Photo, EFE.COM
முறைமை மாற்றத்தை வேண்டிநின்ற போராட்ட இயக்கம் ஒன்றரை வருடத்துக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாக நோக்கப்படும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனத்தைக் குவித்தது. போராட்ட இயக்கத்தில் இணைந்து கொள்வதற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் மக்கள் வந்தார்கள். விவசாய உற்பத்திகளை ஏற்றச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் உழவு இயந்திரப் பெட்டி மற்றும் லொறிகளிலும் வந்து மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். இவர்கள் எல்லோரும் மக்களின் நலன்களுக்காக பாடுபடுவதே அரசின் பொறுப்பு என்ற ஒரு பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள்.
ஆனால், திடீரென அந்த மக்கள் இப்போது அனுபவிப்பது நேர்மாறானதாக இருக்கிறது. ஊழல்வாதிகளான தலைவர்கள் டொலர்களைக் களவாடி வேறு நாடுகளின் பதுக்கிவைத்திருப்பதே எரிபொருட்கள், உணவு வகைகள் மற்றும் மருந்துப் பொருட்களையும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களையும் கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணம் என்று நம்பப்பட்டது. மக்களுக்காக தலைவர்கள் எதையும் விட்டுவைக்காமல் டொலர்கள் எல்லாவற்றையும் தங்களுக்காக எடுத்துக்கொண்டார்கள் என்ற உணர்வே மக்களை கொந்தளிக்க வைத்தது.
மக்களின் நலன்களில் அக்கறைகொண்ட அரசுக்கான களத்தை அமைத்த சுதந்திர இலங்கையின் ஸ்தாபகத் தலைவர்களுக்கு முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்க தலைமை தாங்கினார். தற்சார்புடைய விவசாய சமூகத்தை உருவாக்கும் நோக்கைக் கொண்டிருந்த அவர் தான் தொடங்கிய பெரியதும் சிறியதுமான நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலமாக அந்த விவசாய சமூகத்தை நலிவுறாது நீடித்திருக்கச் செய்யவிரும்பினார்.
பசகல மட்டங்களிலும் உள்ள மக்களின் குறிப்பாக வறிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட இந்த் பயணத்தில் சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கராவும் இணைந்துகொண்டார். கல்வியமைச்சராக இருந்த அவர் வறியவர்கள், பணக்காரர்கள் என்றோ நகரவாசிகள், கிராமவாசிகள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் சகல மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய இலவச கல்வித்திட்டத்தைக் கொண்டுவரப் பாடுபட்டார்.
அந்த நேரத்தில் இடப்பட்ட அடித்தளங்களை அவர்களுக்கு பிறகு வந்த தலைவர்களும் நிலையானதாகப் பேணிக்காத்தார்கள். அதன் விளைவாக 1970 கள் மட்டில் இலங்கையர்களின் வாழ்க்கத்தரம் பெருமளவுக்கு உயர்ந்த தேசிய வருமானத்தைக் கொண்டிருந்த வேறு நாடுகளின் மக்களினதும் வாழ்க்கைத் தரத்தை விஞ்சியதாகக் காணப்பட்டது.
வறியவர்கள், பணக்காரர்கள், நகரவாசிகள், கிராமவாசிகள் என்று பல்லாயிரக்கணக்கில் அறகலய போராட்டத்தில் பங்கேற்ற மக்களிடம் சமுதாயம் முழுவதற்கும் பயனளிக்கக்கூடிய முறைமை மாற்றம் ஒன்றைக் காணும் இலட்சிய நோக்கைக் கொண்டிருந்தார்கள். அபிவிருத்தியின் பயன்களை ஊழல்தனமான வெளிநாடுகளில் தங்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய அனுமதிக்காமல் சகலருக்கும் கிடைக்கக்கூடியதாக அந்த முறைமை மாற்றம் அமையவேண்டும் என்பதே மக்களின் இலட்சியமாக இருந்தது.
