Photo, NEWEUROPE
அரசாங்கத்தை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு போராட்டத்தையும் தேசிய அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து இராணுவத்தைப் பயன்படுத்தி ஒடுக்கத்தயாராயிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் செய்த அறிவிப்பு அவர் எந்தளவு நெருக்குதலின் கீழ் இருக்கிறார் என்பதை வெளிக்காட்டுகிறது. போராட்ட இயக்கத்தை கையாளுவதற்கு அவர் பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்திய பாங்கு எதிர்பார்க்கப்படாததாகும். அவரது தற்போதைய சொல்லும் செயலும் முன்னர் ஐந்து தடவைகள் பிரதமராக பதவிவகித்தபோது எடுத்த நிலைப்பாடுகளுக்கு முரணானவையாக இருக்கின்றன.
தேர்தல்களில் அவருக்கும் அவரது கட்சிக்கும் தொடர்ச்சியாக வாக்களித்த இன, மத சிறுபான்மையினங்களின் விடயத்தில் இது குறிப்பாக உண்மையாகும். அவரது அரசாங்கங்களின் கீழ் அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதாக உணர்ந்தார்கள். அந்த அரசாங்கங்கள் அடாவடித்தனமான அரச அடக்குமுறையைக் கையாளவில்லை. சிறுபான்மையினங்களுக்கு அவர் பெருமளவு வாக்குறுதிகளைக் கொடுத்தார். என்றாலும் அவற்றை அவரால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
தற்போது விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் துரதிர்ஷ்டவசமான ஆரவாரப் பேச்சுக்களுக்கும் செயல்களுக்கும் மத்தியிலும் கூட அவரே இருக்கக்கூடிய சிறந்த தெரிவு என்ற நம்பிக்கை உள்ளது. ஜனாதிபதியின் அண்மைய அறிவிப்புகள் இன, மத சிறுபான்மையினங்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பார் என்ற எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பிரச்சினையை அடுத்த சந்ததிக்கு விட்டுவிட தான் விரும்பவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் தேசியப் பிரச்சினையை நாடு அதன் 75ஆவது சுதந்திர தினத்தை அடுத்தவருடம் பெப்ரவரி 4 கொண்டாடும்போது தீர்த்துவைக்க விரும்புவதாக அவர் கூறியிருக்கிறார்.
தங்களது பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதி புதிய முயற்சிகளை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையில் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதைத் தவிர்த்துக்கொண்டது. ஒப்பீட்டளவில் சிறியளவு பெரும்பான்மை வாக்குகளினால் அது நிறைவேற்றப்பட்டது. வரவு – செலவுத்திட்டத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற போதிலும் ஜனாதிபதி நேசக்கரத்தை நீட்டியிருப்பதால் அதை எதிர்த்து வாக்களிக்கவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.
ஜனாதிபதி இன, மத சிறுபான்மையினங்களுக்கு வார்த்தைகளில் மாத்திரம் நேசக்கரத்தை நீட்டவில்லை. இவ்வருடத்தைய மாவீரர் தினக்கொண்டாட்டங்களின்போது எந்த சம்பவமும் இடம்பெறவில்லை என்று வடக்கு, கிழக்கில் இருந்து வந்த செய்திகள் கூறுகின்றன. கடந்த இரு வருடங்கள் மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ்வுகளில் பெருமளவில் பாதுகாப்பு படைகளின் பிரசன்னம் காணப்பட்டதுடன் பலர் கைதுசெய்யப்பட்டார்கள். இத்தடவை கொண்டாட்டங்களை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு படைகள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை பல்கலைக்கழக மாணவர்கள் கேக் வெட்டி, இனிப்புப் பண்டங்கள் வழங்கிக் கொண்டாடினார்கள். இன,மத சிறுபான்மையினங்களை ஒழித்துக்கட்டிய ஹிட்லருடன் தன்னை ஜனாதிபதி செய்த ஒப்பீடு பொருத்தமற்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டமை நல்லிணக்க செயன்முறைகளுக்கு மேலும் பங்களிப்புச் செய்திருக்கிறது.
