற்கு முக்கிய காரணம், அடிமட்ட இழுவை மீன்பிடித்தல் முறை ஆகும். இது கடல்படுக்கையில் உள்ள பவளப்பாறைகளை அழித்து, கடல்வாழ்வியலை அழித்து சுற்றுச்சூழல் சமநிலையை குழப்பி, இறுதியில் மீன் வளங்களைக் குறைக்கும் ஒரு சட்டவிரோதமான மீன்பிடி முறையாகும் என்று அவர் கூறினார். மீன்பிடி அறுவடை குறைந்தமைக்கு இரண்டாவது காரணியாக அதிகரித்த கடல்நீர் வெப்பநிலையை அவர் கூறினார் .

“பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, எந்த மீன் இனங்கள் எந்தப் பருவகாலத்தில் வரும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்கிறார் எலிசபெத். “கும்பலா, பெச்சலை, அல்லது செராயா… மீன்கள் படகு மூலம் வரும், காலை முதல் மாலை வரை எங்களை சுறுசுறுப்பாக இயங்கவைக்கப் போதுமான வேலையும், எங்கள் குழந்தைகளின் செலவுகளை ஈடுகட்ட போதுமான வருமானமும் இருந்தது. ஆனால், இப்போது, குறிப்பாக இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அதிகரித்து வரும் பணவீக்கத்துடன், அந்நிலை மாறிவிட்டது” என்கிறார் எலிசபெத்.

மன்னார், பேசாலையில் மீன்களை உலர்த்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பின் முன் ஜேசுதாசன் ராஜேஸ்வரி  மற்றும் கேப்ரியல் எலிசபெத் நிற்கிறார்கள். கடல் வெப்பநிலை அதிகரிப்பால் இலங்கை மீனவர்களுக்கு மீன் பிடிப்பு குறைந்து, உலர் மீன் தொழிலில் பணிபுரியும் பெண்களுக்கு வருமானம் குறைந்துள்ளது. Photo: அமிதா அருட்பிரகாசம்

 

2025 ஆண்டு மற்றும் இந்த ஆண்டு (2026) நிலவுகின்ற வெப்பதாக்கத்தை எலிசபெத் “தாங்க முடியாதது” என்று விவரித்தார். “அது எங்கள் உடலைத் கடுமையாகத் தாக்குகிறது. மேலும், மணல் மண்ணில் அதன் தாக்கம் மிக அதிகம்” என்றும் அவர் கூறினார். “சில நேரங்களில் எங்களால் எங்கள் வீடுகளினுள் தங்க முடியாது.” கடற்கரையோர வீடுகள் சிறியவை, தாழ்வான கூரைகள் கொண்டவை என்றும் அவர் கூறினார். இயற்கையான மின்கடத்தாப் பொருளான ஓலையால் அவர்கள் வீட்டு கூரையை மூடியபோதும், வீடுகள் சில நேரங்களில் அதிக சூடாக இருக்கும். வீடுகளில் மின்விசிறிகள் இல்லாதவர்கள் கடலோரமாக உட்கார வெளியே செல்கிறார்கள். “வெப்பம் எங்களை நோய்வாய்ப்படுத்துகிறது” என்றும் அவர் கூறினார், மேலும் முழு வீடும்  காய்ச்சல் காய்வதைப்போல் உஷ்ணமாக இருக்கும் என்கிறார். குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மருந்து இறக்குமதி மீதான தடைகள் மற்றும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை மேற்கோள் காட்டி, “மருத்துவமனைகள் உண்மையில் எங்கள் குடும்பங்களைப் பாதுகாக்குமா இல்லையா என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்றும் எலிசபெத் கூறினார்.

மற்றத் தொழில்களைப் போலவே, உலர் மீன் உற்பத்தியிலும்கூட எதிர்பாராத மழைப்பொழிவு உற்பத்தியாளர்களின் ஆதாயத்தை பாதிக்கும். “மீன் நனைந்தால், அம்மீனினால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என்று ராஜேஸ்வரி கூறினார். “நாம் அதை மீண்டும் கடலில் தான் விட வேண்டி வரும்” என்றார். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பேசாலையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் கிணற்று நீரும் கழிவுநீரும் கலந்தன. “அதனால் அந்நீரை எங்களால் குடிக்கவோ சுத்தம்செய்தும் பயன்படுத்தவோ முடியவில்லை” என்று எலிசபெத் கூறினார், சில குடியிருப்பாளர்கள் தங்கள் மூதாதையர் வீடுகளிலிருந்து கூட இடம்பெயர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

