Photo, THE CITIZEN
இலங்கையின் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் (Online Safety Act) வரைவு கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்டது. அது மிகக் கடுமையான, ஆபத்தான ஒரு வரைவாக இருந்து வருகிறது. அது குறித்து ஆச்சரியப்படுவதற்கோ, திடுக்கிடுவதற்கோ எதுவுமில்லை. இந்த வரைவுக்கான ஆதரவு குறித்து நான் அறிந்திருக்கவில்லை. ஆனால், இலங்கையில் இருந்த பொழுது சிங்கள மொழி ஊடகங்களை நான் கவனித்த அளவுக்கு இப்பொழுது பார்க்காமல் இருப்பதும் இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். இந்த வரைவுச் சட்டத்தின் ஏற்பாடுகள் வேண்டுமென்றே மிகவும் பரவலான விதத்திலான ஏற்பாடுகளாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சில பாகங்களை புரிந்து கொள்வதும் மிகக் கடினமானதாக உள்ளது. திட்டமிட்ட விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் மிகக் கொடிய சட்டப் பிரிவுகளிலும் பார்க்க, இவ்விதம் தெளிவற்றவையாக இருக்கும் பிரிவுகள் ஆபத்தானவையாகும். இந்த வரைவுச் சட்டத்தில் எமக்கு சுத்த அபத்தமானவையாகத் தெரியும் விடயங்கள் விமர்சன ரீதியான எதிர்க் கருத்துக்களின் குரல்வளையை நசுக்குவதற்கு அதனைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு முழுமையான விதத்தில் பொருள் பதிந்ததாக இருந்து வர முடியும். தளர்ச்சியான விதத்தில் வரையப்படும் சட்டங்கள் சிறப்பான சந்தர்ப்பவாதத்துக்கும், விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ற விதத்தில் அவற்றுக்கு பொருள்கோடலை வழங்குவதற்கும் தாராளமாக இடமளித்து வரும் பின்னணியிலேயே இதனை நோக்க வேண்டும். இறுதியாக, சமூக ஊடகங்களையும் உள்ளடக்கிய விதத்தில் இலங்கையில் ஒன்லைன் தொடர்பாடல்களை நிர்வகிப்பதற்கான எந்தவொரு உத்தேச சட்டவாக்கத்தையும் அவ்வளவு சீக்கிரமாக நாங்கள் மதிப்பீடு செய்ய முடியாது. இலங்கை அரசு தொடர் கண்காணிப்பை மேற்கொண்டு வரும் ஓர் அரசாக இருந்து வருவதுடன், 2022 இல் நாட்டில் இடம்பெற்ற அறகலய மக்கள் எழுச்சிக்கு மத்தியிலும், முக்கியமாக நாடு தொடர்ந்தும் வளர்ந்து வரும் ஜனநாயகக் குறைபாடுகளின் சுமைகளைக் கொண்டிருக்கிறது. இந்த சிறைப்படுத்தும் அரசொன்றுடன் சம்பந்தப்பட்ட இந்த துர்நாற்றம் வீசும் உடல் கடந்த பல தசாப்தங்களாக நீதித் துறை பொறிமுறைகளுக்கு வெளியிலான கொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் சித்திரவதை என்பவற்றுக்கு நன்கு பிரசித்தம் பெற்றதாக இருந்து வந்துள்ளது. எனவே, இந்த வரைவுச் சட்டத்தின் பிரயோகத்தையும், அதன் உண்மையான நோக்கத்தையும் புரிந்து கொள்வதற்கு இந்தப் பின்புலம் குறித்த தெளிவு அவசியமாகும்.