ஆனால், தற்போது இடம்பெறுகின்ற முறைமை மாற்றம் ஒரு பூகோள மற்றும் அரசியல் இடப்பரப்பில் வாழ்ந்தாலும் கூட மக்கள் ஏதோ வேறுபட்ட உலகங்களில் வாழ்பவர்கள் போன்று அவர்களுக்கு இடையில் பாரிய ஒரு இடைவெளியைத் தோற்றுவிப்பதாக அமைந்திருக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகள் பேச்சுவார்த்தை மேசையில் பிரதிநிதித்துவப் படுத்தப்படாத – எதிர்ப்பதற்கு வலிமையற்ற மக்கள் பிரிவினர் மீதே பெருமளவு சுமையை ஏற்றுகிறது. மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக அடுத்த 12 வருடங்களில் ஓய்வூதிய நிதியங்கள் அவற்றின் மூலதனத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானதை இழந்துவிடும் என்று பேராசிரியர் சுமணசிறி லியனகே மதிப்பிட்டிருக்கிறார்.
நியாயமற்ற சுமை
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வருமானவரி சட்டத்தின் விளைவாக தற்போது 14 சதவீத கோர்ப்பரேட் வரியுடன் சேர்த்துக் கொடுக்கப்படும் ஊழியர் சேமலாப நிதியத்தின் வருடாந்த இலாபம் 10.99 சதவீதத்தில் இருந்து 9.72 சதவீதமாகக் குறையலாம் என்று மத்திய வங்கியின் மதிப்பீட்டு அறிக்கையொன்றை மேற்கோள் காட்டி வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறியிருக்கிறார். அரச வங்கிகளும் தனியார் வங்கிகளும் வட்டியாக பெருந்தொகையை அறவிடும்போது ஏன் இந்தளவு குறைந்த வீதங்கள்? கோர்ப்பரேட் நிறுவனைங்களைப் போன்று ஓய்வூதிய நிதியங்கள் மீது ஏன் வரி அறவிடப்படவேண்டும்? என்ற கேள்விகள் எழுகின்றன.
ஓய்வூதிய நிதியங்களின் பருமனை மாத்திரம் கருத்தில்கொண்டு பார்க்கும்போது அவற்றுக்கு குறைக்கப்பட்ட வட்டி வீதங்கள் அல்ல மிகையான வட்டி வீதங்கள் கொடுக்கப்படவேண்டும். சமூக நிதியங்கள் என்ற வகையில் அவற்றிடமிருந்து இலாபத்தில் இயங்கும் கம்பனிகளிடம் அறவிடப்படும் வரியின் மட்டத்துக்கு வரி அறவிடப்படவேண்டும்.
ஓய்வூதிய நிதியங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை என்பதால் அரசாங்க முறைமைக்குள் இருக்கும் எவரும் அவற்றின் நியாயத்துக்காக பேசுவதற்கு எவரும் முன்வரமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஓய்வூதிய நிதியங்களுக்கான தொழிலாளர்களின் பங்களிப்பு தன்னியல்பாகவே அவர்களின் சம்பளங்களில் இருந்து கழிக்கப்பட்டு மாற்றப்படுகிறது. அந்த தொழிலாளர்களை பேச்சுவார்த்தை மேசையில் பிரதிநிதித்துவப்படுத்தி நியாயத்தைச் சொல்ல அவர்களின் பிரதிநிதிகள் இருந்தார்கள். அதன் விளைவாக ஏனைய நாடுகள் அவற்றின் கடன்களை மறுசீரமைத்தபோது செய்யாத காரியங்களை எமது அரசாங்கம் செய்வதை தடுக்க வழியேயில்லை.
உலகில் இலங்கை மாத்திரமே உள்நாட்டு நாணய பிணை முறி மறுசீரமைப்பின் முழுச் சுமையையும் பிரத்தியேகமாக தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு நிதியங்கள் மீது ஏற்றும் ஒரே நாடு என்று (வெளியிடப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு) ஒக்ஸ்போர்ட் மற்றும் ஹார்வாட்டில் பயின்ற பொருளாதார நிபுணரான கலாநிதி நிஷான் டி.மெல் கூறுகிறார்.
