Photo, NIKKEI

கடந்த நவம்பர் 6ஆம் திகதி இடம்பெற்ற ஊடக மாநாட்டின் போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக முன்வைத்த நிலைப்பாடு, இச்சட்டம் தொடர்பாக அநுர குமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயத்தை மீள ஊர்ஜிதப்படுத்துகின்றது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் முதலில் வெளியிடப்பட்ட பொழுது, ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான அக்கட்சியின் நிலைப்பாட்டை வாசித்து நான் உண்மையில் ஏமாற்றமடைந்தேன். அதனையடுத்து இவ்வாறு எழுதியிருந்தேன்: ‘எமது சட்டப் புத்தகங்களில் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை வைத்திருப்பது பயனுள்ளது என அநுர குமார திசாநாயக்கவும், தேசிய மக்கள் சக்தியும் கருதுவது பல விடயங்களை எமக்கு எடுத்துக் கூறுகின்றது. மேலும், அவர்களுடைய 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கருத்துச் சுதந்திரத்தை மீள ஸ்தாபித்து/ பலப்படுத்திக் கொள்வது தொடர்பான ஏனைய வாக்குறுதிகளுக்கு முரணானதாகவும் அது இருந்து வருகின்றது. இங்குள்ள விடயம் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம், அந்தரங்கம், அமைப்புகளில் இணைதல் மற்றும் அமைதியாக ஒன்று கூடுதல், கோட்பாடுகள் மற்றும் உரிமைகள் என்பவற்றுக்கு முற்றிலும் முரணானதாகும். ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை நீக்குவதற்கென இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு முதன்மையான அம்சம் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றே நான் நம்பியிருந்தேன். ஆனால், இப்பொழுது அது நிகழப்போவதில்லை – அக்கட்சியும், அதன் தலைவர்களும் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் பிரதிநிதித்துவம் செய்யும் விடயம் தொடர்பாக இப்பொழுது வேண்டுமென்றே அலட்சியம் காட்டுவது கவலைக்குரியது.  மேலோட்டமான திருத்தங்களுடன் தமக்குப் பொருத்தமானது எனக் கருதும் விதத்தில் அவர்கள் அதை பயன்படுத்திக் கொள்வதற்கு இரகசியமாக விரும்புவது அதிலும் பார்க்க மோசமான ஒரு நிலையாகும்.”

எவ்வாறிருப்பினும், ஹேரத்தின் கூற்று தொடர்பான செய்தியறிக்கை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயத்துக்கு மேலும் ஒரு நுட்பத்தை சேர்க்கின்றது. அவர் குறிப்பிட்ட விடயம், புதிய திருத்தங்கள் தொடர்பாக நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் ஒரு விசாரணை செயன்முறையை முன்னெடுப்பதில் அக்கறை கொண்டுள்ளது என்பதையும், அத்துடன் முற்றிலும் ஒரு புதிய பிரேரணையை உருவாக்குவதற்கு அது விரும்புகின்றது என்பதனையும் உத்தேசிக்கின்றது. மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்ட இது தொடர்பான எனது நிலைப்பாடு, தற்போதைய நிலையில் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் எந்த விதத்திலும் செயல்படக்கூடியதாகவோ, ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவோ இருந்து வரவில்லை என்பதும், அது ஜனநாயக விரோதமானது என்பதும், அது நீக்கப்படவேண்டும் என்பதும் ஆகும்.

மறுபுறம், புதிய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்த நிலைப்பாடு அவர்கள் சாதித்துக் கொள்ள விரும்பும் விடயத்துக்கு நேர்மாறானதாக அல்லது விரோதமானதாக இருந்துவரும் என்ற விடயத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும். நல்லெண்ணத்தில் அவர்கள் அதனைச் செய்ய முடியும். மேலும், பெரும்பாலான  கலாநிதிப் பட்ட ஆய்வுகள் மற்றும் 2014 தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கும் ஒன்லைன் தீங்குகள் தொடர்பான ஆராய்ச்சி என்பவற்றின் பிரகாரம், ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் எதிர்பவர்களில் ஒரு சிலர், 2012, 2014, 2018 இன் ஆரம்ப மாதங்கள் மற்றும் முக்கியமாக 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத்தின் பின்னர் சிங்கள – பௌத்த பேரினவாதிகள் மற்றும் பொதுபல சேனா ஆகிய  தரப்புக்களுக்காக எவ்வாறு சமூக ஊடகங்கள் ஓர் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டதோ அதே விதத்தில் ஒன்லைனில் வதந்திகளைப் பயன்படுத்தி ஓப்லைனில் கொந்தளிப்பு நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

அர்த்தபூர்வமான திருத்தங்கள் தொடர்பான புதிய அரசாங்கத்தின் வெளிப்படையான அக்கறை மற்றும் இச்சட்டம் தற்போது இருக்கும் விதத்தில் அது தொடர்பான கோட்பாட்டு ரீதியான விமர்சனங்கள் என்பவற்றுக்கு மத்தியில் ஓர் இணக்க நிலையை ஏற்படுத்திக் கொள்வது எப்படி?

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் வரைவு, நாடாளுமன்றத்தில் அது கோமாளித்தனமான விதத்தில் வேகமாக நிறைவேற்றப்பட்ட விதம் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் என்பனவும் கூட, ஒன்லைன் தீங்குகளை கையாள்வதற்கும், வரையறை செய்வதற்கும் மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அணுகுமுறையை ஒருபோதும் கவனத்தில் எடுத்திருக்கவில்லை. ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் வரலாறு மற்றும் அதன் வில்லங்கம் என்பவற்றின் பின்னணியில், அச்சட்டத்தின் மோசமான விடயங்களை கவனத்தில் எடுப்பதற்கென அரசாங்கத்துக்கு ஒரு மனித உரிமைகள் சட்டகத்தை உருவாக்க எவ்வாறு உதவ முடியும் என்பதனை கவனத்தில் எடுப்பதற்கு பொருத்தமான தருணம் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

அதில் என்ன இருக்கிறது?

மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அணுகுமுறை எதனை உள்வாங்க வேண்டும் மற்றும் எதனை ஊக்குவிக்க வேண்டும் என்பதனை எடுத்து விளக்கும் பொருட்டு, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான ஐ.நாவின் முன்னைய விசேட அறிக்கையாளர் டேவிட் கேவின் (David Kaye) முக்கியமான எழுத்துக்கள் மற்றும் கருத்துக்கள் என்பவற்றை நான் அதிகளவில் பயன்படுத்துகிறேன். அது தவிர, உலக பொருளாதார மன்றம் (World Economic Forum), பிரித்தானிய நாடாளுமன்றம் மற்றும் சத்தம் ஹவுஸ் (Chatham House) என்பவற்றின் வெளியீடுகள் என்பவற்றையும் அதிகளவுக்கு கவனத்தில் எடுத்திருக்கிறேன்.