மேலும் மோசமாகும் நெருக்கடி
இத்தகைய பின்புலத்தில், ஜனாதிபதியின் இராணுவவாத வார்த்தைப் பிரயோகங்களை தணிவதற்கான அறிகுறிகளை காண்பிக்காதிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புபடுத்தியே விளங்கிக்கொள்ளமுடியும். பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் கடனுதவி காலவரையறையின்றி தாமதிக்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஆரம்பத்தில் அந்த கடனுதவி செப்டெம்பரில் கிடைக்கும் என்றும் பிறகு நவம்பரில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது ஜனவரியில் கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
எகிப்து, ரூமேனியா, இலங்கை, துருக்கி, செக் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் பெரும் நாணய நெருக்கடியில் சிக்கும் ஆபத்தில் தற்போது இருப்பதாக ஜப்பானின் முக்கியமான முதலீட்டு வங்கியான நொமூரு ஹோல்டிங்ஸ் எச்சரிக்கை செய்திருக்கிறது. இந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அடுத்து இடம்பெறக்கூடிய ரூபா பெறுமதிக் குறைப்பு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும். அதன் விளைவாக மக்களினால் மேலும் தாங்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு உயரும்.
பொருளாதார நெருக்கடியில் மேம்பாடு ஏற்படுவதற்கு முன்னதாக அது மோசமடையும் என்று ஜனாதிபதி ஏற்கெனவே கூறியிருக்கிறார். அது உண்மையில் மோசமாகிக்கொண்டுபோவதை புள்ளிவிபர சான்றுகள் காட்டுகின்றன. தங்களது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் கால்வாசியால் குறைந்துவிட்டதாக சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கூறியிருக்கிறார்கள். நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து வருகின்ற மாணவர்களினால் உணவுச் செலவை சமாளிக்க இயலாமல் இருப்பதால் அவர்கள் வீடுகளில் இருந்துவிடுகிறார்கள்.
பொருளாதார நெருக்கடியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பெருந்தோடடப்பகுதிகளில் ஆரம்பப் பாடசாலைகளில் 4 சதவீதமும் இரண்டாம் நிலை பாடசாலைகளில் 20 சதவீதமும் கல்லூரி மட்டத்தில் 26 சதவீதமும் மாணவர்கள் கல்வியை இடைநடுவில் நிறுத்தியிருப்பதாக கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. குறைந்தளவு கல்வியறிவைக் கொண்ட ஒரு சனத்தொகையினால் எதிர்காலத்தில் நாட்டுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு அளவிடமுடியாததாகும்.
சனத்தொகையின் பெருமளவானோரின் பொருளாதார நிலை படுமோசமானதாக இருக்கிறது. சனத்தொகையில் அரைவாசிக்கும் நெருக்கமானவர்கள் (42 சதவீதமானவர்கள்) வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்று கூறுகிறது. 2019ஆம் ஆண்டில் இது 14 சதவீதமாகவே இருந்தது. கடந்த மூன்று வருடங்களில் வறுமை மட்டம் மூன்று மடங்காக அதிகரித்திருப்பதாக பொருளாதாரப் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள கூறியிருக்கிறார்.
2019ஆம் ஆண்டில் சுமார் 30 இலட்சம் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்தார்கள். ஆனால், 2022 அக்டோபரில் அத்தகையவர்களின் எண்ணிக்கை 96 இலட்சமாக அதிகரித்திருக்கிறது. இத்தகைய பாதகமான சூழ்நிலைகளில் அரசியல் சமுதாயமொன்றில் உறுதிப்பாட்டை ஒன்றில் நியாயப்பாட்டின் ஊடாக அல்லது பலவந்தத்தின் ஊடாகவே உறுதிப்படுத்தமுடியும். பலவந்தத்தின் மூலம் உறுதிப்பாட்டை ஏற்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டால் அது பெரிய அனர்த்தமாகப் போகும்.
