Photo, REUTERS/ Dinuka Liyanawatte

ஏனைய சகல துறைகளுக்கும் செலவினங்கள் குறைக்கப்படுகின்ற ஒரு நேரத்தில் பாதுகாப்புத்துறை பட்ஜெட்டுக்கு மிகுந்த  முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றமை அதிகாரத்தை இறுகப்பிடித்து அரசியல் உறுதிப்பாட்டு தோற்றத்தை காண்பிப்பதற்கு அரசாங்கம் பாதுகாப்புப் படைகள் மீது எந்தளவுக்கு தங்கியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. மோசமான நிலைமை இனிமேல்தான் வரப்போகிறது என்ற அரசாங்கத்தின் பயத்தையும் இது பிரதிபலிக்கிறது. முன்னென்றும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவில் நாடு விடுபடும் என்று நம்பிக்கொண்டிருக்கும் மக்களைப் பொறுத்தவரை இது தீமைக்கான அறிகுறியேயாகும்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வந்ததமை தொடர்பில் எழுந்த நியாயப்பாட்டு கேள்விகளுக்கு அப்பால் அவரின் வருகை அவருக்கு சர்வதேச முறைமைகளுடன் இருக்கும் பரிச்சயத்தின் ஊடாக சர்வதேச ஆதரவைப் பெற்று அரசியல் உறுதிப்பாட்டைக் கொண்டுவருவதற்கு உதவும் என்ற எதிர்பார்ப்புடன் வரவேற்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு இன்னமும் நிறைவேறவில்லை. நாட்டுக்கு இறுதியாக கிடைத்த பெருமளவு உதவி இந்தியாவிடம் இருந்தே வந்தது. விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர்தான் இது நடந்தது.

நாட்டுக்குத் தேவைப்படுகின்ற கடனுதவியை சர்வதேச நாணய நிதியம் வழங்கும் என்றே தற்போது நம்பிக்கை வைக்கப்படுகிறது. அவ்வாறு கிடைக்கக்கூடிய கடனுதவி இவ்வருடம் மார்ச் மாதம் கடன்தீர்க்க வக்கில்லாத நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கையுடன் மீண்டும் அலுவல்களை ஆரம்பிக்க கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் ஒரு பச்சைவிளக்காக அமையும். சர்வதேச நாணய நிதியத்தினால் நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார இலக்குகளை பிரதிபலிப்பதாக பட்ஜெட் அமையும் என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க வெளிப்படையாகவே கூறினார்.

இதுவரையில் இறுக்கமான இரகசியமாக இருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை பகிரங்கப்படுத்துவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். அந்த யோசனைகள் பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரம் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து கடுமையான சந்தேகங்கள் பொதுவெளியில் கிளம்பியிருந்தன. சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகள் பொதுமக்களிடம் வேண்டிநிற்கும் தியாகம் தொடர்பில் மூளக்கூடிய கோபம் ஜனாதிபதிக்கு எதிராக திருப்பிவிடப்படக்கூடும். தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நாட்டு மக்களை சிறப்பாக பாதுகாக்க முடியும் என்று அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள (ஆட்சிக்கு வரும் ஆர்வம் கொண்ட ) தலைவர்கள் கூறிவருகிறார்கள்.

இத்தகைய பில்புலத்தில், பொருளாதார சீர்திருத்தங்கள் மீதான எதிர்ப்பை மக்கள் தேர்தல்களின் மூலமாகவோ அல்லது ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவோ காட்டுவதை ஜனாதிபதியும் அவரது குழுவினரும் விரும்பமாட்டார்கள். உள்ளூராட்சி சபைகளின் வட்டாரங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்கும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைய அரைவாசியாக குறைப்பதற்கும் தேசிய எல்லை நிர்ணய குழு தீடீரென்று நியமிக்கப்பட்டிருக்கிறது.

பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக இதை அரசாங்கம் கூறுகிறது. இது அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தப்படவேண்டியிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு வழிவகுக்கக்கூடிய தந்திரோபாயமாகவும் நோக்கப்படலாம். அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அபிப்பிராயம் தெரிவிக்கக்கூடிய வாய்ப்பை அது இல்லாமல் செய்யும். சுகாதாரத்துறைக்கும் கல்வித்துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதியையும் விட கூடுதலானதாக இருக்கும் பாதுகாப்பு பட்ஜெட் அரசாங்கத்துக்கு எதிரான எந்தக் கிளர்ச்சியையும் ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படைகள் ஊக்கம் பெறுவதை உறுதிசெய்யும் எனலாம்.