கடந்த 25 வருடங்களில் உள்நாட்டுக்கடன் மறுசீரமைப்பைச் செய்த 14 நாடுகளில் இலங்கையே வங்கிகளையும் தனியார் கடன் வழங்குநர்களையும் தவிர்த்து சமூகப்பாதுகாப்பு நிதியங்களை குறிவைக்கும் ஒரே நாடாக விளங்குகிறது.
அந்த 14 நாடுகளும் அவற்றின் வங்கிகளை மறசீரமைப்புக்கு உட்படுத்தியிருக்கின்றன என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள் காட்டுகின்றன. அவற்றில் ஒன்பது நாடுகள் தனியார் நிதி நிறுவனங்களையும் மறுசீரமைப்புக்கு உள்ளாக்கின. இரு நாடுகள் மாத்திரமே சமூகப் பாதுகாப்பு நிதியங்களை மறுசீரமைத்தன. ஆனால், அவற்றில் எந்த நாடுமே ஓய்வூதிய (சமூகப் பாதுகாப்பு) நிதியங்களை மாத்திரம் மறுசீரமைப்புக்கு உட்படுத்திவிட்டு மற்றைய துறைகளை சுதந்திரமாக விட்டதில்லை.
தொழிலாளர்கள் தங்களது ஓய்வுக்குப் பிறகு பெறக்கூடிய பயன்கள் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக ஊழியர் சேமலாப நிதியம்/ ஊழியர் நம்பிக்கை நிதியத்தை அரசாங்கம் இலக்கு வைத்திருக்கிறது. ஆனால், கடன் மறுசீரமைப்பின் இந்த சுமையில் இருந்து வங்கிகளையும் பெரிய கம்பனிகளையும் விட்டுவைக்கிறது. இது அமெரிக்காவில் நடந்தது. ஆனால், இலங்கை அமெரிக்காவை பின்பற்ற முடியாது. அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக இருக்கின்ற அதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் சின்னச்சிறியதாகும். அதன் ஆள்வீத வருமானமும் மிகவும் சிறியதாகும்.
2008ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தீவிர வலதுசாரி அரசாங்கத்தின் கீழ் அமெரிக்காவில் நிதி நெருக்கடியொன்று ஏற்பட்டது. பெரிய வங்கிகளை அரசாங்கம் பிணையெடுத்தது. ஆனால், அதுவும் கூட பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது. அமெரிக்கர்கள் தினமும் தங்களை வேலையை இழந்துகொண்டிருந்தவேளையில், தங்களது வீடுகளையும் வாழ்நாள் சேமிப்புக்களையும் இழந்துகொண்டிருந்த வேளையில் ‘கொழுத்த பணக்கார வங்கிகளை (அவற்றைப் பிறகு ஜனாதிபதியாக வந்த பராக் ஒபாமா ‘Fat – Cat ‘ என்று அழைத்தார்) அரசாங்கம் நெருக்கடியில் இருந்து விடுவிக்கவேண்டுமா என்று கேள்வியெழுப்பிய மக்கள் வோல்ஸ்றீட் முற்றுகை போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்களைக் கலைக்க பல மாதங்கள் எடுத்தன.
நிலைபேறான தன்மையை உறுதி செய்தல்
கடன் மறுசீரமைப்பு விடயத்தில் ஊழியர் சேமலாப நிதியம்/ ஊழியர் நம்பிக்கை நிதியத்துக்கு பங்களிப்புச் செய்யும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் தவிர்க்கப்பட்டது மாத்திரமல்ல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட புறக்கணிக்கப்பட்டார்கள். ஊழியர் சேமலாப நிதியம்/ ஊழியர் நம்பிக்கை நிதியம் ஒய்வூதிய நிதியங்களை மாத்திரம் குறிவைக்கும் கடன் மறுசீரமைப்பின் அநீதியை இல்லாமல் செய்யப்போவதாக எதிர்க்கட்சி பேச்சாளர்கள் பிரகடனம் செய்திருக்கிறார்கள்.