உள்ளடக்கத்தை திருத்துவதற்கான ஒரு புதிய அரசியல் யாப்பு  (A New Constitution for Content Moderation) மற்றும் இணையத்தை ஒழுங்குமுறைபடுத்துவது தொடர்பான ஆபத்துக்கள் (The Risks of Internet Regulation) ஆகிய கே மற்றும் தேசன் பீல்மியர் (Jason Pielemeie) ஆகியோரால் எழுதப்பட்ட ‘டிஜிட்டல் தீங்குகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சரியான வழி” (The Right Way to Regulate Digital Harms) என்ற கட்டுரையும் மனித உரிமைகளுக்கு முதன்மை அளிக்கும் வகையில் ஒன்லைன் ஒழுங்குமுறைபடுத்தல் அணுகுமுறைக்கான அடிப்படையான சட்டகங்களாக இருந்து வருகின்றன. கே 2014 தொடக்கம் 2020 வரையில் விசேட அறிக்கையாளராக இருந்து வந்தார். 2016 மே மாதத்தில் ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அவருடைய அறிக்கை ‘ஜிட்டல் யுகத்தில் ஒழுங்குமுறைப்படுத்தல்’ என்ற முன்னரேயே எழுதப்பட்ட ஒரு பாகத்தையும் உள்ளடக்கியிருந்தது. அதனை நான் இக்கட்டுரையிலும் பயன்படுத்தியிருக்கிறேன்.

ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் சபையின் தொடர்பாடல்கள் தொடர்பான தெரிவுக் கமிட்டி 2019 மார்ச் மாதத்தில் “ஜிட்டல் உலகொன்றில் ஒழுங்குமுறைப்படுத்தல்” என்ற பிரசுரத்தை வெளியிட்டது. அது ஒன்லைன் உள்ளடக்கங்களை ஒழுங்குமுறைபடுத்துவதை வலியுறுத்தும் 10 அத்திவார கோட்பாடுகளை முன்மொழிந்தது. அவை சம அந்தஸ்து, பொறுப்புக் கூறல், வெளிப்படைத் தன்மை, எவரும் அணுகக்கூடிய நிலை, தார்மீக ரீதியான வடிவமைப்பு, அந்தரங்கம், பிள்ளைப் பருவத்தை அங்கீகரித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், தரம், கல்வி மற்றும் விழிப்புணர்வைத் தூண்டுதல், ஜனநாயக ரீதியான பொறுப்புக்கூறல், விகிதாசார நிலை மற்றும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அணுகுமுறை என்பவற்றையும் உள்ளடக்கியிருந்தன. இந்த விடயங்கள் பெரும்பாலானவை, மனித உரிமைகளின் அடிப்படை அம்சங்கள் தொடர்பான மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறப்பட்ட டேவிட் கேயின் அம்சங்களுக்கு இணையானவையாக இருந்து வந்தன.

உலக பொருளாதார மன்றம் 2023 ஆகஸ்ட் மாதம், “Toolkit for Digital Safety Design Interventions and Innovations: Typology of Online Harms” என்ற பிரசுரத்தை வெளியிட்டது. இந்த அறிக்கை “………… உள்ளடக்கத்தின் உற்பத்தி, விநியோகம் மற்றும் நுகர்வு என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் ஒன்லைனில் தோன்றும் ஆபத்துக்களின் பன்முக வீச்சுக்கள் தொடர்பான பொதுவான ஒரு புரிந்துணர்வை பெற்றுக் கொள்வதற்கு பொதுவான ஒரு சொற்றொகுதியை கட்டியெழுப்புவதற்கான அத்திவாரத்தை வழங்கியது.”

அது தவிர, அவற்றை நான் இந்தக் கட்டுரையில் பயன்படுத்தாவிட்டாலும் கூட, ஆசிய இணைய கூட்டமைப்பின் அறிக்கைகள் மற்றும் உலகளாவிய வலையமைப்பு முன்முயற்சி (Global Network Initiative) அமைப்பின் இந்த பிரேரணை தொடர்பான மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட விமர்சனமும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய ஆவணங்களாகும்.

2024 ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் (அசல் சட்டத்தில் நிலவி வரும் ஒரு சில பிரச்சினைகளை கவனத்தில் எடுக்கும் அதே வேளையில்) நிலைமையை மேலும் மோசமாக்கியது எப்படி என்பதனையும் உள்ளடக்கிய தற்போதைய ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான என்னுடைய விரிவான ஓர் ஆய்வு இப்பொழுது பொதுத் தளத்தில் உள்ளது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எவையேனும் திருத்தங்கள் அல்லது ஒரு புதிய பிரேரணை என்பவற்றுக்கான அடிப்படையாக மனித உரிமைகள் இருக்க வேண்டும் என்ற விதத்தில் இந்தக் கட்டுரையில் வலியுறுத்தப்படுவது, இச்சட்டம் தொடர்பான எனது முன்னைய விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு விடயத்தையும் அகற்றவில்லை. ஒரு இலட்சிய உலகில் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென்ற விடயத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். ஆனால், இப்போதைய நிலைவரத்தின்படி அதனை திருத்துவது தொடர்பாக அரசாங்கம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் எவை?

கே மற்றும் சத்தம் ஹவுஸ் ஆகிய தரப்புகளினால் உத்தேசிக்கப்பட்டிருக்கும் மனித உரிமைகள் கோட்பாடுகளை உள்வாங்குதல்

அடிப்படை உரிமைகள் சட்டகம்: இது தொடர்பான எந்தத் திருத்தங்களும் முழுமையாக உள்ளடக்கம் தொடர்பான கட்டுப்பாடுகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அதன் அத்திவார சட்டகமாக சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை வெளிப்படையாக ஒருங்கிணைத்தல் வேண்டும். 2024 ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் அசல் சட்டத்தில் இருக்கும் (மதவெறி போன்ற) ஒரு சில பிரச்சினைக்குரிய பிரிவுகளை நீக்குவதன் மூலம் இந்த செயன்முறையை ஆரம்பித்து வைத்தது. ஆனால், அமுலாக்கத்துக்கான வழிகாட்டுதல் கோட்பாடுகளாக கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், அந்தரங்கம் மற்றும் அமைப்புகளில் இணையும் உரிமைகள் என்பவற்றை நேர்மறையாக உறுதிப்படுத்துவதன் மூலம் இது மேலும் முன்னெடுத்துச் செல்லப்படுதல் வேண்டும்.