ஒரு பரவலான வாசிப்பில் இலங்கையில், குறிப்பாக அறகலயவுக்குப் பிற்பட்ட கால கட்டத்தை நோக்கும் பொழுது, வன்முறையுடன் கூடிய தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் என்பவற்றை எதிர்கொள்வதற்கான ஒழுங்குவிதிகளையும் உள்ளடக்கிய விதத்தில், பல்வேறு பிரச்சினைகளையும் இலக்காகக் கொண்ட ஒழுங்குவிதிகள் மற்றும் முன்மொழிவுகள் என்பன தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருவதனை பார்க்க முடிகின்றது. இது உபாய ரீதியான ஒரு விடயமாக இருந்து வருகின்றது என நான் நம்புகிறேன். இந்தச் சட்ட வரைவுகள் முன்வைக்கப்படுவதனை உடனடுத்து எதிர்ப்புக் குரல்கள் எழுப்புபவர்களில் யார் தொடர்ந்து அவற்றுடன் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில், அவற்றிலிருந்து விலகிக்கொள்ள முடியும் என்பதனை அந்த வரைவுகளைத் தயாரிப்பவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். இவ்விதம் ஒதுங்கிக் கொள்ளும் நிலை, இன்றைய இலங்கையில் பலர் சந்தித்து வரும் யதார்த்த நிலையைப் பொறுத்தவரையில் மக்களின் இருப்புடனும் சம்பந்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியுடன் ஏற்பட்ட அந்தத் திடீர் எதிர்ப்புகளை இவை ஒத்தவையாகும் என்பதனை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். கால இடைவெளியின்றி தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக மோசமான சட்டங்களை முன்மொழியும் செயல்பாடு, மக்கள் மத்தியில் மனச் சோர்வை போசித்து வளர்க்கும் நோக்குடன் உபாய ரீதியில் உருவாக்கப்பட்டு வரும் ஒரு செயன்முறை என நோக்க முடியும். அந்த நிலையில் ஒரு சிலரைத் தவிர, ஏனையவர்கள் இந்த எதிர்ப்புச் செயற்பாடுகளிலிருந்து விலகிக் கொள்வார்கள். ஆகவே, இத்தகைய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கென தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலர் வன்முறையுடன் கூடிய பழிவாங்கல்களை எதிர்கொள்ளக் கூடிய நிலையில் இருந்து வருகிறார்கள். இதனுடன் அநேகமாக மற்றொரு உத்தியும் இணைந்திருக்க முடியும். அதன் பிரகாரம், அடிப்படை உரிமைகளை வெளிப்படையாகவே அவமதிக்கும் அருவருப்பான ஒரு வரைவுச் சட்டம் அல்லது சட்டம் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே அதை முன் வைப்பவர்களின் இரகசிய விருப்பமாகும். அதாவது, எதிர்காலத்தில் இடம்பெறக் கூடிய ஒரு பேரனர்த்தத்துக்கு அல்லது அழிவுக்கு இத்தகைய சட்டங்களுக்கு எதிர்ப்புக் குரல்கள் எழுப்புபவர்கள் மட்டுமே காரணமாக இருந்து வருகின்றார்கள் என்பதனை எடுத்துக் காட்டுவதற்கான ஒரு முயற்சியாக மேற்கொள்ளப்படுகின்றது. தீவிர எதிர்ப்பு நிலையுடன் செயற்படும் ஆத்திரமடைந்த, கோபமான, பதற்றமான ஒரு சமூகப் பிரிவினரின் தாக்குதல்களின் கீழ் சிவில் சமூகத்தின் எதிர்ப்பு கணிசமான அளவில் பலவீனமடையும். அந்தப் பின்னணியில், அது தொடர்பான கடுமையான விமர்சனத்தை மிகவும் எளிதில் நிராகரித்து விட முடியும். அதே வேளையில், தேசிய பாதுகாப்பு நிர்ப்பந்தங்களின் போர்வையில் அவற்றிலும் பார்க்க கடுமையான சட்டதிட்டங்களை நாடாளுமன்றத்துக்கூடாக அவசர அவசரமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
இத்தகைய கரிசனைகள் ஒரு புறமிருக்க, ஒன்லைன் பாதுகாப்புச் சட்ட வரைவு, இலங்கையில் இடம்பெறும் ஒன்லைன் ஊடான தீங்குகள் தொடர்பாக இடம்பெற்று வரும் மிக முக்கியமான மற்றும் தொடர்ச்சியான உரையாடலை கவலையளிக்கத்தக்க விதத்தில் நிலைமாற்றம் செய்கிறது – இந்த உரையாடல் தொடர்பாக ஏற்கனவே கணிசமான அளவிலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது இதனை பக்கச்சார்பான, குறைபாடுகளுடன் கூடிய, சாரத்திலும் பார்க்க வெறும் சத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் உரையாடலாக மாற்றியமைத்திருக்கிறது. கோட்பாட்டிலும் வெறும் தோரணைகள் அதிகமாக உள்ளன. எத்தகைய தர்க்கபூர்வமான கலந்தாலோசனைகளும் இல்லாமல் அல்லது முழுமையாகவே தண்டனை விலக்குரிமை, வன்முறை மற்றும் கண்காணிப்பு என்பன நிலவி வரும் ஒரு பின்புலத்தை கவனத்தில் எடுப்பதற்கான எத்தகைய வேறு வழிமுறைகளையும் மேற்கொள்ளாமல் இந்த வரைவுச் சட்டம் சாதித்துக் கொள்ள முடியாத, சாதித்துக் கொள்வதற்குச் சாத்தியமற்ற குறிக்கோள்களை முன்வைக்கின்றது. ஒன்லைன் பாதுகாப்பு என்பது ஒருபோதும் ஒரு தனித்த ஒரு நோக்கத்தைக் இலக்காகக் கொண்டு எடுத்துவரப்படவில்லை. எவ்வாறிருப்பினும், இலங்கை அரசாங்கம் எம்மை அது ‘இந்த’ நோக்கத்திற்காக மட்டும்தான் கொண்டுவரப்படுகிறது என்று என்பதனை நம்பச் செய்வதற்கே முயற்சித்து வருகின்றது. அதன் காரணமாக, இச்சட்டம் இணையத்துக்கூடாக தீங்குகளை எதிர்கொண்டு வரும் சிறுவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பதற்கான ஒரு சட்டம் என்ற போர்வையில் வஞ்சகமான விதத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இவை பெருமளவுக்கு விரும்பத்தக்க குறிக்கோள்களாக இருந்து வரும் அதே வேளையில், இவ்வரைவுச் சட்டம் தெளிவாகவே சந்தர்ப்பவாத, விருப்பு வெறுப்புக்களுடன் கூடிய மற்றும் குறிப்பாக தேர்தல்கள் நிகழப்போகும் கால கட்டங்களில் அடக்குமுறை வழிமுறைகளைக் கொண்ட ஒரு டிரோஜன் குதிரையாகவே (Trojan Horse) இருந்து வருகின்றது.
