Photo, EconomicTimes

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய நாடாளுமன்ற விவகார ஆலோசகருமான பேராசிரியர் அஷு மாரசிங்க அண்மையில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ‘துலாவ’ விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கத் தயாராகிறார் என்றும் பிரசார நடவடிக்கைகளை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார் என்றும் கூறியிருந்தார் அல்லவா?

இலங்கையின் கடன் நிலைவரம் குறித்து ஆளுநர் தவறான தகவல்களை  வெளியிட்டுவருவதாகவும் மாரசிங்க குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், ஆளுநரிடமிருந்து ஆட்சேபம் வந்ததையடுத்து ‘துலாவ’ நிகழ்ச்சியில் தான் கூறியவை தவறானவை என்று கூறி  மாரசிங்க நிபந்தனையற்ற மன்னிப்பையும் கோரினார்.

ஆனால், ஆளுநர் வீரசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரோ இல்லையோ அது வேறு  விடயம். இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கு பெரும்பாலான இலங்கையர்கள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை விடவும் ஆளுநர் மீது கூடுதல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று ஆய்வொன்றின் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வுப்பிரிவான ‘சமூக குறிகாட்டி’  ( Social Indicator) மேற்கொண்ட ‘பொருளாதார சீர்திருத்த சுட்டெண்’ (Economic Reforms Index) ஆய்வில் தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் மிகவும் நம்பிக்கை வைக்கக்கூடியவராகவும் பெரும்பான்மையான இலங்கையர்களின் நம்பிக்கையை பெற்றவராகவும் மத்திய வங்கி ஆளுநர் விளங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சரியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடியவர் என்று ஆளுநர் மீது 57 சதவீதமான இலங்கையர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் 31.4 சதவீதமானவர்கள் மாத்திரமே அவர் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

சீர்திருத்தங்களை முன்னெடுத்து பொருளாதார நிலைவரத்தை மாற்றியமைக்கும் பணிகளைப் பொறுத்தவரை இரண்டாவதாகவே ஜனாதிபதி விக்கிரமசிங்க மீது இலங்கையர்கள் (45 சதவீதமானோர்) நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

அதேவேளை, பொது நிதிக்குழுவின் (Public Finance Committee) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மூன்றாவது இடத்திலும் (43 சதவீதம்) அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (Committee on Public Enterprises) தலைவர் பேராசிரியர் ரஞசித் பண்டார  நான்காவது இடத்திலும் (25  சதவீதம்)  இருக்கிறார்கள்.

பொருளாதார நிலையுறுதிப்படுத்தலுடன் தொடர்புடைய குறுகியகால மற்றும் நடுத்தரகால செயற்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய கவுன்சில் உப குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஐந்தாவதாக (23 சதவீதம்) இலங்கையர்களினால் நம்பிக்கை வைக்கக்கூடியவராக விளங்குகிறார்.

அதேவேளை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் அணுகுமுறையைப் பெரும்பான்மையான (61 சதவீதம்) இலங்கையர்கள் அங்கீகரிக்கிறார்கள். நெருக்கடியை வெற்றிகொள்ள நாணய நிதியத்தின் உதவியினால் இயலும் என்று நாட்டு மக்களில் 75 சதவீதமானவர்கள் நம்புகிறார்கள். அரசாங்கத்தின் அணுகுமுறையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக 20 சதவீதமானவர்களே இருக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சீனா உதவும் என்று 37 சதவீதமான இலங்கையர்கள் நம்புகிறார்கள். இந்தியா உதவும் என்ற கருத்தைக் கொண்டவர்களாக சுமார் நான்கில் ஒரு பங்கு (24 சதவீதம்) மக்களும் ஜப்பான் உதவும் என்று நம்புபவர்களாக 14 சதவீதமான மக்களும் இருக்கிறார்கள். ஆனால், அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகள் உதவும் என்று 10 சதவீதத்துக்கும் குறைவான இலங்கையர்களே நம்புகிறார்கள்.

பொருளாதார கொள்கைகளைப் பொறுத்தவரை, நாட்டில் வெளிநாட்டு கம்பனிகள் முதலீடுசெய்ய அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என்று இலங்கையர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் (56 சதவீதம் ) நம்புகிறார்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையக் குறைப்பதற்கு ஆதரவாக சனத்தொகையில் பெரும்பான்மையானவர்கள் (50.1 சதவீதம்) இருக்கின்ற போதிலும் அரசாங்க கூட்டுத்தாபனங்களை தனியார்மயமாக்குவதை அவர்கள் (52.1சதவீதம்) எதிர்க்கிறார்கள். அதேவேளை உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் மூலமாக வரிகள் உயர்த்தப்படுவதை சுமார் 64 சதவீதமான இலங்கையர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், 35 சதவீதமானோர்  அந்த சட்டத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

இலங்கையின் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து 41 சதவீதமான இலங்கையர்கள் நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்துவதாகவும் 30 வயதில் உள்ளவர்களும் அவர்களை விட கூடுதல் வயதில் உள்ளவர்களும் பொருளாதார எதிர்காலம் குறித்து கடுமையான அவநம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். சுயதொழில் செய்பவர்களும் தனியார்துறையில் வேலை செய்பவர்களும் இதே மனோநிலையையே கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் ஒரு வருட காலத்தில் நாட்டின் பொருளாதார நிலைவரம் மேம்படும் என்று 18 சதவீதமானவர்கள் மாத்திரமே நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதேவேளை, சந்தர்ப்பம் கிடைக்குமானால் இன்னொரு நாட்டுக்கு சென்றுவிடுவதற்கு சுமார் 60 சதவீதமான இலங்கையர்கள் விரும்புகிறார்கள்.

ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்ததையும் விட தங்களது பொருளாதார நிலைவரம்  இப்போது  படுமோசமானதாகிவிட்டதாக அதிகப்பெரும்பான்மையான இலங்கையர்கள் (79 சதவீதம்) கூறுகிறார்கள். பொருளாதார நெருக்கடியின் விளைவாக தங்களது உணவுப் பொருட்களின் நுகர்வு அல்லது கொள்வனவின் தரம் மாற்றமடைந்துவிட்டது என்று 82 சதவீதமான இலங்கையர்கள் கூறுகிறார்கள்.

தற்போதைய பொருளாதார நிலைவரம் மற்றும் கடந்த சில மாதங்களாக ஆராயப்படுகின்ற பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பிலேயே நாடளாவிய ரீதியிலான இந்த ஆய்வின்போது மக்களிடம் அபிப்பிராயங்கள் கேட்கப்பட்டன. ஆய்வுக்கான களப்பணி 2022 அக்டோபர் 21 தொடக்கம் 31 வரை மேற்கொள்ளப்பட்டது.

பாலன்