படம் | கட்டுரையாளர், in Facebook

அரச வைத்தியசாலை ஒன்றுக்குள் நுழைவதை கற்பனை செய்து கொள்ளுங்கள். முறிந்தும், கால் தொங்கியும் இருக்கும் இரண்டு நிரலில் அடுக்கப்பட்ட மரத்தொடர் இருக்கைகள். இட நிரப்புதலுக்காக இடையிடையே பிளாஸ்ரிக்கதிரைகள். நோயாளக்காதலன் – காதலிகளால் கூரிய ஆயுதங்களால் கீறிக்கீறிப் பெயர் பொறிக்கப்பட்ட கதிரைக் கைப்பிடிகள், அதற்கு வெளியே மோட்டார் சயிக்கிள்கள், சயிக்கிள்கள், அதன் சீற்களில் அமர்ந்திருந்து காத்திருக்கும் ஆண்களும், சிறுகுழந்தைகளும் என அந்தச் சூழலை அச்சு அசலான வைத்தியசாலை ஒன்றாக கற்பனை செய்துகொள்ளலாம். ஆனால் அது வைத்தியசாலையல்ல. மேலதிகமாக இருமல்கள், மூக்குறிஞ்சல்கள் மற்றும் குழப்பமான கதைகளும் கேட்கின்றன. இன்னும் கொஞ்சம் கூர்மையாக அவதானித்தாால் விதம்விதமாக கால் நடக்கும் ஓசைகளையும் நீங்கள் உணரலாம். அந்த ஓசைகளின் அதிகம் கால் நிலத்தோடு இழுபட்டதாகவோ, தேய்படுவதாகவோ, எட்ட எட்டவைப்பதாகவோ, பதுங்கிப்பதுங்கி நகர்வதாகவோ, பயப்பீதியுடன் கடக்கும் ஒவ்வொரு தடம்போலவோ அமைந்திருக்கின்றன. நடையோசை அவர்களின் உளவியலைச் சொல்லிவிடுகிறது.

ம். அவர்கள் அங்கு அழைக்கப்பட்டவர்கள். அதிகாலையில் நேரத்தோடு எழுந்து, பஸ் பிடித்து முந்தி வந்தவர்களின் அடிப்படையில் அமர்த்தப்பட்டவர்கள். முதலில் மண்டபத்துக்குள் நுழைந்தவுடன் இடம்பிடிக்க வேண்டும். அதிலிருந்து எழுந்து இருக்கைகள் மாறிமாறி முதல் பதிவிடத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். இந்த மண்டபத்துக்குள் இருப்பவர்கள் அநேகம் பெண்கள். ஆங்காங்கே ஆண்கள். இதில் சிறப்பென்னவெனில் அனைவருமே முஸ்லிம்கள். பல வர்ணங்களில் முக்காடிட்ட வயது வேறுபாடுடைய பெண்கள் மற்றும் கலாசார தொப்பியணிந்த ஆண்கள். கையில் வகைவகையான பொலித்தீன் பைகளில் ஆவணங்களை வைத்திருக்கின்றனர். பிறப்பு – இறப்புச் சான்றிதழ்கள், ஆளடையாள அட்டை, பல்வேறு காலகட்டங்களிலும் அரச திணைக்களங்கள், அதிகாரிகள் ஒப்பமிட்டு கொடுத்த கடதாசிகள், ஐ.சி.ஆர்.சி. குறியீடு பொறித்த கடிதங்கள் என அந்தப் பொலித்தீன் பை வீங்கிக் கிடக்கிறது. சுருங்கியும், கசங்கியும், ஓய்வு நாளைக் கோரும் நிலையை அந்தப் பொலித்தீன் பைகள் அடைந்திருக்கின்றன. அதிக காலப்பாவிப்பை அவை கடந்துவிட்டன என்பதை பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

ஆண்களும், பெண்களுமாக “நேர்த்தியான ஆடை” அணிந்த ஒரு தொகுதி அரச உத்தியோகத்தர்களால் எடுக்கப்படும் முதல் கட்டப்பதிவில் முழுவிபரங்களும் சரிபார்க்கப்படுகின்றன. எப்போதாவது கிடைத்த கதையை மென்றுகொண்டோ, சிறுசிறு சுவைப்பான்களை சுவைத்துக்கொண்டோ அவர்கள் பதிவெடுக்கின்றனர். மிகுந்த அவதானத்துடனும், உற்றுநோக்கலுடனும் அவர்கள் கோரும் பத்திரங்களை வரிசையின் முடிவில் அவர்களிடத்தை அடைந்தவர்கள் எடுத்துக் கையளிக்கின்றனர். எல்லாம் பதிந்துகொண்டு, ஒன்றிலிருந்து அறுபதுக்குள் எழுதப்பட்டு, கத்திரிக்கப்பட்ட துண்டொன்றை வழங்குகின்றனர். இலக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொருவராக வைத்தியசாலையின் உள்ளே மருத்துவரை சந்திக்க செல்லும் தீவிரநோயாளரைப் போல அவர்கள் நகர்கின்றனர்.

உள்ளே கண்ணாடி சுவர்களால் பிரிக்கப்பட்ட இரண்டு அறைகள். ஒன்றுக்குள் வைத்தியர்கள் போன்றவர்கள், மற்றையதற்குள் சர்வதேச பார்வையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் பார்வையாளர்கள்.
வைத்தியர் மாதிரியானவர்களின் அறையில் பேசுபவர்களின் சத்தம் பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கும் கேட்குமளவுக்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. கண்ணாடிக் கதவோடு காவலாளி மாதிரியான ஒரு உதவியாளர். இலக்க அடிப்படையில் ஒவ்வொருவராக அவர்கள் அழைக்கப்படுகின்றனர். ஆவணங்கள் சகிதம் உள்ளே நுழைய முடியும்.