இந்த உத்தேச சட்டவாக்கம் தொடர்பாக பல அடிப்படை பிரச்சினைகள் காணப்படுகின்றன. இலங்கையில் மித மிஞ்சிய அளவிலான குற்றச் செயல்கள் ஒரு அனுமானம் சார்ந்த அபாயமாக இருந்து வரவில்லை. அறகலயவின் போதும், அதன் பின்னரும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் (ICCPR) ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலில், இலங்கையில் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு இயற்றப்பட்டு, வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் அந்த உரிமைகளை உதாசீனம் செய்வதற்கும், செயற்பாட்டாளர்களை சிறையிலடைப்பதற்கும், அதே விதத்திலான அல்லது அதிலும் பார்க்க மோசமான ஒரு தலைவிதி ஏற்பட முடியும் என மேலும் பலரை அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்ற கசப்பான யதார்த்தத்தை இங்கு நினைவூட்ட வேண்டும். எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை மட்டுமன்றி கார்ட்டூன் சித்திரக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், டிஜிட்டல் கலைஞர்கள், அங்கத (நையாண்டி) எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கும் எந்த ஒரு நபரையும் வேட்டையாடுவதற்கான முன்னெப்பொழுதும் இருந்திராத விதத்திலான ஓர் அடித்தளத்தை இச்சட்டம் அரசுக்கு வழங்கும். உண்மையிலேயே மாணவர்கள், ஓய்வூதியதாரர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்று அரச சார்பற்ற வலையமைப்புக்களுடன் சம்பந்தப்பட்டிராதவர்கள் ஆகியோரை பின்தொடர்வதற்கு இந்த வரைவுச் சட்டம் இடமளிக்கின்றது.
நன்கு அறியப்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களிலும் பார்க்க மோசமான தாக்குதல்களை அவர்கள் மீது நிகழ்த்துவதற்கு இது இடமளிக்கின்றது. இச்சட்டம் தன்னிச்சையான விதத்தில் பிரயோகிக்கப்பட முடியும் என்பதும், அது மிகவும் கொடூரமானது என்பதும் இங்குள்ள விடயமாகும். வரைவுச் சட்டத்தின் தெளிவற்ற தன்மை அறியாமை காரணமாக இடம்பெற்றிருக்கின்றது எனக் கருத முடியும். இந்த வரைவு அதன் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், பழிவாங்கக் கூடிய விதத்தில் அதன் பிரயோகம் இடம்பெறுவதற்கும், தத்தமது நலன்களுக்கு ஏற்ற விதத்தில் அதற்கு பொருள்கோடல் வழங்குவதற்கும் அது வாய்ப்பளிக்கும். மேலும், எதிர்ப்புக் குரல்களை மௌனிக்கச் செய்வதற்கான ஒரு உரிமத்தையும் அது வழங்கும். மேலும், இந்த வரைவுச் சட்டம், சட்டத்தை பலப்படுத்துவதற்குப் பதிலாக, பெருமளவுக்கு பிழையாக வழிநடத்தப்பட்ட, தூரநோக்கற்ற பார்வையுடன் கூடிய ஒரு புரிதலையே கொண்டுள்ளது. தனது பாவனையாளர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடுபவர்களுக்கு உதவியோ அல்லது ஒத்தாசையோ புரியும் விடயம் தொடர்பாக தமது சொந்த நாடுகளின் நியாயாதிக்கங்களில் கம்பனிகள் பதிலளிக்க வேண்டியவையாக இருந்து வருகின்றன. இந்த நிலையில், அத்தகைய கம்பனிகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரசித்தி பெற்றிருக்கும் (இலங்கையைப் போன்ற) ஒரு நாட்டை பொருட்படுத்தும் என்ற நம்பிக்கையில் இச்சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. Silicon Valley கம்பனிகள் மனித உரிமைகளை மேம்படுத்தும் விடயத்தில் அர்த்தபூர்வமான விதத்தில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனவா என்பது குறித்து ஒரு அவநம்பிக்கை நிலவிவரும் அதே வேளையில், 2018 