தேவை மற்றும் விகிதாசார நிலை தொடர்பான பரீட்சிப்புக்கள்: திருத்தங்களும், புதிய பிரேரணையும் டேவிட் கேயினால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கும் முத்தரப்பு பரீட்சிப்பு (“tri-partite test”) முறையொன்றை பின்பற்றுதல் வேண்டும்: ஒன்லைனில் கருத்து தெரிவிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்படும் எவையேனும் வரையறைகள் சட்டப்பூர்வ நிலை, சட்ட ரீதியான உரித்து மற்றும் தேவை அல்லது விகிதாசார நிலை என்பவற்றுடன் கூடிய நிர்ணய அளவுகோலை நிறைவு செய்து வைத்தல் வேண்டும். திருத்தங்கள் ஒன்லைன் பாதுகாப்பு ஆணைக்குழு (Online Safety Commission) தொடர்பாக திட்டவட்டமான தேவைகளை உள்ளடக்குதல் அவசியமாகும். உள்ளடக்கத்தை நீக்குவது தொடர்பான எவையேனும் கட்டளைகள் அல்லது ஏனைய வரையறைகள் சட்டத்தினால் தெளிவாக விதித்துரைக்கப்பட்டிருப்பதனையும், அவை சட்டபூர்வமான நோக்கங்களை முன்னெடுப்பதனையும், அந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவையாக இருந்து வருவதுடன், உரிய விகிதாசாரத்தில் இருந்து வருவதனையும் உறுதிப்படுத்துவதை எடுத்துக் காட்டுவதற்கு இது மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

நடைமுறை சார்ந்த பாதுகாப்புகள்: சத்தம் ஹவுஸ் பரிந்துரைகளை பின்பற்றி ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் பின்வருவனவற்றின் மூலம் நடைமுறை சார்ந்த பாதுகாப்புகளை பலப்படுத்துதல் வேண்டும்:

  • உள்ளடக்கங்கள் நீக்கப்படுவதற்கு முன்னர் நீதித் துறையின் மேற்பார்வையை அவசியப்படுத்துதல் (அவசரகால நிலைமைகளில் தவிர மற்றும் அத்தகைய நிலைமைகளிலும் கூட, சட்டவாக்கத்துக்கு பின்னரான உரிய காலத்திலான மீளாய்வுக்கு அமைவாக)
  • தெளிவான மேன்முறையீட்டு பொறிமுறைகளை ஸ்தாபித்தல்
  • முடிவுகளை மேற்கொள்வது தொடர்பாக வெளிப்படைத் தன்மை இருந்து வர வேண்டும் என்பதனை கட்டாயப்படுத்துதல்.
  • சுயாதீனமான மேற்பார்வை பொறிமுறைகளை உருவாக்குதல். ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஒரு சில செயல்கள் தொடர்பாக அரசியல் யாப்பு பேரவையின் ஒப்புதலை அவசியப்படுத்துவதன் மூலம் இந்த நிலைமையை ஓரளவுக்கு விருத்தி செய்திருந்தது. ஆனால், அது அதற்கு அப்பால் முன்னெடுக்கப்படுதல் வேண்டும். முன்னைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் யாப்பு பேரவை நிறைவேற்று ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு கீழ்ப்படிதலுள்ள ஒரு சபையாகக் கருதிய நிலையில் இது குறிப்பாக முக்கியத்துவம் பெறுகின்றது – அந்த நிலைப்பாடு, ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் எதேச்சாதிகாரத்தின் ஒரு வெளிப்பாடாக, நீட்டிப்பாக இருந்து வரக்கூடிய ஆபத்தை கொண்டுள்ளது.

வரைவிலக்கணங்களின் புதிய  துல்லியத்தன்மை: ஒரு புதிய மசோதா அல்லது முன்மொழியப்படும் எவையேனும் ஒரு திருத்தம், தணிக்கைக்கு இயலுமையை வழங்கக்கூடிய விதத்திலான தெளிவற்ற சொற்பிரயோகங்களை தவிர்த்தல் வேண்டும். அழுத்தம் செலுத்தப்பட்ட, பக்கச் சார்பான, குறுகிய மற்றும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற விதத்திலான நீதித்துறை பொருள் விளக்கங்களும் இதில் அடங்கும். ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் (‘பொய்யான கூற்றுக்கள்” போன்ற) தெளிவற்ற, பிரச்சினைக்குரிய ஒரு சில வரைவிலக்கணங்களை விருத்தி செய்திருக்கும் அதே வேளையில், ஏனைய சொற்கள் இன்னமும் போதிய அளவில் வரைவிலக்கணம் வழங்கப்படாமலும், பொதுப்படையான விதத்திலும் காணப்படுகின்றன. அந்தந்த சந்தர்ப்பத்துக்குரிய, பாரபட்ச  அல்லது பக்கச்சார்பான அளவுகோல்களிலும் பார்க்க மனித உரிமைகள் தர நியமங்களைப் பின்பற்றி, தடைசெய்யப்பட்ட உள்ளடக்கம் எதனைக் குறிக்கின்றது என்பதனை திருத்தங்கள் துல்லியமாக மற்றும் வரையறைகளுடன் கூடிய விதத்தில் வரைவிலக்கணம் செய்தல் வேண்டும்.

பலதரப்பு ஆளுகை: கே மற்றும் சத்தம் ஹவுஸ் ஆகிய தரப்புக்கள் வலியுறுத்திக் கூறுவதைப் போல, ஒன்லைன் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளின் வடிவமைப்பு, மீளாய்வு மற்றும் பிரயோகங்கள் என்பன பல்வேறு விதமான, பன்முக பங்கேற்பாளர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். திருத்தங்கள், ஏனையவற்றுடன் சிவில் சமூகம், விடயப் பரப்பு, துறைசார் நிபுணர்கள், ஆய்வாளர்கள், தளம், இடைநடுவர் பிரதிநிதிகள், பயனாளர் பரப்புரை குழுக்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசேட நடைமுறைகள் ஆகிய தரப்புக்களை உள்ளடக்கிய பொறிமுறைகளுடனான கலந்தாலோசனையை அடிப்படையாகக் கொண்டு, அதன் மீது கட்டியெழுப்பப்படுதல் வேண்டும்.

