Photo, ALJAZEERA

2022 டிசம்பர் 17ஆம் திகதியன்று கடலில் தத்தளிக்கும் ஒரு படகு குறித்து இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடற்படைக்கு எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பினர். டிசம்பர் 18ஆம் திகதியன்று அப்படகிலிருந்து இருந்து 104 பேர் கொண்ட ஒரு குழுவை கடற்படையினர் மீட்டனர். அவர்கள் மியன்மார் பிரஜைகள் என கடற்படையினர் அடையாளப்படுத்தினர். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) அறிக்கை அவர்களை ரோஹிங்யா அகதிகள் எனக் குறிப்பிடுகிறது. ரோஹிங்யா முஸ்லிம்கள் நாடற்றவர்களாக உள்ளதோடு அவர்களில் அநேகமானோர் துன்புறுத்தல்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மியன்மாரிலிருந்து தப்பிச்செல்ல முற்படுகின்றனர். பங்களாதேஷில் தஞ்சமடைந்த ரோஹிங்யா அகதிகளில் பலர் அதிக சனநெரிசல் மற்றும் குறைவான வசதிகள் காரணமாக அகதி முகாம்களை விட்டு வெளியேறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோஹிங்யா அகதிகளை மீட்குமாறு அருகிலுள்ள அரசுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து முன்கூட்டிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தபோதிலும் டிசம்பர் மாதத்தில் கடலில் இறந்தவர்கள் தொடர்பான ஆபத்தான தகவல்கள் வெளிவந்துள்ளன.

மீட்கப்பட்ட மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, (யாழ்ப்பாணம் மாவட்டத்தின்) மல்லாகம் நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் “சந்தேக நபர்களாக” தடுத்து வைக்கப்பட்டனர். அவர்கள் என்ன சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர் அல்லது அவர்கள் (குழந்தைகள் உட்பட) என்ன குற்றம் தொடர்பில் சந்தேகிக்கப்பட்டனர் என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. குறிப்பாக அவர்கள் சட்டவிரோதமாக தரையிறங்கவோ, சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயலவோ இல்லை. மாறாக, ஆபத்துக்குள்ளாகி இருக்கும் ஒரு படகில் இருந்து அவர்களைக் மீட்டெடுத்த கடற்படையினரால் அழைத்து வரப்பட்டனர். கடற்படையின் பேச்சாளரொருவர் “இது ஒரு குற்றவியல் நடவடிக்கை அல்ல” எனக் குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர்களது உடனடித் தேவைகளுக்கான உதவிகளை வழங்கவுள்ளதாக UNHCR நிறுவனம் இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்தது. அக்குழுவினர் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்தபோது அவர்களுக்குத் தேவையான ஆடைகள், உள்ளாடைகள், ஹிஜாப்கள், சுகாதாரத் திண்டுகள், அணையாடைகள், படுக்கை விரிப்புகள், துவால்கள், சவர்க்காரம், பற்பசை, பற்தூரிகைகள், செருப்புகள், பொம்மைகள் மற்றும் பயணப்பைகள் போன்ற உடனடி அடிப்படைத் தேவைகளை மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (MSEDO) எனும் நிறுவனம் வழங்கியுள்ளது. யாழ் மாவட்டத்தின் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு அகதிக் குடும்பங்களுக்கு (சுமார் 10 உறுப்பினர்களைக் கொண்டவை) MSEDO அமைப்பு மனிதாபிமான உதவிகளை வழங்கியது.

அக்குழுவில் 29 ஆண்கள், 26 பெண்கள் மற்றும் 49 குழந்தைகள் உள்ளடங்கலாக ஒரு வயது முதல் 70 வயது வரையிலான வயதெல்லைக்குட்பட்டோர் உள்ளனர்.