நிலைபேறான தன்மையை உறுதிசெய்வதே அரசாங்கத்தின் அணுகுமுறையில் உள்ள பிரச்சினையாக இருக்கும். தீர்மானத்தில் சம்பந்தப்படுத்தப்படாதவர்களும் கடன் மறுசீரமைப்பு நியாயமற்றது என்று உணருபவர்களும் ஆதரவை வழங்க விரும்பப்போவதில்லை. பதிலாக அநீதி ஒன்று செய்யப்பட்டுவிட்டது என்று நம்பக்கூடியவர்கள் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மலினப்படுத்துவதற்கு முயற்சிப்பர்.
மறுபுறத்தில், தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையில் அவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டால் நீண்டகால நோக்கில் நிலைபேறான தன்மையை உறுதிசெய்யக்கூடிய விட்டுக்கொடுப்புக்களுக்கு வசதியாக இணக்கப்பாட்டைக் காணக்கூடிய பகுதிகளை அவர்களினால் சுட்டிக்காட்டக்கூடியதாக இருக்கும்.
பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தின் நிலைபேறான தன்மையை உறுதிசெய்யும் முகமாக எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு அரசாங்கம் செவிமடுக்கவேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்வதன் மூலமாக, அரசாங்கம் மாறும் பட்சத்தில் பொருளாதாரம் தொடர்பில் கொள்கை மாற்றம் ஏற்படக்கூடிய ஆபத்தை தணிக்கக்கூடியதாக இருக்கும். அரசாங்கம் மாறும்போது பொருளாதாரக் கொள்கையும் மாறினால் எதிர்காலத்தில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும்.
பொருளாதார மீட்சி, நிலையுறுதிப்படுத்தல் மற்றும் வளர்ச்சிப் பாதையில் இருந்து கவனத்தை திருப்புவதற்கு தேர்தல்களை அனுமதித்தால் முன்னையதையும் விட படுமோசமான புதிய நெருக்கடி ஏற்படும் என்று முதலீட்டு வங்கிக் குழுமம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மெய்நிகர் வழி கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி எச்சரிக்கை செய்திருக்கிறார். இலங்கையின் தேர்தல் கலண்டர் நாடு முன்னெடுத்த சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திடடங்களின் கீழான முன்னேற்றங்களை மறுதலையாக்கிய வரலாறு ஒன்று இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெருமளவுக்கு கவனத்தைப் பெற்றிருக்கும் அந்த உரையில் கலாநிதி குமாரசுவாமி, “இலங்கையில் தேர்தல் இடம்பெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் பெரும்பாலான பொருளாதாரக் கொள்கைகள் சீர்குலைவுக்கு உள்ளாகியிருக்கின்றன. தற்போதைய உதவித்திட்டத்துக்கு முன்னதாக 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவித்திட்டங்களை பெற்றிருக்கிறது. தற்போது செய்திருப்பதைப் போன்று அந்தத் திட்டங்களின்போது பல தடவைகள் பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்துவதில் நாம் முன்னேற்றத்தைக் கண்டோம். ஆனால், தேர்தல் ஒன்று நெருங்கியதும் அந்த முன்னேற்றம் மறுதலையாகிப்போய்விட்டது” என்று குறிப்பிட்டார்.
ஜனநாயகம் ஒன்றிலே, தற்போதைய பொருளாதாரத் திட்டத்தின் ஆதரவாளர்கள் வாதிடக்கூடியதைப் போன்று தேர்தல்களை இடைநிறுத்துவது அரசாங்கத்தைப் பொறுத்தவரை பதிலாக இருக்கமுடியாது. இது மக்களினாலும் சர்வதேச சமூகத்தினாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு ஜனநாயக மறுப்பாக இருக்கும். சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தில் அரசாங்கம் தங்கியிருக்கிறது.
சகலரினதும் குறிப்பாக வறியவர்களினதும் ஓரங்கட்டப்பட்ட மக்கள் பிரிவினரினதும் நல்வாழ்வு தொடர்பில் நாட்டின் ஸ்தாபகத் தலைவர்களுக்கு இருந்த நோக்கை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு ஏதுவாக அரசாங்கம் சகல தரப்புகளை அரவணைக்கும் அணுகுமுறையைக் கடைப்பிடித்து, ஊழல் முறைகேடுகளினால் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதுடன் மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கவேண்டும்.
கலாநிதி ஜெகான் பெரேரா