தள பொறுப்புக் கூறல் சட்டகம்: தன்னிச்சையான விதத்தில் உள்ளடக்கத்தை நீக்கும் விடயத்தில் மட்டும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இத்திருத்தங்கள் பின்வருனவற்றையும் உள்ளடக்கிய அந்தந்த தளங்களின் பொறுப்புக் கூறலுக்கான ஒரு சட்டகத்தை உருவாக்குதல் வேண்டும்:

  • ஒழுங்கான அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மனித உரிமைகள் தாக்கம் தொடர்பான மதிப்பீடுகள்
  • வெளிப்படைத் தன்மையுடன் கூடிய அறிக்கையிடுவதன் அவசியம்
  • உரிய விதத்தில் முயற்சியுடன் செயல்படுவது தொடர்பான கடப்பாடுகள்
  • உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்குமுறைப்படுத்தல் தொடர்பான முறையான அணுகுமுறைகள் மீதான கேயின் அழுத்தத்துடன் இணைந்த விதத்திலான பாவனையாளர் நிவாரண செயன்முறைகள்

சிறப்புரிமை சார்ந்த மற்றும் தனிப்பட்ட தொடர்பாடல்களின் பாதுகாப்பு: அந்தரங்கத்தன்மை தொடர்பான சத்தம்ஹவுஸின் கரிசனைகளையடுத்து, திருத்தங்கள் தெளிவாகவே கடவுச் சொற்களுடன் கூடிய தொடர்பாடல்கள் மற்றும் அந்தரங்க செய்திகள் என்பவற்றை பாதுகாத்தல் வேண்டும். ஒரு சில கண்காணிப்பு அதிகாரங்களை வரையறை செய்வதன் மூலம் திருத்தங்கள் இதனை கவனத்தில் எடுக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், தற்போதைய நிலையில் சட்டம் தொடர்பாக முன்னெப்பொழுதும் இருந்திராத அளவிலான முக்கியமான பிரச்சினைகள் தோன்றியிருக்கும் பின்னணியில் அந்தரங்க பாதுகாப்புக்கள் மேலும் பலப்படுத்தப்படுதல் வேண்டும்.

நேர்மறை கடப்பாடுகள்: திருத்தங்கள் வரையறைகளை மட்டும் உள்ளடக்கியதாக இருக்கக்கூடாது. ஒன்லைனில் சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டினை மேம்படுத்துவதற்கான நேர்மறையான கடப்பாடுகளை அவை உள்ளடக்குதல் வேண்டும். டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சித்திட்டங்கள், பன்முக உள்ளூர் மொழிகளிலான உள்ளடக்கத்திற்கான ஆதரவு, இதழியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் ஆகியோரின் தொடர்பாடல்களின் பாதுகாப்பு என்பவற்றையும், தளங்களில் பன்முகத்தன்மை மற்றும் போட்டி என்பவற்றின் மேம்பாடு ஆகியவற்றையும் இது உள்ளடக்குதல் வேண்டும்.

உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் சட்டத்தை அமுல் செய்தல்:  சட்டத்தை அமுல் செய்யும் பொறிமுறைகள் பின்வருவனவற்றின் மூலம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதனை இத்திருத்தங்கள் உறுதிப்படுத்துதல் வேண்டும்:

  • திட்டவட்டமாக, சட்டவிரோதமான உள்ளடக்கம் தொடர்பான இடைநடுவர் (intermediary) பொறுப்புக் கூறல் நிலையை வரையறுத்தல்
  • மிதமிஞ்சிய அளவில் தடை செய்வதற்கு (blocking) எதிரான பாதுகாப்பு
  • குறிப்பிட்ட பின்புலம் மற்றும் பொது நலன் போன்ற விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டிய தேவை.
  • விகிதாசார அளவிலான அபராதங்களை ஸ்தாபித்தல்

எதிர்காலத்துக்கு பொருந்தக்கூடிய விதத்தில் தொழில்நுட்பங்களை உருவாக்குதல்: தொழில்நுட்பம் தீவிரமாக மாற்றமடைந்து வருவதுடன், எவராலும் துல்லியமாக முன்னுணர்ந்து கூற முடியாத வழிகளில் அந்த மாற்றம் இடம்பெற்று வருகிறது. (generative AI இதற்கான சிறந்த உதாரணமாகும்). கே மற்றும் சத்தம் ஹவுஸ் ஆகிய இருவரும் துரித தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து வலியுறுத்தியிருப்பதையடுத்து, எந்தத் திருத்தங்களும் பின்வரும் விடயங்களை கவனத்தில் எடுப்பது அவசியமாகும்:

  • தொழில்நுட்பம் தொடர்பான நடுநிலை மொழியை பயன்படுத்துதல்
  • புதிய சவால்களுடன் அனுசரித்து செல்லக்கூடிய நெகிழ்ச்சித்தன்மையுடன் கூடிய சட்டகங்களை உருவாக்குதல்.
  • திட்டவட்டமான தொழில்நுட்பங்களிலும் பார்க்க கோட்பாடுகள் மீது கவனம் செலுத்துதல்
  • ஒழுங்கான அடிப்படையில் மீளாய்வுகளை மேற்கொள்வதற்காக பொறிமுறைகளை உள்ளடக்குதல்
  • நாட்டில் ஏற்கனவே எழுச்சியடைந்து வரும் AI போன்ற தொழில்நுட்பங்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் சட்டகங்கள் குறித்து சிந்தித்தல்

 

ஐக்கிய இராச்சிய பிரபுக்கள் சபை அறிக்கையில் இருக்கும் 10 அடிப்படை கோட்பாடுகளை பிரயோகித்தல்