குடிவரவு தடுத்துவைத்தல் நிலையங்கள்

டிசம்பர் 22ஆம் திகதி அவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதோடு, மிரிஹான மற்றும் வெலிசர குடிவரவு தடுத்துவைத்தல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நானும் சில சமயத் தலைவர்களும் டிசம்பர் 26ஆம் திகதியன்று மிரிஹான குடிவரவு தடுத்துவைத்தல் நிலையத்துக்குச் சென்றபோது, ​​பார்வையிடுவோருக்கு அனுமதி இல்லை எனவும், குடிவரவு அதிகாரிகள் மட்டுமே பார்வையிடுவோரை அனுமதிப்பது தொடர்பில் முடிவு செய்ய முடியும் எனவும் அங்கு சேவையில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொலிஸார் மிகவும் கண்ணியமான முறையில் எங்களிடம் தெரிவித்தனர். அவர்கள் குடிவரவு குடியகல்வு அதிகாரிக்கு அழைப்பினை ஏற்படுத்தினர், அவர் எங்களுடன் தொலைபேசியில் பேசினார். பார்வையிடுவோரது வருகை வரவேற்கத்தக்கதல்ல எனக் குறிப்பிட்டார். எனினும், மறுநாள் அவர் அங்கே இருக்கும்போது வருகை தருமாறு எங்களிடம் கூறினார். மறுநாள் நாங்கள் மீண்டும் பார்வையிடுவதற்காகச் சென்றபோது நாம் கொண்டு சென்றிருந்த உணவுப் பொருட்களையும் பொம்மைகளையும் விநியோகிப்பதற்கு அனுமதிக்கப்பட்டோம். மூடப்பட்ட முள்வேலி கொண்டமைந்த ஒரு மட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் ஒரு நுழைவாயில் வழியாக ஒரு சில அகதிகளுடன் நாங்கள் சுருக்கமாக உரையாடினோம். ஒரேயொரு அகதி மட்டுமே அடிப்படை ஆங்கிலம் பேசக்கூடியவராக இருந்ததால் மொழியானது பெரும் சவாலாக இருந்தது. பங்களாதேஷில் உள்ள அகதி முகாமில் இருந்து வெளியேறிய அக்குழு, டிசம்பர் 3ஆம் திகதி படகில் ஏறி, டிசம்பர் 18ஆம் திகதி மீட்கப்படும் வரை கடலில் இருந்ததாக எங்களிடம் சொல்லப்பட்டது. அவர்கள் பங்களாதேஷில் இருந்தபோது அனைவருக்கும் UNHCRஇனால் அகதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது சிலரது சான்றிதழ்கள் காணாமல் போயிருந்தன.

புதிய கைதிகளை தங்க வைப்பதற்காக மிரிஹான தடுத்துவைத்தல் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், சில படுக்கைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 84 ரோஹிங்யா அகதிகள் மட்டுமே அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண்களும் பெண்களும் இரு பிரிவாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் பெண்கள் பிரிவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு 15 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

டிசம்பர் 27ஆம் திகதியன்று நாம் வெலிசர தடுத்துவைத்தல் நிலையத்துக்குச் சென்றபோது, ​​UNHCR அமைப்பு தனிநபர் நேர்காணல்களைச் மேற்கொண்டிருந்தது. அங்கு இருந்த 20 பெண் அகதிகளுடன் பேசுவதற்கு இரு அருட்தந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். புதிதாக வந்துள்ள அகதிகளைச் சந்தித்துப் பேசுவதற்காக பாணதுறையில் இருந்து வந்திருந்த இரு ரோஹிங்யா அகதிகளும் ஏமாற்றமடைந்தனர். இது பொதுவான விதியா அல்லது UNHCR அமைப்பு முக்கியமான நேர்காணல்களை மேற்கொள்ளும்போது நாம் அங்கு சென்றதால் ஏற்படுத்தப்பட்டதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

எவ்வாறெனினும், அதே தடுத்துவைத்தல் நிலையத்தில் இருந்த (எனக்கு ஏற்கனவே அறிமுகமான) பாகிஸ்தானிய அகதிகளுடன் வரவேற்பறைப் பகுதியில் இருந்து சுதந்திரமாக உரையாடுவதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எமக்கு இடம் கொடுத்தனர். 2006ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வாழும் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் உட்பட பாகிஸ்தானிலிருந்து வந்த ஆறு அகதிகள் வெலிசரவில் இருப்பதாகக் கேள்விப்பட்டோம். தந்தையும் இரு மகன்களும் மனைவி/ தாயை வாரம் இருமுறை தலா ஒரு மணிநேரம் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தேவாலயத்துக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். 60 ஆண்களும் சுமார் மூன்று பெண்களும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பான்மையானோர் நைஜீரியர்கள் எனவும் அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர். பாகிஸ்தானிய குடும்பம் இதற்கு முன்னர் மிரிஹானவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. சமைத்த உணவு வழங்கப்படுவதால் அவர்கள் வெலிசர நிலையத்தை விரும்பினர். எப்போதாவது நத்தார் தினம் போன்ற நாட்களில் தமது உணவை தாமே சமைப்பதற்கான ஏற்பாடுகளை சில அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

