தற்போதைய நாடாளுமன்றத்தில் யார் யார் எந்தப் பக்கத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடிக்கடி கூறுவார்.

கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சியை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியில் இருந்து  உத்தியோகபூர்வமாக வெளியேறாவிட்டாலும், சபைக்குள் சுயாதீனமான குழுக்களாக இயங்குகிறார்கள். வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டவர்களும் இவ்வாறு பிரிந்து இயங்குகிறார்கள்.

டலஸ் அழகப்பெரும குழு, அநுரா பிரியதர்ஷன யாப்பா குழு மற்றும் விமல் வீரவன்ச – உதய கம்மன்பில குழு ஆகியவையே அவை.

இதற்குப் புறம்பாக பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லன்ஸா கட்சியை விட்டு வெளியேறாமலேயே பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டி புதிய கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதே இந்த கூட்டணியின் நோக்கம் என்று கூறப்பட்டது. ஆனால், ஓரிரு மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட உத்வேகத்தில் கூட்டணி முயற்சி தற்போது இல்லை. அது வேறு விடயம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார மற்றும் டயானா கமகே அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவிகளை வகிக்கிறார்கள். அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக கொழும்பு  மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவான முன்னாள் அமைச்சர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க  சபைக்குள் தனியாக இயங்குவதுடன் புதிதாக தனக்கென்று ஒரு கட்சியையும் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கினார்.

இவர்கள் எல்லோரும் தேர்தலில் தாங்கள் போட்டியிட்ட கட்சிகளின் கட்டுப்பாட்டை மீறிச்செயற்படுகின்ற போதிலும் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கவில்லை. அந்தக் கட்சிகளின் தலைமைத்துவங்களும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் அக்கறை காட்டவில்லை.

ஆனால், இம்மாத முற்பகுதியில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிகளை இழக்கவேண்டி வரலாம் என்று ஒரு பயத்தை ஏற்படுத்தியது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நசீர் அஹமட் கட்சியின் தீர்மானங்களை மதித்து நடப்பதாக ஏற்கெனவே உறுதியளித்த போதிலும்,  2022 பட்ஜெட்டை எதிர்த்து வாக்களிப்பதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை மீறி அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களித்தமைக்காக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது சட்டரீதியாக சரியானது என்று அக்டோபர் 6  உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

அதையடுத்து அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையையும் அமைச்சர் பதவியையும் இழந்தார். அவரின் இடத்துக்கு அலி சாஹர் மௌலானா நாடாளுமன்ற உறுப்பினராக அண்மையில் பதவியேற்றுக் கொண்டார்.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக கிளம்பிய அமைச்சர்களான காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி உட்பட எட்டுப் பேர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதை ஆட்சேபித்து அவர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தோல்வியடைந்து நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த பிறகு அரசியல்வாதி ஒருவர் கட்சியின்  கட்டுப்பாட்டை மீறியதற்காக நாடாளுமன்ற உறுப்புரிமையை இப்போதுதான் முதற்தடவையாக இழந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நசீர் அஹமட்டுக்கு எதிரான தீர்ப்பை அடுத்து பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிபோகக்கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியதுடன் தீர்ப்பு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து அரசியல் விமர்சகர்களும்  தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆனால், கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சிகளின் தலைமைத்துவங்கள், பொதுவில் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று  ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதில் அக்கறை காட்டுவதாக இல்லை.

தனியான குழுக்களாகச் செயற்படும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதாக அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அண்மையில் கூறியிருந்தார் என்றபோதிலும், இதுவரையில் அதற்கான தெளிவான அறிகுறியைக் காணமுடியவில்லை.

எதிரணியுடன் இணைந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் நிலையை ஏற்படுத்தவேண்டாம் என்று காரியவாசத்திடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

நசீர் அஹமட்டுக்கு எதிரான தீர்ப்பின் பின்புலத்தில், தங்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கையில் இறங்கக்கூடும் என்று அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோவும் மனுஷ நாணயக்காரவும் அஞ்சுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட போதிலும் கட்சியின் தலைமைத்துவம் அது தொடர்பில் எந்த அறிவிப்பையும் செய்யவில்லை.​

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கப் பக்கத்துக்கு இழுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்துவந்தார் என்பது ஒன்றும் இரகசியமல்ல. அந்தக் கட்சியின் பல உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டதை போன்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களில் பலரும் கூட எதிர்த்தரப்புக்கு செல்லக்கூடும் என்ற நிலை இருந்தது.