  1. சம அந்தஸ்து கோட்பாடு: ‘சம அந்தஸ்து கோட்பாட்டினை” ஒரே சீரான விதத்தில் தொடர்ந்து பிரயோகித்து வருவதன் மூலம் தற்போதைய சட்டத்தை மேலும் விருத்தி செய்ய முடியும் – ஒன்லைனிலும், ஒன்லைனுக்கு வெளியிலும் ஒரே விதமான விளைவுகள் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும். ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் பரவலான மற்றும் தெளிவற்ற ஒன்லைன் தீங்குகளை கவனத்தில் எடுத்துவரும் அதே வேளையில், ஒன்லைனுக்கு வெளியிலான அதே மாதிரியான நிலைமைகளுடன் இணைந்து செல்வது அதனை மேலும் வலுப்படுத்த முடியும். ஆகஸ்ட் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட​திருத்தங்கள் மதவெறி மற்றும் கலகத்தை விளைவித்தல் என்பன தொடர்பான பிரிவுகளை நீக்கியது. ஒன்லைனுக்கு வெளியிலான உரிமைகளுடன் சிறப்பான சம அந்தஸ்தை எடுத்து வருவதற்கான ஒரு முயற்சியாக அது நோக்கப்படுகிறது. எவ்வாறிருப்பினும், இச்சட்டத்தை வலுவுக்கிடுவது ஒரே இயல்பிலான பொறிமுறைகளையன்றி, ஒரே இயல்பிலான விளைவுகளை எடுத்து வர வேண்டும் என்ற விடயத்தை சட்டத்தில் மிகத் தெளிவாக குறிப்பிட முடியும். அதாவது, ஒன்லைன் மற்றும் ஒன்லைனுக்கு வெளியிலான சூழல்கள் வேறுபட்ட அமுலாக்கல், அணுகுமுறைகளை அவசியப்படுத்துகின்றன என்பதனை அங்கீகரிக்கும் விதத்தில் இதனை மேற்கொள்ள முடியும்.
  2. பொறுப்புக் கூறல்: ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம், இதன் பின்னர் ஸ்தாபிக்கப்படவிருக்கும், பெருமளவுக்கு பிரச்சனைக்குரியதாக இருந்து வரும் ஒன்லைன் பாதுகாப்பு ஆணைக்குழுவுக்கூடாக பொறுப்புக் கூறலை ஸ்தாபிக்கிறது. ஆனால், பெருமளவுக்கு அணுகக்கூடிய, நிவாரண நோக்கத்துக்கு பொருந்தக்கூடிய நிவாரணப் பொறிமுறைகளை; சேர்ப்பதன் மூலம் இதை மீள் வரைவிலக்கணம் செய்ய முடியும். இந்தச் சட்டம் நீதிமன்ற நடைமுறைகளுக்கான ஏற்பாடுகளை கொண்டிருக்கும் அதேவேளையில், விரைவான, குறைந்த செலவிலான பிணக்குத் தீர்வு முறைமைகளுக்கான ஏற்பாடுகளை அது முழுமையாக கொண்டிருக்கவில்லை – அதாவது, நீதிமன்றங்கள் மீது சுமைகளை எடுத்து வராத பொறிமுறைகளை கொண்டிருக்கவில்லை. திருத்தங்கள் ஒன்லைன் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் சந்திப்புக்களை மறுக்கும் பொழுது, எழுத்து மூலம் அதற்கான காரணங்களை தெரிவிக்கவேண்டிய தேவையை எடுத்து வந்திருப்பதன் மூலம் இத்திருத்தங்கள் பொறுப்புக் கூறலை விருத்தி செய்கின்றன. ஆனால், சட்டத்தை வலுவாக்கிடும் செயல்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் என்பன தொடர்பான ஒழுங்கான அடிப்படையிலான பகிரங்க அறிக்கையிடலை கட்டாயப்படுத்துவதன் மூலம் அது மேலும் விருத்தி செய்யப்பட முடியும். வெளிப்படைத் தன்மை சிறந்த பெறுபேறுகளை உருவாக்குவதுடன், அது மறுபுறம் சட்டத்தின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை எடுத்து வருகின்றது.
  3. வெளிப்படைத்தன்மை: முன்னைய விடயத்துடன் இணைந்த விதத்தில் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் வலுவான வெளிப்படைத் தன்மை தொடர்பான தேவைகளுக்கூடாக – குறிப்பாக முடிவுகளை எடுக்கும் விடயம் தொடர்பான வெளிப்படைத் தன்மைக்கூடாக – பயனடைய முடியும். தகவல்களை ஓரளவுக்கு வெளிப்படுத்த வேண்டிய தேவை இருந்து வரும் அதே வேளையில், அல்கொரிதம் வெளிப்படைத் தன்மை அல்லது உள்ளடக்கத்தை மாற்றியமைத்தல் தொடர்பான தீர்மானங்களுக்கான தெளிவான விளக்கங்கள் என்பன தொடர்பான திட்டவட்டமான ஏற்பாடுகளை அது கொண்டிருக்கவில்லை. (நியூசிலாந்து முற்றிலுமாக நீக்கியிருக்கும்) நடத்தைக் கோவை ஒன்று தொடர்பாக திருத்தங்கள் வலியுறுத்துகின்றன. வெளிப்படைத் தன்மை தேவைகளை எடுத்து வருவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது. ஆனால், முதன்மை சட்டவாக்கத்தில் இந்த விடயங்களை பெருமளவுக்கு வெளிப்படையான விதத்தில் கட்டாயப்படுத்தியிருக்க முடியும்.
  4. எவரும் அணுகக்கூடிய நிலை: ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் எவரும் அணுகக் கூடிய நிலையை, பாதுகாப்புடன் இணைந்த விதத்தில் சிறப்பாக சமநிலையில் வைத்திருக்க முடியும். தீங்குகளுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதற்கான நோக்கத்தை அது கொண்டிருக்கும் அதே வேளையில், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அது மேலும் வெளிப்படையான விதத்தில் பாதுகாக்க முடியும். கட்டுப்பாட்டு இயல்பிலான ஒரு சில ஏற்பாடுகளை நீக்குவதன் மூலம் திருத்தங்கள் இந்நிலைமையை விருத்தி செய்கின்றன. ஆனால், அர்த்தபூர்வமான பாதுகாப்பு வழிமுறைகளுடன் இணைந்த விதத்தில் முதல் கோட்பாடுகளைப் பாதுகாப்பதற்கான நேர்மறையான கடப்பாடுகளையும், இணையத்தின் திறந்த தன்மையையும் இச்சட்டம் உள்ளடக்க முடியும்.
  5. தார்மீக ரீதியான வடிவமைப்பு: இந்தக் கோட்பாடு ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் முழுமையாக குறைந்த அளவில் கவனத்தில் எடுக்கப்பட்டிருப்பதுடன், அது குறைவிருத்தி நிலையில் இருந்து வருகின்றது. இச்சட்டம் தீங்கு விளைவிக்கக் கூடிய உள்ளடக்கம் தொடர்பான விடயத்தை கவனத்தில் எடுக்கும் அதே வேளையில், வடிவமைப்புத் தர நியமங்கள் தொடர்பாக அது குறைந்த அளவிலேயே கவனம் செலுத்துகிறது – குறிப்பாக தீங்குகள் இடம்பெறுவதைத் தடுக்கக்கூடிய விதத்தில் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குதல் மற்றும் இணையத்தில் பரவச் செய்தல் என்பன தொடர்பான தர நியமங்கள் குறித்து – அது அதிகளவில் கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக, சமூக ஊடகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் இலங்கையின் மிக மோசமான அபாயகரமான அனுபவத்தின் பின்னணியில், இச்சட்டம் உற்பத்தி அபிவிருத்தியில் ‘வடிவமைப்பின் மூலம் பாதுகாப்பு” கோட்பாடுகளை எடுத்து வரும் விதத்தில் திருத்தப்பட முடியும். அதேபோல, புதிய விடயங்கள் அல்லது சேவைகள் என்பவற்றின் தார்மீக ரீதியான தாக்கம் தொடர்பான மதிப்பீடுகளை அது கட்டாயப்படுத்துதல் வேண்டும்.