இன் தொடக்கத்தில் இலங்கையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் பின்னர், பேஸ்புக் (Meta) சுயாதீனமான ஒரு மனித உரிமை மதிப்பீட்டை மேற்கொண்ட உலகின் முதலாவது நாடு இலங்கையாக இருந்து வந்தது என்ற விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தக் கம்பனி வெறுமனே மற்றவர்களின் கட்டளைகளைப் பின்பற்றப் போவதில்லை. அத்தகைய கட்டளைகள் கம்பனித் துறையின் பொறுப்புக்களுடன் பொருந்திச் செல்லாதவையாக இருந்து வரும் அதே வேளையில், உரிய ஜாக்கிரதை வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுடனும் பொருந்திச் செல்லாதவையாக இருந்து வருகின்றன. ‘நிவ்யோர்க் டைம்ஸ்’ பத்திரிகையில் 2018 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டதைப் போன்ற மற்றொரு முதல் பக்கச் செய்திக் கட்டுரை இதற்கூடாக தோன்றக் கூடிய ஆபத்தும் இருந்து வருகின்றது. அதாவது, சமூக ஊடகக் கம்பனிகளின் உற்பத்திகளின் பாவனையாளர்களை மௌனிக்கச் செய்வதற்கு, சிறையிலடைப்பதற்கு, கொலை செய்வதற்கு, சித்திரவதை செய்வதற்கு அல்லது கடத்திச் செல்வதற்கு இடமளிக்கும் செயல்பாடுகளை தணிப்பதில் அக்கம்பனிகளின் வகிபாகத்தையும் இது எடுத்துக் காட்டுகின்றது. இந்த வரைவுச் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டிருக்கும் விடயங்களுக்கு எந்தவொரு இடைநடுவர் நிறுவனமும் அங்கீகாரத்தை வழங்க மாட்டாது.
இந்த வரைவுச் சட்டம் ஒன்றன் பின் ஒன்றாக வந்த ராஜபக்ஷ அரசாங்கங்கள் அறிமுகம் செய்து வைத்த அடக்குமுறை இயல்பிலான வழிமுறைகளை புரிந்து கொள்ளத் தவறியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சரத் பொன்சேகாவுக்கு என்ன செய்தது என்ற விடயத்தை 2009 ஆண்டளவிலேயே ஊடக அறிக்கைகள் எடுத்துக் காட்டியிருந்தன. மேலும், “பொன்சேகாவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள் என அறியப்பட்டிருந்த அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர்கள் போன்றவர்களும் கூட” குறிவைக்கப்பட்டிருந்தார்கள். இது தொடர்பாக 2010ஆம் ஆண்டில் குறுஞ் செய்திகளுக்கூடாகவும், பேஸ்புக்கிலும் “பொய்யான வதந்திகளைப் பரப்புவதாகக் கூறி” முதல் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. அதே ஆண்டு ஜனவரி மாதம் “தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய விதத்தில் நடந்து கொள்ளும் எந்தவொரு நபரையும் கைது செய்வதற்கு அரசாங்கம் தயங்க மாட்டாது” என பாதுகாப்புத் துறை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருந்தார். மேலும், “கையடக்கத் தொலைபேசிகளுக்கூடாக பொய்யான செய்திகளை அனுப்பி வைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் இலங்கையின் இறைமை என்பவற்றுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் எந்தவொரு நபரும் கைது செய்யப்படுவார் என்றும், அத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் கூறினார். ஆபாச படங்கள், குற்றச் செயல்கள், வெறுப்பு மற்றும் தீங்கு என்பவற்றை தூண்டுதல் போன்ற பிரச்சினைகளைக் கையாள்வதற்கென 2005ஆம் ஆண்டு தொடக்கம் ஒன்லைன் ஒழுங்குவிதிகளை அல்லது சட்டங்களை அறிமுகம் செய்து வைப்பதற்கென மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கும் ஒவ்வொரு முயற்சியையும் நான் கவனமாக ஆய்வு செய்திருக்கிறேன். இவற்றில் எவையும் நல்லெண்ணத்தில், லிபரல் ஜனநாயக அடிப்படைகள் அல்லது மிகவும் வலுவான காரணங்கள் என்பவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.