இவ்விரு தடுத்துவைத்தல் நிலையங்களிலும் உள்ள அதிகாரிகள் அன்புடன் நடந்துகொண்டனர். அவர்கள் மனிதாபிமான உதவிகளை வரவேற்று அவற்றுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தனர். மேலும் ஓர் அதிகாரி மருத்துவமனையில் உள்ள நோயாளியின் சிறப்புத் தேவைகளுக்கு உதவியைப் பெறுவதற்கு பிறிதொரு முறை என்னை அழைத்தார். எங்களுக்கு சில குறைந்தபட்ச இடைத்தொடர்புகளை அனுமதித்தபோதும் பார்வையிடுவோரது வருகையை அவர்கள் ஊக்கமளிக்கவில்லை.  இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள குற்றவியல் சந்தேக நபர்களைக் கூட வாரத்தில் ஆறு நாட்கள் பார்வையிட முடியும் என்ற நிலைமை காணப்படுகிறபோது இந்த வரையறைகள் ஆச்சரியமளிக்கின்றன.

உந்துதல்கள் மற்றும் சவால்கள்

துன்பத்தில் உழல்பவர்களைக் காப்பாற்றவும், தரையிறக்கவும் கடற்படை எடுத்த தீர்மானமும் நடவடிக்கைகளும் பாராட்டத்தக்கன. குறிப்பாக பல நாட்களாக, பல வாரங்களாக இவ்விடயத்தில் தலையிடுவதற்கு மற்ற ஆசிய நாடுகள் காட்டிய தயக்கத்தோடு ஒப்பிடுகையில் கடற்படையின் தைரியம் மெச்சத்தக்கது. எவ்வாறெனினும், பார்வையிடுவோருக்கான – குறிப்பாக ஏற்கனவே இலங்கையில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கான – அணுகல் தடைசெய்யப்படுதல் மற்றும் அவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுதல் காரணமாக இலங்கை சம்பாதித்துள்ள நற்பெயர் வழமை போலவே கவலைகளாகவும் கண்டன வெளிப்பாடுகளாகவும் மாறக்கூடும்.

உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான MSEDO மற்றும் ஏனையோரின்  முனைப்புகள் துன்பத்தில் உழலும் சமூகத்துக்கு தார்மிக ஆதரவை வழங்கும் செயற்பாடுகளாகும். இலங்கையைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் தமது விளையாட்டுப் பொருட்களில் கணிசமான எண்ணிக்கையை அகதிப் பிள்ளைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். ஏற்கனவே இலங்கையில் தரித்திருக்கும் ரோஹிங்யா அகதிகளை நான் சந்தித்தது மிகவும் உற்சாகமான நெகிழ்ச்சியான அனுபவம் ஆகும். இந்த செய்தி குறித்து கேள்விப்பட்டவுடன் மிகுந்த முயற்சியின் பின்னர் மிரிஹான தடுத்துவைத்தல் நிலையத்தைக் கண்டுபிடித்த அவர்கள் சில பொருட்களுடன் புதிதாக வந்துள்ள அகதிகளைப் பார்வையிட வந்திருந்தனர். மறுநாள் வரச்சொன்னபோது அவர்கள் ​​அப்படியே செய்தார்கள். நாம் வெலிசரவில் உள்ள ரோஹிங்யா பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பார்க்கச் செல்லவிருப்பதைக் கேள்விப்பட்டபோது அவர்களும் எம்முடன் வர விரும்பினர்.