உப்பளங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, அதிக வெப்பநிலையை நிர்வகிப்பதும் பணியின் ஒரு பகுதியாகும். மன்னார் மற்றும் ஆணையிறவில் 73 நிரந்தர ஊழியர்களையும், 250 தற்காலிக ஊழியர்களையும் தேசிய உப்பு நிறுவனம் பணியமர்த்தி உள்ளது. வறுமையில் வாடும் சமூகங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்களில் பலர் பெண்கள் ஆவர். அவர்களின் பிரதானமான வேலையாக உப்பளங்களைச் சுத்தம் செய்வதும், அறுவடை காலங்களில் உப்பு சேகரித்துக் கொண்டு செல்வதும் ஆகும். உப்பு உற்பத்தியின் அளவு சூரிய ஒளி, காற்று மற்றும் மழைப்பொழிவால் தீர்மானிக்கப்படுகிறது என்று உப்பள மேலாளர் திரு.கயந்த திலகரத்ன கூறினார். வெப்பம் அதிகமாக இருந்தால், தண்ணீர் வேகமாக ஆவியாகிவிடும். “பெண்கள் மிகவும் கடுமையான சூரிய ஒளி மற்றும் வெப்பக் காற்றின் கீழ் வெளியே வேலை செய்கிறார்கள்” என்று அவர் கூறினார். “உண்மையில் இது மிகவும் கடினமான வேலை.” தனது தொழிலாளர்கள் ஏதேனும் உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்கிறார்களா என்று கேட்டபோது, உப்பு படிகங்களின் கூர்மையான விளிம்புகள் மற்றும் உப்பு நிலங்களில் உள்ள சூடான நீர் எத்துணை ஆபத்தானவை என்று திலகரத்ன குறிப்பிட்டார். மேலும், பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பூட்ஸ் அணிவார்கள் என்று விளக்கினார். இவற்றைத் தவிர வேறு எந்த உடல்நல பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வும் அவருக்கு இல்லை.

மன்னாரின் 163 ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்களில் பணிபுரியும் பெண்கள் வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு எழுந்து, காலை 6.30 மணிக்கு வேலை பதிவு செய்து, காலை 7 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை வேலை செய்வார்கள். வெப்பமான மாதங்களில், அவர்கள் நான்கு மணி நேரத்திற்கு முன்பே, அதிகாலை 3 மணிக்கு வேலையைத் தொடங்குவார்கள். இதனால் அவர்கள் நண்பகலின் கடுமையான வெப்பத்தைத் தவிர்க்கலாம். 14 ஆண்டுகளாக உப்பளங்களில் பணிபுரியும் அசம்தா விஜெனி மற்றும் குமார் அகஸ்டினம்மா, ஆகியோர் மன்னாரின்2025 உப்பளங்களில் உள்ள 23 நிரந்தர ஊழியர்களில் இருவர் ஆவர். “இந்த ஆண்டும் (2025) கடந்த 2024ஆம் ஆண்டும் முன்பை விட அதிக சூடாக இருந்தது” என்று விஜெனி கூறினார். வெப்பத்தின் தாக்கத்தைத் தவிர்க்க பெண்கள் வேலைக்கு இடையில் இடைவெளி எடுத்துக்கொண்டு நிறைய தண்ணீர் குடிப்பார்கள் என்றும் விஜெனி கூறினார். குறிப்பாக வெப்பம் கூடிய நாட்களில், அவர்கள் நீண்ட கை ஆடைகள், தொப்பிகள் மற்றும் தலையை சுற்றி துணிக் கவசமும் அணிவார்கள் என்றார்.

“சில நேரங்களில் எமக்கு கண்ணைத் திறந்து பார்ப்பது கூட கடினமாக இருக்கும்” என்று அகஸ்டினம்மா வெப்பத்தின் தாக்கத்தைப் பற்றிக் கூறினார். சில பெண்களின் தோலில் சிவப்புத் தழும்புகள் தோன்றும். அதற்கு மருந்தாக அவர்கள் ஒரு கிரீம் பயன்படுத்துகிறார்கள் என்று விஜேனி கூறினார். “அதிக வெப்பமாக இருக்கும்போது, உடல் சோர்வடைந்து, தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படும்” என்று அவர் கூறினார். யாராவது மயக்கம் அடைந்தால், அவர்கள் அருகிலுள்ள கூடாரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, தண்ணீர் வழங்கப்பட்டு ஓய்வெடுக்கச் சொல்லப்படுகிறார்கள். அவர்களால் அதற்கு மேல் வேலை செய்ய முடியாவிட்டால், அவருக்கு விடுப்பு வழங்கப்படுகிறது. இது வருடத்திற்கு ஒரு முறையேனும் நடக்கும் என்று விஜேனி கூறினார். பொதுவாக உப்பு கொண்டு செல்வதற்கு தற்காலிக தொழிலாளர்களே பணிக்கமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு இந்த வேலை பழக்கமில்லை, அவர்களின் சுகாதாரநிலை மோசமான நிலையில் இருந்தால் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள், இதனால் நிரந்தர  ஊழியர்களே அவர்கள் விட்ட இடத்தில் இருந்து வேலையை தொடர்ந்து முடிக்க வேண்டும் என்றார்.