தற்போதைய வரைவு Bots மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட போலி நடத்தைகள் (coordinated inauthentic behaviours) என்பவற்றை கவனத்தில் எடுப்பதற்கான வழிமுறைகளை உத்தேசிக்கின்றது. அதன் மூலம் அது ஒரு கேலிக்கூத்து பிராந்தியத்துக்குள் பிரவேசிக்கின்றது. கலாநிதி பட்டத்துக்கான ஆராய்ச்சியை உள்ளடக்கிய விதத்தில் CIB என்ற இந்த விடயத்தை நான் ஆய்வு செய்திருக்கின்றேன். Metaவும் கூட ஜனவரி 6 கெப்பிட்டல் ஹில் கிளர்ச்சிகளின் பின்னரே அதன் உற்பத்திகள், அதன் தளங்கள் என்பன இணையத்துக்கு வெளியிலான (Offline) வன்முறைக்கான கருவிகளாக பயன்படுத்தப்பட்டு வரும் விடயத்தை கவனத்தில் எடுத்திருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், பின்னர் மேலைத்தேய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட, பெருமளவுக்கு அதி நவீன இயல்புகளைக் கொண்ட உத்திகளுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை ஒரு சிறு துளியாக மட்டுமே இருந்து வருகின்றது. இந்தப் போக்குகளை இனங்கண்டு கொள்வதற்கு ஒரு தொழில்நுட்ப ரீதியான நிபுணத்துவம் அவசியமாகும். அது மிகத் தீவிரமான விதத்தில் நாடு, மொழி, உள்ளடக்கம் மற்றும் திட்டவட்டமான பின்புலம் என்பவற்றிலும், அதேபோல, குறிப்பிட்ட சமூக ஊடகத் தளம் என்பவற்றிலேயே தங்கியுள்ளது. பேஸ்புக் பங்கங்களிலிருக்கும் CIB இன்ஸ்டர்கிராமிலிருக்கும் CIB யிலும் பார்க்க வேறுபட்டதாகும். Meta விலிருக்கும் CIB டுவிட்டரிலிருக்கும் CIB யிலும் பார்க்க வேறுபட்டதாகும். இலங்கையில் இந்தத் தளங்கள் அல்லது விடயப் பரப்பு தொடர்பான நிபுணத்துவம் எனக்குத் தெரிந்த வரையில் இருந்து வரவில்லை. அந்த நிபுணத்துவ அறிவு இல்லாத காரணமாக, இந்த அம்சம் குறித்த வரைவுச் சட்டத்தின் பிரிவு மிகவும் மோசமான விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் பொருத்தமற்ற விதத்தில் செயற்படுத்தப்பட்டால் அல்லது மிகவும் தளர்ச்சியான விதத்தில் அதற்கு வரைவிலக்கணம் வழங்கப்பட்டால் அதன் விளைவாக தவிர்க்க முடியாத விதத்தில் பெருந்தொகையான பாவனையாளர்கள் தாம் செய்யாத குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்க முடியும் என்பதனை அவதானிக்க முடிகிறது; அல்லது அதிலும் பார்க்க மோசமாக அரசு அனுசரணையுடன் கூடிய விதத்தில் ஏனைய செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் அஜாக்கிரதையான விதத்தில் ஒரு பாகமாக இருந்து வர முடியும்.