ஆனால், தற்போது உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை அடுத்து கட்சித்தாவலுக்கு எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் துணிச்சல் கொள்ளமாட்டார்கள் என்று நம்பலாம்.

நசீர் அஹமட்டுக்கு எதிரான தீர்ப்பு குறித்து இலங்கையின் முக்கியமான சிவில் சமூகத் தலைவர் ஒருவருடன் பேசியபோது அவர் மிகவும் சுவாரஸ்யமான கருத்தைக் கூறினார்.

ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவைத் தவிர, ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கு குறிப்பாக சஜித் பிரேமதாசவுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரிய ஆறுதலைக் கொடுத்திருக்கும். தனது கட்சியின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கவேண்டிவரும் என்ற பயத்தில் அரசாங்கப் பக்கம் செல்வதில் ஆர்வம் காட்டமாட்டார்கள்  என்று அவருக்கு நம்பிக்கை வந்திருக்கும். பொதுஜன பெரமுனவின்  தலைவர்களுக்கும் எதிரணிப்பக்கம் செலவதில் ஏற்கனவே ஆர்வம் காட்டிய  தங்களது உறுப்பினர்கள் அவ்வாறு செய்து நாடாளுமன்றத்தில்  அரசாங்கத்தின் பெரும்பான்மைப் பலம் குறைவதற்கு தற்போதைக்கு வாய்ப்பு  இல்லை என்ற நம்பிக்கை வந்திருக்கும் என்று அவர் கூறினார்.

இது இவ்வாறிக்க, இன்னும் இரு வாரங்களில் ஜனாதிபதி விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருக்கும் 2024 பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தாக்கத்தைச் செலுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவின் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படுவதற்கு முன்னரைப் போன்று துணிச்சல் கொள்ளமாட்டார்கள். அதேபோன்றே அழகப்பெரும அணியும் அநுர பிரியதர்ஷன யாப்பா அணியும் பட்ஜெட் வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதில் பிரச்சினை இருக்கிறது. இவை அடுத்துவரும் வாரங்களில் முக்கியமாக அவதானிக்க  வேண்டிய விடயங்கள்.

கட்சித்தாவலை ஊக்குவித்த காரணிகள்

ஒரு கட்சியின் சார்பாக மக்கள் பிரதிநிதிகளாக தெரிவானவர்கள் கட்சி மாறினால் பதவிகளை இழப்பர் என்பது இலங்கை அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடாகும்.

ஆனால், 1979ஆம் ஆண்டு மூத்த அரசியல்வாதியும் தமிழர் விடுதலை கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லையா இராஜதுரை கட்சி மாறி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு வசதியாக அன்றைய ஜெயவர்தன அரசாங்கம் அரசியலமைப்புக்கு ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தது. 1978 அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட இந்த இரண்டாவது திருத்தம் ‘இராஜதுரை திருத்தம்’ என்றே அரசியல் அரங்கில் சுவாரஸ்யமாக அழைக்கப்பட்டது.

இந்தத் திருத்தம் எதிரணியில் இருந்து அரசாங்கப் பக்கத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதற்கு வசதியான ‘ஒரு வழிப்பாதையாக’ மாத்திரமே இருந்தது. கட்சி மாறும் ஒரு உறுப்பினருக்கு நாடாளுமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் அவர் உறுப்புரிமையை இழக்கவேண்டிய ஆபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்

அன்றைய நாடாளுமன்றத்தில் ஜெயவர்தனவின் அரசாங்கத்துக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் இருந்ததால் அரசாங்க உறுப்பினர்களின் ஆதரவுடன் எதிரணியின் உறுப்பினர் ஒருவர் கட்சிமாறி அரசாங்கத்துக்கு வரக்கூடியதாக இருந்தது. அவரை ஆதரிக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிரணிக்கு நாடாளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடவும் கூடுதலானதாகவே நிர்ணயிக்கப்பட்டது.