மன்னாரில் உள்ள உப்பள தொட்டிகளில் குமார் அகஸ்டினம்மா, எஸ். பிரான்சிஸ்கா, டி. அசம்தா விஜெனி மற்றும் கே. மேரி ரெவெல் ஆகியோர் பணியாற்றுகின்றனர். உப்புத் தொட்டிகளில் பணிபுரியும் பெண்கள் கடுமையான வெப்பத்தால் வெப்ப ஒவ்வாமைத் தழும்புகள், பார்வை மங்கல், தலைசுற்றல் மற்றும் மயக்கத்தினையும் அனுபவிக்கிறார்கள். Photo: அமிதா அருட்பிரகாசம்

 

மன்னாரின் உப்பள நிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்களில் பெரும்பாலோர் பெண்கள், நிர்வாகத்தில் பெரும்பாலும் ஆண்கள் உள்ளனர். “எங்களுக்கு மாதவிடாய் வரும்போது நாம் சிரமத்தை எதிர்நோக்குகிறோம்” என்று விஜேனி கூறினார். “இங்குள்ள அதிகாரிகள் அனைவரும் ஆண்கள், இல்லையா? எனவே, எங்களுக்கு இந்தப் பிரச்சினை இருப்பதாக எப்போதும் அவர்களிடம் சொல்ல முடியாது. சில நேரங்களில் சுமையைத் தூக்குவது சற்று கடினம் என்று சொல்லிவிட்டு வேறு வேலை கேட்போம். அவர்கள் படித்தவர்களாக இருந்தால், அவர்கள் புரிந்துகொண்டு வேறு வேலைகளைச் செய்ய அனுமதிப்பார்கள். நாங்கள் எப்போதும் முடிந்தவரை வேலை செய்கிறோம்.”

19ஆம் நூற்றாண்டில், உப்புக் கிடங்குகள் கொத்தடிமைத் தளங்களாகவும் தண்டனைக் குற்றவாளிகள் கடின உழைப்புக்கு அனுப்பப்பட்ட இடங்களாகவும் இருந்தன. இன்றும் உப்புக் கிடங்குகளின் வேலைப்பளு தண்டனைக்குரிய குற்றவாளிகளுக்கான வேலைக்குச் சமனாக இருந்தபோதிலும், அது வழங்கும் வருமானத்தை பெண்களால் இழக்க முடியாது. அவ்வருமானம் அவர்களுக்கு அவசியமானது. சில நேரங்களில் அவர்களுக்கு மாதத்திற்கு 10 முதல் 15 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும். மழை பெய்தால், பருவகால தொழிலாளர்கள் ஊதியமின்றி வீடு திரும்புகிறார்கள். “உப்பு இல்லாமல், எங்களுக்கு வேலை கிடைக்காது” என்று விஜெனி கூறினார். வடக்கில் பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பு இல்லாதது குறித்தும் அவர் பேசிய அவர், “எனவே நாங்கள் இங்கு வந்து அவர்கள் எங்களுக்கு வேலை கொடுக்கும் வரை காத்திருக்கிறோம்.” என்றனர்.

இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் நாட்டின் உப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உப்பளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கடற்பாசி, முந்திரி மற்றும் உலர் மீன் தொழில்களைப் போலவே, காலநிலை குளறுபடியும் திடீரென பெய்யும் தீவிர மழைப்பொழிவும் உப்பு உற்பத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் கனமழை மற்றும் மோசமான முகாமைத்துவத்தினால் உற்பத்தியில் 40 சதவீதம் சரிவு மற்றும் நாடு தழுவிய உப்பு பற்றாக்குறையை ஏற்படுத்திய பிறகு, இலங்கை இந்தியாவிலிருந்து 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மன்னார் உப்பளத்தின் ஆண்டு உற்பத்தி இலக்கு 6000 மெற்றிக் தொன் என்றாலும், 2021 முதல் உற்பத்தி அதில் பாதியாக குறைந்துள்ளது. “மழை அளவை இன்னும் துல்லியமாகவும் முன் கூட்டியும் கணிக்க முடிந்தால் உற்பத்தியை அதிகரிக்க முடியும்” என்று திலகரத்ன கூறினார், அவர்கள் வானிலை ஆய்வுத் துறையிலிருந்து குறிப்பிட்ட அளவிலான தரவுகளையே பெறுகிறார்கள், பெரும்பாலும் அவர்கள் வானிலை எதிர்வு கூறல்களுக்கு weather.com அல்லது accuweather.com போன்ற வலைத்தளங்களையே நம்பியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