இதுவும் கூட அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. நாமல் ராஜபக்ஷ இலங்கையில் முதன் முதலில் Bots களைப் பயன்படுத்தியவர் ஆவார். நானும் இணை ஆய்வாளராக இருந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சி 2018 ஆம் ஆண்டில் பின்வரும் விதத்தில் குறிப்பிட்டிருந்தது: “இலங்கையைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட ஒரு அரசியல் சித்தாந்தம், கருத்து, நபர், கட்சி அல்லது செயன்முறை என்பவற்றை மேம்படுத்துவதற்காக சமூக ஊடகங்களை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் விடயத்தில் அரசாங்கத்தின் கைகள் பெருமளவுக்கு ஓங்கியிருக்கவில்லை. குறிப்பாக, தேர்தல் திணைக்களம் அல்லது வேறு ஏதேனும் சுயாதீனமான தேர்தல் வன்முறை கண்காணிப்பு அமைப்புக்கள் அத்தகைய விடயங்களை கண்காணித்து கவனத்தில் எடுப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆற்றலை அபிவிருத்தி செய்து கொள்வது ஒருபுறமிருக்க, அந்த விடயங்களைக் கற்பனை செய்து கூட பார்த்திருக்கவில்லை.” 2018 கலவரங்களின் போதும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னரும், 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும், அறகலய காலப் பிரிவின் போதும் CIB தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அறகலய காலப் பிரிவின் போது அந்த இயக்கத்தின் செய்திகளையும், ஒருமித்த இயல்பையும், வரலாற்று முக்கியத்துவத்தையும் உதாசீனம் செய்வதற்கென மேற்கொள்ளப்பட்ட CIB முயற்சிகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டின் முதல் பாதி காலப்பகுதியில் பேஸ்புக்கைப் பயன்படுத்தி ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், அவை முன்னெப்பொழுதும் இருந்திராத அளவிலான உற்பத்தி விகிதங்களைக் கொண்டிருந்தன. இந்தப் பிரச்சாரம் தொடர்ச்சியாக கவனத்திலெடுத்த விடயம் ஜனாதிபதியை மேம்படுத்துவதும், நாடாளுமன்றம் மற்றும் தேர்தல்கள் என்பவற்றின் வகிபங்கினை உதாசீனம் செய்வதுமாகும். பேஸ்புக்கில் மீண்டும் மீண்டும் இடம்பெற்ற பதிவுகள் நாடாளுமன்றத் தேர்தல்களை இல்லாமல் செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் விதத்திலான ஒரு பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு முயற்சித்தன. அப்போது பதவியிலிருந்த ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ஒரு இராணுவ ஆட்சியை நடத்துவது (நாட்டை இராணுவமயப்படுத்துவது) போதுமானது என்ற கருத்தை அவை முன்வைத்தன. இந்தப் பிரச்சாரத்தின் வேகம் மற்றும் வலிமை என்பன மிகவும் உயர் மட்டங்களில் காணப்பட்டன.
2014 தொடக்கம் CIB தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதோ ஒரு விதத்தில் ராஜபக்ஷர்கள் அல்லது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் சமூக ஊடகத் தளங்களில் முன்னணியில் இருந்து வரும் விடயம் எடுத்துக் காட்டப்பட்டது. சமூக ஊடகங்களில் செல்வாக்குடன் செயல்படுபவர்கள் அந்தக் குடும்பத்துக்கும், அவர்கள் சம்பந்தப்பட்ட சமூக ஊடக வலையமைப்புக்களுக்கும் சார்பானவர்களாக இருந்து வந்ததுடன், அவர்களுக்கான பதிலிகளாகவும் (Proxies) செயற்பட்டு வந்தார்கள். பாம்புக் குட்டிகள் தொடக்கம் பொது இடங்களில் சுவரோவியங்களை வரைவது வரை சமூக ஊடகங்களின் மீது உயர் அளவில் பக்கச்சார்பான ஒரு நிகழ்ச்சிநிரலை உருவாக்கும் CIB இன் வலிமை தென்பட்டது. சிங்கள பௌத்த அரசொன்றின் கட்டமைப்பு ரீதியான இனவாதத்துக்கு ஆதரவளிக்கும் ஒரு சமூக போக்கு ஊடகங்களில் நன்கு ஸ்தாபிதமாகியிருந்தது. நியூசிலாந்தில் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய்த் தகவல்கள் தொடர்பாக நான் இப்பொழுது விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறேன். ஆனால், அந்த ஆய்வின் போது, பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு எடுத்துக் காட்டிய அதி நவீன CIB மட்டத்துக்கு இணையான எத்தகைய ஒரு நிலைமையும் இதுவரையில் தெரிய வரவில்லை. உண்மையிலேயே இது எமது நாட்டில் உண்மைகள் சிதைக்கப்படும் நிலைமையும், தகவல் ஒழுங்கீனங்களும் எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளன என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. அறகலயவின் பின்னரும் எதேச்சாதிகாரப் போக்குக்கு ஆதரவளிக்கும் விதத்தில் வேண்டுமென்றே பொய்த் தகவல் பரப்பப்படும் நிலை தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. உத்தேச சட்டத்தின் பிரயோகம் இந்தப் பிரச்சார கட்டமைப்பை அர்த்தபூர்வமானதாகக் கவனத்திலெடுக்கும் என நம்புவது வெறுமனே கேலிக் கூத்தாகும்.
