Photo, Law & Society Trust
நாம் பயன்படுத்தும் அனைத்தையும் போலவே, சமூக ஊடகங்களிலும் நல்லதும், கெட்டதும் உள்ளன. ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் கத்தியைப் பயன்படுத்தினால், அது ஓர் உயிரைக் காப்பாற்றுகிறது. ஆனால், ஒரு கொலையாளி அதைப் பயன்படுத்தினால் அது ஓர் உயிரைப் பறிக்கின்றது. அதேபோல், சமூக ஊடகங்கள் நெருப்பு போன்றவை. அது ஒளியினதும் மற்றும் வெப்பத்தினதும் பண்புகளைத் தன்னுடன் கொண்டு செல்கின்றது. வெளிச்சமாக, சமூக ஊடகங்கள் உங்களை அறிவூட்டலாம்; வெப்பமாக, அது உங்களை எரிப்பதுடன், கொல்லவும் கூடும்.
மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மகத்தான பங்களிப்பை சமூக ஊடகங்கள் வழங்குகின்றன என்பதில் சந்தேகமில்லை. அது மக்களுக்குத் தெரியாததைக் கற்றுக்கொடுக்கிறது. அது மக்களை இணைப்பதுடன், மக்களை அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாக மேலும் கற்றுணரச் செய்கிறது.
சமூக ஊடகங்களுக்கு முந்தைய தலைமுறையை விட இன்றைய சமூக ஊடக ஆர்வமுள்ள தலைமுறை அரசியல் ரிதியாக முதிர்ச்சியடைந்துள்ளது என்று ஒருவர் வாதிடலாம். ஆனால், சமூக ஊடகங்களில் மின்னுவது எல்லாம் அறிவு அல்ல. இது போலிச் செய்திகள், பிரச்சாரம், வதந்திகள் மற்றும் ஆபாசப் படங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்ற தீமைகள் ஆகியவற்றுக்கு ஒரு வாகனமாகும். சீரழிவு என்பது சமூக ஊடகங்களில் ஒரு அழுத்துதல்; அல்லது தொடுதல் மட்டுமே. தேர்தல் நேரத்தில், பொய்களைப் பரப்ப சமூக ஊடகங்கள் பயன்படுகின்றதுடன், அது இறுதியில் தேசத்தின் ஜனநாயக விருப்பத்தையே சிதைக்கிறது.
இது வெறுப்பு உரையையும் மற்றும் சமூக ஒற்றுமையின்மையையும் பரப்புகிறது. மியான்மாரில் ரோஹிங்கியாக்களை அடையாளம் காணவும், அவர்களைத் தாக்கவும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டன. இலங்கையில், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், சமூக ஊடகங்கள் மூலமே காடையர்கள் அணிதிரட்டப்பட்டனர்.
ஸ்பெயினில், கடந்த வாரம், செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய நிர்வாணப் படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக தங்கள் மகள்மார் முறைப்பாடு செய்ததையடுத்து, பெற்றோர்கள் கடுமையான சட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
மேலும், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா (Cambridge Analytica) ஊழல் காட்டுவது போல், சமூக ஊடக நிறுவனங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அவை மீறுகின்றன.
ஒரு நேர்மறையாக குறித்துச் சொல்வதென்றால், மத்திய கிழக்கில் அரபு வசந்த புரட்சியின் போது செய்தது போல், இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய கடந்த ஆண்டின் ‘அரகலய’போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுவதில் சமூக ஊடகத் தளங்கள் ஒரு முக்கிய மக்கள் சக்திக் கருவியாக விளங்கின.
இந்த சாதக பாதகங்களைக் கருத்தில் கொண்டு, மக்களின் அடிப்படை உரிமையான பேச்சுரிமையைக் குழிதோண்டிப் புதைக்காமல், குழந்தைகளைப் பாதுகாக்கவும், சமூகத்தின் நல்வாழ்வுக்காகவும் ஒருவித சமூக ஊடக கட்டுப்பாடு அவசியம் என்பதில் எந்த வாதமும் இல்லை.
ஆனால், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதுதான் கேள்வி. பயனுள்ள மாற்று எதுவும் இல்லாத நிலையில், சமூக ஊடகங்களில் உள்ள தீமையை வேரறுக்க சட்டங்களே மிகவும் பயனுள்ள வழி என்று அரசாங்கங்கள் நம்புகின்றன. இலங்கையில், உத்தேச ‘ஒன்லைன்’ பாதுகாப்புச் சட்டமூலம், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னரே சமூக ஊடக ஒழுங்குமுறை குறித்த பொது விவாதத்தைச் சட்டமூலம் உருவாக்கியது. ‘ஒன்லைன்’ பாதுகாப்பு ஆணைக்குழுவை நிறுவுவது; இலங்கையில் உண்மையின் சில கூற்றுக்களின் ‘ஒன்லைன்’ தொடர்பாடலை தடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்; தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக ‘ஒன்லைன்’ கணக்குகளையும் மற்றும் நம்பகத்தன்மையற்ற ‘ஒன்லைன்’ கணக்குகளையும் பயன்படுத்துவதைத் தடுத்தல்; இலங்கையில் தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ‘ஒன்லைன்’ இடங்களை அடையாளங்கண்டு அறிவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்; அத்துடன் உண்மையின் தவறான கூற்றுக்களின் தொடர்பாடலுக்கான நிதிப்படுத்தலையும் மற்றும் ஏனைய ஆதரவையும் அடக்குதல் ஆகியனவே சட்டமூலத்தின் நோக்கங்களாகும்.” இதுபோன்ற சட்டமூலமொன்று குழந்தைகளைப் பாதுகாக்கவே அவசியப்படுகிறது என அரசு வாதிடுகிறது.