தேர்தல் மூலம் தீர்வு
பொருளாதார அபிவிருத்தியைச் சாதிப்பதற்கு அரசியல் உறுதிப்பாடு முக்கியமானது என்பதை ஜனாதிபதி விக்கிரமசிங்க தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறார். அனுமதி பெறாமல் முன்னெடுக்கப்படும் எந்த ஆர்ப்பாட்டத்தையும் தடுத்துநிறுத்த பாதுகாப்பு படைகள் பயன்படுத்தப்படும் என்ற அவரின் அண்மைய அறிவிப்பு பொருளாதார இடர்பாட்டு நிலைவரம் தீவிரமடையும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதன் அறிகுறியாகும். கடந்த காலத்தில் ஊழலிலும் வன்முறையிலும் ஈடுபட்டவர்கள் ஆளும் கட்சியையும் அதைச் சார்ந்த கும்பலாகவும் இருப்பதன் காரணத்தால் அவர்கள் கண்டும் காணாமல் விடப்படுவது தொடர்பில் பொருளாதார இடர்பாடுகளினால் கடுமையான கஷ்டங்களை அனுபவிக்கும் மக்கள் பெரும் வெறுப்படைந்திருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு கடனுதவியைப் பெறுவதற்கான தகுதியை இலங்கை பெறவேண்டுமானால் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் முன்னிபந்தனை விதித்திருக்கிறது.
தவறிழைத்தவர்களின் வாக்குகள் நாடாளுமன்றத்தில் தேவை என்ற காரணத்துக்காக அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கத்தவறுவது அரசியல் ரீதியில் நடைமுறையில் அவசியமாக இருந்தாலும் கூட தார்மீக ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஒரு தொடக்க நடவடிக்கையாக முக்கியமான பொருளாதார ஒப்பந்தங்கள் ஊழலின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி நம்பகமானதும் சுயாதீனமானதுமான தேசிய கொள்வனவு ஆணைக்குழுவொன்றை நியமிக்கவேண்டும். இரண்டாவதாக, தேர்தல்களை எதிர்நோக்கும் சிக்கலான தீர்மானத்தை அவர் எடுக்கவேண்டும்.
நாட்டின் பிரச்சினைகள் ஒரு சர்வாதிகாரியினால் அன்றி அரசியல் ஞானமுடைய ஒரு தலைவரினால் கையாளப்பட்டால் அவற்றை நாடும் உலகமும் ஏற்றுக்கொள்ளும். மக்களின் உடன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கம் ஜனநாயகத்தின் சாராம்சத்தை கொண்டதாக அமைகிறது. அந்த உடன்பாடு கிரமமாக நடத்தப்படுகின்ற நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்கள் மூலமாகவே வெளிப்படுத்தப்படுகிறது. உள்ளூராட்சி தேர்தல்கள் ஒரு வருடமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஒத்திவைப்புக்கான சட்டரீதியான கூடுதல்பட்ச காலத்தை அவை எட்டுகின்றன. அடுத்தவருடம் மார்ச் மாதத்துக்கு முன்னதாக அந்தத் தேர்தல்களை நடத்தவேண்டியிருக்கிறது.
தங்கள் பிரதிநிதிகளை மக்கள் ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்வதற்கும் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்துவதற்கும் தேர்தல்கள் வாய்ப்பைக் கொடுக்கின்றன. இது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய தீர்மானங்களைப் பொறுத்தவரை அரசாங்கத்துக்கு வழிகாட்டலை வழங்குவதுடன் பொருளாதாரச் சுமையையும் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் பாரப்படுத்தக்கூடியதாக இருக்கும்.
மாகாண சபை தேர்தல்கள் 2018ஆம் ஆண்டில் இருந்து ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஜனநாயக அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் மாகாண சபைகள் ஆட்சிமுறையின் சுமைமையை பகிர்ந்துகொள்ளக்கூடியவை. அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் கீழ் இடம்பெற்ற அதிகாரப்பரவலாக்கல் நாட்டில் இன அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கும் ஜனாதிபதி உள்ளூராட்சி தேர்தல்களுடன் சேர்த்து மாகாண சபை தேர்தல்களையும் நடத்துவது குறித்து அக்கறையுடன் பரிசீலிக்கவேண்டும். இதன் மூலம் நிதிச்செலவையும் குறைக்கமுடியும். அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு சர்வாதிகாரியாக அன்றி மதிப்புமிக்க ஒரு அரசியல் தலைவராக ஜனாதிபதி நியாயப்பாட்டைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
கலாநிதி ஜெகான் பெரேரா