அவர்களுக்கான ஆசனத்தில் அமர்ந்ததும் மின்னல் வெட்டுகின்ற மாதிரியான உணர்வு. அதாவது, செய்தியாளர்கள் வைத்திருக்கின்ற கெமராக்கள் பளிச் பளிச் சென்கின்றன. அவ்வளவு புகைப்படங்களையும் ஒரே அழுத்தில் அழித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் இவ்வளவு க்ளிக்குள் செய்யப்படலாம்! அவருக்கு முன் நீளமான இலத்திரனியல் மைக் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், அதில் பேச அவர்கள் அச்சப்படுவர். கைகளுக்குள் இருக்கின்ற பத்திரங்களை எடுப்பதிலும், அதை முன்னால் இருப்பவர்களிடம் சமர்ப்பிப்பதிலும் காட்டும் பதற்றம் மிகையானதாகவிருக்கும்.

இந்த நேரப்பகுதியில் விசாரணை அதிகாரிகள் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டோ, அவர்களை ஆழமாக விறைத்துப் பார்த்துக் கொண்டோ, மூக்கை நோண்டிக் கொண்டோ, சுழறாத கற்றாடியைப் பற்றி பேசிக் கொண்டோ, லாவகமாக பஞ்சு ஆசனத்தில் சரிந்து அமர்ந்துகொண்டோ அவர்களின் கதையைக் கேட்பர். மொழிபெயர்ப்பாளர்கள் அவர்கள் கடமையைச் செய்வர்.

முதல் கேள்வியை ஆங்கிலத்தில் நடுவில் கோர்ட் அணிந்து, ஆசனத்தில் வசதியாக சரிந்திருக்கும் அதிகாரி கேட்பார். அதாவது,

உங்கள் பெயரென்ன?

காணாமல்போனவரின் பெயரென்ன?

ஆங்கிலக் கேள்விகள் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. அதற்குப் பதிலளிப்பதில் பெரும்பாலானவர்களிடம் குழப்பம். அடுத்த கேள்வி.

சம்பவம் சொல்லுங்கள்?

யாவரத்துக்குப் போகேக்குள்ள புலிப் பயங்கரவாதியளால புடிச்சிட்டு போய் சுட்டுபோட்டாங்க.

சில பெண்களும் ஆண்களும் புலிகள், எல்.ரீ.ரீ.ஈ. பயங்கவாதிகள் போன்ற பெயர்களை சம்பவத்தோடு தொடர்புடையவர்களாக அடையாளம் சொல்லினர். அதனைச் சொல்லும்போது, கைளை பிசைகின்றனர். கதிரையில் அசைகின்றனர். எங்கேயோ பார்க்கின்றனர். சிலர், பதிலில் உறுதியாய் இருக்கின்றனர். பதிலை உறுதிப்படுத்திக்கொள்ள மேலும் சில கேள்விகள் உடனடியாக வந்து பதற்றத்தைத் தணிக்கிறது.

புலிகள் கடத்தியது எப்படி தெரியும்?

அந்த டைம்ல அவங்கதான் கடத்தினாங்க – அடுத்த கேள்வி பிறக்கிறது
அவங்க என்டா?

புலிப் பயங்கரவாதியள்.

எப்பிடி தெரியும்?

கண்டவங்க சொன்னாங்க. தப்பி ஓடி வந்தவங்க சொன்னாங்க. கடத்தினவங்கள கொன்னு போட்டாங்களாம்மென்டு. ஊத்த பாதர் சொன்னவர்.

யார் ஊத்தபாதர்?

அவர் ஒரு பாதர் – யாருக்குமே ஊத்த பாதர் யாரென்று தெரியவில்லை. அவருக்கான அடையாளத்தையோ மேலதிக விளக்கங்களையோ குறிப்பிடமுடியவில்லை.

நீங்கள் விவாகமானவரா?

விவாகம். அந்த நியமத் தமிழ் சொல்லின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள மேலதிக விளக்கங்கள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது. அநேகர் கணவனை இழந்தவர்கள். பேரப்பிள்ளைகளை இழந்தவர்கள் என்பதாகப் பதிலளளிக்கின்றனர்.

பொருளாதாரம் எப்படி?

புள்ளகளோட இருக்கிறன். சமுர்த்தி, நிவாரண முத்திர தாறாங்கள்.

சரி போதும். நீங்கள் அங்க போங்க. மற்றைய சட்ட பதிவாளர் குழாமிடம் அவர்கள் அனுப்ப வழிகாட்டப்படுவர்.

ஐயா அவர் இறந்திட்டார் என்டு உறுதிப்படுத்துங்க ஐயா. கடமைய செய்யனும்,
கடைசிக் கோரிக்கையை முன்வைத்துக் கொண்டே இடம்மாறுவர்.

இப்படியாக நாளொன்றில் 60 பேர் விசாரணை செய்யப்படுவர். நாளை வரும்படி பணித்து திருப்பியும் அனுப்பப்படுவர். முடிவில் அதிகளவில் ஆட்கடத்தலில் ஈடுபட்டது புலிப் பயங்கரவாதிகள் என்று செய்திகளுக்கு அறிவிக்கப்படும்.

இதற்குப் பெயர் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழு. ஆகவே, ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்!

நன்றி: சூரியகாந்தி

ஜெரா

Jera