அப்போது பிரதான எதிர்க்கட்சியான தமிழர் விடுதலை கூட்டணிக்கு 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 8 உறுப்பினர்களும் இருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் ஒரு மாதகாலத்தில் அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழப்பார். ஆனால், தன்னை நீக்கிய கட்சியின் முடிவுக்கு எதிராக அவர் உயர்நீதிமன்றத்தை நாடமுடியும். நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படக்கூடிய இடைக்காலத்தடை உத்தரவுகளின் விளைவாக தீர்ப்பு வழங்கப்படும் வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தொடரமுடியும். இதற்கு பல உதாரணங்களைக் கூறமுடியும்.

ஆனால், 1999ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர்கள் சரத் அமுனுகம, விஜேபால மெண்டிஸ், நந்தா மத்தியூ மற்றும் சுசில் முனசிங்க ஆகியோர் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் இணைந்து கொண்டதை அடுத்து ஐக்கிய தேசிய கட்சி தங்களை வெளியேற்றியதை ஆட்சேபித்து அவர்கள் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எதிர்மறையான  ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

பிரதம நீதியரசராக சரத் என்.சில்வா பதவி வகித்த நாட்களில் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பு  கட்சித்தாவலை செல்லுபடியானதாக்கி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி மோசமான அரசியல் கலாசாரத்துக்கு வழிவகுத்ததாக இன்றுவரை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

பதவியில் இருந்து ஓய்வுபெற்று  சில வருடங்கள் கழித்து சரத் என். சில்வா ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தான் வெளிநாட்டுக்குச் சென்றிருந்த வேளையில் பதில் பிரதம நீதியரசராக இருந்த ரஞ்சித் அமரசிக்கவே சரத் அமுனுகம வழக்கில் தீர்ப்பை வழங்கியதாகவும் ஆனால், அதைப் பிறகு தான் அங்கீகரித்ததாகவும் கூறியிருந்தார்.

எது எவ்வாறிருந்தாலும் கடந்த இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக கட்சித்தாவல்கள் சர்வசாதாரணமானவையாக மாறியதற்கும் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கவேண்டிவரும் என்ற பயமின்றி, அரசியல்வாதிகள் தங்களைத் தெரிவுசெய்த மக்களின் விருப்பு வெறுப்புக்களை அலட்சியம் செய்து, பணத்துக்கும் பதவிகளுக்கும் விலைபோகும் மோசமான அரசியல் கலாசாரத்துக்கு அந்தத் தீர்ப்பே காரணமாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கலாசாரத்தினால் உசசபட்சத்துக்கு பயனடைந்தவர்கள் ராஜபக்‌ஷர்களே.

இந்தக் கட்சித்தாவல் கலாசாரத்தினால் மோசமாகப் பாதக்கப்பட்ட  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் கூட தனது அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவதற்கு கட்சிக் கட்டுப்பாட்டையும் மீறி எதிரணியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்  வரவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் என்பது இலங்கை அரசியலின் சீரழிவின் தெளிவான ஒரு வெளிப்பாடாகும்.

அவரவருடைய அரசியல் அனுகூலமே கட்சித்தாவல் தொடர்பிலான அவர்களுடைய நிலைப்பாடுகளைத் தீர்மானித்தனவே அன்றி ஒழுக்கநியாயம் என்பதை பற்றி அரசியல்வாதிகளுக்கு அக்கறை கிடையாது.

நசீர் அஹமட்டுக்கு எதிரான தீர்ப்பு நாடாளுமன்ற முறைமையில் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பயனுறுதியுடைய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து பொதுவெளியில் விவாதத்தை மூளவைத்திருக்கிறது.

அரசியல் கட்சிகளுக்குள் ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படாத போக்கும் அரசில்வாதிகளின் ஒழுக்கநியாயமற்ற நடவடிக்கைகளும் எமது அரசியல் முறைமையை பாழ்படுத்திவிட்டன. இந்த கவலைக்குரிய நிலைவரத்தை சீர்செய்வதற்கு நீதித்துறையினால் எந்தளவு தூரத்துக்கு உதவமுடியும் என்பது முக்கியமான கேள்வி.

வீரகத்தி தனபாலசிங்கம்