  6. அந்தரங்கத் தன்மை: ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் அந்தரங்கத் தன்மை தொடர்பான ஏற்பாடுகள், நாட்டின் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பு சட்டத்துடன் (Personal Data Protection Act) பொருந்திச் செல்லும் பொருட்டு கணிசமான அளவில் பலப்படுத்தப்பட வேண்டிய தேவை இருந்து வருகின்றது. தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான வெளிப்படுத்துகையை அது கவனத்தில் எடுக்கும் அதேவேளையில், தரவுகள் பாதுகாப்புச் சட்டத்தின் சட்டகங்களுடன் அது சிறந்த விதத்தில் ஒருங்கிணைந்து, தரவுகளை குறைந்தபட்ச அளவில் வைத்திருத்தல் மற்றும் நோக்கத்தை வரையறை செய்தல் என்பன தொடர்பான வலுவான ஏற்பாடுகளை உள்ளடக்க முடியும். அனுமதி பெறாத விதத்தில் மிகவும் அந்தரங்கமான உள்ளடக்கங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு எதிரான திருத்தங்களின் மேலதிக பாதுகாப்பு சாதகமானதாக உள்ளது. ஆனால், அது மிகவும் விரிவான அந்தரங்க காப்பு சட்டகம் ஒன்றின் ஒரு பாகமாக இருந்து வருதல் வேண்டும்.
  7. பிள்ளைப் பருவத்தை அங்கீகரித்தல்: சிறுவர் பாதுகாப்பு தொடர்பான வலுவான ஏற்பாடுகளை ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் உள்ளடக்கியுள்ளது. அதே வேளையில், அது ஒன்லைனில் சிறுவர்களின் நேர்மறையான உரிமைகளை சிறந்த விதத்தில் அங்கீகரிக்க முடியும். இச்சட்டம் சிறுவர்களை முழுமையாக தீங்கிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விடயத்தில் கவனம் செலுத்துகின்றது. (முன்னைய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரேரணையை பொது மக்களிடம் சந்தைப்படுத்தும் பொருட்டு அதனையே பயன்படுத்தினார்கள்). ஆனால், இதனைச் சாதித்துக் கொள்வது எப்படி என்ற விடயம் தொடர்பாக கணிசமான அளவிலான விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு சிறந்த பிரேரணை அல்லது எதிர்கால திருத்தங்கள் பயனளிக்கக்கூடிய ஒன்லைன் வளங்களையும், அவர்களுடைய தேவைகளைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் சேவைகளையும் பிள்ளைகள் அணுகுவதனை மேம்படுத்துதல் வேண்டும்.
  8. மனித உரிமைகள் மற்றும் சமத்துவம் என்பவற்றுக்கு மதிப்பளித்தல்: இந்தக் கட்டுரையின் கருப்பொருளுக்கு மையமாக இருந்து வருவதுடன், ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற அறிக்கையில் பிரதிபலிக்கப்படும் மனித உரிமைகள் தர நியமங்களை ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் மிகவும் வெளிப்படையான விதத்தில் உள்வாங்குதல் வேண்டும். அநேகமாக பின்னர் சிந்தித்துப் பார்த்து, அது ஓரளவு பாதுகாப்புகளை வழங்கும் அதே வேளையில், சர்வதேச மனித உரிமைகள் சட்டகங்களை குறிப்புப் புள்ளியாக எடுத்து, மிகவும் நலிந்த நிலையில் இருந்து வரும் குழுக்களை பாதுகாப்பதற்கும், அணுகும் வசதியை உறுதிப்படுத்துவதற்குமென அது திட்டவட்டமான ஏற்பாடுகளை உள்ளடக்குதல் வேண்டும். திருத்தங்கள் சட்டத்தை வலுவாக்கிடும் பொறிமுறைகளை சீர்திருத்துவதன் மூலம் இதனை ஓரளவுக்கு கவனத்தில் எடுக்கின்றன. ஆனால், பெருமளவுக்கு வெளிப்படையான மனித உரிமைகள் பாதுகாப்பு முறைகள் இதில் சேர்க்கப்படுதல் வேண்டும்.
  9. கல்வி மற்றும் விழிப்புணர்வை தூண்டுதல்: இன்றைய நிலையில் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் விழிப்புணர்வைத் தூண்டுதல் போன்ற விடயங்கள் தொடர்பான வலுவான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. பொதுமக்களின் கல்விக்கு அது ஓரளவுக்கு வாய்ப்பை வழங்கிய போதிலும், பெருமளவுக்கு விரிவான நிகழ்ச்சித்திட்டங்களை அது அவசியப்படுத்த வேண்டியிருப்பதுடன், சேவை வழங்குனர்கள், அதேபோல இடைநடுவர்கள் ஆகியோர் நாட்டில் புதிதாக துளிர்த்து வரும் டிஜிட்டல் எழுத்தறிவு முயற்சிகளுக்கு பங்களிப்புச் செய்வதற்கான தேவைகளை அது உருவாக்குதல் வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட திருத்தங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும்  நடத்தைக் கோவை தொடர்பான உயர் அளவிலான வலியுறுத்துதல், முன்னெடுக்கப்பட வேண்டிய கல்வித் தேவைகளை பரிந்துரை செய்வதுடன், எதிர்கால திருத்தங்களில் அவை கவனத்தில் எடுக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்படுகின்றது.
  10. ஜனநாயக ரீதியிலான பொறுப்புக் கூறல், விகிதாசார நிலை மற்றும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை: ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்துக்கான திருத்தங்கள், நடத்தைக் கோவை தொடர்பாக பொது மக்களுடன் கலந்தாலோசனை நடத்துவதற்கான தேவை மற்றும் நாடாளுமன்றத்தின் மேற்பார்வை என்பவற்றை அவசியப்படுத்துவதன் மூலம் இந்த அம்சத்தை விருத்தி செய்கின்றது. ஆனால், அச்சட்டத்தின் தற்போதைய நிலையில் காணப்படும் முக்கியமான பல பிரச்சினைகளின் பின்னணியில் இவை போதிய ஏற்பாடுகளாக இருந்து வரவில்லை. ஏனெனில், ஒன்லைன் பாதுப்புச் சட்டத்தில் இருக்கும் ஏனைய பிரிவுகள் இவற்றை மீறிச் செல்வனவாக இருந்து வருகின்றன. திருத்தங்கள் அல்லது ஒரு புதிய பிரேரணை வலுவான சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்கும் ஒரு முறையை குறிப்பாக வலியுறுத்த வேண்டும். ஒழுங்குமுறைப்படுத்தல் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் தொடர்பாக தாக்க மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதனையும் அது அவசியப்படுத்த முடியும்.

