இந்தக் கடிதம்
உங்களுக்குக் கிடைக்கும் என்ற
பேராசைத்தனமான கற்பனை எதுவும்
எனக்குக் கிடையாது
எனினும்,
இதனை எழுதாமல் விடவும் முடியவே இல்லை
மனம்,
வண்ணத்துப்பூச்சியின்
செட்டையைப்போல
அடித்துக்கொள்கிறது.

உங்களை நான்
கடைசியாகச் சந்தித்தது
எப்போது என்று நினைவிருக்கிறதா?
அன்றைக்கு, உங்களிடம்
நீங்கள் வழக்கமாகத்
தோளில் மாட்டும் துணிப்பை
இருக்கவில்லை.
கதைக்க நிறைய விஷயங்கள் இருந்தும்
அவசரத்தில்,
ஒன்றுமே முடியவில்லை
நான் மெலிந்துபோய் விட்டேன்
என்று சொன்னீர்கள்
(எல்லோரும்தான் சொல்கிறார்கள்!).

ஆனால்,
யாரைப் பார்த்து
யார் சொல்வது?

இங்கே இப்போது
நிலைமை மோசம்.

நாங்கள் உயிர் வாழ்வதற்கான
நிகழ்தகவு
அச்சந்தரும் வகையில்
இரவுகளில்
அநேகமாக எல்லோரும்
பயங்கரமான கனவுகளைக்
காண்கிறார்கள்
அவற்றில்
ஹெலிகொப்டர்கள்
தலைகீழாகப் பறக்கின்றன
கவச வாகனங்கள்
குழந்தைகளுக்கு மேலாகச்
செல்கின்றன.

நமது சிறுவர்கள்
கடதாசியில் துப்பாக்கி செய்து
விளையாடுகிறார்கள்

சமயங்களில்,
நகரில் எல்லாக் கடைகளும்
பூட்டப்பட்டாலும்,
சவப்பெட்டிக் கடைக்காரன்
மட்டும்
நம்பிக்கையோடு
திறந்துவைத்திருக்கிறான்.

உங்களுக்குத் தெரியுமோ
என்னவோ?
நமது அருமை நண்பர்கள்
பலரை இழந்தோம்.
எப்படி என்று நான்
எப்படிச் சொல்ல?

என்றாலும்
‘வெற்றிடங்களை இயற்கை விடுவதில்லை’
என்பது நீங்கள் அறிந்ததே.
இறுதிவரையில்
நாம் வழி தொடர்வோம்.

 

 

 

 

 

 

 

 

 

ஜூலை 1983இல் பதின் மூன்று இராணுவத்தினரை விடுதலைப் புலிகள் கொன்றமைக்குப் பழிவாங்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட ஐம்பத்து நான்கு பேரில் சமூக நீதிப்போராளியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் தலைவர்களின் முன்னோடியும் நண்பருமான அ. விமலதாசனும் ஒருவர்.

Photo: TAMILGUARDIAN

சேரன்