கண்காணிப்புப் பொறிமுறையொன்றின் மூலம் இவை அனைத்தும் மேலும் சிக்கலாக்கப்பட்டுள்ளன. இலங்கையில் சுமார் பதினைந்து வருட காலமாக இந்தக் கண்காணிப்புப் பொறி விஸ்தரிக்கப்பட்டு வந்திருக்கும் விதம் குறித்து நான் மிகக் கவனமாக ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறேன். சமூக ஊடக கண்காணிப்பு செயற்பாடுகளில் சீனா சம்பந்தப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டும் விதத்திலான முதலாவது ஊடக அறிக்கைகள் 2010 ஆம் ஆண்டிலேயே வெளிவந்திருந்தன. 2018 ஆம் ஆண்டில் Meiya Pico என்ற ஒரு சீன டிஜிட்டல் ஆய்வுக் கம்பனி 60 இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கென கொழும்பில் ஒரு செயலமர்வை நடத்தியிருந்தது. ஏற்கனவே இக்கம்பனியின் தொழில்நுட்பம் Uyghurs மக்களை இலக்கு வைத்து பயன்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய உபாய ரீதியான கொள்கை நிறுவனம் பின்வரும் குறிப்பை முன்வைத்துள்ளது: “இந்தச் செயலமர்வு டிஜிட்டல் நுண்ணாய்வுகள் மற்றும் Meiya Pico கம்பனியின் “Smart Forensic Solution” என்ற செயற்பாடு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. இந்தச் செயலமர்வில் பங்கேற்றவர்கள் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, CERT மற்றும் அவசரகால எதிர்வினைத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரையும் உள்ளடக்கியிருந்தனர்”. ஏன்? அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டது ஏன்? அந்தச் சந்தர்ப்பத்தில் இது நடத்தப்பட்டது ஏன்? இதனுடன் தொப்புள்கொடி உறவு கொண்டிருக்கும் விடயம் இலங்கையில் சீனாவின் உரிய விதத்தில் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படாத செல்வாக்கு செயற்பாடுகள், (IO) ஆகும். சீனா சமூக ஊடகங்களில் உத்தியோகபூர்வமான மற்றும் அதே நேரத்தில் போலியான கணக்குகளை ஒரு சேரப் பயன்படுத்துவதுடன், அது ‘Wolf Worrior Diplomacy’ என்ற இராஜதந்திர செயற்பாட்டுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனா சமூக ஊடகங்களை தந்திரமாகக் கையாண்டு வந்திருக்கும் விதம் பரவலான உபாய ரீதியான இயல்பைக் கொண்டதாகும். வேறு எந்தவொரு முன்னணி வெளிநாட்டு வல்லரசை விடவும் அதன் தொழில்நுட்பம் அதிநவீன இயல்பைக் கொண்டதாக இருந்து வந்தது. ஆனால், இந்த வரைவுச் சட்டம் இவை எதனையும் கவனத்திலெடுக்கவில்லை.
இந்த வரைவுச் சட்டம் அதன் உள்ளடக்கத்திலும், வடிவத்திலும் எந்த அளவுக்கு சிங்கப்பூரின் POFMA சட்டத்தின் ஒரு நேரடிப் பிரதியாக இருந்து வருகின்றது என்ற விடயம் குறித்த எந்தவொரு குறிப்பையும் நான் அவதானிக்கவில்லை. சிங்கப்பூரின் அந்தச் சட்டம் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் பின்வரும் அவதானிப்பை முன்வைத்துள்ளது: “இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் தகவல் ‘பொய்யானது’ எனப் பிரகடனம் செய்வதற்கு தனியொரு அமைச்சருக்கு அது அனுமதியை வழங்குகிறது. பொதுமக்களின் நலன் கருதி அவசியமானது எனக் கருதப்படுமிடத்து அந்த உள்ளடக்கத்தை ‘திருத்துவதற்கு’ அல்லது ‘நீக்குவதற்கான’ கட்டளையையும் அவர் வழங்க முடியும்.”