ஒன்லைன் தீங்குகள் குறித்த உலக பொருளாதார மன்றத்தின் வகைமையியலை பிரயோகித்தல்: 

  1. தீங்குகளை வகைப்படுத்துதல்: ஒன்லைன் தீங்குகளை திட்டவட்டமான வகைகளுக்குள் உள்ளடக்கும் உலக பொருளாதார மன்றததின் தெளிவான வகைப்படுத்தலை பின்பற்றுவதன் மூலம் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் பயனடைய முடியும்: தனிப்பட்ட மற்றும் சமூக பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு என்பவற்றுக்கான தீங்கு, வெறுப்பு மற்றும் பாரபட்சம், கண்ணியத்தைக் குலைத்தல், அந்தரங்கத்துக்குள் ஆக்கிரமிப்புச் செய்தல், ஏமாற்று மற்றும் தந்திரம் என்பன இவற்றுள் அடங்குகின்றன. இச்சட்டம் இன்றைய நிலையில் இத்தகைய ஒரு சில துறைகளை கவனத்தில் எடுக்கும் அதே வேளையில், அதன் கட்டமைப்பை இந்த வகைமைப்படுத்தலுடன் மீள ஒழுங்குப்படுத்திக் கொள்வது அதனை அனைத்துமடங்கிய, இசைவான ஒரு சிறந்த சட்டமாக ஆக்க முடியும்.
  2. உள்ளடக்கம், தொடர்பு மற்றும் நடத்தை சட்டகம்: உள்ளடக்கம், தொடர்பு மற்றும் நடத்தை ஆபத்துக்கள் என்பவற்றைக் கொண்ட உலக பொருளாதார மன்றத்தின் மூன்று பரிமாணங்களுடன் கூடிய சட்டகத்தை வெளிப்படையாக பின்பற்றுவதன் மூலம் சட்டம் மேலும் பலப்படுத்தப்பட முடியும். தற்பொழுது ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் பெருமளவுக்கு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தீங்குகள் தொடர்பாகவே கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால், அது (ஒன்றை போஷித்து வளர்த்தல் போன்ற) தொடர்பு ஆபத்துக்கள் மற்றும் (தொழில்நுட்ப அனுசரணையுடன் கூடிய துஷ்பிரயோகங்கள் போன்ற) நடத்தை ஆபத்துக்கள் என்பவற்றை கவனத்தில் எடுப்பதன் மூலம் சிறப்பான ஒரு சட்டமாக உருவாக முடியும். இது ஒன்லைன் பாதுகாப்பு ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு பெருமளவுக்கு அனைத்துமடங்கிய ஒரு அணுகுமுறையை வழங்க முடியும்.
  3. தீங்கான உற்பத்தி, விநியோகம் மற்றும் நுகர்வு: தீங்கு மூன்று கட்டங்களில் நிகழ்கின்றது என்பது தொடர்பான உலக பொருளாதார மன்றத்தின் புரிந்துணர்வை ஒழுங்கு விதிகள் உள்வாங்குதல் வேண்டும். உற்பத்தி, விநியோகம் மற்றும் உள்ளடக்கத்தின் நுகர்வு என்பனவே அந்த மூன்று கட்டங்கள் ஆகும். ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் இன்றைய நிலையில் விநியோகம் மற்றும் நுகர்வின் ஒரு சில அம்சங்கள் என்பவற்றையே கவனத்தில் எடுக்கின்றது. ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு வகையைச் சேர்ந்த தீங்குகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதனை அது சிறப்பாக எடுத்துக் கூற முடியும். இது பெருமளவுக்கு இலக்குடன் கூடிய தலையீடுகளை மேற்கொள்வதற்கும், சட்டத்தை வலுவாக்கிடும் பொறிமுறைகளை முன்னெடுப்பதற்கும் உதவும்.
  4. தொழில்நுட்பத்தின் அனுசரணையுடன் கூடிய துஷ்பிரயோகம்: உலக பொருளாதார மன்றத்தின் வகைமையியலில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டு, எடுத்துக்காட்டப்பட்டுள்ள தொழில்நுட்பத்தின் அனுசரணையுடன் கூடிய துஷ்பிரயோகம் மற்றும் தொழில்நுட்பத்தின் அனுசரணையுடன் கூடிய பாலின அடிப்படையிலான வன்முறை என்பன தொடர்பாக பெருமளவுக்கு திட்டவட்டமான ஏற்பாடுகளை உள்ளடக்கிக் கொள்வதன் மூலம் சட்டம் பயனடைய முடியும். ‘இது அனைவரினதும் ஒரு பிரச்சினை: தொழில்நுட்பத்தின் அனுசரணையுடன் கூடிய பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கான எதிர்வினைகளை பெரும்போக்குப்படுத்துதல்” என்ற இது தொடர்பான அண்மைய அறிக்கை கட்டாயம் வாசிக்கப்படுதல் வேண்டும். ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் துன்புறுத்துதல் மற்றும் அந்தரங்கம் தொடர்பான மீறள்கள் என்பவற்றை கவனத்தில் எடுக்கும் அதே வேளையில், தொழில்நுட்பம் எவ்வாறு பல்வேறு வடிவங்களில் துஷ்பிரயோகத்தை – குறிப்பாக பால்நிலை அடிப்படையிலான வன்முறையை – தீவிரப்படுத்த முடியும் என்பதனை வெளிப்படையான விதத்தில் அது அங்கீகரிக்க முடியும். சிறுவர்களுக்கு எதிரான தீங்குகளைப் போல, பெண்களின் பாதுகாப்பு என்ற விடயம் முன்னைய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்ட ஒரு விடயமாகும். ஆனால், இச்சட்டத்தின் தற்போதைய நிலையில் இந்த விடயம் கணிசமான அளவில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
  5. அபிவிருத்திக் கட்டம் சார்ந்த அடிப்படையில் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயங்கள்: ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் சபை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருப்பதைப் போல, அபிவிருத்திக் கட்டங்களுக்கு பொருத்தமற்ற உள்ளடக்கம் மற்றும் பிள்ளைப் பருவத்தை அங்கீகரித்தல் தொடர்பான உலக பொருளாதார மன்றத்தின் வலியுறுத்து, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளை பலப்படுத்துவதற்கு உதவ முடியும். சட்டம் ஒரு சில சிறுவர் பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டிருக்கும் அதே வேளையில், வயதுக்கு பொருத்தமற்ற உள்ளடக்கத்தின் வீச்சு மற்றும் அபிவிருத்தியில் அது எடுத்து வரக்கூடிய தாக்கங்கள் என்பவற்றை அது சிறப்பாக கவனத்தில் எடுக்க முடியும்.
  6. அல்கோரிதம் சார்ந்த தீங்குகள்: அல்கோலரிதம் சார்ந்த பாரபட்சம் மற்றும் தன்னியக்க முடிவுகளை எடுக்கும் செயன்முறை என்பவற்றை கவனத்தில் எடுக்கும் ஏற்பாடுகளை ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் உள்வாங்க முடியும். அவை உலக பொருளாதார மன்றத்தின் வகைப்படுத்தலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஆனால், (ஒருங்கிணைக்கப்பட்ட தீங்குகள் தொடர்பாக ஒரு சில தெளிவற்ற மற்றும் குழப்பகரமான குறிப்புக்களைத் தவிர) தற்போதைய சட்டத்தில் வெளிப்படையான விதத்தில் அவை உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. artificial intelligence மற்றும் தன்னியக்கமாக்கப்பட்டிருக்கும் முறைமைகள் (automated systems) என்பன ஏற்கனவே தேசிய சட்டகங்களில் பெருமளவுக்கு நிலவி வரும் ஒரு சூழ்நிலையில் இது முக்கியமானதாகும்.
  7. சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு தொடர்பாக கவனம் செலுத்துதல்: சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு சம்பந்தப்பட்ட தீங்குகள் தொடர்பாக – குறிப்பாக தற்கொலை, சுயதீங்கு மற்றும் ஒழுங்கீனமற்ற சாப்பாடு என்பவற்றை மேம்படுத்தும் உள்ளடக்கம் தொடர்பாக – உலக பொருளாதார மன்றத்தின் விரிவான அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம் எதிர்கால திருத்தங்களும், அதேபோல ஒரு புதிய பிரேரணையும் பயனடைய முடியும். தீங்கு விளைவிக்கக் கூடிய உள்ளடக்கத்தின் ஒரு சில விடயங்களை இச்சட்டம் கவனத்தில் எடுக்கும் அதே வேளையில், சுகாதாரம் தொடர்பான தீங்குகள் குறித்து அதில் பெருமளவுக்கு திட்டவட்டமான விதத்தில் குறிப்பிடுதல் வேண்டும்.
  8. ஏமாற்று மற்றும் தந்திரமான செயற்பாடுகள் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் பொய்யான கூற்றுக்களை பெருமளவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதத்தில் கையாளும் விடயத்தை, ஏமாற்று மற்றும் தந்திரம் என்பன தொடர்பான உலக பொருளாதார மன்றத்தின் முறையான அணுகுமுறையை உள்வாங்குவதன் மூலம் கவனத்தில் எடுக்க முடியும். பிழையான தகவல்கள், பொய்யான தகவல்கள் மற்றும் ஏமாற்று ‘சிந்தெட்டிக். ஊடகங்கள் என்பவற்றுக்கிடையிலான தெளிவான வேறுபாடுகளை அது வலியுறுத்துகின்றது. பல்வேறு வகைகளை சேர்ந்த பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் உள்ளடக்கங்களுக்கு பெருமளவுக்கு இலக்குடன் கூடிய விதத்தில் எதிர்வினைகளை உருவாக்குவதற்கு இது உதவ முடியும்.
  9. உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட சட்டகம்: உலக பொருளாதார மன்றம் சர்வதேச மனித உரிமைகள் சட்டகங்களை அடிப்படையாகக் கொண்டு திருத்தங்களை அல்லது புதிய பிரேரணயின் வரைவை தயாரிக்கும் பொழுது இது வழிகாட்டுதலை வழங்க முடியும். அது பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் என்பவற்றுக்கிடையில் ஒரு சமநிலையை எடுத்து வர முடியும். பாதுகாப்பு வழிமுறைகள், சட்ட ரீதியான கருத்து வெளிப்பாடு மற்றும் ஒன்லைன் பங்கேற்பு என்பவற்றின் மீது அநாவசியமான கட்டுப்பாடுகளை கொண்டிராமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இது உதவ முடியும்.
  10. எதிர்கால தொழில்நுட்பம் தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டிய விடயங்கள்: உலக பொருளாதார மன்றத்தின் வகைப்பாடு metaverse அல்லது Web3 போன்ற புதிதாக எழுச்சியடைந்து வரும் தொழில்நுட்பங்களை அது திட்டவட்டமாக கவனத்தில் எடுக்கவில்லை என்பதனை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், தீங்குகளை புரிந்துகொள்வதற்கான அதன் சட்டகம், புதிய தொழில்நுட்பங்கள் எழுச்சியடைந்து வரும் நிலையில் அவற்றுக்கு ஈடுகொடுப்பதற்கு ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கான திருத்தங்கள் உதவ முடியும். திருத்தங்கள் அல்லது ஒரு புதிய பிரேரணை எதிர்கால தொழில்நுட்ப அபிவிருத்திகளை கவனத்தில் எடுப்பதற்கென இத்தகைய நெகிழ்ச்சித்தன்மையிலிருந்து பயனடைய முடியும்.

இறுதிக் கருத்துகள்: விஜித்த ஹேரத் குறிப்பிட்ட விடயத்தை நம்புவதாக இருந்தால், ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கான திருத்தங்களுக்கான வரைவை தயாரிப்பதில் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு வரையறுக்கப்பட்ட, ஆனால் அர்த்தபூர்வமான ஒரு வாய்ப்பு இருந்து வருகின்றது. முக்கியமாக மனித உரிமைகள் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒன்லைன் தீங்குகள் தொடர்பான ஒரு புதிய  ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டகத்தை உருவாக்க முடியும்.

உண்மையிலேயே, இது இதற்கு முன்னர் இலங்கையில் ஒருபோதும் இடம்பெற்றிராத ஒரு கலந்துரையாடலாக இருந்த​வந்ததுடன், டிஜிட்டல் உரிமைகள் தொடர்பாக பரவலான விதத்தில் அவசியப்படும் ஒரு  விடயமாகவும் இருந்து வருகின்றது. எந்த ஒரு நாடும் இதனை முழுமையாக செய்திருக்கவில்லை. ஆனால், ஒன்லைன் தீங்குகள் தொடர்பான சமகால சட்டவாக்கம் மற்றும் கொள்கை உருவாக்கம் என்பன இலங்கையில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்  கூடாது என்பது தொடர்பான போதியளவிலான உதாரணங்களையும், மாதிரிகளையும் வழங்குகின்றன. திசாநாயக்க, அமரசூரிய, ஹேரத்  போன்றவர்களும், அரசாங்கத்தில் இருக்கும் ஏனையவர்களும் இதனை நன்கு கிரகித்து, எமது ஜனநாயக உரிமைகளை முழுமையாக நிறைவேற்றிக் கொள்வதற்கு பெருமளவுக்கு உதவ முடியும்.

கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