வானிலை ஆய்வுத் துறையின் தரவுகள் மற்றும் முன்னறிவிப்புகளில் இருக்கின்ற நம்பகமற்ற தன்மைக்கு அவர்களால் 2011 இல் 29 பேரைக் கொன்ற புயலையும் 2017 இல் 200 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற புயலையும் கணிக்க முடியாமல்போன நிலையை உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்தத் துறை பிரதானமாக தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் செயல்படுவதால், பொதுமக்கள் அவற்றை எவ்வாறு அனுக்குகின்றனர் அல்லது அவர்களது எதிறவுகூறல்கள் அவர்களால் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றி பரிசீலனை செய்வதில்லை என்று வர்ணசூரிய தெரிவித்தார்

கடுமையான வெப்பத்தால் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய உடல்நல அபாயங்கள் பெரிதாக இருந்தபோதிலும், வடக்கில் மிகச் சில பெண்களே அரசாங்கத்தின் வெப்ப சுகாதார செயல் திட்டத்தைப் பற்றியும்  சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வெப்பத்தாக்கத்தைத் தவிர்ப்பதற்கான வழிகாட்டுதல்களைப் பற்றியும் அறிந்திருக்கிறார்கள். இருப்பினும், மாறுபட்ட வேலை நேரங்கள் மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வெப்ப ஆலோசனைகள் தொடர்பான சமீபத்திய திட்டங்கள் போன்ற நல்ல கொள்கைகள், தொழிலாளர்களின் நிலையை மாற்றியமைக்க உதவும். பொருளாதார நெருக்கடியிலிருந்து தன்னை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகளில் இலங்கை அதன் ஏற்றுமதிகளை பன்முகப்படுத்தவும் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை மேம்படுத்தவும் முயற்சிப்பதால், இக்கொள்கைகள் மிக அவசியமானவை.

வட மாகாணத்தில் முந்திரி பதப்படுத்துதல், கடற்பாசி வளர்ப்பு, மீன் உலர்த்துதல், உப்பு அறுவடை செய்தல் மற்றும் ஊதியம் பெறா வீட்டு வேலைகளுடன் குடும்பப் பராமரிப்பு போன்ற பணிகளைச் செய்யும் பெண்களுக்கு, கடுமையான வெப்பம் காரணமாக வேலையைக் கைவிடுவது வாழ்க்கையை முன்னெடுப்பதற்குச் சவாலாக அமையும். “இந்தத் தொழில் இல்லாமல், நாங்கள் மீண்டும் கஞ்சி குடிக்க வேண்டியிருக்கும்” என்று கடற்பாசி விவசாயி மரியா பிரசாந்தனி கூறினார். போரின் கடைசிக் கட்டங்களில் வன்னியில் கூடியிருந்தவர்களுக்கு அரிசி மற்றும் தண்ணீர் கொண்ட கஞ்சி மட்டுமே பெரும்பாலும் உணவாக இருந்தது. “ஆனால் கஞ்சிக்குக் கூட உங்களுக்கு வளங்கள் தேவை, இல்லையா?” என அமலா ஜூனஸ்டினா வருத்தத்துடன் பதிவுசெய்தார்.

அமித்தா அருட்பிரகாசம்

இலங்கையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆய்வாளர், மற்றும் சுயாதீன திட்ட வரைவு பகுப்பாய்வாளர்.

இந்தக் கட்டுரைக்கான அனுசரணை இன்டர்நியூஸின் எர்த் ஜர்னலிசம் நெட்வொர்க் வழங்கியதோடு ஆங்கில வடிவம் முதலில் 01 ஏப்ரல் 2025 ஹிமால் சவுத் ஏசியன் (Himal Southasian) இதழில் வெளியிடப்பட்டது. கட்டுரையின் தமிழாக்கம்: ரக்‌ஷானா ஷரிபுத்தீன்.