இலங்கையின் வரைவுச் சட்டம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: “முப்பத்திரண்டாம் பிரிவின் கீழ், செய்யப்பட்ட வெளிப்படுத்துகையொன்று எத்தேதியன்று பயனுள்ளதாக வருகின்றதோ அத்தேதியன்று தொடங்கும் விதித்துரைக்கப்பட்ட காலப் பகுதியொன்றின் பின்னர், வெளிப்படுத்தப்பட்ட ஒன்லைன் அமைவிடமொன்றின் மீது டிஜிட்டல் விளம்பரப்படுத்தல் இடையீட்டாளர் ஒருவர் உள்ளடக்குகின்ற அல்லது உள்ளடக்குவதனைச் செய்திருக்கின்ற ஏதேனும் கட்டணம் செலுத்தப்பட்ட உள்ளீடு, வெளிப்படுத்தப்பட்ட ஒன்லைன் அமைவிடத்தின் மீது இலங்கையில் அறிவிக்கப்படுவதில்லை என உறுதிப்படுத்துவதற்கு (இலங்கையின் உள்ளும், இலங்கைக்கு வெளியேயும்) அவர் நியாயமான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.” சிங்கப்பூரின் POFMA சட்டம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: “ஒரு விதித்துரைக்கப்பட்ட டிஜிட்டல் விளம்பரத்தில் இடையீட்டாளர் ஒருவர் அல்லது விதித்துரைக்கப்பட்ட இணைய இடையீட்டாளர், அவர் ஓர் டிஜிட்டல் விளம்பரப்படுத்தல் இடையீட்டாளராக அல்லது ஓர் இணைய இடையீட்டாளராக செயற்படும் பொழுது, அச்செயற்பாடு பாகம் 3 பணிப்புரையின் அல்லது பாகம் 4 பணிப்புரையின் விடயமாக இருந்து வரும் தலைப்பின் கூற்றை அல்லது அம்சங்களை உள்ளடக்கும் ஒரு ஒன்லைன் அமைவிடத்துக்கு விளம்பரம் வழங்குவதாக அல்லது மேம்படுத்துவதாக இருக்கும் ஏதேனும் கட்டணம் செலுத்தப்பட்ட உள்ளீடு சிங்கப்பூரில் தொடர்பாடல் மேற்கொள்ளப்படுவதற்கு வசதி செய்து கொடுப்பதில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு (சிங்கப்பூருக்கு உள்ளேயும் வெளியேயும்) அவர் நியாயமான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.”
சிங்கப்பூரின் சட்டத்தை இலங்கைக்குள் வெறுமனே இறக்குமதி செய்வதற்கான ஒரு மெல்லிய திரையினால் மூடப்பட்ட ஒரு முயற்சியாக இது இருந்து வருகின்றது என்பது தெளிவாகும். இதற்கான ஒரேயொரு உதாரணம் இது மட்டுமல்ல. இரு நாடுகளுக்குமிடையில் பெருமளவுக்கு வேறுபட்ட அளவுகளிலிருந்து வரும் அரசியல், தொழில்நுட்ப, பூகோள உபாய ரீதியான, சமூக, வரலாற்று, குடிசனவியல் மற்றும் ஜனநாயகக் காரணிகள் இங்கு கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கவில்லை. சிங்கப்பூரில் பிரச்சினைக்குரியதாக இருந்து வரும் ஒரு விடயம் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக அழிவுகரமான தாக்கங்களை எடுத்து வர முடியும்.
அங்கத (நையாண்டி) எழுத்தாளர்கள் மற்றும் புலனாய்வு பத்திரியாளர்கள் ஆகியோரை இலக்கு வைக்கும் பொருட்டு இந்த வரைவுச் சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்பட முடியும் (நிச்சயமாக அது பயன்படுத்தப்படும் என நான் வாதிடுகின்றேன்) என்பது குறித்து பலர் ஏற்கனவே கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்கள். இந்த உத்தேச சட்டவாக்கம் ஏனைய எண்ணற்ற பல கரிசனைகளையும் தோற்றுவித்துள்ளது. முக்கியமாக நிறைவேற்று ஜனாதிபதியினால் இப்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் ஜனநாயகத்தைப் பின்னோக்கித் தள்ளுவதற்கான முயற்சிகளுக்கு இது மேலும் பக்கபலமாக இருந்து வருகின்றது. அத்துடன், எங்கும் பரவலாகக் காணப்படும் கண்காணிப்பு உள்கட்டமைப்பு வசதிகளிலிருந்தும் இது பயனடைகின்றது. இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதானது சிவில் சமூகம் ஏற்கனவே எதிர்கொண்டு வரும் ஆபத்துக்களை மேலும் தீவிரப்படுத்த முடியும். மேலும், அது முன்னெப்பொழுதும் இருந்திராத செயல்பரப்பிலும், அளவிலும் எதிர்கருத்துக்களை ஒடுக்குவதற்கான அரசு அனுமதியுடனான சட்டகங்களுக்கூடாக சட்ட சட்டகங்களுக்கு பல கருவிகளை அது வழங்க முடியும். இந்தச் சட்ட வரைவின் விளைவாக, ஒன்லைன் தீங்குகள் குறித்த உரையாடலின் ஓர் அடிப்படையாக இந்த வரைவிலிருந்து எத்தகைய பயனுள்ள விடயங்கள் கிடைக்கும் என என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இலங்கையின் ஜனநாயக உள்ளார்ந்த ஆற்றலை சாதித்துக் கொள்வதில் அதற்கு எந்த இடமும் இருந்து வரவில்லை. எனவே, அது உறுதியாக நிராகரிக்கப்படுதல் வேண்டும்.
சஞ்சன ஹத்தொட்டுவ
The Online Safety Act: A Trojan Horse for Authoritarianism என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.