நியாயப்பாட்டு நெருக்கடி

இவ்வருடம் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கி மக்கள் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கிய நேரத்தில் இருந்து அரசாங்கம் அதன் நியாயப்பாடு தொடர்பிலான நெருக்கடியொன்றை எதிர்நோக்கிவருகின்றது. அந்த நெருக்கடியை அரசாங்கத்தினால் அலட்சியம் செய்ய இயலாது. இவ்வருடம் மே மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பதவி விலகல் அரசாங்கத்தை பெரும் பீதிக்குள்ளாக்கி பாதுகாப்பற்ற ஒரு உணர்வைக் கொடுத்திருக்கிறது. இரு மாணவர் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி பதாதைகளை ஏந்திய வண்ணம் வீதிப்போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசாங்கத்தின் இந்த பாதுகாப்பின்மையின் ஒரு அறிகுறியாகும்.

இவ்விரு பெண்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்திருக்கிறது. பெரும் எண்ணிக்கையான பொலிஸார் பெண்களை சுற்றிவளைத்து வாகனத்தில் பலவந்தமாக ஏற்றியதை காணக்கூடியதாக இருந்தது. இந்தக் களேபரத்தில் பொலிஸ் அதிகாரிகள் பெண் பொலிஸாரை கழுத்தில் பிடித்து கொடூரமாக நடத்தியதை சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளில் காணமுடிந்தது. அந்தப் பொலிஸ் அதிகாரிகள் ஏன் இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பது பார்த்துக்கொண்டு நின்றவர்களுக்கும் தெரியவில்லை.

அரசாங்கம் அதன் நடவடிக்கைகளை மற்றவர்கள் எவ்வாறு நோக்குவார்கள் என்பதைப் பற்றி எந்த யோசனையும் இல்லாமல் பாதுகாப்பு அக்கறைகளில் மூழ்கியிருக்கிறது. இது நாட்டையும் அரசாங்கத்தையும் பொறுத்தவரை துரதிர்ஷ்டமானது. இரு மாணவர் தலைவர்களை எந்த குற்றச்சாட்டும் சுமத்தாமல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கும் கூடுலாக தடுத்துவைத்திருக்கும் அரசாங்கத்தின் செயல் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை மாத்திரமல்ல, நியாயமாக சிந்திக்கக்கூடிய எவரையும் கடும் சீற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த செயல் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பைக் கொண்டுவரக்கூடியதாகும். இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் பயனுடையதாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நீடிப்பதா இல்லையா என்பது அடுத்தவருடம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் அந்தச் சலுகையை நீடிப்பது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை பொறுத்ததேயாகும். இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களும் தற்போது தொடருகின்ற மனித உரிமை மீறல்களும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்திலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச அரங்குகளிலும் விவாதத்துக்கு எடுக்கப்படுகின்றன. இது நாட்டுக்கு பெரும் பாதிப்பைக் கொண்டுவரும்.

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்த வாரம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மக்கள் சபையில் (House of Commons) நடைபெற்ற விவாதத்தின்போது நாட்டில் தொடருகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள். இலங்கை மீது சில வகையான தடைகளைக் கொண்டுவரவேண்டும் என்று கோரிய அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கை விவகாரத்தை பாரப்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டும் என்றும் இராணுவச் செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஒரு புதிய தலைமுறை தடைகள் திட்டமான உலகளாவிய மக்னிட்ஸ்கி சட்டத்தை இலங்கைக்கு பிரயோகிக்கவேண்டும் என்று  ஒரு உறுப்பினர் யோசனை முன்வைத்தார். இந்தச் சட்டம் தனிப்பட்ட நாடுகளை இலக்குவைத்து விதிக்கப்படுகின்ற பாரம்பரிய தடைகளுக்கு மாறாக, உலகம் பூராவும் குற்றமிழைத்தவர்களுக்கு – அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் – எளிதாக பிரயோகிக்கக்கூடியதாகும்.

இராணுவ வரையறை

பாதுகாப்பை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் அணுகுமுறை நீண்டகால நோக்கில் எதிர்விளைவுகளைக் கொண்டுவரப்போகிறது என்பது கவலை தருகிறது. அந்த அணுகுமுறையினால்  நெருக்கடியின் அறிகுறிகளை தற்போதைக்கு மாத்திரம் அடக்கிவைக்கமுடியும். மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் ‘இலங்கை ; பல்பரிமாண நெருக்கடி – மனிதாபிமான தேவைகளும் முன்னுரிமைகளும் – ஜூன் – டிசம்பர் 2022 ‘ என்ற தலைப்பில் அறிக்கையொன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒரு கோடி 35 இலட்சம் மக்கள் – சனத்தொகையில் 61.1 சதவீதமானோர் – உணவு தட்டுப்பாடு காரணமாக சமாளிப்பு யுக்திகளை கையாளுவதாகவும் 47.7 சதவீதமான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை சமாளிக்கும் யுக்திகளை கையாளுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