இலங்கையில் உள்ள ரோஹிங்யா அகதிகள், சமயத் தலைவர்கள் மற்றும் ஏனையோரின் வருகைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவ்வருகைகள் அகதிகளுக்கான தார்மீக ஆதரவை வழங்குவதாகவும் மேலதிக மனிதாபிமான உதவிகளையும் அவர்கள் உருவாக்குவனவாகவும், இலங்கையர்களிடையே சக மனிதர் மீதான அனுதாபம் மற்றும் உணர்திறனை மேம்படுத்துவனவாகவும் இருக்கும்.

குறுகிய காலத்தில் இலங்கை அரசாங்கம் கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட சிறந்த பணியைத் தொடரும் எனவும், தாராள மனப்பான்மையுள்ள குடிமக்களின் உதவியுடன் சந்தேக நபர்களைப் போன்று தடுத்து வைப்பதற்குப் பதிலாக இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்ணியமான தங்குமிட வசதிகளை வழங்கும் எனவும் நம்புகிறேன். தங்குமிட வசதிகளை வழங்காது அவர்களை தடுப்புக்காவலிலிருந்து விடுவிப்பது அர்த்தமுள்ளதாக இருக்காது. ஏனெனில், அவ்வாறு செய்தால் அவர்களுக்கு வீதிகளைத் தவிர வேறு புகலிடங்கள் ஏதும் இராது. அவர்களுக்குப் போதுமான உணவு, உடல், உள சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுதல் வேண்டும். இடைக்காலத்தில், அரசாங்கம் ரோஹிங்யா உள்ளிட்ட அனைத்து அகதிப் பிள்ளைகளையும் இலவசக் கல்விக் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், பெரியவர்களுக்கு வினைத்திறன் மிக்க வாழ்வாதாரங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்குதல் வேண்டும். நீண்டகால அடிப்படையில் அரசாங்கம் அவர்களுக்கு இலங்கையில் நிரந்தர மீள்குடியேற்றம் மற்றும் குடியுரிமைக்கான ஒப்புதலை வழங்க வேண்டும். சுமார் ஐந்து ஆண்டுகளாக இலங்கையில் தங்கியிருந்து இன்னும் நாடற்ற நிலையில் உள்ள சில ரோஹிங்யா அகதிகளிடம் அவர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடியேற விரும்புகிறீர்களா என்று கேட்டபோது ​​அவர்கள் உடனடியாக ஆம் எனக்கூறி, தங்களுடன் நல்ல முறையில் நடந்துகொண்ட இலங்கையர்கள் குறித்து நினைவுகூர்ந்தனர்.

2005ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் மூலம் அகதிகளுக்கு ஆதரவாக UNHCR மேற்கொள்ளும் பணிகளை நிறைவேற்றுவதற்கான வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. 2006ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கமும் UNHCR அமைப்பும் கைச்சாத்திட்ட குறிப்பு விதிமுறைகளின் படி புகலிடச் சான்றிதழ் அல்லது அகதிச் சான்றிதழ் வைத்திருப்பவர்களை குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் வரை கைதுசெய்யவோ தடுத்து வைக்கவோ முடியாது. பெரும்பாலான புகலிடம் கோருவோர் விமான நிலையத்தில் உள்ள குடிவரவு சாளரங்கள் ஊடாக இலங்கைக்குள் வருகின்றனர்.  ரோஹிங்யா அகதிகள் கடலில் மீட்கப்பட்டு கடற்படையினரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பங்களும் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளன. அவர்களது கோரிக்கைகள் UNHCR ஆல் நிறைவேற்றப்பட்டன. அதன் பின்னர் பலர் நிரந்தர மீள்குடியேற்றத்திற்காக வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அண்மையில் மீட்கப்பட்ட குழு வருவதற்கு முன்னர் இலங்கையில் சுமார் 36 ரோஹிங்கியா அகதிகள் இருந்தனர். அவர்களுள் 2017இல் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் காடையர்களால் தாக்கப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட நேர்ந்த 31 பேரும் அடங்குவர்.

ருக்கி பெர்னாண்டோ

2022 டிசம்பர் 28ஆம் திகதி Rohingya Refugees in Sri Lanka என்ற தலைப்பில் Groundviews தளத்தில் பிரசுரமான கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு.