Photo, INSIDE STORY

உலகின் அல்லது மனிதகுலத்தின் மிகப்பெரிய ஜனநாயகச் செயன்முறை என்று வர்ணிக்கப்படும் இந்திய லோக்சபா தேர்தல் அதன் இறுதி ஏழாவது கட்ட வாக்குப்பதிவுடன் நேற்று சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. சுதந்திரத்துக்குப் பின்னரான 18ஆவது லோக்சபாவைத் தெரிவுசெய்வதற்கு இந்திய மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். நாளை மறுதினம் செவ்வாய்கிழமை முடிவுகள் வெளியாகும்.

பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெறும் என்பதிலோ அல்லது நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்பதிலோ சந்தேகமில்லை. 543 ஆசனங்களைக் கொண்ட லோக்சபாவில் தனது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை 400க்கும் அதிகமான ஆசனங்களில் வெற்றிபெறச் செய்யுமாறு இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்தவாறு மோடி தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்தார். 2019 பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு லோக்சபாவில் 353 ஆசனங்கள் (பாரதிய ஜனதாவுக்கு மாத்திரம் 303 ஆசனங்கள்) கிடைத்தன.

இந்தத் தடவை தேசிய ஜனநாயக கூட்டணியினால் 370 ஆசனங்களுக்கும் கூடுதலாக கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியுமா அல்லது முன்னைய பெரும்பான்மையை தக்கவைக்கக்கூடியதாக இருக்குமா என்பதே அவதானிகள் எழுப்பும் கேள்வி.

பிரமாண்டமான வெற்றியை பெறமுடியும் என்ற நம்பிக்கையுடன் பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரங்களை தொடங்கிய போதிலும், வாக்குப்பதிவின் முதல் நான்கு  கட்டங்களில் வாக்களிப்பு வீதம் கணிசமானளவுக்கு குறைவாக இருந்ததால் மோடி குழப்பமடைந்தார் போன்று தோன்றியது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. கடும் வெப்ப காலநிலை, சில மாநிலங்களில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் பலமான போட்டி இல்லாதமை என்பனவும் அந்தக் காரணங்களில் அடங்கும்.

எதிர்பார்க்கின்ற பெருவெற்றி கிடைக்காமல் போகக்கூடும் என்ற சந்தேகத்தில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரங்களில் இந்திய சனத்தொகையில் 20 சதவீதத்தினராக விளங்கும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மோடி நிகழ்த்திய உரைகள் ஒரு இந்தியப் பிரதமருக்கு பொருத்தமானவையாக இருக்கவில்லை. இந்துக்களின் வாக்குகளை சாத்தியமானளவு உச்சபட்சத்துக்கு பெறும் நோக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளை அருவருக்கத்தக்க முறையில் அவர் தூண்டிவிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

ஏற்கெனவே இரு பொதுத்தேர்தல்களில் பாரதிய ஜனதாவை வெற்றிக்கு வழிநடத்திய மோடி மீண்டும் பிரதமராக வந்தால் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ச்சியாக மூன்று தடவை பிரதமராகும் முதல் இந்திய அரசியல் தலைவர் என்ற பெருமையை தனதாக்கிக் கொள்வார்.

ஆனால், நேருவைப் போன்றோ அல்லது அவரது மகள் இந்திரா காந்தியைப் போன்றோ முழு இந்தியாவிலும் பரந்தளவில் ஆதரவைக் கொண்ட ஒரு மகத்தான தேசியத்தலைவர் என்ற பெருமைக்குரியவராக மோடியையும் பழைய காங்கிரஸ் கட்சியைப் போன்று  உண்மையான ஒரு தேசிய அரசியல் கட்சியாக பாரதிய ஜனதாவையும் கருதமுடியாது.

இந்துத்வாவின் செல்வாக்குடைய மாநிலங்களின் குறிப்பாக இந்திமொழி பேசும் மாநிலங்களின்  எல்லைகளுக்கு அப்பால் மோடியினதும் பாரதிய ஜனதாவினதும் மக்கள் செல்வாக்கு விரிவடையவில்லை. நேரு மிகவும் உறுதியாக வெறுத்த மதவெறியை மோடி உணர்ச்சிபூர்வமாகக் கொண்டாடுகிறார். இந்தியாவின் பெருமைக்குரிய மரபாகப் பேணப்பட்டுவந்த மதசார்பின்மைக் கோட்பாடு மோடியின் பத்து வருடகால ஆட்சியில் ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்திரா காந்திக்குப் பிறகு தன்னைச் சுற்றி தனிநபர் வழிபாட்டுக் கலாசாரம் ஒன்றைக் கட்டியெழுப்பியிருக்கும் ஒரு பிரதமராக மோடியைப் பார்க்க முடிகிறது. தனது கட்சியை விடவும் மக்கள் மத்தியில் செல்வாக்கு கொண்டவராக அவர் விளங்குகிறார்.

காங்கிரஸே இந்தியா, இந்தியாவே காங்கிரஸ் என்று நேரு சொன்னார். இந்திய மக்களும் அரசியல்வாதிகளும் அவரைப் பெரிதும் மதித்தபோதிலும், தன்னைச் சுற்றி தனிநபர் வழிபாட்டு கலாசாரத்தை அவர் கட்டியெழுப்பியதாக ஒருபோதும் குறை கூறப்படவில்லை.

ஆனால், இந்திரா காந்தியின் காலத்தில் இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா என்று காங்கிரஸின் தலைவராக இருந்த தேவ் காந்த் பரூவா பிரகடனம் செய்தார். அவ்வாறு மட்டுமீறி துதிபாடுவதை  தான் விரும்பவில்லை என்று நேருவின் மகள் கூறியதாக பதிவு எதுவும் இல்லை.

ஆனால், மோடியை போற்றுபவர்கள் மோடியே இந்தியா, இந்தியாவே மோடி என்று இன்னமும் கூறவில்லை. ஆனால், இந்தியா அடைந்திருப்பதாகக் கூறப்படும் வெற்றிகளுக்கு எல்லாம் அவரே  காரணம் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களின்போது கூறாமல் ஒரு நாளும் கடந்ததில்லை எனலாம்.

காங்கிரஸ் உட்பட 37 அரசியல் கட்சிகள் சேர்ந்து அமைத்த ‘இந்தியா’ கூட்டணியினால் ஆரம்பத்தில் ஒரு வகையான நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியதாக இருந்த போதிலும், பாரதிய ஜனதாவின் பிரமாண்டமான பிரசார இயந்திரத்தை வலுவாக எதிர்த்து நிற்கக்கூடியதாக பெரிய ஒரு அரசியல் இயக்கமாக அது  விளங்கவில்லை என்பதே பொதுவான அபிப்பிராயம்.

‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே தேசிய தோற்ற அமைவைக்கொண்ட கட்சிகள். ஆனால், காங்கிரஸ் பெரிய தேசிய இயக்கம் என்ற முன்னைய அந்தஸ்த்தில் இப்போது இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரையில் அவை மாநிலக் கட்சிகளை விடவும் சிறியவையாகிவிட்டன. ‘இந்தியா’ கூட்டணி பெரும்பாலும் மாநிலக் கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்பாகவே இருக்கிறது.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் 2019 பொதுத்தேர்தலில் லோக்சபாவில் 91 ஆசனங்களையே கைப்பற்றின. இது பாரதிய ஜனதா கைப்பற்றிய ஆசனங்களில் மூன்றில் ஒரு பங்காகும். இந்தத் தடவை இந்தியா கூட்டணி எவ்வளவு ஆசனங்களில் வெற்றிபெறும்?

2019 பொதுத்தேர்தலில் காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் 202 லோக்சபா ஆசனங்களில் நேருக்குநேர் மோதிக்கொண்டன. அவற்றில் 16 ஆசனங்களில் மாத்திரமே காங்கிரஸினால் வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. இந்தத் தடவை காங்கிரஸ் நான்கு மாநிலங்களில் மாத்திரமே சுயாதீனமாக பலம்கொண்டதாக விளங்கியதாகக்  கூறப்பட்டது. அவற்றில் கர்னாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகியவை தென்னிந்திய மாநிலங்கள். மற்றைய மாநிலம் வடக்கில் உள்ள பஞ்சாப்.

அதனால் ‘இந்தியா’ கூட்டணி பாரதிய ஜனதாவுக்கு கணிசமான சவாலை தோற்றுவிப்பதற்கு தமிழ்நாடு உட்பட எட்டு மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகளிலும் அவற்றின் தலைவர்களிலுமே தங்கியிருக்க வேண்டியிருந்தது. மேற்கு வங்காளம், டில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீஹார், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகியவையே அந்த மாநிலங்களாகும்.

இந்த 12 மாநிலங்களிலும் மொத்தமாக 369 லோக்சபா ஆசனங்கள் இருக்கின்றன. இவற்றில் கணிசமான ஆசனங்களை இந்தியா கூட்டணியினால் கைப்பற்றமுடியுமானால், பாரதிய ஜனதாவின் வெற்றியை தடுக்க முடியாவிட்டாலும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதைத் தடுக்கமுடியும் என்று இந்திய அவதானிகள் கருதுகிறார்கள்.

இந்த 12 மாநிலங்களில் ஆறு மாநிலங்களில் (தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், பீஹார் மற்றும் கேரளா) பாரதிய ஜனாதா குறிப்பிடத்தக்க அளவு செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை. ஒடிஷா மாநிலத்தையும் சேர்த்து இந்த மாநிலங்களில் மொத்தம் 204 லோக்சபா ஆசனங்கள் இருக்கின்றன. கடந்த இரு பொதுத் தேர்தல்களிலும் பாரதிய ஜனதா இந்த ஆறு மாநிலங்களிலும் ஐம்பதுக்கும் அதிகமான ஆசனங்களில் வெற்றி பெறவில்லை. 2014ஆம் ஆண்டில் 29 ஆசனங்களிலும் 2019 ஆம் ஆண்டில் 47 ஆசனங்களிலுமே அது வெற்றிபெற்றது.

சுமார் ஆறு தசாப்த காலமாக இரு பெரிய திராவிட இயக்கக் கட்சிகளினால் மாறிமாறி ஆட்சிசெய்ய்பட்டு வருகின்ற தமிழ்நாடு மாநிலத்தில் பாரதிய ஜனதாவினால் எந்த தாக்கத்தையும் இதுவரையில் ஏற்படுத்த முடியவில்லை. இங்கு ஒரு சிறிய வெற்றியையாவது பெற்றுவிடவேண்டும் என்பது மோடியின் இலக்காக இருக்கிறது. முன்னர் ஒருபோதும் காட்டாத அக்கறையை இந்தத் தடவை அவர் தமிழ்நாட்டு தேர்தல் பிரசாரங்களில் காட்டினார். ஒரு ஆசனத்தைப் பெற்றால் கூட அவருக்கு அது பெரிய வெற்றியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏப்ரல் 21 முதற்கட்ட வாக்குப்பதிவு இடம்பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இங்கு தேர்தல் பிரசாரங்களின்போது மோடி பாக்குநீரிணையில் இருக்கும் சின்னஞ்சிறிய கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி விட்டுக் கொடுத்ததை நினைவுபடுத்தி இந்தியாவுக்குப் பாதகமான அந்தச் செயலுக்கு காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமுமே பொறுப்பு என்று குற்றஞ்சாட்டினார்.

மோடி மீண்டும் பிரதமராக வந்தவுடன் கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்குவார் என்று தமிழ்நாட்டு பாரதிய ஜனதா தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களின் போது கூறினார்கள். மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு அவர்கள் அதைப் பற்றி பேசியதாக செய்திகள் வரவில்லை.

ஆனால், கச்சதீவு தொடர்பிலான மோடியினதும் பாரதிய ஜனதா தலைவர்களினதும் அந்த பிரசாரம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெரிதாக எடுபட்டதாகக் கூறமுடியாது. பாரதிய ஜனாதாவின் இந்துத்வா கொள்கைக்கு எதிரான அரசியல் சக்திகள் தமிழ்நாட்டை விடவும் வேறு எந்த மாநிலத்திலும் கூடுதலான அளவுக்கு பலம்வாய்ந்தவையாக இருக்கின்றன என்று கூறமுடியாது.

இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த காரணத்தினாலேயே தமிழக மீனவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகிறார்கள் என்று மோடி கூறினார். குறைந்த பட்சம் தமிழ்நாட்டுக் கரையோர தொகுதிகளிலாவது பாரதிய ஜனதா வேட்பாளர்கள் வெற்றிபெறாவிட்டாலும் கணிசமான வாக்குகளையாவது பெற்றார்களா என்பது நாளை மறுதினம் தெரிந்துவிடும்.

அரை நூற்றாண்டு காலத்தில் கச்சதீவு குறித்து சர்ச்சை கிளப்பிய முதல் இந்தியப் பிரதமர் மோடியே. இது குறித்து ஆசிரிய தலையங்கம் எழுதிய கொழும்பு ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்று அவர் தமிழ்நாட்டு வாக்குகளை இழுவைப்படகைப் பயன்படுத்தி வாரி அள்ளுவதற்கு  முயற்சிக்கிறார் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.

வீரகத்தி தனபாலசிங்கம்