கடந்த வாரம் தனது பத்திரிகைப் பத்தியில், சண்டே டைம்ஸ் கட்டுரையாளர் கிஷாலி பின்டோ ஜயவர்த்தன, ‘ஒன்லைன்’ பாதுகாப்புச் சட்டமூலத்தின் தற்போதைய வடிவத்தில் உள்ள ஆபத்துகள், குறிப்பாக அது நிறுவும் ‘ஒன்லைன்’ பாதுகாப்பு ஆணைக்குழுவின் அமைப்பு மற்றும் சுதந்திரத்தின் பற்றாக்குறை ஆகியன குறித்து எச்சரித்தார்.
இந்தச் சட்டமூலத்தில் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஒலிபரப்புச் சட்டம் ஆகியன குறித்து அவர் குறிப்பிடுகையில், “இந்த வரைவுச் சட்டங்கள் அவற்றின் தாக்கத்தைப் பற்றிய தவறான புரிதலின் பேரில் அல்ல, தெளிவற்றதும் அத்துடன் இலக்கிடப்பட்டதுமான நோக்கத்துடன் (ரணில்) விக்ரமசிங்க அமைச்சரவையால் கொண்டு வரப்பட்டவை. ‘மறுபரிசீலனையினதும்’ மற்றும் ‘உசாவுகையினதும்’ வாய்மையான பயிற்சிகள் கற்பனைவளத்திலான முயற்சிகள் ஆகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மூலோபாய ரீதியாக பின்வாங்குவதும், அரசியல் ரீதியாக சாதகமானதாக இருக்கும்போது மீண்டும் தாக்குவதுமே நோக்கமாகும்” என்றார்.
நான்கு வருட பொது விவாதத்திற்குப் பின்னரே ‘ஒன்லைன்’ பாதுகாப்புச் சட்டமூலத்தைக் கடந்த வாரம் பிரிட்டனின் மக்கள் அவை நிறைவேற்றியது. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளை, இணையத்தளங்களையும் மற்றும் இணைய அடிப்படையிலான சேவைகளையும் சட்டவிரோதமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கின்றதுமான விடயத்தானத்திலிருந்து விடுவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தேடுபொறிகள்; சமூக ஊடக தளங்கள் போன்ற பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை வழங்கும் இணைய சேவைகள்; ‘ஒன்லைன்’ மன்றங்கள்; சில ‘ஒன்லைன்’ விளையாட்டுகள் மற்றும் ஆபாச உள்ளடக்கத்தை வெளியிடும் அல்லது காட்சிப்படுத்தும் தளங்கள் ஆகியவற்றுக்கு பிரயோகிக்கப்படும்.
சட்டத்தைப் பின்பற்றாத சமூக ஊடக நிறுவனங்கள் கடுமையான அபராதத்தை எதிர்கொள்கின்றன. Ofcom என்ற கட்டுப்பாட்டு நிறுவனமானது, அவற்றுக்கு £18 மில்லியன் அல்லது அவற்றின் உலகளாவிய வருடாந்த வருமானத்தில் 10% என இவற்றில் எது கூடியதோ அதை அபராதமாக விதிக்கலாம்.
எவ்வாறாயினும், குழந்தை பாலியல் துஷ்பிரயோக விடயதானம் தொடர்பான சகல மறைக்குறியீடாக்கப்பட்ட தகவல்களை ‘ஸ்கான்’ செய்து, அவற்றைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிக்கையிட வேண்டும் என சேவை வழங்குநர்களை வேண்டியுள்ளதனால், மக்களின் தனியுரிமையைச் சமரசம் செய்யும் ஒரு வாசகத்தின் மீது எதிர்ப்பை சட்டமூலம் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரம் ஒரு மன்றத்தில் உரையாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ், உத்தேச ‘ஒன்லைன்’ பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து கரிசனைகளை வெளிப்படுத்தினார். இந்தச் சட்டமூலம் இலங்கையில் குழந்தைகளைப் பாதுகாப்பதாக கூறி பொதுமக்களைத் தவறாக வழிநடத்துகிறது என்றும், அரசியல்வாதிகளையும் மற்றும் அதிகாரிகளையும் விமர்சனங்களில் இருந்து பாதுகாப்பதே இதன் உண்மையான நோக்கம் என்றும் அவர் வாதிட்டார். குற்றவியல் ‘ஒன்லைன்’ நடவடிக்கைகளைத் திறம்பட எதிர்கொள்ள கணினி குற்றச்சட்டம் போன்ற தற்போதைய சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன என்று அவர் கூறினார். தேவைப்பட்டால், ஏதேனும் பலவீனங்களை அல்லது குறைபாடுகளை சரிசெய்ய இந்தச் சட்டங்கள் திருத்தப்படலாம்.
