படம் | Tamilguardian
ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து அதனை தீர்மானமாக நிறைவேற்றிய அமெரிக்கா, இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் கூறியிருந்தது. அதற்கு பல்வேறு அழுத்தங்களையும் தனக்கு சார்பான நாடுகள் மூலமாக அமெரிக்கா வழங்கியிருந்தது. இலங்கை அரசு மட்டுமல்ல புலிகளும் யுத்தக் குற்றங்களை இழைத்துவிட்டனர், யாராக இருந்தாலும் அதற்கு உரிய முறையில் பொறுப்புக் கூறவேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக இருந்தது. அதனை பலரும் வரவேற்றனர்.
கண்டன அறிக்கை விடவில்லை
ஆனால், ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரும் சரி, தற்போதும் சரி இராணுவ கெடுபிடிகள் அழுத்தங்கள், சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடுதல் போன்ற செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தவிடாமல் கடந்த இரண்டு வாரமாக இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வட பகுதியில் யுத்தகாலத்தை நினைவூட்டுவதாக இருந்தது. எடுத்ததுக்கெல்லாம் கண்டன அறிக்கை விடும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், கடந்த இரண்டு வாரமாக வட பகுதியில் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக எதுவும் கூறவில்லை.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மே 18 அஞ்சலி நிகழ்வுகள் நடப்பதற்கு முன்னரே யாழ். பல்கலைக்கழகம் படையினரின் உத்தரவுடன் தற்காலிகமாக மூடப்பட்டது. மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் அஞ்சலி செலுத்துவதை தடுப்பதற்கும் ஒன்று கூடுவதை தவிர்ப்பதற்கும் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அது தொடர்பாக படை அதிகாரிகள் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு பேசிய பின்னரே பல்கலைக்கழகம் மூடப்பட்டது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அல்லது உயர் கல்வி அமைச்சுக்களின் உத்தரவுடன்தான் பல்கலைக்கழகங்களை தற்காலிகமாக மூடுவது அல்லது திறப்பது போனற விடயங்கள் நடப்பது வழமை.
சிவில் நிர்வாகத்தில் தலையீடு
உயர் கல்வி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் இராணுவம் தலையிட முடியாது. பல்கலைக்கழக வாளாகத்தில் சிவில் நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸார் கூட செல்ல முடியாது. ஆனால், வட மாகாணத்தில் இராணுவத்தினர் பல்கலைக்கழக வளாகத்தில் எந்த நேரம் சென்று வரும் நிலை உண்டு. உபவேந்தரையும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் முகாமுக்கு அழைத்து அறிவுரை வழங்குவது என்ற போர்வையில் அச்சுறுத்தல் விடுப்பதும் வட பகுதியில் வழமையாகிவிட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் நடத்திவிடக்கூடாது என்பதில் இராணுவம் தம்மால் இயன்ற அனைத்து அச்சுறுத்தல் நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது. அது மட்டுமல்ல பொதுமக்களுக்கும் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்துக் கோவில்கள், தேவாலயங்கள் போன்றவற்றில் அன்றாட வழிபாடுகள் கூட இராணுவத்தால் தடுக்கப்பட்டிருந்தன. மே 18ஆம் திகதி இயற்கையாக இறந்தவர்களின் பிதிர்க்கடன்களைக் கூட செய்யவிடாமல் இராணுவம் தடுத்தது. இயற்கையாக மரணித்தவர்களின் ஆண்டு கிரியைகளைக்கூட செய்யவிடாமல் இராணுவம் தடுத்தது. இராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் மக்களை பெரும் சிரமங்களுக்கு உள்ளாக்கியதுடன் இராணுவத்தின் மீதும், அரசின் மீதும் ஏன் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மீதும் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தன. ஜெனீவா தீர்மானம் எதற்கு?
இறுதிப் போரில் 40 ஆயிரம் வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா நிபுணர்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு விதிக்கப்பட்ட தடைகள் பற்றி ஐ.நாவும் ஜெனீவா மனித உரிமை பேரவையும் இதுவரை ஒரு வார்த்தையேனும் பேசவில்லை
இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்களை விசாரிக்கவும், இலங்கை அரசு அதற்கு பொறுப்புக் கூறவேண்டும் என்பதுதான் ஜெனீவா தீர்மானம். அத்துடன், நல்லிணக்கத்தை உருவாக்கி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அமைதியை ஏற்படுத்தவேண்டும் என்றுதானே அந்த தீர்மானம் கூறுகின்றது. அப்படியானால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக இராணுவ அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. ஆனால், ஜெனீவா தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்கா போன்ற நாடுகள் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகளை இராணுவம் மூர்க்கத்தனமாக தடுத்து நிறுத்தியமை தொடர்பாக இதுவரை அரசின் அல்லது இராணுவத்தின் செயற்பாட்டை கண்டித்து ஒரு வார்த்தையேனும் பேசாதது ஏன்?