8 நவம்பர் 2022 வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, “சுமார் 53 இலட்சம் மக்கள் அல்லது சனத்தொகையில் 24 சதவீதமானோர் தங்களது உணவு வேளைகளை குறைத்திருக்கிறார்கள். சனத்தொகையில் அதே சதவீதத்தினரில் வயதுவந்தவர்கள் பிள்ளைகள் சாப்பிடவேண்டும் என்பதற்காக தங்களது உணவைக் குறைக்கின்றார்கள். குடும்பத்தில் பெண்களே இறுதியாக சாப்பிடுகிறார்கள். 2021 இறுதிப்பகுதியுடன் ஒப்பிடும்போது ஏற்றுக்கொள்ளமுடியாத உணவு வகைகளை சாப்பிடும் குடும்பங்களின் விகிதம் பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது” என்று கூறுகிறது. உண்மையிலேயே மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

தேர்தல்கள் பின்போடப்பட்டு தங்களது நம்பிக்கைக்குரியவர்களை மக்கள் தெரிவுசெய்யமுடியாமல் போகும் பட்சத்தில் தாங்கள் அனுபவிக்கும் இடர்பாடுகளுக்கு எதிராக மக்கள் வீதியால் இறங்கி போராடவே செய்வர். விலைவாசி உயர்ந்து, எரிபொருட்களும் பசளை வகைகளும் கிடைக்காத நிலையில், தினமும் அரைவாசி நேரம் மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டபோது மக்கள் கிளர்ந்தெழுந்து அறகலய போராட்டம் மூண்டது. அதேபோன்ற விரகத்தியான ஒரு கட்டம் மீண்டும் தோன்றி மக்கள் கிளர்ந்தெழுவார்களேயானால், பாதுகாப்புப் படைகளினால் அதை அடக்க இயலும் என்று எதிர்பார்க்கமுடியாது.

நியாயபூர்வமான போராட்டங்களை ஒடுக்குவதை விடுத்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் கிடைப்பதற்கு அரிதான அதன்  வளங்களை ஒதுக்குவதே தற்போதைய தருணத்தின் பிரதான தேவையாகும். மறுபுறத்தில், அரசாங்கம் மக்களை அடக்கி எதிர்காலத்தில் கிளர்ச்சிகள் மூளாமல் இருப்பதைத் தடுப்பதற்கு பாதுகாப்புப் படைகளில் தங்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையொன்றில் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆயுதப்படைகள் மீது அரசாங்கம் ஏன் இந்தளவு கூடுதல் கவனத்தைக் குவிக்கிறது? 2030 பாதுகாப்பில் ஏன் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது? என்று கேள்விகள் கிளம்பலாம் என்பதை ஒத்துக்கொண்டார்.” நாம் பிறந்தபோது இந்து சமுத்திரத்தில் எந்த தகராறும் இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் இந்து  சமுத்திரம் ஒருவருக்கும் தேவைப்படவில்லை. இன்று அவ்வாறில்லை. நாம் தப்பிப்பிழைக்கவேண்டும் என்றால், ஆற்றல்களை, பாதுகாப்பு ஆற்றல்களை, மூலோபாய ஆற்றல்களை, எல்லாவற்றையும் பயன்படுத்தவேண்டியிருக்கும்” என்று ஜனாதிபதி தனதுரையில் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகின.

கடல் போக்குவரத்து சுதந்திரம் இல்லையென்றால் நாடு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறையைக் கொண்டிருக்க முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பதில்  நம்பும்படியாக இல்லை. ஏனென்றால், பிரிட்டிஷ் அல்லது பிரெஞ்சு  இராணுவங்களை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் இருக்கும் இராணுவத்தைப் பேணுவதற்கு பாதுகாப்பு பட்ஜெட்டின் பெரும்பகுதி போகிறது. மக்களை தவறாக வழிநடத்திய இந்த வகையான கூற்றுக்களும் நியாயப்படுத்தல்களுமே சுதந்திரம் பெற்று 74 வருடங்களுக்கு பிறகு நாட்டை இன்றைய நிலைக்கு கொண்டுவந்தன. உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தி அதன் மூலம் தெரிவாகின்ற அரசியல் பிரதிநிதிகளுடன் அடுத்து முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து பேச்சு நடத்துவதே பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான நிலைபேறான அரசியல் உறுதிப்பாட்டை அடைவதற்கான ஜனநாயக பாதையாகும்.

கலாநிதி ஜெகான் பெரேரா