அவரது வாதத்திற்கு தகுதி உள்ளது. இந்த வாரம், கட்டணமொன்றுக்காக சமூக ஊடகத் தளங்களில் தங்கள் நிர்வாணக் கோலத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் 11 இளம் பெண்கள் மீது குற்றஞ்சுமத்துவதற்காக ஏற்கனவே உள்ள சட்டங்களைப் பொலிஸ் பயன்படுத்தியது. அதிர்ச்சியூட்டும் வகையில், அவர்களின் வாடிக்கையாளர்களில் சிலர் பாடசாலை மாணவர்களாக விளங்கியதுடன், அவர்கள் இந்தக் காட்சிகளுக்கு தங்கள் கல்விக் கட்டணத்தையே பயன்படுத்தியுள்ளனர்.
பிரச்சனையானது சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்களைப் பற்றியது அல்ல, ஆனால், மோசமான சட்டங்களை உருவாக்குவதுதான். பெரும்பாலும், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க அல்லது தங்கள் தவறுகளை நியாயப்படுத்த பயன்படுத்தக்கூடிய ஓட்டைகளை அடையாளங்கண்டு மூடும் நோக்கத்துடன் வரைவைத் திருத்துவதற்கு சிறிதளவு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஓட்டைகள், வேண்டுமென்றோ அல்லது கவனக்குறைவின் காரணமாகவோ கவனிக்கப்படாமல் விடப்பட்டால், இறுதியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் சமூகத்தின் செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்த பிரிவினர் ஆகியோர் குற்றங்களைத் தடுப்பதற்கான உத்தேசத்திலான சட்டங்களை மீறிய பின்னர், அதிக கட்டணம் அறவிடும் வழக்கறிஞர்களின் உதவியுடன் நீதியைத் தவிர்க்க உதவுகின்றன.
தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கங்களால் முன்வைக்கப்பட்ட பல சட்டமூலங்கள் முழுமையான பொது நுண்ணாய்வு, கருத்தாடல் மற்றும் விவாதம் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படவில்லை என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். ஒரு சட்டம் நியாயமானதாகவும் அத்துடன் பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான சிறந்த வழி, அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மனித உரிமைகளுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்கும் குடிமை எண்ணத்திலான சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோருடனும் மற்றும் சிவில் சமூகக் குழுக்களுடனும் அரசாங்கம் முதலில் விவாதிப்பதாகும். ஒரு முன்மொழியப்பட்ட சட்டத்தின் உத்தேசமான ஆபத்துக்களை முன்னிலைப்படுத்துவதில் ஊடகங்களும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். பொதுமக்களிடம் பின்னூட்டலைத் திரட்டுவதற்கு பொது செவிமடுத்தல்களும் நடத்தப்படலாம். அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தின் அல்லது ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் வாழ்தகவுக்கன்றி, மக்களினதும் மற்றும் தேசத்தினதும் நல்வாழ்வை இறுதி நோக்கமாகக் கொண்டு, சட்டமியற்றும் செயல்முறை முழுவதும் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, அத்தகைய பொறிமுறையானது இலங்கையின் சட்டமியற்றும் செயல்முறையில் அரிதாகவே காணப்படுகிறது. ஒரு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னரே பெரும்பாலும் விவாதங்கள் நடைபெறுகின்றன. மோசமான வரைவுச் சட்டத்திற்கு எதிராக அது இயற்றப்படுவதற்கு முன்பு உயர் நீதிமன்றத்தில் மக்கள் நிவாரணம் பெறுவதற்கு அரசியலமைப்பு ஏற்பாடொன்று உள்ளது. புதிய சிங்கப்பூரின் சமூக ஊடக சட்டமூலத்தின் ஏற்பிசைவொன்றே ‘ஒன்லைன்’ பாதுகாப்புச் சட்டமூலமாகும். ஆனால், அரசியல் நோக்கங்களுக்காகச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்கும் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கேள்விக்குரிய சேர்ப்புக்களைக் கொண்டுள்ளது என அறியப்படுகிறது. சிங்கப்பூர் சட்டம் வெளிப்படையான முறையில் பொது ஆலோசனையின் முழுமையான செயல்முறைக்குப் பின்னரே நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சர்வதேசச் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப சட்டங்களை இயற்றுவது பொதுமக்களுக்கும் மற்றும் தேசத்துக்கும் சிறப்பாகச் சேவையாற்றும்.
அமீன் இஸ்ஸடீன்
29 செப்டம்பர் 2023 ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.