எந்தச் சமூகத்தின் நன்மைக்காக ஜெனீவா தீர்மானத்தை கொண்டு வந்தார்களோ அந்தச் சமூகம் அரசாலும் அதன் இராணுவத்தாலும் தொடர்ச்சியாக பழிவாங்கப்பட்டுக் கொண்டிருப்பதை அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகள் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதன் நோக்கம் என்ன? அல்லது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் புலிகளும் அவர்களின் உறவினர்களும்தான், ஆகவே அவர்களை நினைவு கூருவது தவறு என்ற கண்னோட்டத்தில் அமெரிக்கா பார்க்கிறதா? முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெறுமனே பார்வையாளர்கள்
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காகவே அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கொல்லப்பட்ட போராளிகளுக்காக அல்ல. பல்கலைக்கழக மாணவர்கள் போராளிகளை அல்லது பிரபாகரனை நினைவு கூருவதாக ஒருபோதும் கூறவில்லை. ஆகவே, போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவு கூருவது தவறா? சரி கொல்லப்பட்ட போராளிகளை நினைவு கூருவது தவறு என எந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது? ஏன் உயிரிழந்த போராளிகளும் மனிதர்கள்தானே? கொலைக்காரன் இறந்தாலும் அவனுடைய மனைவி அல்லது பெற்றோர் அவனை நினைவுகூரத்தான் வேண்டும். அதை யாராலும் தடுக்கமுடியாது. அஞ்சலி செலுத்துவது என்பது மனித உரிமை. ஆனால், கடந்த இரண்டு வாரமாக மிகவும் கொடூரமான முறையில் இராணுவம் செயற்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஊடக நிறுவனங்கள் கூட சுற்றி வளைக்கப்பட்டன யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் இராசகுமாரன் மே 18ஆம் திகதிக்குப் பின்னர்தான் கைதுசெய்யப்பட்டார். ஆகவே, இது தொடர் கதைதான்.
இதனால், இலங்கை அரசு, இராணுவம் என்பதை விட தமிழ் மக்களுக்கு தற்போது அமெரிக்கா மீதும், ஜெனீவா மனித உரிமை பேரவையின் மீதும் வெறுப்பும் ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது. ஜெனீவா தீர்மானத்தை கொண்டு வந்தவர்கள் அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தாமல் மேலும் மேலும் இராணுவ கெடுபிடிகள் அதிகரிப்பதை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வட பகுதியில் இராணுவத்தினரால் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் 13 வயது விபூஷிகாவும் அவரது தாயாரும் மனிதாபிமானத்துக்கு முரணாக கைதுசெய்யப்பட்டனர். தற்போது விபூஷிகா சிறுவர் பராமரிப்பு இல்லத்திலும் அவரது தாய் பூஸா முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்களை அறியச் சென்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான ருக்கி பெர்னாண்டோ, அருட்தந்தை பிரவின் மகேசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டமைக்கு உடனயடியாக கண்டன அறிக்கை வெளியிட்ட அமெரிக்கத் தூதரகம் விபூசிக்காவும் தயாரும் கைதுசெய்யப்பட்டபோது எதுவும் கூறவில்லை.
ஆகவே, ஜெனீவா தீர்மானத்தின் முன்னரும் பின்னரும் தொடர்ச்சியாக இடம்பெறும் இராணுவ அழுத்தங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவைதான் என்று அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கருதி அதனை நியாயப்படுத்துமாக இருந்தால், ஐ.நா. செயலாளரின் நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற தகவலும், ஜெனீவா தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விதப்புரைகளும் எதற்காக? யாருக்காக? புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவதும் இராணுவ அழுத்தங்களும் ஏன் என்பதை ஜெனீவா மனித உரிமை பேரவையும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் கூறியாகவேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பர்ப்பு? அப்படி இல்லையேல், இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் நிறுத்தப்பட்டால் அது ஆரோக்கியமாக இருக்கும்?
தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.